திங்கள், 2 நவம்பர், 2015

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 6) : நெய்தல்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 6) : நெய்தல் 
நெய்தல்
    கடலும் கடலைச் சார்ந்த இடமும் நெய்தல் நிலமாகும். கடற்கரையில் உள்ள மணல் மேட்டில் குடில் கட்டி வாழ்வார் பரதவர் எனப்படுவர். அவர் ஊர் சிறுநல்லூர் என்றும் சிறுகுடி என்றும் வழங்கப்படுகின்றது. கடற்கரையையும், கடற்கரைச் சோலையையும் கானல் என்பர். உப்பளங்கள் கடற்கரையில் இருக்கும்; அவை, உப்பு விளை கழனி எனப்படும்.
    பரதவர் படகில் சென்று மீன் வேட்டை ஆடுவர். அப்படகிற்குத் திமில் என்று பெயர். அவர் திமிங்கிலத்தை எறியுளியால் எறிந்து கொல்வர். சில சமயங்களில் சுறாமீன் பரதவரைத் தன் கொம்பாலும் வாலாலும் எறிந்து புண்படுத்தி விடும். அக்காலத்தில் அவர்கள் புண் ஆறும் வரையில் தம் அகத்தில் தங்கியிருந்து ஆறிய பின்னர் மீண்டும் மீன் வேட்டையை மேற்கொள்வர். அங்ஙனம் புண்பட்ட ஒரு முதிய பரதவனை அவனது மனைவி உடனுறைந்து பாதுகாக்கும் செய்தி ஒன்று ஒரு பாட்டில் காணப்படுகின்றது. அவள் தன் வீட்டிற்கு வேண்டிய உணவுப் பொருளைப் பெறுவதையும் நினையாமல் உடனிருந்தே ஆவன செய்து அவனது புண் தணிந்து மீண்டும் மீன் வேட்டம் புக்க பின்னரே வேறு வேலையைக் கவனிக்கின்றாள்.
    பரதவர் தாம் கொணர்ந்த மீனைத் தம் வீட்டு முன்றிலில் மணலில் உலர்த்துவர். அதனால் அம் மணல் புலால் நாற்றம் வீசும். சிறு மீனை அவர்கள் வலையினால் பிடிப்பார்கள்.   நெய்தல் நிலமகளிர் உப்பை விற்று அதற்கு மாறாக வெண்ணெல்லைப் பெற்று உண்பர்.

    கடற்கரைச் சோலை பல மரங்கள் அடர்ந்து, உதிர்ந்த மலரும் மெத்தென்ற மணலும் பொருந்திப் பயில்வதற்கு இனிதாய் இருத்தலின் தலைவனும் தலைவியும் அளவளாவுதற்குரிய இடமாகப் பயன்படும். நெய்தல் நிலத்தலைவன் கொண்கன், சேர்ப்பன், துறைவன், புலம்பன் என்னும் பெயர்களால் வழங்கப்படுகின்றான்.
(தொடரும்)

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...