வெள்ளி, 15 நவம்பர், 2024

கணித்தமிழ்ப்பேரவை தொடக்கவிழா (28.10.2024)

 கணித்தமிழ்ப்பேரவை தொடக்கவிழா (28.10.2024)

பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறையில் கணித்தமிழ்ப்பேரவைத் தொடக்கவிழா இன்று (28.10.2024) திங்கள் கிழமை காலை 10 மணியளவில் கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசினரால் தொடங்கப்பெற்ற தமிழ் இணையக் கல்விக் கழகம் கல்லூரிகள்தோறும் கணித்தமிழ்ப்பேரவை எனற அமைப்பினை உருவாக்கி, அதன் வழியாகத் தமிழையும் கணினித் தொழில்நுட்பத்தையும் மாணவ - மாணவியர்களிடம் பரப்ப வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றது. அவ்வகையில் ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து விண்ணப்பம் பெற்று, தகுதியுடைய கல்லூரிகளுக்கு ஆதார நிதியாக 25,000 அளித்து வருகின்றது. புதுவை மாநிலத்தில் இரண்டாவதாகத் தொடங்கப்பட்ட கல்லூரியாகிய பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி இந்த ஆதார நிதியினைப் பெற்ற இரண்டாவது கல்லூரி ஆகும். புதுச்சேரிக் கல்லூரிகளில் தமிழ்நாடு அரசிடம் இருந்து நிதி பெற்று அமைப்பினைத் தொடங்கியுள்ள வரலாற்று நிகழ்வினைப் பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை நிகழ்த்தியிருக்கின்றது என்பது குறிக்கத்தக்கதாகும்.

சிறந்தவொரு நிகழ்வாக அமைந்த கணித்தமிழ்ப்பேரவையின் தொடக்கவிழாவுக்குக் கல்லூரி முதல்வர் முனைவர் இரா. வீரமோகன் அவர்கள் தலைமை தாங்கி உரையாற்றியதோடு, கணித்தமிழ்ப்பேரவையின் வலைப்பூவினையும் தொடக்கி வைத்தார்.

புதுவைப் பல்கலைக் கழக இணைப்பேராசிரியரும் கணினி மொழியியல் அறிஞருமாகிய முனைவர் வ. தனலட்சுமி அவர்கள் இயற்கை மொழியாய்வும் செயற்கை நுண்ணறிவும் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சொ. சேதுபதி கணித்தமிழ்ப்பேரவையின் நோக்கங்களை எடுத்துக் கூறியதோடு, வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக, கணித்தமிழ்ப்பேரவையின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆ. மணி வரவேற்புரையாற்றினார். நிறைவாக, பேரவையின் மாணவச் செயலர்களுள் ஒருவராகிய இளங்கலைத் தமிழ் மூன்றாமாண்டு மாணவி த. வசுந்திரா நன்றியுரை கூறினார். மாணவிகளே தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் துறைப் பேராசிரியர்கள் செய்திருந்தனர். 

                                                       கல்லூரி முதல்வர் அறையில்
பாவேந்தர் பாரதிதாசன் சிலைக்கு மாலை அணிவித்தல்
முனைவர் ஆ. மணியின் வரவேற்புரை

                           சிறப்பு விருந்தினருக்குக் கல்லூரி முதல்வர் சிறப்புச் செய்தல்
கல்லூரி முதல்வர் முனைவர் இரா. வீரமோகன் அவர்கள் கணித்தமிப்பேரவையின் வலைப்பூவினைத் தொடக்கி வைத்தல்
             தொடக்கவிழாச் சிறப்புரை: முனைவர் வ. தனலட்சுமி அவர்கள்
கணித்தமிழ்ப் பேரவையின் மாணவச் செயலர் செல்வி. த. வசுந்திராவின் நன்றியுரை
          நிகழ்வின் பின்புலமாக இருந்து தொண்டாற்றிய தன்னார்வலர்களுடன்

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...