தொல்காப்பிய முதல் பதிப்பு: மழவை மகாலிங்கையர் பதிப்பு: தொல்.எழுத்து. நச்சினார்க்கினியர் உரை
பதிப்பு முகப்பு:
தொல்காப்பியம், இஃது, ஜமதக்கினி மஹாரிஷியின் புத்திரரும், அகஸ்திய மஹாரிஷியின் முதன் மாணாக்கருமாகிய, திரணதூமாக்கினியென்னுமியற் பெயரையுடைய தொல்காப்பிய மகரிஷியினால் அருளிச் செய்யப்பட்டது. இதில் முதலாவது - எழுத்ததிகார மூலமும், மதுரை ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியரால் அருளிச் செய்யப்பட்ட அதனுரையும், கரலிதிதங்களாலாய வழுக்களை நீக்கி யச்சிட்டுத் தருகவெனச் சில வித்வான்கள் கேட்டுக் கொள்ளக் கனம் பொருந்திய, கம்பேனியாரால் ஏற்படுத்தப்பட்ட யுனிவர் சிட்டியென்னுஞ் சகலச் சாஸ்திரி சாலைத் தமிழ்த் தலைமை புலமை நாடாத்திய மழைவை மகாலிங்கையரால் பல பிரதிகளைக் கொண்டாராயப்பட்டுத் திருவண்ணாமலை வீரபத்திரையரால் தமது கல்விக்கடல் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டன, சாலீவாகன ஆண்டு, முதற் பதிப்பு – 1770 இன் சரியான பிலவங்க ஆண்டு ஆவணி மாதம் – என்பது முகப்புப் பக்கம்.
இப்பதிப்பைப் பாவலர் சரித்திர தீபகம் (அ. சதாசிவம் பிள்ளை 2006: 187, 228) பதிப்பாண்டு; அதிகாரப் பகுதி சுட்டாமல் குறித்துள்ளது. போதவசனம் என்னும் நூலையும், சைவ எல்லப்ப நாவலரின் அருணாசல புராணத்துக்கு ஓர் உரையும் எழுதினார் என்பது அந்நூற்குறிப்பு.
இப்பதிப்பினை எல்.டி. பர்னட், ஜி.யு. போப் ஆகியோர் (1909: 163, 389) குறித்துள்ளனர். மேலும், மழைவ மகாலிங்கையரின் அருணாசல புராண உரைப்பதிப்பு (1898, 1903), இலக்கணச் சுருக்கம் (1879, 1882, 1893 1898) ஆகிய பதிப்புக்களையும் குறித்துள்ளனர். இலக்கணச் சுருக்கம் பிறாரல் பதிப்பிக்கப்பட்டதும் இப்பட்டியலில் உண்டு.
மகாலிங்கையரின் இலக்கணச் சுருக்கப் பதிப்புக்கள் - வர்த்தமான தரங்கிணி அச்சுக்கூடம் 1878, பாஸ்டர் அச்சுக்கூடம் 1879, மிமோரியல் அச்சுக்கூடம் 1882, ஸ்ரீநிலைய அச்சுக்கூடம் 1883, கஜந ரஞ்சநி அச்சுக்கூடம் 1884, கலாரத்நாகரம் அச்சுக்கூடம் 1888, தொண்டை மண்டலம் பிரஸ் 1889, கலாரத்நாகரம் அச்சுக்கூடம் 1892, ஐரிஷ் பிரஸ் 1897, தாம்ஸன் கம்பெனி 1898 ஆகியன மு. சண்முகம் பிள்ளையால் (1961: 338 – 339) குறிக்கப்பட்டுள்ளன.
பதிப்பாண்டு 1845 என்பார் மா.சு. சம்பந்தன் (1997: 166). 1849 என்பர் க. ப. அறவாணன் & தாயம்மாள் அறவாணன் (1975:119), கி. நாச்சிமுத்து (1986: 19), வெ. பழநியப்பன் (1990: 92) ஆகியோர். 1907 என்பர் க.த. திருநாவுக்கரசு (1972: 6).
தொல்காப்பிய முதற்பதிப்பை வெளியிட்டவர் சி.வை. தாமோதரம் பிள்ளை எனக் கலைக்களஞ்சியம் கூறுகின்றது; அது பொருந்தாது. மழவை மகாலிங்கையரே தொல்காப்பியத்தின் முதற்பதிப்பாசிரியர். மழவை மகாலிங்கையர் தம் பதிப்பை வெளியிட்ட ஆண்டு 1847, 1848, 1849 எனப் பலவாறாகக் கூறுவார் உண்டு. எனினும் அப்பதிப்பு வெளிவந்த ஆண்டு 1848 என்பார் கோ.கிருட்டிணமூர்த்தி (1990: 21-22). இதில் குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால் மகாலிங்கையர் பதிப்பு வெளிவந்த ஆண்டு 1848 அன்று என்பதாகும். ஏனெனில் மகாலிங்கையர் வெளியிட்ட தொல்காப்பிய எழுத்ததிகார நச்சினார்க்கினியர் பதிப்பு பிலவங்க ஆண்டு ஆவணித் திங்களில் வெளிவந்ததாகும். இதற்குச் சரியான ஆங்கில ஆண்டு 1847 ஆகஸ்ட் - செப்டம்பர் ஆகும். எனவே, மகாலிங்கையர் பதிப்பு வெளிவந்த ஆண்டு 1847 என்பதே பொருத்தமுடையதாகும். தொல்காப்பியத்தின் முதற்பதிப்பாசிரியர் யார்? என்பதிலும், பதிப்பித்த ஆண்டு எது? என்பதிலும் கருத்து முரண்பாடுகள் இருந்ததை மேற்கண்ட பகுதிகள் நமக்குக் காட்டுகின்றன – ஆ. மணி (2014: 106 – 107; 2016: 494 – 495).
இதன் பதிப்பாண்டு 1848 என்பார் தெ. ஞானசுந்தரம் (தமிழ்ப் பேராசிரியர்கள் 1998:11).
இரா. அறவேந்தன், ம. லோகேஸ்வரன் ஆகியோர் (2017: 5) கிருட்டிணமூர்த்தி குறித்த 1848ஏ சரியான ஆண்டு என்கின்றனர். தமிழ் இலக்கணப் பதிப்பு வரலாறு என்னும் தலைப்பில் முனைவர்ப் பட்ட ஆய்வினைச் செய்த கா. இரவிச்சந்திரன் (2011: 54) மகாலிங்கையர் பதிப்பின் ஆண்டு 1848 என்றே கூறுவர்.
தாண்டவராய முதலியார், முத்துசாமிப்பிள்ளை ஆகியோரால் பதிப்பிக்கப்பட்ட திருவள்ளுவமாலையும் திருக்குறண் மூலமும் நாலடி நானூற்றின் மூலமும் என்னும் பதிப்பில் 1831க்குச் சரியான கர வருடம் என்ற குறிப்பும், மெக்கன்ஸி ஜி. காபன் அய்யரின் தொன்னூல் விளக்க இரண்டாம் பதிப்பில் (1891) 1891 ஆம் ஆண்டுக்குச் சரியான கர வருடம் என்ற குறிப்பும் தரப்பட்டுள்ளன. இதன் மூலம் 60 ஆண்டு என்ற வட்டமும் ஆங்கில ஆண்டுக் கணக்கும் சரியாகின்றன. இதனை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஆண்டு வட்டப் பட்டியல் உணர்த்தும் செய்தி என்னவென்றால், பிலவங்க – ஆவணிக்குச் சரியான ஆண்டு 1847தான் என்பது உறுதியாகும். (காண்க: பின்னிணைப்பு). எல்.டி. பர்னட், ஜி.யு. போப் ஆகியோர் (1909: 163, 389) பதிப்பாண்டு 1847 எனக் குறித்துள்ளதும் காண்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக