வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

பெரியாரிய நோக்கில் குறுந்தொகை ஆய்வு இயல்புகள் - நூலறிமுகம்

பாரதிதாசன் பல்கலைக் கழகப் பெரியார் உயராய்வு மையத்தின் தலைவராகப் பணியாற்றிவரும் முனைவர் இரா. அறவேந்தன் அவர்கள், காரைக்குடி அழகப்பாப் பல்கலைக் கழகத்தில் இணைப்பேராசிரியராகப் பணியாற்றியபோது வரலாற்றியல் நோக்கில் குறுந்தொகை ஆய்வு இயல்புகள் என்ற தலைப்பில் ஆய்வுத்திட்டமொன்றை நிகழ்த்தினார். அவ்ஆய்வேடு பெரியாரிய நோக்கில் குறுந்தொகை ஆய்வு இயல்புகள் என்ற தலைப்பில் நூலாக்கம் பெற்றுள்ளது. இயல்பாகவே செவ்விய உழைப்புக்குச் சொந்தக்காரராகிய அறவேந்தன் அவர்களின் பேரூழைப்பில் உருவான இந்நூல்,  குறுந்தொகைக்கு எழுந்துள்ள நூல்களையும் கட்டுரைகளையும் அறிமுகம் செய்து அவற்றின் திறனை மதிப்பிட்டுரைக்கின்றது.
      குறுந்தொகை தொடர்பான நூல்களைத் தேடுவதும் பெறுவதும் எவ்வளவு கடுமையான பணி என்பதை இந்நூலின் நன்றியுரை விளக்கிக் காட்டுகின்றது. உ.வே.சா. போன்றோர் சுவடிகளைத் தேடிப் பயணம் மேற்கொண்டதுபோல, இன்று நூல்களைத் தேடி அறவேந்தன் போன்றோர் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்பதை அறியும்போது நம் நெஞ்சம் நெகிழ்கின்றது. 
     பெரியாரிய நோக்கில் குறுந்தொகை ஆய்வு இயல்புகள் என்ற இந்நூல், 1. பெரியாரியம், 2. குறுந்தொகை: அச்சாக்கத்திற்கு முந்தைய வாசிப்பு நிலை, 3. குறுந்தொகை:  திறனாய்வு நூல்கள்வழி அறியலாகும் ஆய்வு இயல்புகள், 4.  குறுந்தொகை:  கட்டுரைகள்வழி அறியலாகும் ஆய்வு இயல்புகள், 5. பெரியாரிய நோக்கில் குறுந்தொகை ஆய்வு இயல்புகள், 6. துணைநூல்பட்டியல், 7. பின்னிணைப்புகள், 8. பெயரடைவு ஆகிய எட்டு இயல்களைக் கொண்டதாகும்.
  குறுந்தொகை பற்றிய திறனாய்வு நூல்களை அறிமுகம் செய்து மதிப்பிடுரைக்கும் பகுதிக்குச் சான்றாக, நான் எழுதிய குறுந்தொகைத் திறனுரைகள் நூலின் மதிப்பீட்டுப்ப் பகுதியைக் காணலாம். " தரவுகளைப் புள்ளிவிவர அடிப்படையில் திரட்டுதல், ஆய்வுக்கான களத்தைத் தெளிவாக வரையறுத்தல், முன் ஆய்வு முடிபுகளைக் குறித்தல், வினா விடைமுறையில் விவாதித்தல், புதிய கருத்துகளையும் கருதுகோள்களையும் முன்வைத்தல் எனும் நிலைகளில் இந்நூல் தனிச்சிறப்புடையதாகத் திகழ்கின்றது."(ப.120).
   நூலாசிரியரின்(அறவேந்தனின்) ஆய்வுள்ளத்தையும் அணுகுமுறைகளையும் பின்வரும் பகுதி நமக்குக் காட்டுகின்றது: " குறுந்தொகைப் பாக்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பெற்றுள்ள கட்டுரைகளாக 421 கட்டுரைகள் இனங்காணப்பெற்றுள்ளன. இவற்றில் 243 கட்டுரைகள் குறுந்தொகை ஆய்வுக்கோவைத் தொகுதிகளில் வெளிவந்தவை. அக்கட்டுரைகளின் பொருண்மைகள் அந்நூலுக்குரிய விளக்கப்பகுதியில் இந்த ஆய்வில் பகுத்தளிக்கப் பெற்றுள்ளன. 21 கட்டுரைகள் கிடைக்கவில்லை. அவை கிடைக்கப்பெறாதவை எனும் தலைப்பில் துணைநூற்பட்டியலில் அளிக்கப் பெற்றுள்ளன. ஏனைய 157 கட்டுரைகள் இப்பகுதியில் ஆய்வுக்கு உட்படுத்தப் பெறுகின்றன."(ப.166).
       இந்நூல் முன்வைக்கும் கருத்துக்கள் சில:
1.1940 இல் குறுந்தொகைக்கெனத் தனிநூல் வெளியிடும் முயற்சி தொடக்கப்பெற்றுள்ளது.(ப.42). அந்நூல் குறுந்தொகைச் சொற்பொழிவுகள் என்பதாகும்.
2. 1940 முதல் 2009வரை 49 நூல்கள் வெளிவந்துள்ளன.(ப.42).
3. சௌரிப்பெருமாள் பதிப்பில் முத்துரத்நம் எழுதிய முகவுரையே குறுந்தொகை தொடர்பான முதல் கட்டுரையாகலாம்.(ப.167).
4.குறுந்தொகை ஆய்வுஇயல்புகள் பிற்காலத்தில் பெரிதும் அறிவுக்கண் கொண்டு பார்க்கும் சூழல் வலுப்பெறுவதற்குக் காரணம் அயலக ஆய்வுமுறைகளை உள்வாங்கிக் கொண்ட கல்விமுறை வழக்குப் பெற்றது என்பதுதன் வெளிப்படை. இதற்கான வித்தாக நீதிக்கட்சி, திராவிட இயக்க, சுயமரியாதை இயக்கச் செயல்பாடுகள் அமைந்தன என்பதும் வெளிப்படை.(ப.293).
5.குறுந்தொகை பற்றிய திறனாய்வு நூல்கள் 23. அறிமுகநூல்கள் 17.( 9 நூல்கள் கிடைக்கவில்லை).
6. குறுந்தொகைப் பாக்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பெற்றுள்ள கட்டுரைகள் 421. (அவற்றில் 20 கட்டுரைகள் நான் (ஆ.மணி)எழுதியவை.).
 குறுந்தொகை ஆய்வுகளைப் பற்றி அறியவிரும்புவோர் படிக்கவேண்டிய இன்றியமையாத நூல் இது. படித்துப் பயன்பெறுக.
   நூல் கிடைக்குமிடம்:  தொடர்புக்கு : 94426 28922. விலை: ரூ. 200. பக்கம்:360.
 நூலின் முன்னட்டை
நூலின் பின்னட்டை

வியாழன், 21 ஜூலை, 2011

சிவத்தம்பி நினைவரங்கு 20.07.11

      அண்மையில் இயற்கை எய்திய பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் நினைவரங்கம் புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பாக 20.07.11 புதன்கிழமை அன்று நடைபெற்றது. சிவத்தம்பி அவர்களின் நினைவைப் போற்றும்வகையிலும் அவருடைய தமிழ்ப்பணிகளை இளைய தலைமுறைக்கு எடுத்துரைக்கும் வகையிலும் இந்நிகழ்வு அமைக்கப் பட்டிருந்தது. இந்நிகழ்வில் நானும் கலந்துகொண்டு உரையாற்றக் காரணமாக அமைந்தவர் பேராசிரியர், முனைவர் நா. இளங்கோ அவர்கள். சிவத்தம்பியின் சங்க இலக்கிய ஆய்வுகளை மதிப்பிட ஓரு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த அவருக்கும், நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் பக்தவச்சலபாரதி அவர்களுக்கும், நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சிலம்பு நா. செல்வராசு அவர்களுக்கும் என் நன்றிமலர்கள்.

   நினைவரங்கக் காட்சிகள் இவை :

 வரவேற்புரை : முனைவர் பக்தவச்சல பாரதி அவர்கள்
 தலமையுரை : முனைவர் அ. பாண்டுரங்கன் அவர்கள்
உரையாளர் : முனைவர் ஆ. மணி அவர்கள்
 உரையாளர் : முனைவர் ஏ. இராஜலட்சுமி அவர்கள்

 உரையாளர் : முனைவர் ப. இரவிக்குமார் அவர்கள்

 உரையாளர் : திருமிகு சு. வேல்முருகன் அவர்கள்

 உரையாளர் : முனைவர் நா. இளங்கோ அவர்கள்

 உரையாளர் : முனைவர் ம. மதியழகன் அவர்கள்

 உரையாளர் : முனைவர் க. பஞ்சாங்கம்அவர்கள்

 உரையாளர் : பேராசிரியர் த. பழமலய் அவர்கள்

 நன்றியுரை : முனைவர் சிலம்பு நா. செல்வராசு அவர்கள்
 நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் ஆய்வாளர்
 பார்வையாளர் திரள்
 பார்வையாளர் திரள்
 பார்வையாளர் திரள்
 பார்வையாளர் திரள்

புதன், 13 ஜூலை, 2011

சி. இலக்குவனாரின் தொல்காப்பிய ஆராய்ச்சி

தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள அறிஞராகிய சி. இலக்குவனார் அவர்கள் தொல்காப்பியத்தை மக்களிடயே உலவச் செய்யும் நோக்கத்துடன் தொல்காப்பிய ஆராய்ச்சி என்ற நூலை 1961இல் எழுதி வெளியிட்டார். அதன் இரண்டாம் பதிப்பு 1971இல் புதுக்கோட்டை வள்ளுவர் பதிப்பக வெளியீடாக வந்தது. தொல்காப்பியம் த்ழர்களும் தமிழர்களைப்பற்றி அறிய விரும்புவோரும் தறாது கற்றறிய வேண்டிய தனிப்பெரும்நூலாகும் என்ற பதிப்புரைக் கருத்து மெய்மையே. இந்நூலின் மெய்ப்புத் திருத்தப் பணிகளில் பெரும்பேராசிரியர் தமிழண்ணலும் உதவியிருக்கின்றார் என்பது குறிக்கத்தகுந்த செய்தியாகும்.
தொல்காப்பிய ஆராய்ச்சி என்ற இந்நூல் 1. படையல், 2. பதிப்புரை, 3. முன்னுரை, 4. எழுத்து, 5. சொல், 6. பொருள், 7. குறிப்பு அகராதி ஆகிய ஏழு கூறுகளைக் கொண்டது. திருக்குறட் கழகத்தின் பொறுப்பாளர் கோவிந்தசாமி என்பாருக்கு இந்நூல் அன்புப் படையல் ஆக்கப்பட்டுள்ளது. முன்னுரை 22 பக்கங்களில் தொல்காப்பியரின் காலத்தை ஆராய்ந்து, அவர்காலம் கி.மு. 7ஆம் நூற்றாண்டு என முடிவுரைக்கின்றது.
தொல்காப்பியம் ஒரு இலக்கண நூல்தான் என்றாலும், அது பிறமொழிகளில் உள்ள இலக்கண நூல்களைப் போன்றதன்று; அது இலக்கிய ஆராய்ச்சி, உயிரியல், உளவியல், வாழ்வியல் முதலியவற்றையும் தன்னகத்தே கோண்டு இலங்குகின்றது என்ற இலக்குவனாரின் கருத்து மனங்கொள்ளத்தக்கது.

     தொல்காப்பிய ஆராய்ச்சி என்ற இந்நூலில் பரவிக்கிடக்கும் இலக்குவனாரின் கருத்துக்களில் சில:
1.       ஆரியம்தான் தமிழை நோக்கித் தன் எழுத்தமைப்பை ஆக்கிக் கொண்டிருக்கவேண்டுமேயன்றி, தமிழ், ஆரியத்தை நோக்கி அமைத்துக் கொண்டது அன்று. (இலக்குவனார் 1971:44).
2.       இந்திய மொழிகளின் வரிவடிவ எழுத்துக்களின் தாய் தமிழ் நெடுங்கணக்கின் வரிவடிவமே எனில் மிகையாகாது. (இலக்குவனார் 1971:45).
3.       மேலைநாட்டு ஆராய்ச்சியாளர்கள் எழுத்துக்களின் பிறப்புப் பற்றிக் கூறும் கருத்துக்கள் தொல்காப்பியர் கூறும் கருத்துக்களோடு ஒற்றுமையுடையனவாக இருக்கின்றன. (இலக்குவனார் 1971:65).
4.       தொல்காப்பியப் பொருட்படலம் இலக்கியம் விளக்கும் இலக்கணமாகும்( scince of Litrature) என்பதை அறிந்து போற்றிப் பயில்வோமாக. (இலக்குவனார் 1971:274).
5.        எழுத்தாளராகவும் புலவராகவும் விரும்புவோர் தொல்காப்பியத்தையும் சங்க இலக்கியங்களையும் பிற இலக்கியங்களையும் நன்கு கற்றல் வேண்டும். (இலக்குவனார் 1971:283).
எழுத்தாளராகவும் கவிஞராகவும் விரும்புவோர் தமிழறியாத நிலையே இன்றுள்ளது என்பதை நினைக்கும்பொழுது, அன்று அவர் கூறிய இன்று தமிழ்நாட்டில் இலக்கிய வறுமை இனிதே ஆட்சிபுரிகின்றது என்ற கருத்து என்று மாறும் என்ற ஏக்கம் நம்முள் பிறக்கின்றது.
தமிழ் ஆய்வாளர்களும் தமிழறிய விரும்புவோரும் தெரிந்துகொள்ள வேண்டிய நூல் இது. கற்றுப் பயன்பெறுக.

வெள்ளி, 10 ஜூன், 2011

கலித்தொகை பதிப்பு வரலாறு (1887 - 2010)

      காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக முனைவர் பட்டத் தமிழ் ஆய்வாளர் மு.முனீஸ்மூர்த்தி எழுதிய கலித்தொகைப் பதிப்பு வரலாறு என்ற நூலைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. காவ்யா வெளியிட்டிருக்கும் நூல்களில் நன்னூல் வரிசையில் மற்றொரு நூல். 224 பக்கங்கள். விலை ரூ.170.00.
        தற்போது திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகப் பெரியார் உயராய்வு மையத்தின் தலைவராகப் பணியாற்றி வரும் பேராசிரியர் முனைவர் இரா. அறவேந்தன் அவர்களின் வழிகாட்டலில் முனைவர் பட்ட ஆய்வு செய்துவரும் முனீஸ்மூர்த்தி பழகுதற்கு இனியவர்; நற்பண்புகள் பல செறிந்தவர்; பிறரின் உளமறிந்து உதவும் தன்மையர்; அறவேந்த ஆளுமையை இவரிடம் பலநிலைகளிலும் நாம் காணலாம். அறிவிலும்; ஆராய்ச்சியிலும் இவர் ஆழங்காற்படுவார் என்பதற்கும், முனைவர் அறவேந்தன் அவர்களின் மாணவர் இவர்  என்பதற்கும் இந்நூல் ஒரு சான்று.
    அறிவுவயப்பட்ட ஆய்வு என்பதே இன்றைய தேவை. உணர்வுவயப்பட்ட ஆய்வு எந்த நன்மையையும் தராது. இளம் ஆய்வாளர்களுக்குப் பல்வேறு திறன்கள் இருந்தாலும் அவற்றை நல்லறிவு வழியில் முறைப்படுத்தி வெளியிடும்போதுதான் தமிழும் தமிழ்ச்சமூகமும் நன்மை பெறமுடியும். இனிவரும் காலம் தமிழுக்கு நற்காலம் என்பது இந்நூலால் நாம் அறியும் உண்மையாகும். இந்த உண்மையை உணர்ந்துகொள்ள விரும்புவோர் கலித்தொகைப் பதிப்பு வரலாறு என்ற இந்நூலை வாங்கிப் படிக்கலாம்.

 நூலின் முன்பக்கம்
 நூலின் பின்பக்கம்

செவ்வாய், 7 ஜூன், 2011

மணிமேகலைப் பயிலரங்கு

   புதுச்சேரி ஆரோவில் மரபு மையத்தின் சார்பில் மணிமேகலை மக்கள் பயிலரங்கு 27.03. 2011 அன்று நடைபெற்றது. பேராசிரியர்கள்  முனைவர் சேதுபதி அவர்களும், முனைவர் குறிஞ்சிவேந்தன் அவர்களும்  ஆரோவில் மரபு மையத்தின்பொறுப்பாளர் கவிஞர் மீனாட்சி அவர்களுடன் இணைந்து அப்பயிலரங்கை நடத்தினர். அப்பயிலரங்கில் மணிமேகலைப் பதிப்பு வரலாறும் பதிக வரலாறும் என்ற தலைப்பில் நான் உரையாற்றினேன். அன்று பிற்பகலில் நடைபெற்ற நிறைவுவிழாவில் பேராசிரியர் முனைவர் சிவ. மாதவன் அவர்கள் கலந்துகொண்டு பயிலரங்க நிறைவுரையாற்றினார். பயிலரங்கக் காட்சிகள் இவை:



திங்கள், 6 ஜூன், 2011

தொல்காப்பியர் விருது

      இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் 42 ஆம் கருத்தரங்கம் மதுரை காமராசர் பல்கலைக் கழகத் தமிழியற்புலத்தில் கடந்த மேத் திங்கள் 21, 22 ஆம் நாட்களில் நடைபெற்றது. கடந்த 2000ஆம் ஆண்டுமுதல் இக்கருத்தரங்குகளில் தொடர்ந்து எழுதுவதை நான் வழக்கமாகக் கொண்டுள்ளேன். இவ்வாண்டும்  குறுந்தொகைச் சுவடிகளும் சுவடிப் பதிப்புக்களும் என்ற பொருண்மையில் ஆய்வுரை எழுதியுள்ளேன்.  இந்திய அளவிலான கருத்தரங்காகிய இதில், கடந்த ஆண்டு  நான் எழுதிய  தொல்காப்பியக் கருத்தியல் புலப்பாட்டுநெறிகள்  என்ற தலைப்பிலான கட்டுரைக்குத் தொல்காப்பியர் விருதுப் போட்டிக்கான பரிசு அக்கருத்தரங்கில் வழங்கப்பட்டது. கருத்தரங்கக் காட்சிகள் இவை.

 
 மதுரை காமராசர் பல்கலைக் கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் திரு. 'அக்ரி'. கணேசன் அவர்கள் தொல்காப்பியர் விருதுப் போட்டிக்கான சான்றிதழை வழங்கிச் சிறப்பிக்கின்றார். உடன் பேராசிரியர் இரா.மோகன் அவர்கள்.
 மதுரை காமராசர் பல்கலைக் கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் அவர்கள், தமிழின் சிரிப்பு நூலுக்காக முனைவர் இ.கி.இராமசாமி அவர்களுக்குச் சிறப்புச் செய்கின்றார்.
மதுரை காமராசர் பல்கலைக் கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் திரு. 'அக்ரி'. கணேசன் அவர்கள், செம்மொழித் தமிழ் ஆய்வுரைகள் நூலுக்காக சிறப்புச் செய்கின்றார்.

செவ்வாய், 8 மார்ச், 2011

திருச்சி, சமால் முகம்மது கல்லூரிப் பயிலரங்கு 05.03.2011

        திருச்சி, சமால் முகம்மது கல்லூரி நான் இளநிலை விலங்கியல் பயின்ற கல்லூரி. அக்கல்லூரியில் நடைபெறும் சங்க இலக்கியப் பயிலரங்கில் உரையாற்ற வேண்டும் எனப் பேராசிரியர் அலிபாவா அன்புடன் அழைத்தார். மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டேன். இந்த வாய்ப்புக்குக் காரணமாக அமைந்தவர் முனைவர் கோதண்டராமன் அய்யா அவர்கள். அவருக்கும் சமால் முகம்மது கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஹபீபுர் ரகுமான் அவர்களுக்கும், தற்போது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணியேற்றி ருக்கும் முனைவர் அலிபாவா அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிமலர்கள்.

        சங்க இலக்கியப் பயிலரங்கில் 05.03.2011 அன்று காலை பெரும்பேராசிரியர் முனைவர் சோ.ந. கந்தசாமி அய்யா அவர்களும்,  பிற்பகலின் முதல் அமர்வில் புதுச்சேரிப் பல்கலைக் கழக அஞ்சல் வழிக் கல்வித்துறையின் இயக்குநர் முனைவர் அ. அறிவுநம்பி அய்யா அவர்களும் உரையாற்றினர். அவர்களுக்குப் பின்னர் நானும் அவ்வரங்கில் பேசியது நான் பெற்ற பேறு.    பயிலரங்க உரைக்காட்சிகள்.

முனைவர் அலிபாவா அவர்களுக்குப் பாராட்டு. பாரட்டுவோர் முனைவர் சோ.ந. கந்தசாமி அய்யா அவர்களும்,  புதுச்சேரிப் பல்கலைக் கழக அஞ்சல் வழிக் கல்வித்துறையின் இயக்குநர் முனைவர் அ. அறிவுநம்பி அய்யா அவர்களும் 

முனைவர் அறிவுநம்பி அய்யா அவர்களின் பயிலரங்க உரை
என்னுரை

பயிலரங்க ஒருங்கிணைப்பாளரின் கருத்துரை. உடன் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஹபீபுர் ரகுமான் அவர்கள்

ஆய்வாளர்கள்
ஆய்வாளர்கள்
ஆய்வாளர்கள்

வியாழன், 24 பிப்ரவரி, 2011

அழகப்பா பல்கலைக் கழகப் பயிலரங்கு 21.2.11

       அழகப்பா பல்கலைக் கழகத்தில் செம்மொழித் தமிழ் இலக்கணக் கோட்பாட்டிற்கு உரையாசிரியர்களின் பங்களிப்பு என்ற பொருண்மையில் நடைபெற்று வரும் பத்துநாள்(16.2.11 முதல் 25.2.11) பயிலரங்கில் உரையாசிரியர்கள் பார்வையில் சாரியைகள் என்ற தலைப்பில் உரையாற்றும் வாய்ப்பினை அப்பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு.பாண்டி ஐயா அவர்களும், பேராசிரியர் முனைவர் இரா. அறவேந்தன் ஐயா அவர்களும் வழங்கினர். என்மேலும் என் புலமையின்மேலும் நம்பிக்கை கொண்டு ஆண்டுதோறும் தாங்கள் நடத்துகின்ற கல்விப்புல நிகழ்ச்சிகளில் எனக்கு வாய்ப்புத் தந்து என்னை வளர்த்தெடுக்கும் இப்பெருமக்களுக்கு என் நன்றியுணர்வைப் புலப்படுத்திக் கொள்வதொன்றே என்னால் இப்போது முடிந்த கைம்மாறு.

        காரைக்குடி விருந்தோம்பலுக்கும் மென்மைக் குணத்திற்கும் இனிமையான அணுகுமுறைகளுக்கும் பெயர்பெற்ற ஊர் என்பதை மேற்கண்ட பெருமக்களையும், அவர்தம் மாணவச் செல்வங்களான இளவல்கள் முனீஸ்மூர்த்தி, பரமசிவம், லோகேஸ்வரன் போன்ற முனைவர்ப் பட்ட ஆய்வாளர்களையும் காணும்போது நாம் உறுதிப் படுத்திக்கொள்ளலாம். நள்ளிரவென்றும் பாராமல் ஒடிவந்து உதவுகின்றமனப்பாங்கும், நல்லறிவும், நற்பண்பும் மிக்க இவர்களைப் போன்ற மாணவச் செல்வங்கள் கிடைப்பது பெறும்பேறு என்பது நம் பட்டறிவு நமக்குக் காட்டும் உண்மையாகும்.

       நற்சிந்தனைகளோடு தொடங்கப்பட்ட இப்பயிலரங்கில் முனைவர் தி. செல்வம் ஐயா அவர்கள் விரவுப் பெயர்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார். சங்க இலக்கியங்களையும் தொல்காப்பியத்தையும் ஆராய்வதையே தன் வாழ்க்கைப்பணியாகக் கொண்டு தமிழ்ப்பணியாற்றிவரும் ஐயா அவர்களோடு ஓரங்கில் உரையாற்ற வாய்ப்பளித்த நன்னெஞ்சங்களுக்கு என் நன்றி. பயிலரங்க உரைகாட்சிகள் :

தமிழ்த்துறைத் தலைவர் அவர்களின் அறிமுக உரை
 முனைவர் தி. செல்வம் ஐயா அவர்களின் உரைக்காட்சி
தமிழ்த்துறைத் தலைவர் அவர்களின் அறிமுக உரை


என்னுரை

என்னுரை (அண்மைக் காட்சி) 
 ஆய்வாளர் பரமசிவம் வினாத் தொடுத்தல்




புதன், 23 பிப்ரவரி, 2011

மதுரை, வெள்ளைச்சாமி நாடார் கல்லூரிப் பயிலரங்கு 20.2.11

    மதுரை, வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் நடைபெற்றுவரும் சங்க இலக்கியப் பத்துநாள் ( 16.2.11 - 25.2.11) பயிலரங்கில் உரையாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. நான் கல்வி பயின்ற மண்ணில் பயிலரங்க உரையாற்றும் முதல் வாய்ப்பினை வழங்கிய தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு. பெர்னாட்சா அவர்களுக்கும், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் அழகர்நாதன் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிமலர்கள். மதுரைக்காரர்கள் பாசமுடைய நெஞ்சமும் பாராட்டும் பேருள்ளமும் வாய்த்தவர்கள் என்பதைத்  தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு. பெர்னாட்சா அவர்களையும், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் அழகர்நாதன் அவர்களையும் காண்போர் அறிவர். நல்லுள்ளம் படைத்த இவர்களுக்கு என் நன்றிப்பூக்கள்.

       என்னுடைய வளர்ச்சிப் பின்புலமாக இருந்து இயக்கிக் கொண்டிருக்கும் முனைவர் இரா. கோதண்டராமன் அய்யா அவர்களுக்கு நான் நன்றி என ஒரு சொல் சொல்வது போதாது.

    பயிலரங்க உரைக்காட்சிகள் இதோ.

தமிழ்த்துறைத் தலைவர் அவர்களின் அறிமுக உரை

 என்னுரை : உரைப்பொருள் : சங்க இலக்கியக் கைக்கிளை மரபுகள்
 கருத்தரங்க் ஒருங்கிணைப்பளார் அவர்களின் கருத்துரை
 ஆய்வாளரின் நன்றியுரை - 1
ஆய்வாளரின் நன்றியுரை - 2

சனி, 19 பிப்ரவரி, 2011

வெண்பாப் பாட்டியல், வரையறுத்த பாட்டியல் இணைந்த பதிப்பு 1969

          பாட்டியல் என்பது எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்திலக்கண ஒழிபியல் என்பர். ஐந்திலக்கணங்களில் கூறப்படாத செய்திகள் இப்பாட்டியல் நூல்களில் கூறப்பட்டுள்ளன.  பாட்டியலின் மரபை வெண்பா அமைப்பில் கூறுவதால் வெண்பாப்பாட்டியல் எனப் பெயர் பெற்றது. இந்நூலின் ஆக்கத்திற்குக் காரணமாக இருந்த வச்சணந்தியின் பெயராலும் வச்சணந்திமாலை என அழைக்கப்படுகின்றது.

         வெண்பாப்பட்டியலின் ஆசிரியர் குணவீர பண்டிதர் ஆவார். இந்நூலின் பாயிரவுரை, இந்நூலுக்கு முதல் நூல் இந்திரகாளியம் எனக் குறிப்பிடுகின்றது. இது சிலப்பதிகார அடியார்க்குநல்லார் உரையில் கூறப்படுகின்ற யமளேந்திரர் செய்த இசைத்தமிழ் நூலாகிய இந்திரகாளியத்தின் வேறானது என்பர்.  வெண்பாப்பட்டியலின் காலத்தை அறியமுடியவில்லை. எனினும் இதன் உரை இந்நூல் திரிபுவனத்தேவன் என்னும் அரசன் காலத்தில் எழுந்தது எனக் கூறுகின்றது. 

         சம்பந்தப் பாட்டியல் என்றும் அழைக்கப்படுகின்ற வரையறுத்த பாட்டியல் சீர் முதலிய மங்கலச் சொற்களின் பொருள் உணர்த்தும் நூலாகும். இந்நூலாசிரியர் சம்பந்தர் என்றும், செய்வித்தவர் சம்பந்தர் என்றும் கூறுவர். இவ்விரு நூல்களின் விளக்கவுரைகளையும் செய்தவர் சென்னைத் தமிழ்ப்பண்டிதர் கொ.இராமலிங்கத் தம்பிரான் ஆவார். இந்நூலின் முதற்பதிப்பு 1936இலும், அதன் மறுஅச்சுக்கள் 1964, 1969 ஆகிய ஆண்டுகளில் வந்தன. 1969 ஆம் ஆண்டுப் பதிப்பின் தலைப்புப் பக்கம் இது.


செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

புதுவைக் கலைஇலக்கியப் பெருமன்றப் பயிலரங்கு 14.02.11

           புதுச்சேரிக் கலை இலக்கியப் பெருமன்றம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதியுதவியோடு சங்க இலக்கியப் பத்துநாள் (11.02.11 முதல் 20.02.11 வரை) பயிலரங்கு ஒன்றினை நடத்தி வருகின்றது. இப்பயிலரங்கில் உரையாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் நா. இளங்கோ ஐயா அவர்கள் பல்வேறு கடுமையான சூழல்களுக்கிடையிலும் எனக்கு இந்த வாய்ப்பினை வழங்கினார். தொடக்கம் முதற்கொண்டே என்மீது அன்புகாட்டிப் பற்பல வாய்ப்புக்களையும் வழங்கிவருவதோடு, தமிழுக்காக நான் வேண்டிய உதவிகளையெல்லாம் செய்துவரும் அய்யா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிமலர்கள்.

        குறுந்தொகை விழுமியங்கள் என்பது இப்பயிலரங்கில் என்னுடைய உரைப்பொருள். பயிலரங்க உரைக்காட்சிகள் :

மாணவர் புரூன் சிவச்சந்திரன் அவர்களின் அறிமுக உரை

 என்னுரை - மேடையில் கலை இலக்கியப் பெருமன்றத்தின் சிறப்பியல் தலைவர் அவர்கள்
 என்னுரை அண்மைக்காட்சி
சிறப்பியல் தலைவர்அவர்கள் நினைவுப்பொருள் வழங்கல். உடன் கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொருளாளர் அவர்கள்


திங்கள், 14 பிப்ரவரி, 2011

யாப்பிலக்கணப் பதிப்பு 1967

          யாப்பிலக்கணம் என்பது 19 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட உரைநடை நூல். இந்நூலின் ஆசிரியர் திருத்தணிகை விசாகப்பெருமாள் ஐயர் ஆவார். இவருடைய தந்தை திருத் தணிகை கந்தப்ப ஐயர், திருவாவடுதுறை கச்சியப்ப முனிவர்ன் மாணவர் ஆவார். விசாகப் பெருமாள் ஐயரின் உடன்பிறந்தவர் திருத்தணிகை சரவணப்பெருமாள் ஐயர். இவர்கள் இருவரும் திருக்குறள், நைடதம், பிரபுலிங்கலீலை ஆகிய நூல்களுக்கு எளிய உரைகளை எழுதி வெளியிட்டுள்ளனர்.

        விசாகப் பெருமாள் ஐயர் பெய்ரில் 1828இல் இலக்கணச் சுருக்க வினாவிடை என்ற நூல் வெளிவந்தது. ஐந்திலக்கணம் கூறும் இந்நூலில் யாப்பிலக்கணப் பகுதி மட்டும் பாலபோத இலக்கணம் என்னும் பெயரில் தனித்து வெளியிடப்பட்டது. அந்நூலில் இருந்த வினாக்களை மட்டும் நீக்கிவிட்டு யாப்பிலக்கணம் என்ற பெயரில் தணிநூலாகக் கழகத்தினர் வெளியிட்டனர்.

         காரிகை கற்பாருக்குப் பயன்படும்பொருட்டு இந்நூலைக் கொ. இராமலிங்கத் தம்பிரான் என்பவரைக் கொண்டு முறைப்படுத்தியும் சில குறிப்புக்களைச் சேர்த்தும் விளக்கியும் வெளியிட்டுள்ளோம் எனக் கழகத்தினர் குறித்துள்ளனர். ஒருவருடைய நூலை இன்னொருவரைக் கொண்டு இடைச்செருகியும் விளக்கியும் சேர்க்கை இது, விளக்கியது இது என எவ்வகைக் குறிப்புக்களும் இல்லாமல் பதிப்புரையில் மட்டும் கூறிவிட்டு வெளியிடுவது எவ்வகைப் பதிப்புமுறையோ? நாம் அறியோம்.

     யாப்பிலக்கணம் 1937 இலில் கழகம் வழியாக முதற்பதிப்புக் கண்டது. அதன் மறுஅச்சுக்கள் 1940, 1944, 1947, 1950, 1955, 1960, 1964, 1967 ஆகிய ஆண்டுகளில் வெளியாகின. 1967 ஆம் ஆண்டுப் பதிப்பின் தலைப்புப் பக்கம் இது.


சனி, 29 ஜனவரி, 2011

நேமிநாதம் - கழகப் பதிப்பு 1964

     குணவீர பண்டிதரால் இயற்றப்பட்ட நேமிநாதம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என்ற இரண்டு இயல்களைக் கொண்டது. சின்னூல் என அழைக்கப்படுவது. இந்நூல் தொல்காப்பியத்தின் வழிநூல் என்பர்.எழுத்ததிகாரம் உட்பகுப்புக்கள் அற்றது. சொல்லதிகாரம் ஒன்பது இயல்களைக் கொண்டது. நூற்பாக்கள் வெண்பா யாப்பில் அமைந்தவை. எழுத்ததிகாரம் 24 வெண்பாக்களும், சொல்லதிகாரம் 70 வெண்பாக்களும், பாயிரப் பாடல்கள் 5 ஆக 99 வெண்பாக்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

       நன்னூல் தோன்றுவதற்கு முன்னர்த் தமிழிலக்கணம் கற்போர் முதலில் இந்நூலைக் கற்றுப் பின்னர்த் தொல்காப்பியம் கற்றனர் என்றும், இந்நூலின் காலம் கி.பி. 12ஆம் நூற்றாண்டு என்றும் கூறுப. இந்நூலின் உரையாசிரியர் யார்? என்பது தெரியவில்லை. இந்நூல் ரா.இராகவையங்காரால் 1923இல் இரண்டாம் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.  அதனை அடிப்படையாகக் கொண்டு கா.ர. கோவிந்தராசமுதலியார் கழகத்திற்காக இப்பதிப்பினை உருவாக்கித் தந்துள்ளார்.

     மூலம், உரை ஆகியவற்றின் சந்திகளைப் பிரித்துப் பதிப்பித்திருத்தல், உரிய இடங்களில் அடிக்குறிப்புக்களை எழுதிச் சேர்த்திருத்தல், உரைப்பிறழ்வுகள் எனத் தாம் கருதிய இடங்களில் விளக்கங்கள் தந்திருத்தல் ஆகியன கா.ர.கோ. இப்பதிப்பில் செய்த மாற்றங்களாகும். 1945இல் முதற்பதிப்பாகக் கழகத்தின்மூலம் வெளிவந்த இப்பதிப்பு 1956 நவம்பர், 1964 ஏப்பிரல் ஆகிய ஆண்டுகளில் மறுஅச்சு கண்டுள்ளது. 1964 ஆண்டுப் பதிப்பின் தலைப்புப் பக்கம் இது.


சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...