பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியில் கணினித் தமிழ்ப் பயிலரங்கு (06.11.2024)
பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறையின் கணித்தமிழ்ப்பேரவை சார்பாக இரு நாள் கணினித் தமிழ்ப் பயிலரங்கின் தொடக்கவிழா இன்று (06.11.2024) புதன் கிழமை காலை 10 மணியளவில் கல்லூரிக் கருத்தரங்க அறையில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசினரால் தொடங்கப்பெற்ற தமிழ் இணையக் கல்விக் கழகம் கல்லூரிகள்தோறும் கணித்தமிழ்ப்பேரவை என்ற அமைப்பினை உருவாக்கி, அதன் வழியாகத் தமிழையும் கணினித் தொழில்நுட்பத்தையும் மாணவ - மாணவியர்களிடம் பரப்ப வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றது. புதுவை மாநிலத்தில் இரண்டாவதாகத் தொடங்கப்பட்ட கல்லூரியாகிய பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறையின் ஓரங்கமாக விளங்கும் கணித்தமிழ்ப் பேரவையின் சார்பாக நடைபெறும் கணினித்தமிழ்ப் பயிலரங்கின் தொடக்கவிழாவுக்குக் கல்லூரி முதல்வர் முனைவர் இரா. வீரமோகன் அவர்கள் தலைமை தாங்கி உரையாற்றினார்.
கல்லூரியின் கணினித் துறைத் தலைவர் முனைவர் இரா. ரெங்கசாமி அவர்கள் தமிழ் மென்பொருள்கள் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சொ. சேதுபதி பயிலரங்கின் நோக்கங்களை எடுத்துக் கூறினார். முன்னதாக, கணித்தமிழ்ப்பேரவையின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆ. மணி வரவேற்புரையாற்றினார். நிறைவாக, இளங்கலைத் தமிழ் மூன்றாமாண்டு மாணவி சே. லத்திகா நன்றியுரை கூறினார். இளங்கலைத் தமிழ் மூன்றாமாண்டு மாணவி வ. அஷ்வதி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
முனைவர் கா. ராஜகுமாரி நெறியாளுகையில் நடைபெற்ற பயிலரங்கின் முதல் அமர்வில் முனைவர் வீ. செல்வப்பெருமாள், அலுவலக மென்பொருள்: சொல்லாளர், விரிதாள் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
முனைவர் ஏ. இராஜலட்சுமி நெறியாளுகையில் நடைபெற்ற இரண்டாம் அமர்வில் முனைவர் சா. த. ஆரோக்கிய மேரி, அன்றாட வாழ்வுக்குக் கணினி என்னும் தலைப்பில் சிறப்புரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் துறைப் பேராசிரியர்கள் செய்திருந்தனர். திரளான மாணவிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிப் படங்கள் இவை:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக