பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியில் கணினித் தமிழ்ப் பயிலரங்கு - நிறைவு விழா (07.11.2024)
பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறையின் கணித்தமிழ்ப்பேரவை சார்பாக இரு நாள் கணினித் தமிழ்ப் பயிலரங்கின் நிறைவுவிழா இன்று (07.11.2024) வியாழக் கிழமை காலை 12 மணியளவில் கல்லூரிக் கருத்தரங்க அறையில் நடைபெற்றது.
தமிழ் இணையக் கல்விக் கழகம் நிதிநல்கை பெற்றுப் பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறையில் தொடக்கப்பட்ட கணித்தமிழ்ப்பேரவை தமிழையும் கணினித் தொழில்நுட்பத்தையும் மாணவியர்களிடம் பரவச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் கணித்தமிழ்ப் பேரவையின் சார்பாக இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் கணினித்தமிழ்ப் பயிலரங்கின் இரண்டாம் நாள் முதல் அமர்வில் முனைவர் ப. குப்புசாமி “முன்வைப்பி, தமிழ்த் தட்டச்சு” என்னும் தலைப்பில் உரையாற்றினார். முனைவர் நா. வஜ்ரவேலு அமர்வுக்கு நெறியாளுகை செய்தார். முனைவர் செ. சந்திரா அவர்களின் நெறியாளுகையில் நடைபெற்ற இரண்டாம் அமர்வில் முனைவர் பா. பட்டம்மாள் “தொழில் நுட்ப உலகில் மகளிர்: சிக்கல்களும் தீர்வுகளும்” என்னும் பொருண்மையில் சிறப்புரை வழங்கினார்.
பின்னர் நடைபெற்ற நிறைவு விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் இரா. வீரமோகன் அவர்கள் தலைமை தாங்கி உரையாற்றினார். புதுவைப் பல்கலைக் கழகத் தமிழியல் புலத்தின் புல முதன்மையர் பேராசிரியர் ச. சுடலைமுத்து சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, நிறைவுப்பேருரையாற்றினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சொ. சேதுபதி பயிலரங்கு குறித்த கருத்துரை வழங்கினார். கவிதை, பேச்சுப்போட்டிகளில் பரிசுபெற்ற மாணவிகளுக்கு இயற்பியல் துறைத் தலைவர் முனைவர் மதிவாணன் அவர்கள் பரிசுகளை வழங்கினார். முன்னதாக, கணித்தமிழ்ப்பேரவையின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆ. மணி வரவேற்புரையாற்றினார். நிறைவாக, இளங்கலைத் தமிழ் மூன்றாமாண்டு மாணவி சு. ஜெயசூர்யா நன்றியுரை கூறினார். இளங்கலைத் தமிழ் மூன்றாமாண்டு மாணவி வெ. நிஷா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் துறைப் பேராசிரியர்கள் செய்திருந்தனர். திரளான மாணவிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சிப் படங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக