சனி, 23 மார்ச், 2013

பதிற்றுப் பத்து : வைதேகி அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு

    சங்கப் பனுவல்களில் இரும்புக்கடலை என அழைக்கப்படும் நூல் பதிற்றுப் பத்து ஆகும். சங்கப் பனுவல்கள் அனைத்துமே செவ்விய, செறிந்த நடையுடையவை. அவற்றுள்ளும் பதிற்றுப் பத்து மிகக் கடுமையான நடையுடையது என்பதைக் குறிக்கவே பழந்தமிழர்களில் சிலர் அந்நூலை இரும்புக் கடலை எனக் குறித்தனர். கடலை என்பது உணவுப்பொருள்; எளிமையாக உண்ணத் தகுந்தது. அந்தக் கடலையே இரும்பினால் ஆனதாக இருந்தால் எப்படி உண்பது? எப்படி அது செரிமானமாகும்?. இலக்கியம் என்பது சுவைக்கத் தகுந்தது. அது கடுமையானதாக இருந்தால் அதனைச் சுவைப்பது எப்படி? என்ற கவலையே மேற்கண்ட மரபுத் தொடருக்குக் காரணம். அத்தகைய பதிற்றுப் பத்தையும் தன்னுடைய எளிமையான மொழிநடையால் சிறப்பாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தந்திருக்கின்றார் அமெரிக்க வாழ் தோழியரான திருமதி வைதேகி ஹெர்பர்ட் அவர்கள். அந்நூல் சென்னை, கொன்றை பதிப்பகத்தின் வழியாக வெளிவந்திருக்கின்றது. 

  பதிற்றுப் பத்தின் மொழிபெயர்ப்புப் பணிக்கு உலகப் பேரறிஞர் முனைவர்  ஜார்ஜ் எல். ஹார்ட்* அவர்கள் உதவியுள்ளார் என்பதும், டோக்கியோ பல்கலைக் கழகப் பேராசிரியர் தக்கனோபு தக்கசி அவர்கள் மதிப்புரை வழங்கியுள்ளார் என்பதும் இம்மொழிபெயர்ப்பின் உலகத் தரத்திற்குச் சான்றுகளாகும்.

     இந்திய மதிப்பில் ரூ. 300 விலையில் வந்துள்ள இந்நூல் நல்ல ”காலிகோ” என்ற கெட்டி அட்டைப் புத்தகக் கட்டுடனும், நல்ல தாளிலும் நேர்த்தியான அச்சுக்கோர்ப்பிலும் வெளிவந்திருப்பது பாராட்டுதலுக்குரியது. ஒருமைக் குறியில் அமைந்த இந்நூலின் அச்சாக்கத்தை அமைத்துத் தந்தவர் நண்பர், பேராசிரியர் இல. சுந்தரம் என்பதை அறியும்போது மகிழ்ச்சி பிறக்கின்றது.  மேலும் வைதேகி அவர்களுக்குச் சங்கத் தமிழைக் கற்றுக் கொடுத்த பேராசிரியர் ருக்மணி இராமச்சந்திரன் அவர்களே இந்நூலை வெளியிட்டதோடு பதிப்புரையும் எழுதியுள்ளார் என்பது தமிழ்ப் பேராசிரியர்கள் அறிய வேண்டிய செய்தியாகும். நல்லதொரு இலக்கியச் சுவைஞர்களின் கூட்டணியே இந்நூலின் சிறப்புக்குக் கட்டியம் கூறுவதாகும். 

          பதிற்றுப் பத்து என்பது சேரநாட்டை ஆண்ட உதியன், பொறையன் ஆகிய இரு அரச இனங்களின் சில நூற்றாண்டு வரலாற்றைக் கூறுகின்ற 100 பாடல்களின் தொகுப்பாகும். ஒவ்வொரு சேரனைப் பற்றியும் பத்துப் பாடல்களை ஒவ்வொரு புலவரும் பாடியுள்ளனர். முத்ற்பத்தும் இரண்டாம் பத்தும் கிட்டவில்லை. எஞ்சிய 80 பாடல்களும், பிற நூல் உரைகளின் மேற்கோள்களால் சில பாடல் துணுக்குகளும் கிடைத்துள்ளன. பதிற்றுப்பத்துக்கு பழைய உரை ஒன்று உண்டு. பதிற்றுப்பத்தினை அதன் பழைய உரையோடு முதற்கண் பதிப்பித்தவர் உ.வே. சாமிநாதையர் ஆவார். 1904 ஆம் ஆண்டு அப்பதிப்பு வெளிவந்தது. அதன் பின்னர் 1937 இலில் ந.சி. கந்தையா பிள்ளை எழுதிய பதிற்றுப் பத்து வசனம் வெளிவந்தது. 1950 இல் ஔவை. துரைசாமிப் பிள்ளையின் விளக்கவுரை வெளிவந்தது. யாழ்ப்பாணத்து அறிஞராகிய அருளம்பலவானரின் பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை பகுதிகளாக வெளிவந்து 1963இல் முழுமையடைந்தது. அதன்பின்னர்ப் பலரும் பதிற்றுப்பத்துக்கு உரையெழுதியுள்ளனர். மொழிபெயர்ப்புக்கள் சில நூலளவிலும் பாடலளவிலும் வந்துள்ளன. எனினும் வைதேகி அவர்களின் மொழிபெயர்ப்பு குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைகின்றது.  இத்தகைய சிறந்த ஒரு மொழிபெயர்ப்பினை வெளிக் கொணர்ந்ததற்காக பேராசிரியர்  முனைவர் ருக்மணி அவர்களுக்கும் தமிழ் நெஞ்சங்களின் சார்பாகப் பாராட்டுக்கள்.

     சங்க நூல்களைப் பதிப்பித்த உ.வே.சாமிநாதையருக்கும், சங்கப் பாடல்கள் பலவற்றை மொழிபெயர்த்துத் தமிழ் இலக்கியங்களின் பக்கம் உலகின் கவனத்தை ஈர்த்த ஏ.கே. இராமானுசம் அவர்களுக்கும் தம்முடைய பதிற்றுப் பத்து மொழிபெயர்ப்பைப் படையலாகியுள்ளதன் முலமே வைதேகி அவர்களின் தமிழுள்ளத்தை நாம் அறியலாம்.  படிப்புப் பக்கத்தினைத் தொடர்ந்து பேராசிரியர் ருக்மணி இராமச்சந்திரன் எழுதியுள்ள குறிப்பும், அதனைத் தொடர்ந்து வைதேகி அவர்கள் எழுதியுள்ள குறிப்பும் தப்பட்டுள்ளன. பொருளடக்கத்தினைத் தொடர்ந்து சங்க இலக்கியம் பற்றிய அறிமுகக் குறிப்புக்கள் 15 பக்க அளவில் தரப்பட்டுள்ளதன. சங்க இலக்கியங்களையும் அவற்றின் உரைகளையும்  அறிய விரும்புவோருக்கு இப்பகுதி பெரிதும் பயன் நல்கும் பான்மையது. மேலும் பதிற்றுப்பத்து அறிமுகம் ஒன்றும் 6 பக்க அளவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    பதிற்றுப் பத்தின் மொழிபெயர்ப்புப் பகுதியில் முதற்கண் பாடல் எண், பாடலின் பெயர், துறை, தூக்கு, வண்ணம் ஆகியன தரப்படுள்ளன. அதனைத் தொடர்ந்து சந்தி பிரித்த பாடம் தரப்பட்டுள்ளது. பாடலின் பின்னர் தலைப்புடன் கூடிய ஆங்கில மொழிபெயர்ப்பும், நிறைவாக தமிழ்ச்சொல்லும் அவற்றின் ஆங்கிலப் பொருளும் தரப்பட்டுள்ளன. பாடலின் சொற்கள் கிடந்தவாறே அவற்றின் ஆங்கிலப் பொருளும் தரப்படுள்ளது சிறப்புக்குரியதாகும். பாடலின் சொற்களுக்கான பொருளைக் கிடந்தவாறே அறிய விரும்புவோருக்கும், புதிதாக மொழிபெயர்ப்புச் செய்து பழக விரும்புவோருக்கும் பெரிதும் பயன் தருவதாக இப்பகுதி அமைந்துள்ளது. இருப்பினும் பயன்பாடு கருதி, தமிழ்ச்சொற்களின் அருகிலேயே பிறைக்குறியில்  தமிழ்ச்சொற்களுக்குரிய ஆங்கில எழுத்துப் பெயர்ப்பும் தருவது பொருத்தமுடையதாக இருக்கும். இனி வரும் பதிப்புக்களில் வைதேகி அவர்கள் இதனைச் செய்வார் என நம்பலாம்.

      தமிழ் இலக்கியங்களைக் கற்க விரும்பும் பிற மொழியினரும், தமிழர்களும் இந்நூலைப் பயன் கொள்வார்களாக. 

    நூலின் முன்னட்டை

 நூலின் பின்னட்டை

* குறிப்பு: உலகப் பேரறிஞர் முனைவர் ஜார்ஜ் எல்.  ஹார்ட் அவர்கள் என்னுடைய முனைவர்ப் பட்ட ஆய்வின் அயல்நாட்டுத் தேர்வாளராக இருந்தவர். குறுந்தொகை உரைநெறிகள் என்ற என்னுடைய நூலுக்குச் “ சங்க இலக்கிய ஆய்வுகளுக்கெல்லாம் வழிகாட்டும் ஆய்வு” என மதிப்புரை வழங்கியவர் என்பது கூடுதல் செய்தி.

சனி, 9 மார்ச், 2013

தாகூர் கலைக்கல்லூரி ஆய்வுத்திட்டக் கருத்தரங்கு - 25.02.13.

         புதுச்சேரித் தாகூர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறையில் பழந்தமிழ் உரைகள் பற்றிய கருத்தரங்கு 25.02.13 திங்கட்கிழமை நடைபெற்றது. தாகூர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறையில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் ஆ. மணி அவர்கள், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதிநல்கை பெற்று பழந்தமிழ் இலக்கண, இலக்கிய உரைகளில் குறுந்தொகை என்னும் பெயரில் ஆய்வுத்திட்டம் ஒன்றை நிகழ்த்தி வருகின்றார். அத்திட்டத்தின் சார்பாகத் தாகூர் கலைக்கல்லூரி வரலாற்றில் முதன்முறையாக ஆய்வுத்திட்டக் கருத்தரங்கு நடைபெற்றது.

     காலை பத்து மணிக்குத் தொடங்கிய இவ்விழாவுக்குக் கல்லூரி முதல்வர் கலைமாமணி, முனைவர் எ.மு. இராசன் அவர்கள் தலைமை வகித்தார். அவர் பேசியதாவது: மூன்று வாரங்களுக்கு முன்னர் இருநாள் தேசியக்கருத்தரங்கினை நடத்தி புதிய வரலாற்றுத் தடத்தினைப் பதித்த தமிழ்த்துறையினர், இப்போது மற்றொரு கருத்தரங்கினை நடத்துவது மகிழ்ச்சிக்குரியது. இளநிலை மாணவர்களுக்கும் ஆராய்ச்சியின் அடிப்படைகளும், பயன்பாடும் சென்று சேருவது இன்றியமையாதது. மதிப்பெண்ணை நோக்கிய கல்வி என்பதிலிருந்து மாணவர்களை ஆராய்ச்சியை நோக்கி நகர்த்துவதற்குத் தமிழ்த்துறையினர் செயல்படுவது பாராட்டுதலுக்குரியது என்றார்.


  தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழக முன்னைத் துணைவேந்தரும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதுநிலை ஆய்வறிஞருமாகிய முனைவர் இ.சுந்தரமூர்த்தி அவர்கள் கருத்தரங்கினைத் தொடக்கி வைத்துப் பேருரை நிகழ்த்தினார். 

  பேராசிரியர்  கு.சிவமணி அவர்கள் கருத்தரங்க மையவுரை யாற்றினார்.தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சி. பத்மாசனி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். முனைவர் கு.ஞானகுரு நன்றி நவின்றார்.


    பிற்பகல் நடைபெற்ற இலக்கண உரைகள் அமர்வுக்குப் புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் பக்தவத்சல பாரதி அவர்கள் தலைமையேற்றார். முனைவர் தி.செல்வம்  அவர்கள் இளம்பூரணர் தொல்காப்பிய உரையில் தன் அகப்பொருள் கருத்தை நிறுவ முயலும் தன்மை என்ற தலைப்பிலும், முனைவர் இரா. சம்பத் அவர்கள் செவ்வியல் இலக்கிய ஆக்க மரபும் உரைமரபும் என்ற தலைப்பிலும், முனைவர் அ. செந்தில் நாராயணன் அவர்கள் தொல்காப்பிய உரைகளின் அமைப்பியல் என்ற தலைப்பிலும் உரையாற்றினர். 


      இலக்கிய உரைகள் அமர்வுக்குப் பட்ட மேற்படிப்பு மையத்தின் இணைப்பேராசிரியர் முனைவர் சி. சத்தியசீலன் அவர்கள் தலைமை ஏற்றார். முனைவர் சு.அ. வெங்கட சுப்பராய நாயகர் அவர்கள் மூலநூலைப் புரிந்து கொள்வதில் உரைகளின் பங்கு என்ற தலைப்பிலும் முனைவர் ஆ. மணி அவர்கள் உரை மேற்கோள்கள்: நோக்கமும் நெறிகளும் பயன்பாடும் என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.


    கருத்தரங்க ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆ. மணி, முனைவர் கு.ஞானகுரு  மற்றும்  மாணவர்கள் செய்திருந்தனர்.

அழைப்பிதழ் - 1
அழைப்பிதழ் - 2

அழைப்பிதழ் - 1:1

அழைப்பிதழ் - 2:2
கருத்தரங்கப் புறப் பதாகை
கருத்தரங்க அகப் பதாகை

மாணவியரின் கைவண்ணம் 
 
மாணவியரின் கைவண்ணம் 
முனைவர் இ. சுந்தரமூர்த்தி  அவர்களுக்கு கல்லூரி முதல்வர் கலைமாமணி, முனைவர் எ.மு.இராசன் அவர்கள் நினைவுப் பரிசு வழங்குதல்.
பேராசிரியர் கு. சிவமணி  அவர்களுக்கு கல்லூரி முதல்வர் கலைமாமணி, முனைவர் எ.மு.இராசன் அவர்கள் நினைவுப் பரிசு வழங்குதல்.
கல்லூரி முதல்வர் கலைமாமணி, முனைவர் எ.மு. இராசன் அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்குகின்றார் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சி. பத்மாசனி அவர்கள்.
தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சி. பத்மாசனி அவர்களுக்குத் தமிழ் இணைப் பேராசிரியர் முனைவர் தி.செல்வம் அவர்கள் நினைவுப் பரிசு வழங்குதல்
 கல்லூரி முதல்வர் கலைமாமணி, முனைவர் எ.மு.இராசன் அவர்கள் தலைமையுரை வழங்குதல்.
முனைவர் இ. சுந்தரமூர்த்தி அவர்களின் கருத்தரங்கத் தொடக்கப்பேருரை.
பேராசிரியர் கு. சிவமணி அவர்களின் மையவுரை.
தமிழ்த்துறை தலைவர் முனைவர் சி. பத்மாசனி அவர்களின் வாழ்த்துரை.
முனைவர் கு. ஞானகுரு அவர்களின் நன்றியுரை.
கருத்தரங்கப் பயனாளர் பகுதியில் முனைவர் சு.ஆ.வெங்கட சுப்பராய நாயகர், முனைவர் இரா. சம்பத், முனைவர் பக்த வத்சல பாரதி ஆகியோர்.
கருத்தரங்கப் பயனாளர் பகுதியில் முனைவர் தி. தாமரைச்செல்வி,  
முனைவர் ந. இராணி ஆகியோர்.
உணவரங்கம்
உணவரங்கம்
உணவரங்கம்
உணவரங்கம்
புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் பக்த வத்சல பாரதி அவர்களின் அமர்வுத் தலைமையுரை
தாகூர் கலைக்கல்லூரித் தமிழ் இணைப்பேராசிரியர் முனைவர் தி. செல்வம் அவர்களின் உரை: இளம்பூரணர் தொல்காப்பிய உரையில் தன் அகப்பொருள் கருத்தை நிறுவ முயலும் தன்மை
புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தின்  இணைப் பேராசிரியர் முனைவர் இரா. சம்பத் அவர்களின் உரை: செவ்வியல் இலக்கிய ஆக்க மரபும் உரைமரபும்
புதுச்சேரி பிரஞ்சு ஆய்வு நிறுவனத்தின் முனைவர்ப் பட்ட மேலாய்வாளர் முனைவர் அ. செந்தில் நாராயணன் அவர்களின் உரை: தொல்காப்பிய உரைகளின் அமைப்பியல். 
கா.மா. பட்ட மேற்படிப்பு மையத்தின் தமிழ் இணைப்பேராசிரியர் முனைவர் சி. சத்திய சீலன் அவர்களின் அமர்வுத் தலைமையுரை.
கா.மா. பட்ட மேற்படிப்பு மையத்தின் பிரெஞ்சு இணைப்பேராசிரியர் முனைவர் சு.ஆ. வெங்கட் சுப்பராய நாயகர் அவர்களின் உரை: மூலநூல்களைப் புரிந்து கொள்வதில் உரைகளின் பங்கு.
கருத்தரங்கு & ஆய்வுத்திட்ட முதன்மை ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆ.மணி அவர்களின் உரை: மேற்கோள் நெறிகளும் வகைகளும் பயன்பாடும்.
கருத்தரங்கப் பயனாளர் பகுதியில் முனைவர் நா. வஜ்ரவேலு அவர்கள்.
கருத்தரங்கப் பயனாளர்களுக்குக் கல்லூரி முதல்வர் கலைமாமணி, முனைவர் எமு. இராசன் அவர்கள் சான்றிதழ் வழங்குதல்.

கருத்தரங்கப் பயனாளர்களுக்குக் கல்லூரி முதல்வர் கலைமாமணி, முனைவர் எமு. இராசன் அவர்கள் சான்றிதழ் வழங்குதல்.
கருத்தரங்கப் பயனாளர் பகுதியில் முனைவர் ஆ. மணி, முனைவர் கு. ஞானகுரு, முனைவர் ழான் லூய்க் செவியார் ஆகியோர். 
கருத்தரங்கப் பயனாளர்கள்


செவ்வாய், 5 மார்ச், 2013

அண்ணாமலைப் பல்கலைக் கழகக் கருத்தரங்கு - 10.01.13

      செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழியல்துறை இளம்பூரணர், சேனவரையர் உரைமரபுகள் என்னும் பெயரிய மூன்று நாள் கருத்தரங்கினை 2013 சனவரி 9,10,11 ஆகிய நாட்களில் நடத்தியது. புலமுதன்மையர் முனைவர் பழ. முத்துவீரப்பன் ஐயா அவர்களின் சீரிய வழிகாட்டலில் தமிழியல்துறைப் பேராசிரியர் முனைவர் ப. ஞானம் அம்மா அவர்கள் கருத்தரங்கினை ஒருங்கிணைத்து நடத்தினார். அக்கருத்தரங்கில் இளம்பூரணர் உரைநெறிகள் தொடர்பான உரையாற்றும் வாய்ப்புத் திடீரென வாய்த்தது. வாய்ப்பினை வழங்கிய புலமுதன்மையர் முனைவர் பழ. முத்துவீரப்பன் ஐயா அவர்களுக்கும், தமிழியல்துறைப் பேராசிரியர் முனைவர் ப. ஞானம் அம்மா அவர்களுக்கும், நண்பர் முனைவர் ரெ. முத்துராசன் அவர்களுக்கும், துறைப் பேராசிரியர்களுக்கும் என் நன்றி. கருத்தரங்கக் காட்சிகள் இவை:

கருத்தரங்கப் பதாகை
 முனைவர் ஆ. மணி அவர்களின் உரை : இளம்பூரணர் உரைநெறிகள்.
அரங்கச் சுவைஞர் பகுதியில் பெரும்பேராசிரியர் முனைவர் செ.வை. சண்முகம் அவர்களும் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் ப. ஞானம் அவர்களும்.
 பல்கலைக் கழகத் தமிப் பேராசிரியர்கள். மையத்தில் முனைவர் ரெ. முத்துராசன் அவர்கள்.
அரங்கச் சுவைஞர்

அரங்கு: சேய்மைக் காட்சி.


திங்கள், 4 மார்ச், 2013

புதுவை மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனப் பயிலரங்கு 03.01.13

     புதுவை மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதிநல்கைப் பெற்றுச் செம்மொழித் தமிழும் சிலப்பதிகாரமும் என்னும் பெயரிய பத்துநாள் பயிலரங்கு ஒன்றினை 03.01.2013 முதல் 12.01.2013 வரை நடத்தியது. முனைவர் சிலம்பு நா. செல்வராசு அவர்கள் ஒருங்கிணைத்து நடத்திய அப்பயிலரங்கில் 03.01.2013 அன்று நடைபெற்ற முதல் அமர்வில் சிலப்பதிகாரக் கருத்தியல் மீளாய்வு என்ற தலைப்பில் பயிலரங்க உரையாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. எதையும் மிகச் சரியாகச் செய்ய வேண்டும் ,  தக்காரையே உரையாற்ற அழைக்க வேண்டும் என்ற கொள்கையில் தளராத புதுவை மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர்  முனைவர் பக்தவத்சல பாரதி அவர்களுக்கும், ஒருங்கிணைப்பாளர்  முனைவர் சிலம்பு நா. செல்வராசு அவர்களுக்கும், முனைவர் இரா. சம்பத் அவர்களுக்கும்  என் நன்றி மலர்கள். அப்பயிலரங்கின் காட்சிகள் இப்படங்கள்.

 அறிமுகவுரையாற்றுகின்றார் பயிலரங்கின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சிலம்பு நா. செல்வராசு அவர்கள்
 முனைவர் ஆ. மணி அவர்களின் பயிலரங்க உரை: சிலப்பதிகாரக் கருத்தியல் மீளாய்வு 
முனைவர் ஆ. மணி அவர்களின் பயிலரங்க உரை: சிலப்பதிகாரக் கருத்தியல் மீளாய்வு  (அண்மைக் காட்சி)
 பயிலரங்கச் சுவைஞர்
 பயிலரங்கச் சுவைஞர் பகுதியில் முனைவர் து. சீனிச்சாமி அவர்களின் அருகில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் என். சண்முகலிங்கன் அவர்கள்.  
 விழா அரங்கின் புறத்தே வைக்கப்பட்டிருந்த மாதவி சிலையோவியம்
விழா அரங்கின் புறத்தே வைக்கப்பட்டிருந்த கோவலன், கண்ணகி, மாதவி சிலையோவியங்கள்

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...