பொருளதிகாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொருளதிகாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 18 அக்டோபர், 2015

தொல்காப்பிய அகத்திணை இயல்: புறத்திணைக்குப் பெயர் கூறலாம்

தொல்காப்பிய அகத்திணை இயல்: புறத்திணைக்குப் பெயர் கூறலாம்

58.புறத்திணை1 மருங்கின் பொருந்தின் அல்லது
அகத்திணை மருங்கின் அளவுதல் இலவே. (அகத். 58)

இஃது, எய்தாதது எய்துவித்தல் நுதலிற்று.

(இதன் பொருள்): புறத்திணை மருங்கின் பொருந்தின் அல்லது - ஒருவர் பெயர் புறத்திணை மருங்கிற் பொருந்தினல்லது, அகத்திணை மருங்கின் அளவுதல் இல - அகத்திணை மருங்கின் வருதல் இல்லை. [ஏகாரம் ஈற்றசை].

இதனாற் சொல்லியது ஒருவர்க்குரித்தாகி வரும்பெயர் அகத்திணை பற்றி வரும் கைக்கிளை பெருந்திணையினும் வரப் பெறாது என்பதூஉம், புறத்திணையுள் வரும் என்பதூஉம். ஆண்டும் பாடாண் பாட்டுக் காமம் பொருளாக வரின் அவ்வழி வரூஉம் என்பதூஉம் கூறியவாறு. இதனான் அகப்பொருள் ஒருவரைச் சாராது பொதுப்பட வருமென்பது கொள்க. (அகத். 58).

முதலாவது தொல்காப்பிய அகத்திணை இயல்: முற்றிற்று.

குறிப்பு விளக்கம்

1. "புறத்திணை கருப்பொருளாயும் அதுதான் உவமமாயும் அகத்திணையுட்கலக்கு மென்பதூஉம் இதனானே விரித்தாராயிற்று. அளவும் எனவே ஒரு செய்யுட்கண்ணும் அப்புறத்திணையாகிய இயற் பெயர்களும் சிறப்புப்பெயர்களும் ஒன்றே அன்றிப் பலவும் வருதலுங்கொள்க. (நச்சி.).



தொல்காப்பிய அகத்திணை இயல்: சுட்டி ஒருவர் பெயர் கூறல் பெறார்

தொல்காப்பிய அகத்திணை இயல்: சுட்டி ஒருவர் பெயர் கூறல் பெறார்

57.மக்கள் நுதலிய1 அகன்ஐந் திணையும்
சுட்டிஒருவர்ப் பெயர்கொளப் பெறாஅர். (அகத்.57)

இது, நடுவணைந்திணைக்குரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

(இதன் பொருள்): அகன் மக்கள் நுதலிய ஐந்திணையும் - அகத் திணையுள் கைக்கிளை பெருந்திணை ஒழிந்த ஐந்திற்கும் உரியவாகிய நிலமும் காலமும் கருப்பொருளுமன்றி மக்களைப்பற்றி வரும் புணர்தலும் பிரிதலும் இருத்தலும் இரங்கலும் ஊடலும் என்று சொல்லப்பட்ட ஐந்து பொருண்மையும், சுட்டி ஒருவர் பெயர் கொளப்பெறார் (அவ்வைந்திணைக் கண்ணும் தலை மகனாகப் புலனெறி வழக்கம் செய்ய வேண்டின்) நாடன் ஊரன் சேர்ப்பன் என்னும் பொதுப்பெயரானன்றி ஒருவர்க்கு உரித்தாகி வரும் பெயர் கொள்ளப்பெறார் புலவர். (அகத். 57).

குறிப்பு விளக்கம்

1.'மக்கள் நுதலிய' என்பதனானே மக்கள் அல்லாத தேவரும் நரகரும் தலைவராகக் கூறப்படார் எனவும் 'அகன் ஐந்திணையும்' என்றதனானே கைக்கிளையும் பெருந்திணையும் சுட்டியொருவர் பெயர்கொண்டும் கொள்ளாதும் வருமெனவுங் கொள்க. (நச்சி.)


தொல்காப்பிய அகத்திணை இயல்: பாடல் சான்ற புலனெறி விளக்கம்

தொல்காப்பிய அகத்திணை இயல்: பாடல் சான்ற புலனெறி விளக்கம்

56.நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்
கலியே பரிபாட்டு ஆயிரு பாவினும்1
உரிய தாகும் என்மனார் புலவர். (அகத். 56)

இதுவும் அகத்திணைக்கு இன்றியமையாத செய்யுளை வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று.

(இதன் பொருள்): நாடக வழக்காவது , சுவைபட வருவனவெல்லாம் ஓரிடத்து வந்தனவாகத் தொகுத்துக் கூறுதல் . அஃதாவது செல்வத்தானும் , குலத்தானும் ஒழுக்கத்தானும் , அன்பினானும் ஒத்தார் இருவராய்த் தமரின் நீங்கித் தனியிடத்து எதிர்ப்பட்டார் எனவும் , அவ்வழிக் கொடுப்போரு மின்றி அடுப்போரு மின்றி வேட்கை மிகுதியாற் புணர்ந்தார் எனவும் , பின்னும் அவர் களவொழுக்கம் நடத்தி இலக்கண வகையான் வரைந்தெய்தினார் எனவும் , பிறவும் இந்நிகரனவாகிச் சுவைபட வருவனவெல்லாம் ஒருங்கு வந்தனவாகக் கூறுதல் .

உலகியல் வழக்காவது , உலகத்தார் ஒழுகலாற்றோடு ஒத்து வருவது.

பாடல் சான்ற புலன் நெறி வழக்கமாவது , இவ்விருவகையானும் பாடல் சான்ற கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்க் கூறப்படுகின்ற அகப்பொருள்.

கலியே பரிபாட்டு ஆஇருபாவினும் உரியது ஆகும் என்மனார் புலவர் என்றது , கலியும் பரிபாடலும் என்னும் இரண்டு பாவிலும் உரிமையுடைத்தாம் என்று உரைப்பர் புலவர் என்றவாறு .

எனவே இவை இன்றியமையாதன என்றவாறு . ஒழிந்த பாக்கள் இத்துணை அகப்பொருட்கு உரியவாய் வருதலின்றிப் புறப்பொருட்கும் உரியவாய் வருதலின் ஓதாராயினர் . புறப்பொருள் உலகியல்பானன்றி வாராமையின் , அது நாடக வழக்கம் அன்றாயிற்று. (அகத். 56).

குறிப்பு விளக்கம்

(பாடம் )1.பாங்கினும் .


தொல்காப்பிய அகத்திணை இயல்: கைக்கிளை மரபு

தொல்காப்பிய அகத்திணை இயல்: கைக்கிளை மரபு

55.முன்னைய நான்கும்1முன்னதற் கென்ப. (அகத். 55)

இது கைக்கிளைக்குரியதொரு மரபு உணர்த்துதல் நுதலிற்று .

(இதன் பொருள்): முன்னைய நான்கும் - மேற்சொல்லப்பட்ட நான்கினும் முந்துற்ற நிலைமை நான்கும் , முன்னதற்கு என்ப முற்கூறப்பட்ட கைக்கிளைக்காம் என்ப.

அவையாவன:- ஏறா மடற்றிறம் , இளமை தீராத்திறம் , தேறுதலொழிந்த காமத்து மிகாத்திறம் , மிக்க காமத்தின் மாறாகாத்திறம் என்பன .

ஏறாமடற்றிறம் வெளிப்பட இரத்தலாம் , இளமை தீராத்திறம் , நலம் பாராட்டலாம் . தேறுதலொழிந்த காமத்து மிகாத்திறம் , புணராவிரக்கமாம். மிக்க காமத்தின் மாறாகாத்திறம் , நயப்புறுத்தலாம்.

இவை ஒருவாற்றான் உணர்த்தியவாறு.

"கைக்கிளை செந்திறம் பெருந்திணை நோந்திறம்
அத்திறம் இரண்டும் அகத்திணை மயங்காது
அத்திணை யானே யாத்தனர் புலவர்."

இதனானே கைக்கிளை இன்பம் பயப்ப வருமென்பதூஉம் , பெருந்திணை துன்பம் பயப்ப வருமென்பதூஉம் அறிந்துகொள்க .

குறிப்பு விளக்கம்


1.முன்னைய நான்கும் : இயற்கைப் புணர்ச்சிக்கு முன் நிகழ்ந்த காட்சியும் ஐயமும் தெரிதலும் தேறுலும் என்ற குறிப்பு நான்கும். (நச்சி.)

தொல்காப்பிய அகத்திணை இயல்: பெருந்திணை விளக்கம்

தொல்காப்பிய அகத்திணை இயல்: பெருந்திணை விளக்கம்

54.ஏறிய மடல்திறம் இளமை தீர்திறம்
தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்
மிக்க காமத்து மிடலொடு தொகைஇச்
செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே. (அகத். 54)

இது பெருந்திணை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இதன் பொருள்): ஏறிய மடல் திறம் - ஏறிய மடற்றிறமும், இளமை தீர்திறம் - இளமை தீர்திறமும், தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம் - தேறுதலொழிந்த காமத்து மிகுதிறமும், மிக்க காமத்து மிடலொடு தொகைஇ - மிக்க காமத்து மாறாய திறனொடு கூட்டி, செப்பிய நான்கும் பெருந்திணைக்க குறிப்பு - சொல்லப்பட்ட நான்கு திறமும் பெருந்திணைக் கருத்து.

கைக்கிளை புணராது நிகழும் என்றமையால், இது புணர்ந்தபின் நிகழும் என்று கொள்க. ஏறிய மடற்றிறம் தலைமகற்கே உரித்து. அது வருமாறு ; -

" எழின்மருப் பெழில்வேழ மிகுதரு கடாத்தால்
தொழின்மாறித் தலைவைத்த தோட்டிகை நிமிர்ந்தாங்கு
அறிவுநம் அறிவாய்ந்த அடக்கமும் நாணொடு
வறிதாகப் பிறரென்னை நகுபவும் நகுபுடன்
மின்னவிர் நுடக்கமுங் களவும்போல் மெய்காட்டி
என்னெஞ்சம் என்னொடு நில்லாமை நனிவௌவித்
தன்னலங் கரந்தாளைத் தலைப்படுமா றெவன்கொலோ
மணிப்பீலி சூட்டிய நூலொடு மற்றை
அணிப்பூளை ஆவிரை யெருக்கொடு பிணித்தியாத்து
மல்லலூர் மறுகின்கண் இவட்பாடு மிஃதொத்தன்
எல்லீருங் கேட்டீமின் என்று;

படரும் பனையீன்ற மாவுஞ் சுடரிழை
நல்கியாள் நல்கி யவை;

பொறையென் வரைத்தன்றிப் பூநுதல் ஈத்த
நிறைஅழி காமநோய் நீந்தி அறையுற்ற
உப்பியல் பாவை உறையுற் றதுபோல
உக்கு விடும்என் உயிர்;
பூளை பொலமலர் ஆவிரை வேய்வென்ற
தோளாள் எமக்கீத்த பூ ;
உரித்தென் வரைத்தன்றி ஒள்ளிழை தந்த
பரிசழி பைதல்நோய் மூழ்கி எரிபரந்த
நெய்யுண் மெழுகின் நிலையாது பைபயத்
தேயும் அளித்தென் னுயிர் ;
இளையாரும் ஏதி லவரும் உளையயான்
உற்ற துசாவுந் துணை ;

என்றியான் பாடக் கேட்டு
அன்புறு கிளவியாள் அருளிவந் தளித்தலின்
துன்பத்தில் துணையாய மடல்இனி இவட்பெற
இன்பத்துள் இடம்படலென் றிரங்கினள் அன்புற்று
அடங்கருந் தோற்றத்து அருந்தவ முயன்றோர்தம்
உடம்பொழித்து உயருல கினிதுபெற் றாங்கே." ( கலித் . நெய் .21)

இளமை தீர் திறமாவது , இளமை நீங்கிய திறத்தின்கண் நிகழ்வது அது மூவகைப்படும் ; தலைமகன் முதியனாகித் தலைமகள் இளையளாதலும் தலைமகள் முதியளாகித் தலைமகன் இளையனாதலும் , இவ்விருவரும் இளமைப் பருவம் நீங்கியவழி அறத்தின் மேல் மனம் நிகழ்தலன்றிக் காமத்தின்மேல் மனம் நிகழ்தலும் என.

உதாரணம்
"உளைத்தவர் கூறும் உரையெல்லாம் நிற்க
முளைத்த முறுவலார்க் கெல்லாம் - விளைத்த
பழங்கள் அனைத்தாய்ப் படுஇளி செய்யும்
முழங்கு புனலூரன் மூப்பு."(புறப். இருபாற் பெருந்திணை . 14 )

இதனுள் தலைமகன் இளமை தீர் திறம் வந்தவாறு காண்க .

"அரும்பிற்கு முண்டோ அலரது நாற்றம்
பெருந்தோள் விறலி பிணங்கல் - கரும்போடு
அதிரும் புனலூரற்கு ஆரமிழ்தம் - அன்றோ
முதிரும் முலையார் முயக்கு "( புறப் . இருபாற்பெருந்திணை .13 )

இதனுள் தலைமகள் இளமை தீர் திறம் வந்தவாறு காண்க.

"ஆண்டலைக் கீன்ற பறழ்மகனே நீயெம்மை
வேண்டுவல் என்று விலக்கினை நின்போல்வார்
தீண்டப் பெறுபவோ மற்று . "(கலித் மருதம் . 29 )

எனவும்,

" உக்கத்து மேலும் நடுஉயர்ந்து வாய்வாய
கொக்குரித் தன்ன கொடுமடாய் நின்னையான்
புக்ககலம் புல்லினெஞ் சூன்றும் புறம்புல்லின்
அக்குளுத்துப் புல்லலும் ஆற்றேன் அருளீமோ
பக்கத்துப் 1புல்லச் சிறிது "( கலித் . மருதம் . 29 )

எனவும் முறையே தலைமகன் தலைமகள் ஆவார் இருவர் இளமை தீர் திறம் வந்தவாறு காண்க .

தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறமாவது : தெளிவு ஒழிந்த காமத்தின் கண்ணே மிகுதலும் என்றவறு.

இது பெரும்பான்மை தலைமகட்கே உரித்து ,

உதாரணம்:

"புரிவுண்ட புணர்ச்சியுள் புல்லாரா மாத்திரை
அருகுவித் தொருவரை அகற்றலில் தெரிவார்கண்
செயநின்ற பண்ணினுள் செவிசுவை கொள்ளாது2
நயனின்ற பொருள்கெடப் புரியறு நரம்பினும்
பயனின்று மன்றம்ம காமம் இவள்மன்னும்
ஒண்ணுதல் ஆயத்தார் ஓராங்குத் திளைப்பினும்
முள்நுனை தோன்றாமை முறுவல்கொண் டடக்கித்தன்
கண்ணினும் முகத்தினும் நகுபவள் பெண்ணின்றி
யாவரும் தண்குரல் கேட்ப நிரைவெண்பல்
மீயுயர் தோன்ற நகாஅநக் காங்கே
பூவுயிர்த் தன்ன புகழ்சால் எழில்உண்கண்
ஆயிதழ் மல்க அழும் ;

ஓஒ! அழிதகப் பாராதே அல்லல் குறுகினம்
காண்பாம் கனங்குழை பண்பு ;

என்று , எல்லீரும் என் செய்தீர் என்னை நகுதிரோ
நல்ல நகாஅலிர் மற்கொலோ யானுற்ற
அல்லல் உறீஇயான் மாய மலர்மார்பு
புல்லிப் புணரப் பெறின்;
எல்லாநீ ; உற்ற தெவனோமற் றென்றீரேல் எற்சிதை
செய்தான் இவன்என உற்ற திதுவென
எய்த உரைக்கும் உரனகத் துண்டாயின்
பைதல வாகிப் பசக்குவ மன்னோவென்
நெய்தல் மலரன்ன கண் ;

கோடுவாய் கூடாப் பிறையைப் பிறிதொன்று
நாடுவேன் கண்டனென் சிற்றிலுள் கண்டாங்கே
ஆடையான் மூஉய் அகப்படுப்பேன் சூடிய
காணான் திரிதருங் கொல்லோ மணிமிடற்று
மாண்மலர்க் கொன்றை யவன்;

தெள்ளியேம் என்றுரைத்துத் தேராது ஒருநிலையே
வள்ளியை ஆகென நெஞ்சை வலியுறீஇ
உள்ளி வருகுவர் கொல்லோ உளைந்தியான்
எள்ளி இருக்குவேன் மற்கொலோ நள்ளிருள்
மாந்தர் கடிகொண்ட கங்குற் கனவினால்
தோன்றினன் ஆகத் தொடுத்தேன்மன் யான் தன்னைப்3
பையெனக் காண்கு விழிப்பயான் பற்றிய
கையுளே மாய்ந்தான் கரந்து;

கதிர்பகா ஞாயிறே கல்சேர்தி ஆயின்
அவரை நினைத்து நிறுத்தென்கை நீட்டித்
தருகுவை ஆயின் தவிருமென் நெஞ்சத்து
உயிர் திரியா மாட்டிய தீ ;

மையில் கடரே மலைசேர்தி நீயாயின்
பௌவநீர்த் தோன்றிப் பகல்செய்யு மாத்திரை
கைவிளக் காகக் கதிர்சில தாராய்என்
தொய்யில் சிதைத்தானைத் தேர்கு;

சிதைத்தானைச் செய்வ தெவன்கொலோ எம்மை
நயந்து நலஞ்சிதைத் தான்;

மன்றப் பனைமேல் 4மலைமாந் தளிரேநீ
தொன்றில் உலகத்துக் கேட்டும் அறிதியோ
மென்றோள் ஞெகிழ்த்தான் தகையல்லால் யான்காணேன்
நன்றுதீ தென்று பிற ;

நோயெரி ஆகச் சுடினுஞ் சுழற்றியென்
ஆயிதழ் உள்ளே கரப்பன் கரந்தாங்கே
நோயுறு வெந்நீர் தெளிப்பின் தலைக்கொண்டு
வேவ தளித்திவ் வுலகு.
மெலியப் பொறுத்தேன் களைந்தீமின் சான்றீர்
நலிதருங் காமமுங் கௌவையும் என்றிவ்
வலிதின் உயிர்காவாத் தூங்கியாங் கென்னை
நலியும் விழுமம் இரண்டு;

எனப்பாடி,
இனைந்துநொந் தழுதனள் நினைந்துநீடு உயிர்த்தனள்
எல்லையும் இரவும் கழிந்தவென் றெண்ணி எல்லிரா
நல்கிய கேள்வன் இவன்மன்ற மெல்ல
மணியுட் பரந்தநீர் போலத் துணிபாங்
கலஞ்சிதை இல்லத்துக் காழ்கொண்டு தேற்றுக்
கலங்கிய நீர்போல் தெளிந்து நலம்பெற்றாள்
நல்லெழின் மார்பனைச் சார்ந்து . " ( கலித் - நெய் . 25)

மிக்க காமத்து மிடலாவது : ஐந்திணைக்கண் நிகழும் காமத்தின் மாறுபட்டு வருவது . அஃதாவது , வற்புறுத்துந் துணையின்றிச் செலவழுங்குதலும் , ஆற்றருமை கூறுதலும் இழிந்திரத்து கூறுதலும், இடையூறுகிளத்தலும் அஞ்சிக்கூறுதலும், மனைவி விடுத்தலிற் பிறள்வயிற் சேறலும், இன்னோரன்ன ஆண்பாற்கிளவியும் , முன்னுறச் செப்பலும் , பின்னிலை முயல்தலும் ' கணவனுள்வழி இரவுத்தலைசேறலும் , பருவம் மயங்கலும் , இன்னோரன்ன பெண்பாற் கிளவியும் , குற்றிசையும் ; குறுங்கலியும் இன்னோரன்ன பெண்பாற் கிளவியும் , குற்றிசையும் ; குறுங்கலியும் இன்னோரன்ன பிறவுமாகிய ஒத்த அன்பின் மாறுபட்டு வருவன எல்லாம் கொள்ளப்படும் . அவற்றுட் சில வருமாறு :-

" நடுங்கி நறுநுதலாள் நன்னலம்பீர் பூப்ப
ஒடுங்கி உயங்கல் ஒழியக் - கடுங்கணை
வில்லேர் உழவர் விடரோங்கு மாமலைச்
செல்லேம் ஒழிக செலவு."( புறப் . இருபாற்பெருந்தணை . 1)

இது செலவழுங்குதல்.

" பணையாய் அறைமுழங்கும் பாயருவி நாடன்
பிணையார மார்பம் பிணையத் - துணையாய்க்
கழிகாமம் உய்ப்பக் கனையிருட்கண் செல்வேன்
வழிகாண மின்னுக வான் . "( புறப் . பெருந்திணை - 1)

இஃது இரவுத்தலைச் சேறல்.

" பெரும்பணை மென்தோள் பிரிந்தார்எம் உள்ளி
வரும்பருவம் அன்றுகொல் ஆம்கொல் - கரும்பிமிரும்
பூமலி கொன்றை புறவெலாம் பொன்மலரும்
மாமயிலும் ஆலும் மலை . "( புறப் . இருபாற்பெருந்திணை-6)

இது பருவமயங்கல். பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க மெய்ப் பாட்டியலுள் "இன்பத்தை வெறுத்தல்" ( மெய்ப்பாடு - 22 ) முதலாக நிகழ்பவை பெருளாக வருங்கிளவியும் இதன் பகுதியாகக் கொள்க. (அகத். 54).

குறிப்பு விளக்கம்

(பாடவேறுபாடு): 1. புல்லல்.

2. கொள்ளாமை.

(பாடவேறுபாடு): 3. யான்றளைஇப்


4. பணைமேல் .

தொல்காப்பிய அகத்திணை இயல்: கைக்கிளை விளக்கம்

தொல்காப்பிய அகத்திணை இயல்: கைக்கிளை விளக்கம்

53. காமஞ் சாலா இளமை யோள்வயின்
ஏமஞ் சாலா இடும்பை யெய்தி
நன்மையும் தீமையும் என்றிரு திறத்தான்
தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்துச்
சொல்எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்
புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே. (அகத். 53)

மேல் நடுவணைந்திணைக்குரிய பொருண்மையெல்லாம் கூறினார். இது கைக்கிளையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இதன் பொருள்): காமம் சாலா இளமையோள்வயின் - காமம் அமையாத இளையாள்மாட்டு, ஏமம் சாலா இடும்பை எய்தி - ஏமம் அமையாத இடும்பை எய்தி, நன்மையும் தீமையும் என்று இரு திறத்தான் - புகழ்தலும் பழித்தலுமாகிய இரு திறத்தால், தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்து - தனக்கும் அவட்கும் ஒத்தன புணர்த்து, சொல் எதிர்பெறான் சொல்லி இன்புறல் - சொல் எதிர் பெறானாய்த் தானே சொல்லி இன்புறுதல், புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பு - பொருந்தித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பு - பொருந்தித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பு.

'பொருந்தித்தோன்றும் ' என்றதனால் அகத்தொடு பொருந்துதல் கொள்க. என்னை? ' காமஞ்சாலா ' என்றதனால் தலைமைக்குக் குற்றம் வராதாயிற்று. ' புல்லித்தோன்றும் ' என்றதனால், புல்லாமற்றோன்றும் கைக்கிளையும் கொள்ளப்படும். அஃதாவது - காமஞ்சான்ற தலைமகள் மாட்டு நிகழும் மனநிகழ்ச்சி. அது களவியலுள் கூறப்படுகின்றது [' என்று' என்பது எண்ணிடைச்சொல். ஏகாரம் ஈற்றசை. ]

காமம் சாலா இளமையோள்வயின் கூறியதற்குச் செய்யுள்:

"ஊர்க்கால் நிவந்த பொதும்பருள் நீர்க்கால்
கொழுநிழல் ஞாழல் முதிரிணர் கொண்டு
கழும முடித்துக் கண்கூடு கூழை
சுவல்மிசைத் தாதொடு தாழ அகல்மதி
தீங்கதிர் விட்டது போலமுக னமர்ந்து
ஈங்கே வருவாள் இவள்யார்கொல் ஆங்கேஓர்
வல்லவன் தைஇய பாவைகொல் நல்லார்
உறுப்பெலாங் கொண்டியற்றி யாள்கொல் வெறுப்பினால்
வேண்டுருவம் கொண்டதோர் கூற்றம்கொல் ஆண்டார்
கடிதிவளைக் காவார் விடுதல் கொடியியற்
பல்கலைச் சில்பூங் கலிங்கத்தள் ஈங்கிதோர்
நல்கூர்ந்தார் செல்வ மகள்;
இவளைச் சொல்லாடிக் காண்பென் தகைத்து;

நல்லாய் கேள்,

ஆய்தூவி அனமென அணிமயிற் பெடையெனத்
தூதுணம் புறவெனத் துதைந்தநின் எழில்நலம்
மாதர்கொள் மான்நோக்கின் மடநல்லாய் நிற்கண்டார்ப்
பேதுறூஉம் என்பதை அறிதியோ அறியாயோ?

நுணங்கமைத் திரள்என நுண்இழை யணையென
முழங்குநீர்ப் புணையென அமைந்தநின் தடமென்றோள்
வணங்கிறை வாலெயிற் றந்நல்லாய் நிற்கண்டார்க்கு
அணங்காகு மென்பதை அறிதியோ அறியாயோ?

முதிர்கோங்கின் முகையென முகஞ்செய்த குரும்பையெனப்
பெயல்துளி முகிழெனப் பெருத்தநின் இளமுலை
மயிர்வார்ந்த வரிமுன்கை மடநல்லாய் நிற்கண்டார்
உயிர்வாங்கு மென்பதை உணர்தியோ வுணராயோ ?

என ஆங்கு,

பேதுற்றாய் போலப் பிறரெவ்வம் நீயறியாய்
யாதொன்றும் வாய்வாளாது இறந்தீவாய் கேளினி
நீயுந் தவறிலை நின்னைப் புறங்கடைப்
போதர விட்ட நுமருந் தவறிலர்
நிறையழி கொல்யானை நீர்க்குவிட் டாங்குப்
பறையறைந் தல்லது செல்லற்க என்னா
இறையே தவறுடை யான். " 

(கலித். குறிஞ்சி - 20). (அகத். 53).

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...