குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 18) - ஆம்பற் கொடி
மருத நிலத்தில் உள்ள பொய்கையிலும், பிற
நீர்நிலைகளிலும் வளரும் ஆம்பல் காலையில் மலர்ந்து மாலையில் கூம்பும் இயல்பினது. வண்டு
காலையில் இதன் அரும்பின்பாற் சென்று வாய் திறக்க அது மலரும். தண்மை மிக்க இதன் மலரை
மகளிர் மேனியின் தண்மைக்கு உவமித்தல் மரபு. இதன் காம்பினுள் துளையிருத்தலின், “தூம்புடைத்
திரள்காலாம்பல்” என்று ஒருவர் கூறுவர். மகளிர் ஆம்பற் பூவின் புறவிதழை ஒடித்து விட்டுத்
தலையிற் சூடுவர்; அங்ஙனம் ஒடித்த பூவை முழுநெறி என்பர். தளிர்களாலும் மலர்களாலும் அமைக்கப்படுவதாகிய
தழையுடையில் ஆம்பல் மலரையும் தொடுத்தணிவது மகளிர் வழக்கம். மகளிர் வாய் ஆம்பற் பூவின்
மணம் உடையதென்பர். இதன் மலர் குருவி, கொக்கு என்பவற்றின் சிறகைப் போலத் தோற்றுவது.
வௌவாலின் சிறைக்கு இதன் இலையின் புறத்தை ஒரு புலவர் உவமை கூறுகின்றார்.
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக