புதன், 27 நவம்பர், 2024

அண்மைய நூல் - சங்கத் தமிழ்: முருகன் பாடல்கள் (மூலமும் உரையும்)

 அண்மைய நூல் - சங்கத் தமிழ்: முருகன் பாடல்கள் (மூலமும் உரையும்)

சங்கத் தமிழ்: முருகன் பாடல்கள் மூலமும் உரையும் என்னும் எம் அண்மைய நூலின் முன்னுரையில் இருந்து சில குறிப்புக்கள்:

சங்க இலக்கியப் பதிப்புக்களில் புலவர் / திணை ஆகியவற்றில் இருந்து மாறுபட்டுப் பொருண்மை / கருத்தியல் அடிப்படையில் அதாவது, முருகன் பற்றிய பாடல்கள் என்னுமாப்போலப் பதிப்புக்கள் எவையும் வந்துள்ளதாகத் தெரியவில்லை. அவ்வகையில் இப்பதிப்பே முதற்பதிப்பாகும் என்பதே இப்பதிப்பின் தகைமையாகும். இதற்கு முன்னர் இதுபோன்ற பதிப்பு ஒன்று சங்க இலக்கியத்திற்குத் தோன்றவில்லை என்னும்போதே இப்பதிப்பின் அருமையும் சிறப்புக்களும் தெளிவாகின்றன. இவ்வகையில் இப்பதிப்பு (சங்கத் தமிழ்: முருகன் பாடல்கள் மூலமும் உரையும்) தனக்கான இடத்தைத் தானே உருவாக்கிக் கொள்கின்றது. மேலும், இனியாகிலும் இதுபோன்ற பதிப்புக்கள் சங்க இலக்கியத்திற்கெனத் தோன்றுவதற்கான முதல் விதையையும் இப்பதிப்பு இடுகின்றது என்பது குறிக்கத்தக்கது.  

பதிப்பின் பயன்

சங்க இலக்கியங்களில் தான் முருகன் பாடல்கள் இருக்கின்றனவே?. அப்படி இருக்கும்பொழுது, இப்பதிப்பினால் என்ன பயன்? என்ற எண்ணமும் உங்களுக்கு எழலாம். சங்க இலக்கியங்களில் உள்ள 2381 பாடல்களில் ஆங்காங்கே முருகன் பற்றிய பாடல்கள் விரவிக் கிடக்கின்றன. பத்துப்பாட்டில் ஒன்றும், பரிபாடலில் சிலவும், பிற நூல்களில் சிலவும் என்று விரவிக் கிடக்கும்பொழுது, அவற்றை அறியத் தனித்தனி நூல்களைத் தேடி, அவற்றுள்ளும் முருகன் பற்றிய பாடல்களைத் தேடி அலைய வேண்டும். ஆனால், இப்பதிப்பு அவற்றையெல்லாம் ஒரு சேரத் தொகுத்து ஓரிடத்தில் காட்சிப்படுத்துகின்றது. அத்தோடு, அப்பாடல்களுக்கான சிறந்த உரைகளையும் உங்கள் பார்வைக்கு வைக்கின்றது. ஒவ்வொரு நூலுக்குமான சிறந்த உரைகளில் ஒன்றை உங்களுக்குத் தருகின்றது. இவையெல்லாம் ஓர் அடிப்படை ஆராய்ச்சி நூலின் பண்புகளாகும். இந்நூலும் ஓர் அடிப்படை ஆய்வு நூலாதலால் மேலாய்வுகளுக்கும் மீளாய்வுகளுக்கும் துணை செய்யும்

நூலின் முகப்புப் பக்கங்கள்





கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...