புதன், 1 நவம்பர், 2017

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 38) - பகன்றை, பஞ்சாய், பயறு, பருத்தி, பலாமரம்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 38) - பகன்றை, பஞ்சாய், பயறு, பருத்தி, பலாமரம்

பகன்றை

    இதனைக் கிலுகிலுப்பை என்றும், சிவதை என்றும் கூறுவர்; இது மாலைக் காலத்தில் மலர்வது. இதன் பூ வெண்ணிறமுடையது. முறுக்கிய வெள்ளிய ஆடையைப் போல்வது; கள்ளைப் போன்ற மணம் உடையது. இது பெரிய இலைகளை உடையது; மருத நிலத்தில் நீர்த் துறையில் வளர்வது.
 
பஞ்சாய்

    பஞ்சாயென்பது ஒருவகைக் கோரை; நீர் தங்கிய பள்ளங்களில் இது வளரும். இதனால் மகளிர் விளையாடுதற்குரிய பாவையை இயற்றுவர்

பயறு

    முல்லை நிலத்தில் வளர்வது. முன்பனிக்காலத்தில் பயற்றங்காய் முதிரும். அது மானினத்திற்கும் உணவாகும். காஞ்சியின் பூங்கொத்துக்கு அதனை உவமை கூறுவர்.

 
பருத்தி

                மலைச் சாரலில் மலைவாணர் தினைப் பயிருக்கு இடையே இதனை வித்தி விளைப்பர். இது பரீஇ எனவும் வழங்கப்படும்.
 
பலாமரம்

    மலைச்சாரலில் வளரும் மரங்களுள் ஒன்று. இதன் சுளை மிக்க மணமுடையது; “பூநாறு பலவுக்கனிஎன்று சிறப்பிக்கப் பெறும். வேரில் காய்க்கும் பலவும் உண்டு. அடி முதல் நுனி வரையில் காய்களைக் கொண்ட பலாமரம் ஒன்றை ஒரு புலவர். “வேரு முதலுங்கோடு மொராங்குத் தொடுத்த போலத் தூங்குபு தொடரிக், கீழ்தாழ்வன்ன வீழ்கோட் பலவுஎன்று வருணிக்கின்றார். குரங்குகள் இதன் பழத்தைத் தோண்டி உண்ணும். இதன் இலை அகன்றதாக இருத்தலின், “அகலிலைப் பலவுஎனப்படும். வௌவால் இதன் கனியை விரும்பி மாலைக் காலத்தில் இம்மரங்கள் உள்ள சாரலை அடையும். பலா மரத்தில் வலையை மாட்டிக் குறவன் பழங்களைக் காவல் புரிவான். சிறியதொரு காம்பு பெரிய பழத்தைத் தாங்கி இருப்பதைச் சிற்றுயிருடைய தலைவி பெரியதாகிய காமத்தைத் தாங்குவதற்கு உவமையாகக் காட்டும் செய்யுள் ஒன்று உண்டு.

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...