சனி, 9 நவம்பர், 2013

தமிழ் உலகமொழி - வ.ரா. கருத்து

”குறைந்த எண்ணிக்கையுள்ள ஆங்கிலேயரும் அமெரிக்கரும் ஆங்கில பாஷையை உலக பாஷையாக்க முடிந்தது. அப்படியானால் அவர்களைப் பார்க்கிலும் எத்தனையோ மடங்கு அதிகமாயுள்ள தமிழர்கள் ஏன் தமிழை உலக பாஷையாக்க முடியாது?. இதற்காக நாம் ஒரு போராட்டத்திற்கே தயாராக இருக்க வேண்டும்.”

- 31.10.1948 அன்று இராசாசி மண்டபத்தில் நடந்த வ.ரா. மணிவிழா ஏற்புரையில் வ்.ரா. பேச்சு. தினமணி 02.01.1948 நாளிதழ்ச் செய்தி. மேற்கோள்: சிட்டி & பெ.சு.மணி, அதிசயப்பிறவி வ.ரா. விசயா பதிப்பகம், கோவை, 1999, பக். 141. 


வ.ரா. (வ. ராமசாமி ) நிழற்படம்.

ஞாயிறு, 3 நவம்பர், 2013

இரண்டாயிரம் ஆண்டுப் பழி - தினமணி தீபாவளி மலர்க் கட்டுரை

இரண்டாயிரம் ஆண்டுப் பழி
முனைவர் ஆ. மணி,
துணைப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
தாகூர் கலைக்கல்லூரி,
புதுச்சேரி – 605 008,
மின்னஞ்சல்: manikurunthogai @ gmail.com,
வலைப்பதிவு: munaivaramani.blogspot.com

      இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒருவர் செய்யாத ஒரு குற்றத்திற்காக அவர்மீது பழி போட்டு வருகின்றோம் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?.  அறத்தின்வழியே நடந்து கொண்ட ஒருவரை நீதி தவறியவர் என்றும், காமத்தின் வயப்பட்டுத் தீமைசெய்தவர் என்றும் உரையாசிரியர்களும், சிலப்பதிகாரக் கதையை மாற்று வடிவங்களில் பாடிய முப்பதுக்கும் மேற்பட்ட பிற்கால இலக்கிய நூலாசிரியர்களும், ஆராய்ச்சியாளர்களும் குற்றம் சாற்றுவது நியாயமா? என்பதை நினைத்துப் பார்த்திருக்கின்றீர்களா?. பிறர் தம் கடமையில் தவறியதற்காக உயிரைவிட்டும்கூடப் பெரும்பழியைச் சுமந்து நிற்கும் ஓர் அப்பாவி மனிதரைச் சிலப்பதிகாரம் நமக்கு அடையாளம் காட்டுகின்றது. வாருங்கள்! அவரை அறிந்து கொள்வோம்.

முன்கதை

   தன்னுடைய வாழ்க்கைமுறையால் செல்வம் இழந்த கோவலன், கண்ணகியின் காற்சிலம்பினை விற்று வணிகத்தைத் தொடங்கலாம் என்ற எண்ணத்துடன் மதுரை வருகின்றான். மாதரியின் இல்லத்தில் கண்ணகியை விட்டுவிட்டுச் சிலம்பினை விற்கும் நோக்கத்தில் கடைவீதிக்கு வருகின்றான். அங்குப் பாண்டியனின் பொற்கொல்லனைக் கண்டுத் தன் கையில் உள்ள சிலம்பினை விற்றுத் தரமுடியுமா? எனக் கேட்கின்றான். பொற்கொல்லன் தான் அரண்மனையிலிருந்து களவாடிய சிலம்பினைக் கோவலன் கைச்சிலம்பு ஒத்திருக்கும் தன்மையைக் கண்டுப் பாண்டியனிடம் சென்று, கோப்பெருந்தேவியின் சிலம்பினைத் திருடிய கள்வன் எனக் கோவலன்மீது பழி சுமத்துகின்றான். பாண்டியன் ஊர்க் காப்பாளரை அழைத்து சிலம்பினை ஒப்பிட்டு நோக்கி அது கோப்பெருந்தேவியின் சிலம்பாக இருந்தால், அக்கள்வனைக் கொன்றுச் சிலம்பினைக் கொண்டு வருமாறு ஆணையிடுகின்றான். ஊர்க் காப்பாளரின் விசாரணை முடியும் முன்னரே அவர்களுடன் வந்த கொலையாளியாகிய கல்லாக் களிமகனால் கோவலன் கொல்லப்படுகின்றான். சிலம்பு அரண்மனையில் ஒப்படைக்கப்படுகின்றது. கள்வன் கொல்லப்பட்டதாகப் பாண்டியனுக்குச் செய்தி கூறப்படுகின்றது. அதன்பின்னர்க் கண்ணகி வந்து வழக்குரைக்கும்வரைத் தவறிழைக்காத நிலையிலும் கோவலன் கொல்லப்பட்டது பாண்டியனுக்குத் தெரியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.    

பாண்டியன் நெடுஞ்செழியனின் இறைமைத் திறம் : காட்சிக்கு எளியன்

     கண்ணகி வந்து வழக்குரைக்கும் வரை கோவலன் கொல்லப்பட்டான் என்ற உண்மையைப் பாண்டியன் அறிந்திருக்கவில்லை. வழக்குரைகாதையின் தொடக்கத்தில் கோப்பெருந்தேவி தான் கண்ட கனவினைப் பாண்டியனிடம் கூறுவதற்காக அவனிருக்குமிடம் வருகின்றாள். பாண்டியன்  சிங்கஞ் சுமந்த இருக்கையின் மீதிருந்தான். பாண்டியனோடு அப்போது யாருமிருந்ததாகச் சிலம்பில் குறிப்புக்களில்லை. அரசனும் அரசியும் தன்மையில் இருந்த அந்த நேரத்தில்தான் கண்ணகி தலைவிரி கோலத்தாளாக வாயிலில் வந்து நிற்கின்றாள். அரசன், அரசியோடு தனிமையில் இருக்கும் காலத்திலும் குறைகூற வருவோரைச் சந்திக்கும் வழக்கமுடையனாக இருந்த காரணத்தால் வாயிற்காவலன் அரசனிடம் வந்து கண்ணகியின் வருகையைத் தெரிவிக்கின்றான். அரசியுடன் இருக்கும் தனிமை இன்பத்தைப் பொருட்படுத்தாத பாண்டியன்,  உடனடியாகக் கண்ணகியை அழைத்து வருமாறு கட்டளையிடுகின்றான். இந்த இடத்தில் ஒன்றை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். கோவலனைக் கொல்லும் நோக்கமுடையவனாகவோ, தவறிழைக்கும் எண்ணமுடையவனாகவோ, மக்கள்மீது அக்கறையில்லதவனாகவோ பாண்டியன் இருந்திருந்தால் அவன் கண்ணகியைச் சந்திப்பதைத் தவிர்த்திருக்கலாம். ஆனால் அவன் அப்படிச் செய்யவில்லை.

வசை பொறுக்கும் பேருள்ளம்

            கண்ணகி வந்தவுடன் கண்களில் நீருடன் வந்திருக்கும் பெண்ணே! நீ யார்? என அன்புடன் வினவுகின்றான். கண்ணகியோ அறிவாராய்ச்சி இல்லாத மன்னா! எனத் தொடங்கித் தன்னைப் பற்றிக் கூறுகின்றாள். அரசனை அறிவில்லாதவனே எனக் கேட்ட கண்ணகியின் துணிச்சலைப் பாராட்டும் நம் உள்ளம், ஏனோ அச்சொல்லைப் பொறுத்துக் கொண்ட பாண்டியனின் பண்புள்ளத்தைப் பாராட்ட மறந்து விடுகின்றது. தன்மீதான வசைச் சொல்லை பொறுத்துக் கொண்டதோடு மட்டுமல்லாது,  கள்வனைக் கொல்வது அரச கடமை என விளக்கமும் தருகின்றான். பண்புடமையுடன் பாண்டியன் கூறியும் கண்ணகி மீண்டும், நல்வழிப்படாத கொற்கைக்கு மன்னனே! என்றே வசை பாடுகின்றாள். இங்கு மற்றொன்றையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். கண்ணகி சோழ நாட்டிலிருந்து பாண்டிய நாட்டுக்கு வந்த அகதிநிலையினள். அவளுக்கு நீதி செய்வது என்பது பாண்டியனின் விருப்பத்தைப் பொறுத்தது. மேலும், வசைச் சொற்களை ஆண்டமைக்காகவும் பாண்டியன் அவளைத் தண்டித்திருக்க முடியும். இக்காலத்தில் ஒரு சிறு பதவியில் இருப்பவரையாவது இவ்வாறு ஒருவர் கேட்கமுடியுமா? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். பாண்டியனின் செங்கோன்மை புரியும்.

குற்றத்தை மெய்ப்பிக்கும் வாய்ப்பினைத் தானே முன்வந்து வழங்கியவன்

            கண்ணகி வழக்குரைக்க வந்தவள். பாண்டியன் வழக்கினைக் கேட்டு நீதி சொல்லும் நிலையினன். வழக்குத் தொடுத்தவளே குற்றத்தை மெய்ப்பிக்கும் பொறுப்புடையவள். இன்றைய நீதிமுறையும் அதுவே. ஆனால், குற்றத்தை மெய்ப்பிக்கும் வாய்ப்பு ஏதும் அவளிடம் இல்லை. தன் கையில் அவள் ஏந்தி வந்த சிலம்பு எந்த பயனையும் வழக்குரையில் விளைவிக்கவில்லை என்பதை நினைவில் கொள்வது நல்லது. என் காற்சிலம்பு மாணிக்கப்பரல்களையுடையது என்கின்றாள் கண்ணகி. பாண்டியன் எம்முடைய சிலம்பும் மாணிக்கப்பரல் கொண்டதே என்று கூறியிருந்தால் கண்ணகி தண்டிக்கப்பட்டிருப்பாள். எனினும் பாண்டியன் நெடுஞ்செழியன்,  நீ சொன்னது வழக்கின் உண்மையைத் தெளிவிக்கும் நன்மொழி என்று கூறுகின்றான். மேலும், எம்முடைய சிலம்பு முத்துப் பரல்களையுடையது என்ற உண்மையையும் கூறுகின்றான். பாண்டியன் குற்றமற்றவன் என்பதற்கு அவன் கருத்தே சான்று. மேலும் குற்றத்தை மெய்ப்பிக்கும் வாய்ப்பினைக் கண்ணகிக்குக் கொடுக்க வேண்டிய கட்டாயமில்லாத போதும், தன் பக்கமுள்ள நியாயத்தை நிறுவிக் காட்டுவதற்காகவே அவ்வாய்ப்பினைக் கண்ணகிக்கு வழங்குகின்றான். கோவலன் கையிலிருந்து கைப்பற்றப்பட்ட சிலம்பினைத் தானே முன்வந்து அரண்மனையிலிருந்து வருவித்துக் (கவனிக்க: காமவயப்பட்டு அரசியின் கோபத்தைத் தணிப்பதற்காகக் கோவலனைக் கொன்று, சிலம்பினைக் கொண்டு வந்திருந்தால், அதனை அவன் அரசியிடம்தானே கொடுத்திருக்க வேண்டும். அரண்மனையில் வைத்திருந்ததன்மூலம் பாண்டியன் காமவயப்பட்டுத் தீர்ப்பளிக்க வில்லை என்பதை அறியலாம்.)  கண்ணகியிடம் அளிக்கின்றான். பாண்டியனோ, பிறரோ சிலம்பினை மாற்றியிருந்தால் வழக்கு என்னவாகியிருக்கும்? என நினைத்துப் பாருங்கள்.

உயிரைத் தந்து செங்கோல் நிமிர்த்திய செம்மல்


            கண்ணகி தன்முன் வைக்கப்பட்ட சிலம்பினை எடுத்து உடைக்கின்றாள். சிலம்பின் மாணிக்கப்பரல் பாண்டியன் வாயில் பட்டுக் கிழே விழுகின்றது. அதனைக் கண்ட அவன், இந்த உலகின் தென்னாட்டுக் காவல் என்னால் கெட்டது. நான் அரசனல்ல. கண்ணகியின் சிலம்பை இதுவரை வைத்திருந்த நானே கள்வன் என்று கூறி, தொடுக்கப்படாத மற்றொரு வழக்காகிய கண்ணகி சிலம்பைக் களவாடிய குற்றத்துக்குத் தண்டனையாக மரணத்தைத் தழுவுகின்றான். இக்கால வழக்கம்போலக் கண்ணகியின் இழப்புக்கு நிவாரணமாக இழப்பீட்டுத் தொகை வழங்கியிருந்தால் நாம் அவனுடைய கருணை உள்ளத்தைப் பாராட்டியிருப்போம் அல்லவா?. அல்லது தன்னுடைய அரசின் கடைநிலை ஊழியனால் நிகழ்ந்த தவறுக்குப் பாண்டியன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்கலாம். அப்படிக் கேட்டிருந்தாலும் அதில் குற்றம் ஏதுமில்லை. கணவனை இழந்த உனக்கு நானே கணவனாக இருக்கிறேன் என்று பாண்டியன் சொன்னதாகவும், கண்ணகி அதனை ஏற்றுக் கொண்டதாகவும் வருகின்ற கர்ண்ணகை கதை என்ற நாட்டுப்புறக் கதைப்பாடலும் உண்டு. எனினும் பாண்டியன் இந்த வாய்ப்புக்களையெல்லாம் நினைத்தும் பாராது, தன்னிடமே நீதி வழங்கும் அதிகாரமிருந்தும், கண்ணகி யாருமற்ற அகதி என்று நன்கு தெரிந்தும், அறத்தின்பால் நிற்கும் தன் நிலை மாறாமல், இழந்துபோன கோவலனின் உயிருக்கும், கள்வனுக்கு கொலைத்தண்டம் விதிக்கின்ற  தன் நாட்டு வழக்கம் கருதியும் தன் உயிரைத் தந்துத் தன் செங்கோன்மையை நிறுவுகின்றான். என்றாலும் சிலம்பின் உண்மைகளை உணராமலே பலரும் பாண்டியன் மீது பழிதூற்றுவது சரியா?. எந்நிலையிலும் நீதிதவறாமல் செங்கொன்மையுடன் வாழ்ந்து, பிறர் செய்த தவறாயினும் தன் உயிரையும் விட்ட பண்பாளனாகிய பாண்டியன் நெடுஞ்செழியன் மீது இரண்டாயிரம் ஆண்டுகளாகப் பழிதூற்றுவது நியாயமா?. சிந்தித்துப் பாருங்கள்.

தினமணி தீபாவளி மலர்க் கட்டுரை

தினமணி தீபாவளி மலரில் சங்க இலக்கியக் காட்சிகள் என்னும் தலைப்பில் அண்மையில் குடியரசுத் தலைவரின் இளம் தமிழறிஞர் விருது பெற்ற அறுவரின் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. அதில் முனைவர் ஆ. மணியின் கட்டுரை இரண்டாயிரம் ஆண்டுப்பழி என்னும் தலைப்பில் வெளியாகியுள்ளது. ஒருங்கிணைப்பாளர் இடைமருதூர் கி. மஞ்சுளா அவர்களுக்கும், ஓவியர்கள் கி.சொக்கலிங்கம், செந்தமிழ் ஆகியோருக்கு நன்றி. கட்டுரையின்  படப்படிகள் இதோ:





கட்டுரை அடுத்த பதிவாக வரும்.

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...