ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

அப்பாவின் துப்பாக்கி - நூலறிமுகம்

      புதுவையில் எனக்குக் கிடைத்த அறிவுசான்ற நண்பர்களுள் முனைவர் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் குறிக்கத்தக்கவர். தேர்ந்த மொழிபெயர்ப்பாளராகிய அவர் குறுந்தொகை மொழிபெயர்ப்பின் போது எனக்கு அறிமுகமானார். குறுந்தொகை பற்றி அவர் கேட்ட நுட்பமான வினாக்கள் குறுந்தொகை பற்றிய புதிய சிந்தனைகளுக்கு வித்திட்டதை என்னால் மறக்க இயலாது. அண்மையில் அவர் மொழிபெயர்த்துள்ள ‘அப்பாவின் துப்பாக்கி’ என்னும் புதினம் காலச்சுவடு பதிப்பகம் வழியாகக் ‘கிளாசிக்’ தன்வரலாற்று வரிசை நூலாக வெளிவந்துள்ளது. அதனைப் பற்றிய ஒரு சிறு அறிமுகமாக இப்பகுதி அமைகின்றது.
     ஆசாத் செரோ செலீம் என்னும் இயற்பெயருடைய கினெர் சலீம் குர்திசுதானில் (இன்றைய ஈராக்) பிறந்தவர். தன்னுடைய பதினேழாம் வயதில் ஈராக்கை விட்டு வெளியேறி இத்தாலி சென்ற சலீம், அங்குச் சில ஆண்டுகள் வாழ்ந்தார். அதன் பின்னர் பிரான்சுக்குச் சென்ற சலீம் அங்குத் திரைப்பட இயக்குநராகப் பணியாற்றி வருகின்றார். 2003இல் வெனிசு திரைப்பட விழாவில் சான் மார்க்கோ விருது பெற்ற ”வோட்கா லெமன்” என்ற திரைப்படம் அவருடைய திறமைக்கு ஒரு சான்று. குர்திசுதான் இன மக்களின் வரலாற்றைக் கூறுவதாக அவர் படைத்த பிரஞ்சு மொழியில் அவர் படைத்த நூல் பேராசிரியர் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகரால் தமிழில் அப்பாவின் துப்பாக்கியாக மலர்ந்திருக்கின்றது. இயல்பான தமிழ்நடைக்குச் சொந்தக்காரரான நாயகரின் உழைப்பும் தமிழ்மணமும் கமழும் இப்படைப்பைப் படித்துச் சுவையுங்கள். தமிழுக்குக் கிடைத்த பிறநாட்டுச் செல்வம் இது.
   தமிழுக்குக் கொடை வழங்கிய பேராசிரியர் வெங்கட சுப்புராய நாயகர் அவர்களையும், இந்நூலை வெளியிட்ட காலச்சுவடு பதிப்பகத்தின் உரிமையாளர் திரு. கண்ணன் அவர்களையும் வாழ்த்துவோம். நூலின் அட்டைபடம் இது.
   





வெள்ளி, 13 செப்டம்பர், 2013

தாகூர் கலைக்கல்லூரிப் பாராட்டுவிழா (12.09.13)

   தாகூர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறையில் நேற்று (12.09.2013) பிற்பகல் 2மணியளவில் இளங்கலைத் தமிழில் உயர்மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு முனைவர் ஆரா. சிவகுமாரன் அறக்கட்டளைப் பரிசளிப்பும், இளந்தமிழறிஞர் விருது பெற்ற முனைவர் ஆ.மணிக்குப் பாராட்டு விழாவும் நடைபெற்றன. 
    தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய அவ்விழாவில் தமிழ்ப்பேரவையின் பொறுப்பாளர் முனைவர் தி. செல்வம் அவர்கள் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து தமிழ்த்துறையின் தலைவர் முனைவர் சி. பத்மாசனி அவர்கள் தலைமையுரையாற்றினார். அவர் தன்னுடைய பேச்சில் தாகூர் கலைக்கல்லூரியின் முன்னாள் மாணவரும் தற்போது சிங்கப்பூர் நன்யாங் பல்கலைக் கழகத்தில் இணைப்பேராசிரியராகப் பணியாற்றி வருபவருமாகிய முனைவர் ஆ. இரா. சிவகுமாரன் அவர்கள், நம்முடைய தமிழ் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் பரிசு வங்கி வருவதற்கு நன்றி தெரிவித்தார். மேலும், முனைவர் ஆ. மணியின் ஆய்வுப்பணிகளையும் தமிழ்ப்பணிகளையும் மதிப்பிட்டுக் காட்டி மணி அவர்களுக்குக் குடியரசுத்தலைவரின் இளந்தமிழறிஞர் விருது கிடைத்திருப்பது பொருத்தமுடையதே என்றும் , மாணவர்கள் அவரை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்றும் வாழ்த்தினார்.
    விழாவுக்கு முன்னிலை வகித்த கல்லூரி முதல்வர் கலைமாமணி, முனைவர் எ.மு. இராசன் அவர்கள்,  மணி அவர்கள் குடியரசுத்தலைவர் வழங்கும் இளந்தமிழறிஞர் விருதினைப் பெற்றதன் மூலம் தாகூர் கலைக்கல்லூரிக்கும் புதுவைக்கும் பெருமை சேர்த்துள்ளார் என்றும், தமிழ்த்துறை பலநிலைகளிலும் சாதனை புரிந்து வருவது மகிழ்ச்சி அளிக்கின்றது என்றும் வாழ்த்துரை வழங்கினார். மேலும் உயர்மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற மாணவர்கள் எல்லா நிலைகளிலும் சாதனை படைத்து கல்லூரிக்குப் பெருமைதேடித் தருவதோடு, வாழ்க்கையிலும் வெற்றி பெறவேண்டும் என வாழ்த்தினார்.
             முனைவர் ஆ.இரா. சிவகுமாரன் அறக்கட்டளைப் பரிகளை வழங்கிய திரு. கமலக்கண்ணன் அவர்கள் வாழ்த்துரை வழங்கியதோடு மணி அவர்களுக்கு ஆடை அணிவித்து வாழ்த்தினார்.
              விழாவில் கலந்துகொண்ட புதுச்சேரி, இந்திராகாந்தி கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் சிவ. மாதவன் அவர்கள், மணி அவர்களை வாழ்த்திப் பொன்னாடை அணிவித்தார். தாகூர் கலைக்கல்லூரியின் பொருளாதாரத்துறையின் தலைவர் முனைவர் சிவக்குமார் அவர்கள் தலைமையில் துறைப் பேராசிரியர்கள் வந்திருந்து மணி அவர்களுக்கு ஆடை அணிவித்து வாழ்த்தினர்.
               முனைவர் ஆ. மணி அவர்களுக்குப் பாராட்டுரை வழங்கிய முனைவர் தி. செல்வம் அவர்கள், மணி நுட்பமான உண்மைகளை வெளிப்படுத்தி வரும் ஆய்வாளர் எனச் சான்றுரைத்தார். வாழ்த்துரை வழங்கிய முனைவர் ப. கொழந்தசாமி அவர்கள் மணி உழைப்புத் தேனீ எனப் பாராட்டினார்.
         உயர்மதிப்பெண் பெற்றுப் பரிசு பெற்ற மாணவர்கள் தே. கமலபாலன், செ. சிலம்பரசி ஆகியோர் ஏற்புரையாற்றினர். முனைவர் ஆ.மணி மிகச் சிறந்த பேராசிரியர் என மதிப்பிட்டுரைத்தனர். 
       பாராட்டுதல்களை ஏற்றுக் கொண்டு ஏற்புரையாற்றிய முனைவர் ஆ.மணி, தன்னுடை ஆய்வுப் பணிகளுக்குப் பெரிதும் துணைநின்று, அறிவார்ந்த வழிகாட்டியாகத் திகழும் கல்லூரி முதல்வர் கலைமாமணி, முனைவர் எ.மு.இராசன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். பாராட்டுவிழாவிற்கு ஏற்பாடு செய்த தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் சி. பத்மாசனி அவர்களுக்கும், தமிழ்ப்பேரவை ஒருங்கிணைப்பாளர் முனைவர் தி. செல்வம் அவர்களுக்கும், தமிழ்த்துறை, பொருளாதாரத்துரைப் பேராசிரியர்களுக்கும், பாராட்டிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
       மூன்றாமாண்டு மாணவி உஷா நன்றி நவின்றார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சி. பத்மாசனி அவர்களின் கணவரும், தமிழ்நாடு முதலமைச்சரின் காவலருமாக இருந்து ஓய்வுபெற்ற திரு. ஸ்ரீதரன் அவர்கள் மணி அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினார். நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவு பெற்றது. அவ்விழாவின் காட்சிகள் இதோ:

  மாணவியர் கைவண்ணம்
மாணவியர் கைவண்ணம்
 வரவேற்புக் குழுவினர்
 கல்லூரி முதல்வர் கலைமாமணி, முனைவர் எ.மு. இராசன் அவர்கள் விளக்கேற்றல்.
  கல்லூரி முதல்வர் கலைமாமணி, முனைவர் எ.மு. இராசன் அவர்கள் முனைவர் ஆ. மணிக்கு ஆடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்குகின்றார்.
 இந்திராகாந்தி கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் சிவ. மாதவன் அவர்கள், முனைவர் ஆ. மணிக்கு ஆடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்குகின்றார்.
 திரு. கமலக்கண்ணன் அவர்களுக்கு முனைவர் நா. இளங்கோ அவர்கள் ஆடை அணிவித்துச் சிறப்புச் செய்கின்றார்.
 தமிழ்த்துறைத் தலைவர் சி. பத்மாசனி அவர்களின் தலைமையுரை.
 கல்லூரி முதல்வர் கலைமாமணி, முனைவர் எ.மு. இராசன் அவர்கள், மாணவர் தே.கமலபாலன் அவர்களுக்குப் பரிசு வழங்கிப் பாராட்டுகின்றார்.
 கல்லூரி முதல்வர் கலைமாமணி, முனைவர் எ.மு. இராசன் அவர்கள், மாணவி செ. சிலம்பரசி அவர்களுக்குப் பரிசு வழங்கிப் பாராட்டுகின்றார்.
கல்லூரி முதல்வர் கலைமாமணி, முனைவர் எ.மு. இராசன் அவர்களின் முன்னிலையுரை.
திரு. கமலக்கண்ணன் அவர்களின் வாழ்த்துரை
 முனைவர் தி. செல்வம் அவர்களின் பாராட்டுரை.
 முனைவர் ப. கொழந்தசாமி அவர்களின் பாராட்டுரை. 
முனைவர் சிவக்குமார் அவர்கள் மணிக்கு ஆடை அணிவித்து வாழ்த்துகின்றார்.
தமிழ்த்துறை மாணவர்கள் பூங்கொத்துக் கொடுத்துப் பாராட்டுகின்றனர்.
 திரு. தே. கமலபாலன் அவர்களின் ஏற்புரை. 
 செல்வி. செ. சிலம்பரசி அவர்களின் ஏற்புரை.
 முனைவர் ஆ.மணி அவர்களின் ஏற்புரை.
முனைவர் சு. தில்லைவனம், திரு. கமலக்கண்ணன், முனைவர் சி.பத்மாசனி, முனைவர் சுதர்சனம், முனைவர் நா. இளங்கோ, முனைவர் தி. செல்வம் ஆகியோருடன் முனைவர் ஆ.மணி. 
தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சி. பத்மாசனி அவர்களின் கணவரும், தமிழ்நாடு முதலமைச்சரின் காவலராக இருந்து ஓய்வுபெற்றவருமாகிய திரு. ஸ்ரீதரன் அவர்கள், மணி அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டுகின்றார்.


        
              

வியாழன், 5 செப்டம்பர், 2013

முனைவர் ஆ. மணி

புதுச்சேரித் தாகூர் கலைக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் . மணி அவர்களுக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் வழங்கும் இளந்தமிழறிஞர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புதுதில்லியில்  நடைபெற உள்ள விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்சி இவ்விருதினை வழங்கவுள்ளார்.
            செம்மொழி இலக்கண, இலக்கியங்களில் ஆய்வு நிகழ்த்தி வரும் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஆண்டுதோறும் ஐவருக்கு இளந்தமிழறிஞர் விருதுகளை  வழங்கி வருகின்றது. அவ்வகையில் அண்மையில் 2009 -10, 2010 – 11 ஆம் ஆண்டுகளுக்கான குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  அதில் 2010 – 11 ஆம் ஆண்டுக்குப் புதுச்சேரித் தாகூர் கலைக்கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் . மணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

  தேனி மாவட்டம் கெங்குவார்பட்டியில் கா. ஆறுமுகம், . தேவகி ஆகியோருக்கு 1976 ஆம் ஆண்டில் முதல் மகனாகப் பிறந்த . மணி,  இளநிலைப் பட்டத்தைத் திருச்சி, சமால் முகமது கல்லூரியிலும், முதுநிலை மற்றும் முனைவர் பட்டத்தை மதுரை, யாதவர் கல்லூரியிலும் பெற்றவர்.
     
    உலக, இந்திய அளவிலான பல்வேறு கருத்தரங்குகளிலும், மாநாடுகளிலும் பங்கேற்று 65 ஆய்வுக் கட்டுரைகளைப் படைத்துள்ளார். தமிழகத்திலும் புதுவையிலும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதியுதவியுடன் நடைபெற்ற கருத்தரங்கு, பயிலரங்குகளில் வள அறிஞராகப்  பங்கேற்று 25 ஆய்வுரைகளை வழங்கியுள்ளார். இந்திய அளவிலான இரண்டு கருத்தரங்குகளையும், ஒரு பயிலரங்கினையும் இந்திய அரசு நிறுவனங்களின்  நிதியுதவி பெற்று நடத்தியுள்ளார்.  
குறுந்தொகைத் திறனுரைகள், காலந்தோறும் தமிழ் இலக்கியம், செம்மொழித் தமிழ் ஆய்வுரைகள், குறுந்தொகை உரைநெறிகள், ஆய்வுநோக்கில் செவ்வியல் தமிழ் நூல்கள் ஆகிய ஐந்து நூல்களை எழுதியிருப்பதோடு, பல்துறைநோக்கில் தொல்காப்பியம்தொகுதி 1, 2 ஆகிய இரு நூல்களைப் பதிப்பித்துள்ளார்.

    செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதிநல்கையில் பழந்தமிழ் இலக்கண, இலக்கியங்களில் குறுந்தொகை என்னும் ஆய்வுத் திட்டத்தைச் செய்து முடித்துள்ளார்.

    புதுவை அரசுக் கல்லூரித் தமிழ்த்துறைகளில் முதன்முறையாகப் பல்கலைக் கழக நிதிநல்கைக் குழு உதவியோடு இதழியல், மக்கள் தகவலியல் என்னும் சான்றிதழ்ப் பாடத்தினை ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றார்.
            
   குறுந்தொகை உரைநெறிகள் என்னும் இவர்தம் ஆய்வு நூலினை உலகப்பேரறிஞர் ஜார்ஜ் எல். ஹார்ட் அவர்கள் சங்க இலக்கிய ஆய்வுகளுக்கெல்லாம் வழிகாட்டியாகத் திகழும் ஆய்வு எனப் பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. முனைவர் . மணி என்னும் பெயரிலேயே தமிழ் வலைப்பூ ஒன்றினை உருவாக்கித் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் தொடர்பான செய்திகளை எழுதி வருகின்றார். தகுதியான ஆய்வுகளின் மூலம் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் பற்றிய புதிய பல உண்மைகளை வெளியிட்டு வரும் முனைவர் ஆ. மணி, இந்தியக் குடியரசுத் தலைவரின் இளந்தமிழறிஞர் விருது பெற்றிருப்பது உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ என்னும் பொன்மொழிக்குச் சான்றாகத் திகழ்வது குறிப்பிடத்தக்கது.



சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...