புதன், 1 நவம்பர், 2017

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 37) - நெருஞ்சி, நெல், நெல்லி, நொச்சி

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 37) - நெருஞ்சி, நெல், நெல்லி, நொச்சி

நெருஞ்சி

    முல்லை நிலத்துக்குரியது இது. இதன் இலை மிகவும் சிறியது. இதன் மலர் கண்ணிற்கு இனியதாகத் தோற்றினும் அப்பால் இன்னாத தாகிய முள்ளை உண்டாக்குதலின், முன் இனியனாக இருந்து பின் இன்னா செய்யும் தலைவனுக்கு உவமை கூறப்படுகின்றது; கதிரவன் எந்தத்திசையில் இருப்பினும் அத்திசையையே நோக்கி நிற்கும் இயல்பு வாய்ந்தது.
 
நெல்

    இது மருத நிலத்துக்குரியது; வெண்ணெல், செந்நெல் என இருவகைகள் சொல்லப்படுகின்றன. இவற்றில் செந்நெல் உயர்ந்தது. கதிரில் உள்ள முதிர்ந்த பச்சை நெல்லை உரலில் இட்டு மகளிர் அவலாக்குதற்கு இடிப்பதுண்டு. அது பாசவல் எனப்படும். தொண்டி என்னும் ஊரில் வெண்ணெல் மிகுதியாக விளைந்ததென்று ஒருசெய்யுளால் தெரிய வருகின்றது. நெற்கதிரை நாரை நயந்துண்ணும். உள்ளீடில்லாத நெல்லைப் பதடியென்பர். நெற்பொரியைப் புன்க மலருக்கு உவமை கூறுவர்.
 
நெல்லி

    குறிஞ்சிக்கும், குறிஞ்சி திரிந்த பாலைக்கும் உரியது. இதன் காய் புளிச் சுவையுடையதாதலின், ‘நெல்லியம் புளி’, ‘தீம்புளி நெல்லிஎன வழங்கும். பாலை நிலத்தில் செல்வார் இதன் காயை உண்டு விடாய் போக்கிக் கொள்வர். நெல்லிக் காயைத் தின்று நீர்குடித்தல் வழக்கம். அதனை வௌவாலும் மரையினமும் உண்ணும் செய்தி இந்நூலுள் கூறப்படும். தருமத்தின் பொருட்டு வழிகளில் இம்மரங்கள் வளர்க்கப்படும்.
 
நொச்சி

    நொச்சியில் பல வகைகள் உண்டு. இதில் மலைநொச்சி கூறப்பட்டிருக்கிறது. இதன் பூ கரிய நிறமுடையது; அது நீல மணியைப் போலத் தோற்றும். யாமத்தில் அப்பூ உதிரும். இதன் இலைக்கு மயிலடி ஒப்புக் கூறப்படும்.


(தொடரும்)

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 36) - தாளி, தினை, நரந்தம், நெய்தல்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 36) - தாளி, தினை, நரந்தம், நெய்தல்

தாளி

 தாளியறுகென்பதும் தாளிக் கொடி என்பதும் இப் பெயரால் வழங்கப்படுகின்றன. பசு இதனை மேயும்.
 
தினை


    குறிஞ்சி நிலத்தில் மலைவாணர் மரங்களைச் சுட்டுக் காட்டை அழித்து அந்நிலத்தை உழுது தினையை விதைப்பர். அது வளர்ந்தபின் கானவரும் குறமகளிரும் தினைக் கதிரைக் காவல் புரிவர். பகலிலும் இரவிலும் குறவர் யானை முதலியவற்றைக் கவணால் எறிந்து தினைக் கொல்லையைப் பாதுகாப்பர். பகலில் தலைவி தன் தோழியருடன் இருந்து தினையை உண்ண வரும் கிளிகளையும் குருவிகளையும் குளிர், தட்டை, தழல் என்னும் கருவிகளால் ஓட்டிக் காப்பாள். தினை நன்றாக வளர்ந்து கரும்பைப் போலத் தோற்றும். அதன் அடி நாரையின் தாள்போல் விளங்கும்.

    தினை கதிர்விட்டுப் பால் பிடித்து முதிருங்காலையில் பிடியின் கையைப் போலவும் கொல்லனது கரிக்குறட்டைப் போலவும் தோற்றும். இதில் கருந்தினை, செந்தினை, சிறுதினை என்னும் வேறுபாடுகள் உண்டு. செந்தினைக்குப் பொன்னை உவமை கூறுவர்.

    தினையை இராக்காலத்தில் பறை முழக்கி அறுப்பதும் உண்டு. அறுத்த பின்னர் அதன் முதற்கதிரை முருகக் கடவுளுக்குப் பலியாக வைத்து வழிபடுவர்; வெறியாட்டெடுக்கும் காலத்தில் தினையைப் பாத்திரங்களில் நிறைய வைத்து வணங்குவர். தினையை அரிந்த பிறகு மழை பெய்தால் கிளைத்த அதன் தாளில் மீண்டும் கதிர் உண்டாகும். அம் மறுகாலில் மொச்சைக் கொடி படர்ந்தேறும். தினைக் கதிரை யானை, மான் என்னும் விலங்குகளும் கிளி, குருவி, மயில் என்னும் பறவைகளும் உண்ணும். தினைக்கொல்லையைப் புனமென்றும் துடவை என்றும் கூறுவர். ஏனல், இறடி என்பன தினையைக்குறிக்கும் பெயர்களில் சில.
 
நரந்தம்

    நாரத்தம் பூவையும் ஒருவகைப் புல்லையும் இப்பெயரால் குறிக்கின்றனர். இரண்டும் மணம் உடையனவென்றும் கூந்தலில் அணியப்படுவனவென்றும் தெரிகின்றது.
 
நெய்தல்

        இது நெய்தல் நிலத்துக்குரிய நீர்க்கொடி; இலைக்கு மேலே நீண்டு வளரும் மலரை உடையது; வயல்களில் வளர்வதும் உண்டு. இதனை உழவர் அறுத்தெறியினும் மீண்டும் அவ்வயலில் வளர்ந்து மலரும். கடற்கரையில் படர்ந்த நெய்தல் கொடி தலைவியைக் காண வரும் தலைவனது தேரின் சக்கரத்தால் துணிக்கப்படும். இதன் பூவை நாரை உண்ணும். நெய்தல் பூவின் காம்பு திரண்டதாதலின் அதனைக் கணைக்கானெய்தல் என்பர். நறுமணமும் தேனும் உடையதாதலின் அம்மலரின் பாற் சுரும்புகள் மொய்க்கும். மகளிர் அம்மலரோடு அடும்பினது பூவையும் கட்டி அணிவர்.

(தொடரும்)

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 35) - ஞாழல், ஞெமை, தடா, தாமரை, தாழை

 குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 35) - ஞாழல், ஞெமை, தடா, தாமரை, தாழை

ஞாழல்


    இது நெய்தல் நிலத்துக்குரிய மரம்; கடற்கரை ஓரத்தில் வளர்வதாதலின் இதன் வேரில் நண்டுகள் வளை அமைத்து வாழும். புன்னையும் இம்மரமும் சேர்த்துக் கூறப்படும். இதன் மலர் சிறிய வடிவினது. அது வெண்சிறு கடுகையும் ஆரன்மீன் முட்டையையும் போலத் தோற்றும். அம்மலர் தண்ணிய நறுமணம் உடையது.
ஞெமை

      பாலை நிலத்துக்குரிய மரங்களுள் ஒன்று. இம் மரத்தின்மேல் ஆண்பருந்து தன் பெடையோடு சேர்ந்து இன்புற்றிருக்கும் செய்தி ஒரு செய்யுளில் காணப்படும்.
 
தடா

    இது தடவெனவும் வழங்கும். பெரும்பாலும் குறிஞ்சி நிலத்தில் காணப்படும். இம் மரத்தின்கண் அன்றில் கூடுகட்டி வாழும். இது மிக உயர்ந்து வளர்வது.
 
தாமரை

     இக்கொடி மருத நிலத்துக்குரியது. காலையில் மலர்ந்து மாலையில் குவிந்த இதன் மலருள் சிறு வெம்மை இருக்கும்; தலைவியின் மேனி வெம்மைக்கு அவ்வெம்மையை ஒப்பிடுவர். செந்தாமரை மலரை முருகக் கடவுளின் திருவடிக்கும், வெண்தாமரை முகையைக் கொக்கிற்கும், தாமரைத் தாதைத் தேமலுக்கும் புலவர்கள் ஒப்பிடுவர்.
 
தாழை

    கண்டல், கைதை என்னும் பெயர்களால் தாழை வழங்கப்படுகின்றது. நெய்தல் நிலத்திற்குரியது இது; கடற்கரையிலும் கழியின் ஓரத்திலும் வளரும். கழியில் வெள்ளம் மிகும்போது மேலே தோன்றியும் குறையும்போது தாழ்ந்தும் விளங்கும். இத்தாழையைத் தலைவி ஒரு பாற்படாத தன் நெஞ்சிற்கு உவமையாகக் கூறிக் கொள்ளுகின்றாள். இதன் வேரில் வளை அமைத்து நண்டுகள் வாழும். இதற்கு விழுது உண்டு. இதன் முள்ளிலையின் தோற்றம் வாளரத்தையும் மலரின் தோற்றம் கொக்கையும் ஒக்கும். தாழையின் வரிசை வேலை நட்டு வைத்த வேலியைப் போலத் தோற்றும்.

(தொடரும்)

வெள்ளி, 20 அக்டோபர், 2017

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 34) - கோங்கு, சந்தனம், சிலை, சேம்பு

                குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 34) -  கோங்கு, சந்தனம், சிலை, சேம்பு

கோங்கு

    பாலை நிலத்திற்குரிய மரம் இது; இலவின் வகையைச் சார்ந்தது; இளவேனிலில் மலர்வது. இது மலர்கின்ற காலத்தில் இதன் இலைகள் எல்லாம் உதிர்ந்து விடும். இலையில்லாத சினையில் வண்டு ஆர்க்கும். இதன் அரும்புக்கு மகளிரது நகிலை ஒப்பிடுவர்.
 
சந்தன மரம்

         குறிஞ்சி நிலத்துக்குரியது. பொதியின்மலைச் சந்தனமும் முள்ளூர்க் கானத்துச் சந்தனமும் இந்நூலில் சிறப்பிக்கப் பெறுகின்றன. சந்தனம் வேனிற் காலத்தில் தண்ணிதாக இருக்கும். தலைவன் மலைச் செஞ்சந்தனக் குழம்பை அணிந்து இரவில் தலைவி வாழும் இடத்திற்கு வருதலை ஒரு புலவர் சொல்லுகின்றார். மகளிர் சந்தனப்புகையைக் கூந்தலுக்கு ஊட்டுவது வழக்கம்.
 
சிலை
   

   குறிஞ்சி நிலத்து மர வகைகளில் இதுவும் ஒன்றென்று தெரிகின்றது. மிக்க வலிமையும் நெகிழ்ச்சியும் உடையதாதலின் இதனால் வில்லை அமைத்து வேட்டுவர் வேட்டை ஆடுவர். சிலை அமைத்தற்குச் சிறந்ததாதலின் இப்பெயர் பெற்றது போலும்.
 
சேம்பு


  மலைப்பக்கத்தில் வளரும் ஒருவகைச் சேம்பு இந்நூலிற் சொல்லப்படுகின்றது. இதன் இலை மிகவும் பெரியது. காற்றால் அசையும் அவ்விலைக்குக் களிற்றின் செவியை ஒருவர் உவமிக்கின்றார்.

(தொடரும்)

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 33) - கூதளி, கொறுக்காந்தட்டை, கொன்றை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 33) - கூதளி, கொறுக்காந்தட்டை, கொன்றை

கூதளி

    கூதளம், கூதாளமெனவும் இது வழங்கும். மலைச்சாரலில் வளர்வது. இதன் காம்பு குறியது. இதன் மலர் உட்டுளையை உடையது. கார்காலத்தில் மலர்வது. கைவளைக்கு அம்மலர் உவமிக்கப்படுகின்றது.
 
கொறுக்காந்தட்டை

                இது கொறுக்கைச்சி என வழக்கிலும், எருவை எனச் செய்யுளிலும் ஆளப்படும். அருவியுள்ள இடங்களில் வளர்வது இது. இதனை யானை உணவாகக் கொள்ளுமென்று தெரிகின்றது.
 
கொன்றை


    முல்லை நிலத்துக்குரிய மரங்களுள் ஒன்று இது. கார்காலத்தில் மலர்வது. முல்லை நிலத்தினர் இதன் மலர்கண்டு கார்காலம் வந்ததை அறிந்து கொள்வர். இது மாலைபோல மலர்வதாதலின் இதன் பூங்கொத்து, “கொடியிணர்என்று சிறப்பிக்கப்படும். இதன் மலர் மஞ்சள் நிறமுடையதாதலின் பொன்னுக்கும், பொன்னரி மாலைக்கும், பொற்காசிற்கும், கிண்கிணிக் காசிற்கும், பசலைக்கும் ஒப்பாகச் சொல்லப்படும். குருந்தும் கொன்றையும் ஒருங்கு சேர்த்துக் கூறப்படும்.

(தொடரும்)


குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 32 - குளவி, குறிஞ்சி, குன்றி

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 32 - குளவி, குறிஞ்சி, குன்றி

குளவி

     மலை மல்லிகையைக் குளவி என்பர். காட்டு மல்லிகையையும் அங்ஙனம் கூறுவதுண்டு. இது பெரும்பாலும் குறிஞ்சி நிலத்திலும் சிறுபான்மை பாலை நிலத்திலும் காணப்படும். குறிஞ்சி நிலத்தில் மலரோடு முளைத்த இதனை மலைவாணர் களையாகக் களைந்தெறிவர். பாலை நிலத்தில் நீருள்ள சிறு பள்ளங்களுக்கு அருகில் இது வளரும்; இதன் மலர் அந்நீரில் விழுந்து அழுகியிருக்கும். நறுமணம் உடைய இதன் மலரைத் தலைவியின் நுதல் மணத்திற்கு உவமை ஆக்குவர். இதன் இலைகள் பெரியனவாக இருக்கும்.
 
குறிஞ்சி

    குறிஞ்சி நிலத்திற்கு அடையாளமாக விளங்குவது இது. இதன் தண்டு கரிய நிறமாக இருக்கும். இதன் மலரில் தேன் மிகுதியாக உண்டு. இம்மலர் பல வருஷங்களுக்கு ஒரு முறை மலர்வதென்று கூறுகின்றனர்.
 
குன்றி


    இது கொடி வகையுள் ஒன்று. இதன் வித்தை மணி என்பர். அது சிவப்பு நிறம் உடையதாதலின் முருகனது செந்நிற ஆடைக்கு உவமையாகக் கூறப்படுகின்றது.

(தொடரும்)

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 31 - குவளை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 31 - குவளை


    இது குறிஞ்சி நிலத்திலுள்ள சுனைகளில் வளர்வது; “சுனைக் குவளைஎனச்சிறப்பிக்கப்பெறும். கருங்குவளை, செங்குவளை என இருவகை இதில் உண்டு. அவற்றுள் கருங்குவளை மகளிர் கண்ணுக்கு உவமையாகக் கூறப்படும். இது நீர்நிறைந்த இடத்தில் வளம் பெற்று வளர்வது. இம்மலர் மிக்க மென்மை உடைய தாதலின் வண்டுகள் படிந்த அளவில் அழகு கெடுவது. இதன் நறுமணத்தைத் தலைவியின் மேனி, கூந்தல், நுதல் என்பவற்றின் இயற்கை மணத்திற்கு உவமையாகக் கூறுவர். குவளையோடு காந்தளையும் முல்லையையும் தொடுத்தமைத்தலுண்டு. இதன் காம்பு குறியது. மகளிர் இதனைக் கூந்தலில் புனைதலும் தழையிடையிற் கலந்து தொடுத்து அணிதலும் வழக்கம். தலைவன் குவளைக் கண்ணியை அணிந்து வருதலும் குவளை மாலையைத் தலைவிக்குக் கையுறையாக அளித்தலும் மரபு.

(தொடரும்)

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...