குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 57) - யானை
யானை
யானையைப் பற்றிய செய்திகள் பல இந்நூலுள் வந்துள்ளன. குறிஞ்சி நிலத்தில் வலியோடு உலவும் யானையையும் பாலை நிலத்தில் உரனழிந்து வெம்மையால் துன்புறும் யானையையும் பற்றிய நிகழ்ச்சிகளைப் புலவர்கள் புனைந்து உரைத்திருக்கின்றார்கள். சிறிய கண்களையும், ஆழ்ந்த வாயையும் மெல்லிய தலையையும் மதத்தால் நனைந்த கவுளையும் சேம்பின் இலையைப் போலத் தோற்றும் செவிகளையும் தினைக்கதிருக்கு உவமை கூறப்படும் துதிக்கையையும் பேயின் பல்லைப் போன்ற கால் நகங்களையும் உடைய ஆண் யானைகள் புழுதி படிந்த மேனியுடன் குண்டுக் கற்களைப் போல நிற்கின்றன. சில யானைகள் கயத்தையும் ஆற்றையும் நாடிச் செல்லுகின்றன. சில மழையில் நனைந்து இன்புறுகின்றன. ஒரு யானை ஒரு துறுகல்லிற்கு அருகில் துயில்கின்றது. அதற்கும் அத்துறு கல்லிற்கும் வேற்றுமை தோற்றாமையின் அங்கே படர்ந்த மாணைக் கொடி அக்களிற்றின் மேல் படர்கின்றது. ஒரு யானை வேங்கை மரத்தடியில் துயிலும் போது அதனுடைய மூச்சு நெடுந்தூரம் ஒலிக்கின்றது. பள்ளி யானைகள் தலைவன் உயிர்ப்பதைப் போலப் பெருமூச்சுவிடுகின்றன. தினைப் புனத்தில் சென்ற யானை கானவன் விட்ட கவணுக்கு அஞ்சி ஓடுகின்றது. இரவில் அப்புனத்தில் சென்ற மற்றொரு யானை அக் கானவன் வைத்துள்ள கொள்ளியைக் கண்டு அஞ்சி வருகையில் விண்ணில் இருந்து வீழும் நட்சத்திரத்தைக் கண்டு அதையும் கொள்ளிக் கட்டை என்று எண்ணி அஞ்சுகின்றது. பெரிய உடலை உடையதாக இருந்தும் சிறு வெள்ளரவினால் ஓர் யானை அணங்கப்படுகின்றது. புதியதாகப் பிடிக்கப்பட்ட யானை ஒன்று வலியிழந்து மயங்கி நிற்கின்றது. அதைக் கண்ட புலவர் தலைவியின்பால் மயங்கிய தலைவனுக்கு அதனை உவமை ஆக்குகின்றார். களிறு மிதித்த மலையடிவாரங்களில் நீர் உண்டாகின்றது. யானைகள் ஒன்றோடு ஒன்று பொருகின்றன; அருகில் நின்ற வேங்கை மரம் அதனால் சிதைகின்றது. புலியைத் தாக்கிப் புண்ணுறும் யானையையும், அப்புலியை வருத்தும் களிற்றையும் குறிஞ்சி நிலத்தில் காண்கின்றோம்.
மூங்கில், கொறுக்கைச்சி, கரும்பு, தினை, யா, ஓமை முதலியவற்றை யானைகள் உண்ணுகின்றன. தான் விரும்பிய தழை உணவை உண்ட யானை மதம் பெருக ஒருசார் நிற்கின்றது.
வருந்திய நடையையும் முழந்தாளையும் உடைய மடப்பிடி ஒன்று தன் கன்று பால் குடித்துக் கொண்டே இருப்பத் தினையை உண்டு மகிழ்கின்றது. யானைக் கன்று குறவர் பிள்ளைகளோடு பழகி வளர்கின்றது.
பாலைநிலத்தில் தங்குவதற்கு நிழலின்மையால் வழிப்போவார் உடலை ஆறலை கள்வர் மூடிய தழைக் குவியலின் நிழலில் ஓய்ந்த யானை நிற்கின்றது. நீர் வேட்கை மிக்கு வருங்கயத்தைத் துழாவுகின்றது. மரத்தின் பட்டையை உரித்து மென்று ஒருவாறு வேட்கை தணிகின்றது. வேறொரு யானை உலர்ந்த மரத்தைப் பிளக்க மாட்டாமல் கையை மடித்து வருந்துகின்றது.
யானை தன் இனத்தைப் பாதுகாத்து உணவூட்டும் இயல்பினது. பிடிகளும் கன்றுகளும் முதிய யானைகளும் அடங்கிய யானைக் கூட்டத்திற்குத் தலைமையுடையதாக ஓர் யானை செல்லும். அதனை யூதநாதன் என்பர். ஏந்தல் என்று இந்நூல் கூறுகின்றது. யாமரத்தைக் குத்தி அதன் பட்டையால் தன் இனத்தின் பசியைத் தீர்க்கும் யானையை இதில் காணலாம்.
களிறும் பெண் யானையும் ஒன்றனோடு ஒன்று இணைந்து அன்பு பூண்டு ஒழுகுகின்றன. குறிஞ்சி நிலத்துக் களிறு தன் மடப் பிடியைத் தழுவிக் குன்றகச் சிறுகுடியில் செல்கின்றது. மாலைக் காலத்தில் அப்பிடியோடு மலைமுழைஞ்சுகளில் புகுகின்றது. புலியினின்றும் பிடியைப் பாதுகாக்கின்றது. பாலை நிலத்துக் களிறோ யாமரப் பட்டையை உரித்துத் தன் பிடியின் பசியைக் களைகின்றது. வாழையால் மதனழிந்து கிடக்கும் களிற்றைப் பிடி தன் கையால் தடவி உபசரிக்கின்றது. இக் காட்சிகளில் அக் களிற்றுக்கும் பிடிக்கும் இடையே உள்ள அன்பு விளங்குகின்றது.
பழக்கப்பட்ட யானைகளைப் பாகர்கள் கழுவுதலும், நீர்த் துறைகளில் உள்ள மருத மரத்தில் பிணித்தலும், போரிடைப் படையாகக் கொண்டு செல்லுதலும், வீரர்கள் அதனைக் கொன்று தாமும் படுதலுமாகிய செய்திகள் இதில் வந்துள்ளன.
பெண்டிர் பிடியின்மேல் ஊர்தல் வழக்கமாதலின் தம்மைப் பாடி வரும் விறலியர்க்குப் பெண் யானைகளை உபகாரிகள் பரிசிலாக அளிக்கின்றனர்.
யானைக் கொம்பு விலை உயர்ந்தது. அதனால் தேர் இயற்றப்படும். அக் கொம்பை விற்று அதன் விலையால் உணவு பெறுதல் குறிஞ்சி நிலத்து வாழ்வார் வழக்கம்.
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக