குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 36) - தாளி, தினை, நரந்தம், நெய்தல்
தாளி
தாளியறுகென்பதும் தாளிக் கொடி என்பதும் இப் பெயரால் வழங்கப்படுகின்றன. பசு இதனை மேயும்.
தினை
குறிஞ்சி நிலத்தில் மலைவாணர் மரங்களைச் சுட்டுக் காட்டை அழித்து அந்நிலத்தை உழுது தினையை விதைப்பர். அது வளர்ந்தபின் கானவரும் குறமகளிரும் தினைக் கதிரைக் காவல் புரிவர். பகலிலும் இரவிலும் குறவர் யானை முதலியவற்றைக் கவணால் எறிந்து தினைக் கொல்லையைப் பாதுகாப்பர். பகலில் தலைவி தன் தோழியருடன் இருந்து தினையை உண்ண வரும் கிளிகளையும் குருவிகளையும் குளிர், தட்டை, தழல் என்னும் கருவிகளால் ஓட்டிக் காப்பாள். தினை நன்றாக வளர்ந்து கரும்பைப் போலத் தோற்றும். அதன் அடி நாரையின் தாள்போல் விளங்கும்.
தினை கதிர்விட்டுப் பால் பிடித்து முதிருங்காலையில் பிடியின் கையைப் போலவும் கொல்லனது கரிக்குறட்டைப் போலவும் தோற்றும். இதில் கருந்தினை, செந்தினை, சிறுதினை என்னும் வேறுபாடுகள் உண்டு. செந்தினைக்குப் பொன்னை உவமை கூறுவர்.
தினையை இராக்காலத்தில்
பறை முழக்கி அறுப்பதும் உண்டு. அறுத்த பின்னர் அதன் முதற்கதிரை முருகக் கடவுளுக்குப் பலியாக வைத்து வழிபடுவர்; வெறியாட்டெடுக்கும் காலத்தில் தினையைப் பாத்திரங்களில் நிறைய வைத்து வணங்குவர். தினையை அரிந்த பிறகு மழை பெய்தால் கிளைத்த அதன் தாளில் மீண்டும் கதிர் உண்டாகும். அம் மறுகாலில் மொச்சைக் கொடி படர்ந்தேறும். தினைக் கதிரை யானை, மான் என்னும் விலங்குகளும் கிளி, குருவி, மயில் என்னும் பறவைகளும் உண்ணும். தினைக்கொல்லையைப் புனமென்றும் துடவை என்றும் கூறுவர். ஏனல், இறடி என்பன தினையைக்குறிக்கும் பெயர்களில் சில.
நரந்தம்
நாரத்தம் பூவையும் ஒருவகைப் புல்லையும் இப்பெயரால் குறிக்கின்றனர். இரண்டும் மணம் உடையனவென்றும் கூந்தலில் அணியப்படுவனவென்றும் தெரிகின்றது.
நெய்தல்
இது
நெய்தல் நிலத்துக்குரிய நீர்க்கொடி; இலைக்கு மேலே நீண்டு வளரும் மலரை உடையது; வயல்களில் வளர்வதும் உண்டு. இதனை உழவர் அறுத்தெறியினும் மீண்டும் அவ்வயலில் வளர்ந்து மலரும். கடற்கரையில் படர்ந்த நெய்தல் கொடி தலைவியைக் காண வரும் தலைவனது தேரின் சக்கரத்தால் துணிக்கப்படும். இதன் பூவை நாரை உண்ணும். நெய்தல் பூவின் காம்பு திரண்டதாதலின் அதனைக் கணைக்கானெய்தல் என்பர். நறுமணமும் தேனும் உடையதாதலின் அம்மலரின் பாற் சுரும்புகள் மொய்க்கும். மகளிர் அம்மலரோடு அடும்பினது பூவையும் கட்டி அணிவர்.
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக