சனி, 13 ஜூன், 2015

தொல்காப்பியம் - பொருளதிகாரம் - இளம்பூரணம் - அதிகார முன்னுரை

தொல்காப்பியம் - பொருளதிகாரம்
இளம்பூரணம்

இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோ எனின், பொருளதிகாரம் என்னும் பெயர்த்து. இது, பொருள் உணர்த்தினமையாற் பெற்ற பெயர். நிறுத்தமுறையானே எழுத்தும் சொல்லும் உணர்த்தினார்; இனிப் பொருள் உணர்த்த வேண்டுதலின், இவ்வதிகாரம் பிற்கூறப்பட்டது.

பொருள் என்பது யாதோ எனின், மேற்சொல்லப்பட்ட சொல்லின் உணரப்படுவது. அது, முதல் கரு உரிப்பொருள் என மூவகைப்படும்.

''முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங் காலை முறைசிறந் தனவே
பாடலுட் பயின்றவை நாடுங் காலை'  (அகத். 3)

என்றா ராகலின்.

முதற் பொருளாவது, நிலமும் காலமும் என இருவகைப்படும்.

''முதல்எனப் படுவது நிலம்பொழு திரண்டின்
இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே'' (அகத். 4)

என்றா ராகலின்.

'நிலம்' எனவே. நிலத்திற்குக் காரணமாகிய நீரும், நீர்க்குக் காரணமாகிய தீயும், தீக்குக் காரணமாகிய காற்றும், காற்றிற்குக் காரணமாகிய ஆகாயமும் பெறுதும்.

காலமாவது - மாத்திரை முதலாக, நாழிகை, யாமம், பொழுது, நாள், பக்கம், திங்கள், இருது, அயநம், ஆண்டு, உகம் எனப் பலவகைப்படும்.

கருப்பொருளாவது, இடத்தினும் காலத்தினும் தோற்றும் பொருள். அது, தேவர் மக்கள் விலங்கு முதலாயினவும், உணவு செயல் முதலாயினவும், பறை யாழ் முதலாயினவும், இன்னவான பிறவும் ஆகிப் பலவகைப்படும்.

''தெய்வம் உணாவே மா மரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருஎன மொழிப'' (அகத். 20)

என்றா ராகலின்.

உரிப்பொருளாவது, மக்கட்கு உரிய பொருள், அஃது அகம், புறம் என இருவகைப்படும்.

அகமாவது, புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் எனவும், கைக்கிளை, பெருந்திணை எனவும் எழுவகைப்படும்.

''புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் இவற்றின் நிமித்தம் என்றிவை
தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே'' (அகத். 16)

எனவும்,

''காமம் சாலா இளமை யோள்வயின்
ஏமம் சாலா இடும்பை எய்தி
நன்மையும் தீமையும் என்றிரு திறத்தால்
தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்தும்
புல்லித் தோன்றுங் கைக்கிளைக் குறிப்பே'' (அகத். 53)

எனவும்,

''ஏறிய மடற்றிறம் இளமை தீர்திறம்
தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்
மிக்க காமத்து மிடலொடு தொகைஇச்
செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே''  (அகத். 54)

எனவும் ஓதினாராகலின்.

அஃதேல், கைக்கிளை பெருந்திணை என்பனவற்றை உரிப்பொருள் என ஓதியது யாதினால் எனின், எடுத்துக் கொண்ட கண்ணே 'கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்' என ஓதி அவற்றுள் நடுவண் ஐந்திணைக்குரியன இவை எனப் புணர்தல் முதலாக வகுக்கப் படுதலின், முன் வகுக்கப்படாத கைக்கிளை பெருந்திணையும் உரிப் பொருளாம் என்றுணர்க.

புறமாவது, நிரை கோடற்பகுதியும், பகைவயிற் சேறலும், எயில் வளைத்தலும், இருபெரு வேந்தரும் ஒரு களத்துப் பொருதலும், வென்றி வகையும், நிலையாமை வகையும், புகழ்ச்சிவகையும் என எழுவகைப்படும். அஃதேல், புறப்பொருளை உரிப்பொருள் என ஓதிற்றிலரால் எனின்.

''வெட்சி தானே குறிஞ்சியது புறனே'', (புறத். 1)

எனவும், பிறவும் இவ்வாறு மாட்டேறு பெற ஓதலின், அவையும் உரிப்பொருள் ஆம் என்க. அகம் புறம் என்பன காரணப் பெயர்.

அகப்பொருளாவது, போக நுகர்ச்சியாகலான் அதனான் ஆய பயன் தானே அறிதலின், அகம் என்றார்.

புறப்பொருளாவது, மறஞ்செய்தலும் அறஞ்செய்தலும் ஆகலான் அவற்றான் ஆய பயன் பிறர்க்குப் புலனாதலின். புறம் என்றார்.

அஃதற்றாக அறம், பொருள், இன்பம், வீடு என உலகத்தோரும் சமயத்தோரும் கூறுகின்ற பொருள் யாதனுள் அடங்குமெனின், அவையும் உரிப்பொருளினும் அடங்கும் என்னை? வாகைத்திணையுள்,

''அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்
ஐவகை மரபின் அரசர் பக்கமும்
இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்'' (புறத்.16)

என இல்லறத்திற்கு உரியவும்,

''காமம் சான்ற கடைக்கோட் காலை
ஏமம் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி கற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே'' (கற்பு. 51)

என நான்கு வருணத்தார் இயல்பும்,

''நாலிரு வழக்கின் தாபதப் பக்கமும்'' (புறத். 17)

எனவும்,

''காமம் நீத்த பாலி னானும்'' (புறத்.17)

எனவும், புறமாகிய வீடுபேற்றிற்குரிய வானப்பிரத்த சந்நியாசிகள் இயல்பும் கூறுதலின், அறமும் வீடும் அடங்கின. வெட்சி முதலாகத் தும்பை ஈறாகக் கூறப்பட்ட பொருண்மையும், வாகையிற் கூறப்பட்ட ஒருசாரனவும் காஞ்சிப்படலத்து நிலையாமையும், பாடாண் பகுதியிற் கூறப்பட்ட பொருண்மையுமாகிய இவை எல்லாம் பொருளின் பகுதியாதலின், அப்பொருள் கூறினாராம். அகத்திணையியலானும் களவியலானும் கற்பியலானும் இன்பப் பகுதி கூறினாராம் அஃதேல், பிற நூலாசிரியர் விரித்துக் கூறினாற்போல, அறமும் பொருளும் விரித்துக் கூறாதது என்னையோவெனின், உலகத்தில் நூல் செய்வார் செய்கின்றது, அறிவிலாதாரை அறிவு கொளுத்த வேண்டியன்றே; யாதானும் ஒரு நூல் விரித்தோதிய பொருளைத் தாமும் விரித்து ஓதுவாராயின், ஓதுகின்ற தனாற் பயன் இன்றாமாதலால், முன்னூலாசிரியர் விரித்துக் கூறின பொருளைத் தொகுத்துக் கூறலும், தொகுத்துக் கூறின பொருளை விரித்துக்கூறுலும் நூல் செய்வார் செய்யும் மரபு என்று உணர்க. அஃதேல் இந் நூலகத்து விரித்துக் கூறிய பொருள் யாதெனின், காமப் பகுதியும் வீரப் பகுதியும் என்க. இன்பம் காரணமாகப் பொருள் தேடும் ஆகலானும், பொருளானே அறஞ்செய்யும் ஆகலானும், இன்பமும் பொருளும் ஏற்றம் என ஓதினார் என உணர்க.

அஃதற்றாக, இது பொருளதிகாரமாயின், உலகத்துப் பொருள் எல்லாம் உணர்த்தல் வேண்டுமெனின், அது முதல், கரு, உரிப்பொருள் எனத் தொகைநிலையான் அடங்கும். அவ்வாறு வகுக்கப்பட்ட பொருளை உறுப்பினாலும், தொழிலினாலும், பண்பினாலும் பாகுபடுத்தி நோக்க வரம்பிலவாய் விரியும். இக் கருத்தினானே இவ்வாசிரியர் உலகத்துப் பொருள் எல்லாற்றையும் முதல் கரு உரிப்பொருள் என ஓதினார் என உணர்க.


அஃதற்றாக, இவ் வதிகாரத்துள் உரைக்கின்ற பொருளை யாங்ஙனம் உணர்த்தினாரோ எனின், முற்பட இன்பப் பகுதியாகிய கைக்கிளை முதலாகப் பெருந்திணை ஈறாக அகப்பொருள் இலக்கணம் உணர்த்தி, அதன்பின் புறப்பொருட் பகுதியாகிய வெட்சி முதலாகப் பாடாண்டிணை ஈறாகப் புறப்பொருள் இலக்கணம் உணர்த்தி, அதன் பின் அகப்பொருட் பகுதியாகிய களவியல் கற்பியல் என இரண்டு வகைக் கைகோளும் உணர்த்தி, அதன்பின் அகம் புறம் என இரண்டினையும் பற்றிவரும் பொருள் இயல்பு உணர்த்தி. அதன்பின் அவ்விரு பொருட் கண்ணும் குறிப்புப்பற்றி நிகழும் மெய்ப்பாடு உணர்த்தி, அதன்பின் வடிவும் தொழிலும் பண்பும், பயனும் பற்றி உவமிக்கப்படும் உவம இயல் உணர்த்தி, அதன்பின் எல்லாப் பொருட்கும் இடமாகிய செய்யுள் இயல் உணர்த்தி அதன்பின், வழக்கு இலக்கணமாகிய மரபு இயல் உணர்த்தினார் என்று கொள்க. இவ் வகையினானே அத்திணை இயல், புறத்திணை இயல், களவியல், கற்பியல், பொருள் இயல், மெய்ப்பாட்டு இயல், உவம இயல், செய்யுள் இயல், மரபு இயல் என ஓத்து ஒன்பதாயின.

தொல்காப்பிய இளம்பூரணர் உரை – ஒரு அறிமுகம்

       தொல்காப்பியம் தமிழின் முதன்மை நூல். தமிழ் மரபைக் பேரளவில் கட்டியுரைக்கும் நூல். அந்நூலுக்கு இளம்பூரணர் எழுதியுள்ள உரையின் பொருளதிகாரப் பகுதிகள் இவண் தரப்படுகின்றன. வ.உ.சிதம்பரனார் தொல்காப்பிய இளம்பூரணத்தின் பொருளதிகாரம் பகுதியை முழுமையாகப் பதிப்பித்தவர். அவருக்கு முன்னரே கா. நமச்சிவாயர் முதலிரு இயல்களைப் பதிப்பித்துள்ளது தனிச்செய்தி. இப்பதிப்புக்களை அடிப்ப்டையாகக் கொண்டே பின்னர் எழுந்த அத்தனை பதிப்புக்களும் அமைந்தன. இப்பகுதியும் அவ்வாறு அமைந்த ஒன்றே. தமிழ் இணையக் கல்விக்கழகம் இவ்வாறான உரைகளை இணையப்பக்கத்தில் தந்துள்ளது. அவர்களின் பணி தமிழர்களின் போற்றுதலுக்குரியது. அவர்களுக்கு நம் நன்றி உரித்தாகுக. முதற்கண், இளம்பூரணர் உரை பற்றிய ஆராய்ச்சிக்குறிப்புக்கள் சிலவற்றைக் காண்போம். இவை முனைவர் ஆ. மணியின் பழந்தமிழ் இலக்கண, இலக்கிய உரைகளில் குறுந்தொகை என்னும் ஆய்வுத்திட்ட ஆய்வேட்டிலிருந்து தரப்பட்டுள்ளன.

முதல் உரை?

தொல்காப்பியத்தின் காலப்பழமை காரணமாக, அந்நூல் கூறும் கருத்துக்களை அறிந்துகொள்வதில் இடர்கள் தோன்றின. இதன் விளைவாகத் தொல்காப்பியத்திற்கு உரையெழுதும் முயற்சிகள் தொடங்கின. இளம்பூரணரே இவ்வகையில் முதல் உரையாசிரியராகக் கருதப்படுகின்றார். அவருடைய உரைக்கு முன்னரும் உரைகள் இருந்தன எனக் கருதுவாரும் உண்டு (மு.வை. அரவிந்தன் 2008: 187). இவ்வுரைகள் வாய்மொழி உரைகளாக இருக்கலாம் என்பார் கருத்தினைப் பினவரும் உரைப்பகுதியால் அறியலாம்.

ஒருகால், இளம்பூரணர் காலத்தில், தொல்காப்பியத்திற்குப் பல்வேறு உரைகள் வாய்மொழியாக வழங்கி வந்திருக்கலாம். அவற்றைக் கேட்டு அறிந்த உரையாசிரியர் (இளம்பூரணர்), தாம் எழுதிய உரையில் அவற்றை விடாது போற்றிக் குறித்திருக்கலாம்” (மு.வை. அரவிந்தன் 2008: 188). இக்கருத்து ஓர் ஊகமே. அக்கருத்துக்கள் வாய்மொழியாக மட்டுமே வழங்கின எனக் கருதத் தோன்றவில்லை. முன்னர் வழங்கிப் பின்னர்க் கிடைக்காதுபோன உரைகளாக இருக்கலாமோ என்பது எண்ணிப் பார்க்கத்தக்கது.

இளம்பூரணர் உரைச்சுவடிகள்
 
தொல்காப்பியம் பழந்தமிழ் நூல்களில் பேரளவில் உரைகளைப் பெற்ற நூலாகும். தொல்காப்பியத்தினைப் போல வேறு எந்தவொரு நூலும் இத்தனை உரைகளைப் பெற்றதாகத் தெரியவில்லை. சேனாவரையர், நச்சினார்க்கினியர் முதலான பழந்தமிழ் உரையாசிரியர்களாலேயே உரையாசிரியர் என்னும் சிறப்பினைப் பெற்றவர் இளம்பூரணர் ஆவார். அவருடைய உரை தொல்காப்பியம் முழுமைக்கும் இக்காலத்தில் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்கள் தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தைப் பதிப்பிக்கும் காலத்தில் (1885) தொல்காப்பிய இளம்பூரணர் உரையின் பல பகுதிகள் கிட்டாமல் இருந்தன. இவ்வுண்மையை, ”இந்நூற்கு உரையெழுதினோர் இளம்பூரணர் கல்லாடர் பேராசிரியர் சேனாவரையர் நச்சினார்க்கினியர் ஐவர். இவருள் வடநூற்கடலை நிலைகண்டுணர்ந்த சேனாவரையர் சொல்லதிகாரம் ஒன்றற்கே மற்றை உரைகளினும் மிகச் சிறந்ததோர் உரையெழுதினர். இளம்பூரணர், பேராசிரியருரைகள் முழுவதும் இப்போது இல்லை” (சி.வை.தாமோதரம்பிள்ளை 1885: 4*) என வரும் பகுதியால் அறியலாம். சி.வை.தா.வின் பதிப்புக்கு முன்னரே இளம்பூரணர் உரையின் எழுத்ததிகாரப் பகுதி 1868இல் சோடசாவதானம் சுப்பராயச் செட்டியாரால் கன்னியப்ப முதலியாரின் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்துள்ளது. இப்பதிப்பே இளம்பூரணர் உரைக்கு அமைந்த முதற்பதிப்பாகும். 1885 வரை இளம்பூரணர் உரையின் சொல்லதிகார, பொருளதிகாரப் பகுதிகள் எவையும் அச்சாகவில்லை என்பது குறிக்கத்தக்கது. மேலும், 1885 வரை இளம்பூரணர் உரைப்பகுதிகளும் கிட்டவில்லை போலும். அதனானே சி.வை.தா. இளம்பூரணர் உரை முழுவதும் இல்லை எனக் கருத்துரைத்தார் போலும். மற்றொரு செய்தியும் இவண் குறிக்கத்தக்கது. அதனைக் காண்போம்.

பேராசிரியர் உரையின் நிலை

சி.வை.தா.வின் தொல்காப்பியப் பொருளதிகாரப் பதிப்பில் (1885) உள்ள உரை நச்சினார்க்கினியர் உரை என்றே சி.வை.தா.வால் குறிக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியப் பொருளதிகார உரை முழுவதுமே நச்சினார்க்கினியர் உரையென்றே கருதிச் சி.வை.தா. பதிப்பித்துள்ளார். இதற்குக் காரணம் அவருக்குக் கிடைத்த பன்னிரண்டு சுவடிகளிலும் பொருளதிகாரப் பிற்பகுதி உரை, பேராசிரியர் உரையென்ற குறிப்புக் காணப்படாததேயாகலாம். அவர் காலத்திலிருந்த புலவர்கள் யாரும் இவ்வுண்மையை அறிந்ததிருக்கவில்லை; எனவேதான் யாரும் சி.வை.தா.விடம் இவ்வுண்மையை எடுத்துரைக்கவில்லை போலும். சி.வை.தா.வின் பதிப்பு வெளிவந்து பதினேழு ஆண்டுகளுக்குப் பின்னரே அதாவது அவருடைய மறைவுக்குப் (1901) பின்னரே ரா. இராகவையங்கார் செந்தமிழ் இதழில் ((1902 தொகுதி – I, பகுதி – I இல்)) 'அச்சிட்ட செய்யுளியலுரைகாரர் பேராசிரியர் என்பது' என்ற கட்டுரையின்மூலம் தெளிவுபடுத்துகின்றார். மீண்டும் செந்தமிழ் தொகுதி 2, பகுதி – 11இல் 'அச்சிட்ட மரபியலுரை' என்ற கட்டுரையிலும் தொல்.பொருளதிகாரப் பிற்பகுதி உரை, பேராசிரியர் உரை என்ற உண்மையைத் தமிழுலகுக்கு வெளிப்படுத்தினார். அதுகாறும் இவ்வுண்மையை வேறு யாரும் எடுத்துரைத்ததாகத் தெரியவில்லை. இந்த நிலையையும் நாம் இவ்விடத்தில் எண்ணிப் பார்த்தால் பேராசிரியர் உரையை நச்சினார்க்கினியர் உரையெனச் சி.வை.தா. பதிப்பித்ததன் பின்புலத்தை அறியலாம். தொல்காப்பியப் பேராசிரியருரை இப்போது இல்லை என்று குறித்துள்ள சி.வை.தா. (1885:5*) தமக்குக் கிடைத்த தரவுகளின் அடிப்படையிலேயே பேராசிரியர் உரையை நச்சினார்க்கினியர் உரையெனக் கருதிப் பதிப்பித்துள்ளார் என்பதே உண்மைஎன்ற ஆ. மணியின் கருத்து (சி. பத்மாசனி முதலானோர் 2013 : 324 – 325) பொருத்தமுடையதாகவே தோன்றுகின்றது.

இளம்பூரணர் உரையின் கிடைக்காத பகுதிகள்


இளம்பூரணருக்குப் பின் வந்த உரையாசிரியர்கள் சிலர், அவரது உரைகளைக் குறிப்பிடும் இடங்களில் சில இன்றுள்ள இளம்பூரணர் உரையில் காணப்படவில்லை” (மு.வை.அரவிந்தன் 2008 : 193) என்ற கருத்து உணர்த்துகின்ற உண்மையும் சிந்திக்கத்தக்கது. இளம்பூரணர் உரையின் கிடைக்காத பகுதிகளும் உள என்பதை ஆய்வாளர்கள் மனங்கொள்ள வேண்டும். இக்காலத்தில் கிடைக்கின்ற இளம்பூரணர் உரைப்பதிப்புக்களில் உரையில்லா நூற்பாக்கள் பான்மையும் இல்லையென்றே சொல்லிவிடலாம். இதுதான் இன்றைய இளம்பூரணர் உரைப்பதிப்புக்களின் நிலை. இளம்பூரணர் காலம் கி.பி. 11 ஆம் நூற்றாண்டு (மு.வை. அரவிந்தன் 2008: 175).

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...