செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 21

இலக்கணம் - எழுத்து, சொல் இலக்கணம்

நன்னூல்


6.         நன்னூலுக்கு முதல் உரை செய்தவர்?
மயிலைநாதர் என்ற சமணர்.

7.         நன்னூலுக்கு உரை கண்ட பழந்தமிழ்ப் பெருமக்கள்?
சங்கர நமச்சிவாயர் (17 ஆம் நூற்றாண்டு), ஊற்றங்கால் ஆண்டிப்புலவர் (17 ஆம் நூற்.), சிஞானமுனிவர் (சங்கரநமச்சிவாயர் உரையைத் திருத்திப் புத்துரை செய்தவர்), கூழங்கைத் தம்பிரான் (18 ஆம் நூற்.), இராமாநுசக் கவிராயர் (19 ஆம் நூற்.).

8.         நன்னூல் மயிலைநாதர் உரையை முதலில் வெளியிட்டவர்?
உ.வே. சாமிநாதையர் (1918 இல்).

9.         மயிலைநாதர் உரைப்படி நன்னூற் பாவகை?
அகவற்பா 458. வெண்பா 3 ஆக 461 நுற்பாக்கள்.

10.       பழமொழி நானூற்றின் முதற்பாடல் இதுவென அடையாளங் காட்டிய உரை?
நன்னூல் மயிலைநாதர் உரை (நன்னூல் 418 ஆம் பாடலுரை).

திங்கள், 29 ஆகஸ்ட், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 20

இலக்கணம் - எழுத்து, சொல் இலக்கண நூல்கள்

நன்னூல் (13 நூற்.)

1.         தன்மையால் பெயர் பெற்ற நூல்களுள் ஒன்றாக உரைகாரர் கூறும் நூல்?
நன்னூல் (மற்றொன்று சீவக சிந்தாமணி).

2.         நன்னூற் பகுப்பு?
எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என இரு அதிகாரங்களும், ஒவ்வொரு அதிகாரமும் 5 இயல்ககளும் (மொத்தம் 10 இயல்கள்), பாயிரம் முதலாக 462 நூற்பாக்களும் கொண்டது.

3.         நன்னூல் ஆசிரியர்?
பவணந்தி முனிவர் (சமண சமயத்தினர்).

4.         நன்னூலின் வேறு பெயர்கள்?
சிற்றதிகாரம் (இரு அதிகாரங்களுடைமையால்). பின்னூல் (தொல்காப்பியம் தொன்னூலாதலின், இது பின்னூல்).

5.         நன்னூல் தோன்றக் காரணமாக அமைந்தவன்?
அமராபரணன் என்ற சிறப்புப்பெயர் பெற்ற கங்க வம்சத்து அரசன் சீயகங்கன்.

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 19

இலக்கணம் - ஐந்திலக்கணம்


சுவாமி நாதம் (19 நூற்.)

1.         ஐந்திலக்கணம் கூறும் சுவாமிநாதத்தின் ஆசிரியர்? 
சுவாமி கவிராயர்.

2.         சுவாமிநாதப் பகுப்பு?
எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம், யாப்பதிகாரம், அணியதிகாரம் என ஐந்து அதிகாரமும், மரபு என்னும் பெயரிய உட்பகுப்பும் கொண்டது. பாயிரம் உட்பட 201 எண்சீர் விருத்தங்களும் உடையது.

3.         ஒரே ஒரு நூற்பாவுடைய சுவாதிநாத உட்பகுப்பு? 
அமைதிமரபு.

4.         சுவாமிநாதப் பழைய உரை பற்றிக் கூறுக? 
நூலின் முதல் 14 நூற்பாக்களுக்குரிய விரிவுரை ஒன்று கிடைத்துள்ளது. இதனை எழுதியவர் யாரெனத் தெரிந்திலது.

5.         சுவாமிநாத மூலம், சுவாமிநாத மூலமும் விருத்தியுரையும் ஆகியவற்றை வெளியிட்டவர்?
செ.வை. சண்முகம் (சுவாமிநாத மூலம் தனிநூலாக 1975 இலும், சுவாமிநாத மூலமும் விருத்தியுரையும் தனிநூலாக 1976 இலும் வெளிவந்துள்ளன. விருத்தியுரை எழுதியவர்  செ.வை. சண்முகம்).



தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 18

இலக்கணம் - ஐந்திலக்கணம்


முத்துவீரியம் (19 நூற்.)

6.         முத்துவீரியக் கருத்துப்படிப் புறத்திணைகள் யாவை?
வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை ஆகிய எட்டும் புறத்திணைகளாம்.

7.         முத்துவீரியம் கூறும் பொருளணிகளின் எண்ணிக்கை?
58 அணிகள்.

8.         முத்துவீரிய உரைகாரர்?
திருப்பாற்கடல்நாதன் கவிராயர் (இவருரை பொழிப்புரையாகும். இவர் முத்துவீரப்ப உபாத்தியாயரின் நண்பராவார்).

9.         முத்துவீரிய முதற்பதிப்பு ஆண்டு?
1889 (பழனியாண்டி என்பவரால் வெளியிடப்பட்டது).

10.       முத்துவீரிய ஆசிரியர் முதன்மை அணியாகக் கருதும் அணி?
சொல்லணி.

சனி, 27 ஆகஸ்ட், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 17

இலக்கணம் - ஐந்திலக்கணம்

முத்துவீரியம் (19 நூற்)

1.         முத்துவீரப்ப உபாத்தியாயர் எழுதிய நூல்? 
முத்துவீரியம்.

2.         முத்துவீரியம் எவ்வகை இலக்கண நூல்? 
ஐந்திலக்கண நூல்.

3.         முத்துவீரிய நூற்பகுப்பு?
எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம், யாப்பதிகாரம், அணியதிகாரம் என ஐந்து அதிகாரங்களும், ஒவ்வொரு அதிகாரத்திற்கும் மூன்று இயல்கள் என 15 இயல்களும், தற்சிறப்புப்பாயிரம் நீங்கலான 1288 நூற்பாக்களும் கொண்டது.

4.         கோயில், கோயில் ஆகிய இரண்டனுள் பண்டை நூல் வழக்குடைய தொடர்?
கோயில் (19ஆம் நூற்றாண்டுவரைக் கோவில் என்ற தொடருக்கு இலக்கிய, உரை வழக்காறு இல்லை. கோவில் என்ற தொடருக்கு இலக்கண அமைதி கூறியோர் நன்னூலார், முத்துவீரப்ப உபாத்தியாயர் ஆகியோர் ஆவார்).

5.         சிறுபொழுதுகள் பற்றிய முத்துவீரியப் புதுநெறி என்ன?
சிறுபொழுது ஆறு என்பதும் ஐந்து என்பதும் இருவகைநெறிகள். நாற்கவிராச நம்பியைப் பின்பற்றிச் சிறுபொழுது 5 எனக் கூறும் முத்துவீரியம், அச்சிறுபொழுதுகளில் நிகழும் நிழ்ச்சிகளை எடுத்துரைப்பது பிற நூல்களில் காணப்பெறாத புதுநெறியாகும்.

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 16

இலக்கணம் - ஐந்திலக்கணம்

தொன்னூல் விளக்கம் (18 நூற்.)

1.         ஐந்திலக்கண நூலாகிய தொன்னூல் விளக்கத்தை இயற்றியவர்? 
பெஸ்கி என்ற வீரமாமுனிவர்.

2.         தொன்னூல் விளக்க நூற்பாக்கள்? 
370 நுற்பாக்கள்.

3.         தொன்னூல் விளக்கத்தின் உரைகாரர்? 
நூலாசிரியரான வீரமாமுனிவர்.

4.         தொன்னூல் விளக்கப் பகுப்பு? 
எழுத்ததிகாரம் (40 நூற்பா), சொல்லதிகாரம் (102 (நூற்பா), பொருளதிகாரம் (58 நூற்பா) யாப்பதிகாரம் (100 நூற்பா), அணியதிகாரம் (70 நூற்பா) ஆக ஐந்து அதிகாரங்களும் 370 நூற்பாக்களும் கொண்டது தொன்னூல் விளக்கம்.

5.         அகத்திணைப் பொருட்களுள் (முதல், கரு, ரிப்பொருட்கள்) வீரமாமுனிவர் கூறாத பொருள்?
ரிப்பொருள் (முதல், கருப்பொருட்களைக் கூறியுள்ளார்).

6..        தொன்னூல் விளக்க முதற்பதிப்பு வெளிவந்த ஆண்டு?
1838 இல் (புதுவையிலிருந்து வெளிவந்தது).

வியாழன், 25 ஆகஸ்ட், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 15

இலக்கணம் - ஐந்திலக்கண நூல்கள்

இலக்கண விளக்கம் (17 நூற்.)

1.         குட்டித் தொல்காப்பியம் எனப்படுவது? 
இலக்கண விளக்கம்.

2.         இலக்கண விளக்கத்தைப் பாடியவர்? 
திருவாரூர் வைத்தியநாத தேசிகர்.

3.         இலக்கண விளக்க நூற்பாத் தொகை? 
எழுத்ததிகாரம் 158 நூற்பாக்கள். சொல்லதிகாரம் 214 நூற்பாக்கள் பொருளாதிகாரம் 569 நூற்பாக்கள். மொத்தம் 941 நூற்பாக்கள்.

4.         இலக்கண விளக்க உரைகாரர் யார்? 
இலக்கண விளக்கப் பாயிரம் செய்த சதாசிவநாவலர் (இவர் வைத்தியநாத தேசிகரின் மகனாவார்).

புதன், 24 ஆகஸ்ட், 2011

தமிழ்ப்பேரவை ஆய்வரங்கு 17.08.11

     புதுவை தாகூர் கலைக்கல்லூரியின் தமிழ்த்துறையில் தமிழ்ப்பேரவை என்ற மாணவர் அமைப்பு கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வருகின்றது. தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சி. பத்மாசனி அவர்கள் தலைவர் பொறுப்பேற்றது முதல் சீரிய முறையில் செயல்பட்டுத் துறையையும், புதிய புதிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றார். தமிழ்ப்பேரவைக்கு ஆண்டுதோறும் ஒரு பேராசிரியர் பொறுப்பாளராகவும் இருந்து நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம். இவ்வாண்டு பேராசிரியர் ப. கொழந்தசாமி அவர்கள் பொறுப்பாளராகப் பொறுப்பேற்றுள்ளார். தமிழ்ப்பேரவையின் 40 ஆண்டுத் தொடக்கவிழாவும் ஆய்வரங்கமும் கடந்த 17.08.11 அன்று நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் செல்வம் அவர்கள் ஒலியுறுப்புக்கள் பற்றிய காணொலிக் காட்சிப் படங்களைத் திரையிட்டு உரையாற்றினார். நான் சங்க இலக்கியக் காட்சிகள் - பயிர்கள் என்ற பொருளில் சங்க இலக்கியப் பயிரினங்கள் பற்றிய காட்சிப்படம் ஒன்றும், குறிஞ்சித்திணை பற்றிய குறும்படம் ஒன்றும் திரையிட்டு விளக்கினேன். குறும்படம் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தயாரித்த படமாகும். நவீனக் கருவிகளைக் கொண்டு கற்பிப்பது காலத்தின் தேவை என்பதை உணர்த்தும் வகையில் அந்நிகழ்ச்சி அமைந்தது. அந்நிகழ்ச்சி பற்றிய தினமலர் நாளிதழ்ச் செய்தி இது.




பாரதி அன்பர்கள் அறக்கட்டளை மாதக்கூட்டம் 11.08.11

   புதுவையில் பாரதி அன்பர்கள் அறக்கட்டளை ஒன்று கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவருகின்றது. எழுத்தாளர் கி.ரா., பேராசிரியர் க. பஞ்சாங்கம், பேராசிரியர் சிவ. மாதவன் ஆகியோர் இவ்வமைப்பை நடத்தி வருபவர்களுள் குறிப்பிடத்தக்கோர் ஆவார். பாரதி இலக்கியங்களைப் பற்றிய சொற்பொழிவு ஒன்றை மாதந்தோறும் 11 ஆம் நாளன்று நிகழ்த்திவருகின்றது. கடந்த 11.08.11 அன்று நடைபெற்ற 154ஆம் மாதக்கூட்டத்தில் உரையாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. பேராசிரியர் சிவ. மாதவன் அவர்கள் இவ்வாய்ப்பினை வழங்கினார். பாரதியின் உரைநடை இலக்கியங்கள் என்ற தலைப்பில் ஒரு மணி நேரம் உரையாற்றினேன். தவிர்க்க இயலாத காரணங்களால் நிழற்படங்கள் எடுக்க இயலவில்லை. ஓர் இலக்கிய அமைப்பு தொடர்ந்து 154 மாதங்களாக நிகழ்ச்சி நடத்தி வருவது இன்றியமையாத செய்தி. எனவே, செய்தியைப் பதிவு செய்து வைத்தேன்.

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 14


இலக்கணம் - ஐந்திலக்கண நூல்கள்
வீரசோழீயம் (11 ஆம் நூற்.)

1.         ஐந்திலக்கணம் கூறும் வீரசோழீயத்தை இயற்றியவர்? 
பொன்பற்றி ஊரினராகிய புத்தமித்திரர்.

2.         முதலாம் இராசேந்திரன் மகன் வீரராசேந்திரன் பெயரில் அமைந்த நூல்? 
வீரசோழீயம்.

3.         கந்தபுராணத்தின் திகடச் சக்கரம் என்ற தொடருக்கு இலக்கணமாகிய நூல்? 
வீரசோழீயம்.

4.         பௌத்தராகிய புத்தமித்திரரின் இலக்கண நூலுக்கு உரை செய்தவர்? 
புத்தமித்திரரின் மாணவர் பெருந்தேவனார்.

5.         தமிழை அவலோகீஸ்வரர் உண்டாக்கியதாகவும் அவரிடம் தமிழ் கற்றவர் அகத்தியர் என்றும் கூறும் நூல்? 
வீரசோழீயம்.

6.         வீரசோழீய நூற்பா யாப்பு? 
கட்டளைக் கலித்துறை யாப்பு (இதனால் இந்நூல் வீரசோழீயக் காரிகை என்றும் வழங்கப்பட்டது).

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 13

இலக்கணம் - தொல்காப்பியம்

61.       தொல்காப்பியச் சொல்வடிவங்களின் எண்ணிக்கை? 
5630.

62.      தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இக்காலச் சான்றோர் சிலரைச் சுட்டுக?
அரசன் சண்முகனார், சோமசுந்தரபாரதியார், புலவர் குழந்தை மற்றும் பலர்.

63.      தொல்காப்பியர் கூறியுள்ள ஆறுவகைத் தொகைகள் யாவை? 
வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, உவமத்தொகை, பண்புத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை ஆகியன (சொல்.42).

64.      தொல்காப்பியர் கூறிய ஆறுவகைத் தொகைகளைக் கூறும் பிற்கால இலக்கண நூல்கள்? 
நேமிநாதம் (சொல். 60), நன்னூல் (362), இலக்கண விளக்கம் (335), முத்துவீரியம் (94), தொன்னூல் விளக்கம் (89).

65.      உம்மைத்தொகை ஆறு நிலைகளில் அமையும் எனக் கூறும் இலக்கண நூல்கள்? 
தொல்காப்பியம் (சொல். 417), இலக்கண விளக்கம் (34).

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 12

இலக்கணம் - தொல்காப்பியம்

56.      இயைபு என்ற தொல்காப்பிய வனப்புக்குச் சான்று தருக? 
மணிமேகலை.

57.       கட்டளையடி விளக்கம் தருக? 
தொல்காப்பியர் குறளடி, சிந்தடி போன்றவற்றை எழுத்தளவையால் எண்ணி உரைப்பர். இவ்வடிவகை கட்டளையடி எனப்படும்.

58.       சங்கப்பாடல்கள் எவ்வகை அடியமைதியைக் கொண்டவை? 
சீர்வகையடியைக் கொண்டவை.

59.      தொல்காப்பியர் கூறிச் சங்கப் பாடல்களில் இடம்பெறாத அசைகள்? 
நேர்பசை, நிரைபசை.

60.      தொல்காப்பிய அடிகள் எத்தனை? 
3999 அடிகள்

சனி, 20 ஆகஸ்ட், 2011

நானும் என் தமிழும் – ஆங்கிலத்தை ஏவல் கொண்ட தமிழ்த்தேடல்


   கடந்த 25 ஆண்டுகளாகத் தமிழியல் ஆய்வுகளை அவ்ஆய்வுகளைச் செய்தோரின் தமிழிய வாழ்வோடு இணைத்துப் வரலாற்றுப்பதிவுகளாக்கும் முயற்சியைத் தமிழ்நேயம் இதழ் வழியாகச் செய்துவரும் கோவைஞானி அவர்களின் முயற்சி போற்றுதலுக்குரியது. தமிழர்களின் இனப்பழக்கம் என்றே சொல்லத்தகும் பண்பு ஒன்று : வரலாற்று உணர்வும் அறிவும் இன்மையாகும். இதனை மாற்றமுனையும் ஞானி அவர்களுக்குத் தமிழர்கள் என்றும் நன்றிக்கடப்படுடையர்.

தமிழ்நேயத்தின் 43 ஆம் இதழ் பேராசிரியர் ப. மருதநாயகம் அவர்களின் தமிழிய வாழ்வையும் தமிழியல் ஆய்வையும் கூறுவதாகும். அதன் தலைப்பு : நானும் என் தமிழும் – ஆங்கிலத்தை ஏவல் கொண்ட தமிழ்த்தேடல். தமிழிலும் ஆங்கிலத்திலும் முனைவர்ப் பட்டம் பெற்றோர் பான்மையும் ஆங்கிலத்தின் அடிமைகளாகத் திரிவதையே பெருமையாகக் கருதிவரும் இந்நாளில்  பேராசிரியர் மருதநாயகம் அவர்களின் தமிழிய நெஞ்சம் நம் உள்ளத்தையும் கருத்தையும் ஈர்ப்பதாக அமைவதோடு, நமக்கு ஒரு பாடமாகவும் இருப்பது குறிக்கத்தக்கது.

   பேராசிரியரின் நூலின் வழிப் பல உண்மைகளை நாம் அறிய இயலும். எனினும் இங்குச் சில உண்மைகள் காட்டப்பட்டுள்ளன.

1.  பேராசிரியரின் முதல் நூல் கிழக்கும் மேற்கும் என்பதாகும். 1991 இல் வெளிவந்த அந்நூல் ஒப்பிலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பாகும். இதுவரை (2011 மே வரை) அவர் எழுதியுள்ள நூல்களின் தொகை தமிழில் பத்தும் ஆங்கிலத்தில் ஒன்பதுமாகப் பத்தொன்பதாகும்.

2.  தமிழ்க்கவிதையியல், கிரேக்க – ரோமானியக் கவிதையியல், வடமொழிக் கவிதையியல், இருபதாம் நூற்றாண்டு மேலைக் கவிதையியல் ஆகியவற்றினும் சிறந்தது (ப.47).

3.  அமெரிக்கப் பேராசிரியர் ஜார்ஜ் எல் ஹார்ட் தம் முனைவர்ப் பட்ட ஆய்வேட்டில் காளிதாசனின் படைப்புக்களில் சங்க இலக்கியத்தின் தாக்கம் ஆழமானது என்று நிறுவியுள்ளார் (ப.47).

4.  தமிழே மாந்தனின் முதல் தாய்மொழி என்னும் பாவாணரின் முடிவு கண்மூடித்தனமானது அன்று; தர்க்கமுறையில் எழுப்பப்பெற்றது (ப.51).

5.  தொன்மங்களிலிருந்து அரிய உவமைகளைப் பெறுவது புறநானூற்றுக் கவிஞர்களுக்குக் கைவந்த கலையாகும் (ப. 56).

6.   புறநானூறு வீரயுக இலக்கியம் என்ற கைலாசபதியின் கருத்தினை மறுக்குமிடத்தில் “ கைலாசபதி ஒரு கவிதையையாவது கவிதையென்ற முறையில் விளக்கமாகப் பார்க்கவில்லையென்று ராமானுஜன் வருந்திக் கூறுவார் எனக் குறிப்பிட்டு, “ மனித வாழ்வின் எல்லாக் கூறுகளையும் நுட்பமாகப் பார்த்து அவை பற்றி ஆழமாகச் சிந்தித்துக் கலைநுணுக்கத்தோடு முதிர்ந்த அறிஞர்களால் எழுதப்பட்டவற்றை, வாய்மொழிப் பாடல்களின் ஓரிரு கூறுகள் இருப்பதால் வீரயுகப் பாடல்கள் என்று அடையாளம் காண்பது தவறாகும் ( ப. 67-68).

7.   பழந்தமிழ் இலக்கியங்கள் பற்றிய டீகனின் கருத்துக்கள் அறியாமையாலும், புதிதாக ஏதாவது சொல்லிப் பலரது கவனத்தைக் கவரவேண்டும் என்ற சிறுபிள்ளைத்தனமான ஆசையாலும் எழுதப்பெற்றவை. அவற்றை நாம் முற்றுமாகப் புறக்கணித்து விடுதலே நன்றென்றாலும் தமிழின் உட்பகைவர்கள் அவற்றை முன்வைத்து மீண்டும் மீண்டும் சங்க இலக்கியங்களுக்கு மாசு கற்பிக்க முயல்வதால் டீகனுக்கு விடைகூறும் கட்டுரையை ஆங்கிலத்திலும் தமிழிலும் நான் எழுத நேர்ந்தது. அவர் புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனத்திற்குத் தமிழ் கற்க வந்திருந்தபோது அவரிடமே இத்தமிழ்க் கட்டுரையைக் கொடுத்தேன். அதைப் படித்துவிட்டு அவர் பதிலேதும் சொல்லாது மௌனமாகச் சென்றுவிட்டார் ( ப. 71).

8. பாரதியை உருவாக்கியவர்களில் தலைமையிடம் பெறத்தக்கவர் இராமலிங்க அடிகளாரே ( ப.78 – 79).

9.  இந்தியமொழிகளில் முதல் நாவல்கள் எழுதிய யாரும் வேதநாயகம் போல் தாய்மொழிக்கு முன்னுரிமை தராதது நாம் அறியவேண்டிய வியப்புக்குரிய செய்தியாகும் (ப. 81).
10.  தமிழ் செவ்வியல் தகுதிக்கு உரியதென்பதை 1813 ஆம் ஆண்டிலேயே அறிந்து செயல்பட்டவர் எல்லிஸ் (ப. 91).

    நூலின் நிறைவாகப் பேராசிரியர் அவர்கள் தந்துள்ள பாரதியாரின் கருத்து நினைவுகூரத்தக்கது : “ .. மிகவும் விரைவிலே தமிழின் ஒளி உலகமுழுவதிலும் பரவாவிட்டால் என் பெயரை மாற்றி அழையுங்கள். அதுவரியில் இங்குப் பண்டிதர்களாக இருப்போர் தமக்குத் தமிழ்ச்சொல் வராவிட்டால் வாயை மூடிக்கொண்டு வெறுமே இருக்கவேண்டும். தமிழைப் பிறர் இழிவாக்க் கருதும்படியான வார்த்தைகள் சொல்லாதிருக்கவேண்டும். இவ்வளவுதான் என்னுடைய வேண்டுகோள் (ப.96).
     தமிழ் நெஞ்சங்களை ஈர்க்கும் இந்நூல்/ இதழ் தமிழுணர்வாளர் அனைவரும் படிக்கவேண்டிய நூல் இது. தமிழிய வாழ்வை வடித்துத் தந்த பேராசிரியர் மருதநாயகம் அவர்களுக்கும் இதனை வெளியிட்டுள்ள கோவை ஞானி அவர்களுக்கும் எம் நெஞ்சார்ந்த நன்றி.

   தமிழ்நேயம் இதழை படப்படியாக இணையத்தில் தந்தால் இளந்தலைமுறைக்கும் இக்கருத்துக்கள் சென்று சேரும் என்பது எம் நம்பிக்கை.

இதழின் முன்னட்டை

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 11

இலக்கணம் - தொல்காப்பியம்

51.       தொல்காப்பியர் கூறாதபோதும் புறநானூற்றுள் இடம்பெற்றுள்ள பேரெண்ணுப் பெயர் என்ன
கோடி (புறநானூறு பாடல் எண் 18).

52.       தொல்காப்பியர் கூறிய அம்மை என்ற வனப்பமைந்த நூல்கள் யாவை
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.

53.       தொல்காப்பியம் கூறும் அழகு என்ற வனப்பிற்குச் சான்றாகும் நூல்கள்
எட்டுத்தொகை நூல்கள்.

54.      தொல்காப்பியர் கூறிய தோல் என்ற வனப்புகுச் சான்றாகும் நூல் எது
சிலப்பதிகாரம்.

55.       விருந்து என்ற தொல்காப்பிய வனப்புக்குச் சான்று நூல் ஒன்று கூறுக
முத்தொள்ளாயிரம்.

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 10

தொல்காப்பியம் - இலக்கணம்

46.      தொல்காப்பியர் கூறும் ஆண்பால் பெயர்கள்
எருது, ஏற்றை, ஏறு, ஒருத்தல், களிறு, சே, சேவல், இரலை, கலை, மோத்தை, தகர், உதள், அப்பர், போத்து, கண்டி, கடுவன், ஆண்.

47.      தொல்காப்பியர் கூறும் பெண்பால் பெயர்கள்
பேடை, பெடை, பெட்டை, , பெண், மூடு, நாகு, கடமை, அளகு, மந்தி, பாட்டி, பிணை, பிணவல், பிணவு, பிணா, பிடி.

48.      தன்காலத்தும், தனக்கு முன்னரும் வாழ்ந்த புலவர்களைத் தொல்காப்பியர் சுட்டும் இடங்கள் எத்தனை?
260 இடங்கள்.

49.      தொல்காப்பியம் சங்க இலக்கியங்களுக்குப் பிற்பட்டது என்ற கருத்தைக் கூறியவர்
எஸ். வையாபுரிப் பிள்ளை (இக்கருத்து பொருந்தாதது என்பதை அறிஞர் பலரும் வெளிப்படுத்தியுள்ளனர்).

50.      தொல்காப்பியரால் கூறப்பட்டுச் சங்கப் பாடல்களில் வழக்கற்றுப் போன சொற்கள் சிலவற்றைக் கூறுக
அதோளி (அவ்விடம்) இதோளி, உதோளி, எதோளி என்ற சொற்கள் (தொல்காப்பிய எழுத்து, 159 ஆம் நூற்பா).

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 9

இலக்கணம் - தொல்காப்பியம்

41.       தொல்காப்பியர் கூறும் நூல் வகைகள்? 
முதல்நூல், வழிநூல்.

42.      வழிநூல் வகைகளாகத் தொல்காப்பியர் கூறுவன? 
தொகைநூல், விரிநூல், தொகைவிரிநூல், மொழியாக்கநூல்.

43.      நூல் உத்திகள் எத்தனை? 
32.

44.      நூற் குற்றங்களாகத் தொல்காப்பியர் கூறுவன? 
கூறியது கூறல், மாறுபடக்கூறல், குன்றக்கூறல், மிகைபடக் கூறல், பொருள்இல மொழிதல், மயங்கக் கூறல், இன்னா யாப்புடைத்தாதல், இழிவுபடக்கூறல், பொருள் விளங்காதவாறு உரைத்தல், எந்தவகையிலும் பிறருக்கு விளங்கும்படிக் கூறாமை.

45.      தொல்காப்பியர் கூறிய இளமைப் பெயர்களைக் கூறுக? 
பார்ப்பு, பறழ், குட்டி, குருளை, கன்று, பிள்ளை, மகவு, மறி, குழவி, போத்து ஆகியன.

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...