குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 55) - மீன்
மீன்
மீன்களில் பலவகை உள. அயிரை, ஆரல், இறா, கயல், கெண்டை, சுறா, வாளை என்பன இந்நூலில் வந்துள்ளன. மீனைத் தூண்டில் எறிந்தும் வலை வீசியும் பிடிப்பர். நெய்தல் நில மாக்கள் படகில் ஏறிக் கடலிடைச் சென்று எறியுளியை வீசி மீன் பிடிப்பர். பாணர் மீனைப் பிடித்து மண்டையென்னும் பாத்திரத்தில் பெய்து வைப்பர். சில சமயங்களில் நீரில் மீனைக் கருதி அமைக்கப்பட்ட வலையில் நீர் நாய் முதலியவை படுவதுமுண்டு. கடலில் கொண்ட மீன் பரதவரால் மணல் முன்றிலில் உலர்த்தப்படும். கடல் மீனை நாரையும் கழிமீனைக் காக்கையும் உண்ணும்.
அயிரை மீனையும் ஆரல் மீனையும் நாரை உண்ணும். அயிரை பொய்கையிலும் காணப்படும். ஆரல் மீனின் முட்டை மிகவும் சிறியது. அது ஞாழற் பூவைப் போலத் தோற்றுவது.
இறா மீனை இறவெனவும் மொழிவர்; இது வளைந்த காலையும் வளைந்த உடலையும் உடையது; கழிகளில் காணப்படும். அன்றிலின் வளைந்த வாய்க்கு இதனை உவமையாகப் பகர்வர்.
ஒன்றை ஒன்று பொரும் இணைக்கயலை மகளிர் கண்களுக்கு ஒப்பாக இயம்புவர். கெண்டை என்னும் மீன் பிரப்பம்பழத்தை உண்ணும்; பொய்கையில் வாழும்; நாரைக்கு உணவாகும்.
சுறா என்பது கடலில் வாழ்வது. இது நீண்ட கொம்பை உடையது. பரதவர் இதனை வலையால் பிடிக்க இயலாமையால் ஒருவகை எறியுளியை எறிந்து குத்திக் கொல்வர். இது மிக்க வலியுடையதாதலின் வயச்சுறா எனக் குறிக்கப்படும். கொம்பை உடையதாதலின் கோட்டு மீன் என்றும் வழங்கப்படும். வலைஞர் இதனால் எறியப்பட்டுப் புண்ணை அடைதலும் உண்டு.
வாளை என்னும் மீன் பொய்கைகளிலும் பிற சிறிய நீர்நிலைகளிலும் காணப்படும். இது மாம்பழத்தை உண்ணும்; நீர் நாய்க்கு உணவாகும். இதன் பெண்ணை நாகென்பது மரபு.
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக