பேராசிரியருக்குத் தமிழ்நாடு அரசின் இளம் தமிழ் ஆய்வாளர் விருது
x
புதுச்சேரி, பாரதிதாசன் அரசினர் மகளிர்
கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் ஆ. மணி அவர்களுக்குத் தமிழ்நாடு அரசு இளம் தமிழ்
ஆய்வாளர் விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது. கடந்த புதன்கிழமையன்று (17.10.2018), தஞ்சாவூர்
தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு
க. பாண்டியராசன் அவர்கள், முனைவர் ஆ. மணி அவர்களுக்கு இளம் தமிழ் ஆய்வாளர் விருதும்,
ரூ. பதினைந்தாயிரமும் வழங்கிச் சிறப்பித்தார். புதுச்சேரி அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும்
தமிழ்ப் பேராசிரியர்களில் முனைவர் ஆ. மணி மட்டுமே இவ்விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு எனப்
பெயர் சூட்டப்பட்டு 50 ஆண்டுகள் ஆன நிலையில், அப்பொன்விழாவைக் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு
அரசு தமிழில் முனைவர் பட்டம் பெற்றுப் நூல்கள் படைத்துப் பன்னாடு, தேசிய, மாநில அளவிலான
கருத்தரங்குகளிலும், பயிலரங்குகளிலும் கட்டுரைகள் வழங்கித் தமிழாய்வில் சிறந்து விளங்கும்
50 இளம் தமிழ் ஆய்வாளர்களுக்கு விருது வழங்கிச் சிறப்பிக்க முடிவு செய்து, தமிழ்ப்
பல்கலைக் கழகத் துணைவேந்தர் தலைமையில் அறிஞர் குழுவை அமைத்தது. பெறப்பட்ட நூற்றுக்கணக்கான
விண்ணப்பங்களில் இருந்து தகுதியுடைய இளம் தமிழ் ஆய்வாளர்களைத் தேர்வு செய்து அக்குழு
விருதுகளை அறிவித்தது. அதற்கான விழா கடந்த 17.10.18 அன்று தமிழ்ப் பல்கலைக் கழகத்தில்
நடைபெற்றது.
அவ்விழாவில்,
தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு க. பாண்டியராசன் அவர்கள், முனைவர் ஆ. மணி
அவர்களுக்கு ”இளம் தமிழ் ஆய்வாளர் விருது” வழங்கிப் பாராட்டினார். பாரதிதாசன் அரசினர்
மகளிர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் முனைவர் ஆ. மணி, இதுவரை
தமிழ்ச் செவ்வியல் நூல்கள் குறித்த முப்பதுக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியும்
பதிப்பித்தும் உள்ளார். அவற்றுள் குறுந்தொகைத் திறனுரைகள், செம்மொழித் தமிழ் ஆய்வுரைகள்,
குறுந்தொகை உரைநெறிகள், ஆய்வுநோக்கில் தமிழ்ச் செவ்வியல் நூல்கள், தமிழ்ப் பதிப்பியல்
நெறிகள், செவ்வியல் ஆய்வுகள், தமிழ்ச் செவ்வியல் நூல்கள்: மரபும் திறனும், சிவகங்கைச்
சரித்திரக் கும்மி என்ற சிவகங்கை நகர்க் கும்மி, மலைபடுகடாம் பதிப்பு வரலாறு, குறுந்தொகை:
அருணாசல தேசிகர் பதிப்பும் பதிப்புநெறிகளும், குறுந்தொகை உரைகளில் பண்பாட்டுப் பதிவுகள்,
குறுந்தொகைப் பயிரியல் கல்வி, திருக்குறளின் முதற்பதிப்பாசிரியர் யார்?, உரை இலக்கிய
ஆய்வுகள், நெடுநல்வாடை திணைச்சிக்கலும் தீர்வும், பதிப்பாசிரியர் தெ.பொ.மீ., பகுத்தறிவுப்
படைப்பாளர்கள், பல்துறைநோக்கில் தொல்காப்பியம் தொகுதி -1, 2 ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை.
பன்னாட்டு, தேசிய, மாநிலக் கருத்தரங்குகளிலும், பயிலரங்குகளிலும் கலந்துகொண்டு இதுவரை 160க்கும்
மேற்பட்ட ஆய்வுரைகளை வெளியிட்டுள்ளார்.
இந்திய அரசின்
நிதியுதவியோடு ”பழந்தமிழ் இலக்கண, இலக்கிய உரைகளில் குறுந்தொகை”, ”தொல்காப்பிய உரைமேற்கோள்கள்”
என்னும் இரண்டு ஆய்வுத் திட்டங்களைச் செய்து முடித்துள்ளார். தமிழக, புதுச்சேரி கல்லூரித்
தமிழ்த் துறைகளின் வரலாற்றில் முதன்முறையாக பல்கலைக் கழக நிதிநல்கைக் குழுவிடம் இருந்து
ரூ. ஏழு இலட்சம் நிதிநல்கை பெற்றுத் தாகூர் கலைக்கல்லூரி மாணவர்களுக்காக மக்கள் தகவலியல்
சான்றிதழ்ப் பாடவகுப்பினை ஒருங்கிணைத்து நடத்தியுள்ளார். இந்திய அரசின் நிதிநல்கையோடு
ஐந்து தேசியக் கருத்தரங்குகளையும், பயிலரங்குகளையும் நடத்திச் சாதனை படைத்துள்ளார்
முனைவர் ஆ. மணி.
மாணவர்களின்
உள்ளங் கவர்ந்த பேராசிரியரான மணி, தன்னுடைய சீரிய ஆராய்ச்சிப் பணிகளுக்காக 2013ஆம்
ஆண்டில் அன்றைய இந்தியக் குடியரசுத் தலைவர் ஸ்ரீ பிரணாப் முகர்ஜி அவர்களிடம் “இளம்
தமிழறிஞர்” விருதும், ஒரு இலட்சம் பணப்பரிசும் பெற்றுள்ளார்.
தேசிய மாணவர்
படை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ள முனைவர் ஆ. மணி, தற்போது பாரதிதாசன் அரசினர் மகளிர்
கல்லூரியின் இணைத் தேர்வாணையாராகக் கூடுதல் பொறுப்பு வகித்து வருகின்றார். குறுந்தொகை,
ஐங்குறுநூறு ஆகிய நூல்களின் பிரெஞ்சு மொழிபெயர்ப்புப் பணிகளிலும் உதவியுள்ளார் என்பது
குறிக்கத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக