சனி, 13 ஜூன், 2015

தொல்காப்பிய இளம்பூரணர் உரை – ஒரு அறிமுகம்

       தொல்காப்பியம் தமிழின் முதன்மை நூல். தமிழ் மரபைக் பேரளவில் கட்டியுரைக்கும் நூல். அந்நூலுக்கு இளம்பூரணர் எழுதியுள்ள உரையின் பொருளதிகாரப் பகுதிகள் இவண் தரப்படுகின்றன. வ.உ.சிதம்பரனார் தொல்காப்பிய இளம்பூரணத்தின் பொருளதிகாரம் பகுதியை முழுமையாகப் பதிப்பித்தவர். அவருக்கு முன்னரே கா. நமச்சிவாயர் முதலிரு இயல்களைப் பதிப்பித்துள்ளது தனிச்செய்தி. இப்பதிப்புக்களை அடிப்ப்டையாகக் கொண்டே பின்னர் எழுந்த அத்தனை பதிப்புக்களும் அமைந்தன. இப்பகுதியும் அவ்வாறு அமைந்த ஒன்றே. தமிழ் இணையக் கல்விக்கழகம் இவ்வாறான உரைகளை இணையப்பக்கத்தில் தந்துள்ளது. அவர்களின் பணி தமிழர்களின் போற்றுதலுக்குரியது. அவர்களுக்கு நம் நன்றி உரித்தாகுக. முதற்கண், இளம்பூரணர் உரை பற்றிய ஆராய்ச்சிக்குறிப்புக்கள் சிலவற்றைக் காண்போம். இவை முனைவர் ஆ. மணியின் பழந்தமிழ் இலக்கண, இலக்கிய உரைகளில் குறுந்தொகை என்னும் ஆய்வுத்திட்ட ஆய்வேட்டிலிருந்து தரப்பட்டுள்ளன.

முதல் உரை?

தொல்காப்பியத்தின் காலப்பழமை காரணமாக, அந்நூல் கூறும் கருத்துக்களை அறிந்துகொள்வதில் இடர்கள் தோன்றின. இதன் விளைவாகத் தொல்காப்பியத்திற்கு உரையெழுதும் முயற்சிகள் தொடங்கின. இளம்பூரணரே இவ்வகையில் முதல் உரையாசிரியராகக் கருதப்படுகின்றார். அவருடைய உரைக்கு முன்னரும் உரைகள் இருந்தன எனக் கருதுவாரும் உண்டு (மு.வை. அரவிந்தன் 2008: 187). இவ்வுரைகள் வாய்மொழி உரைகளாக இருக்கலாம் என்பார் கருத்தினைப் பினவரும் உரைப்பகுதியால் அறியலாம்.

ஒருகால், இளம்பூரணர் காலத்தில், தொல்காப்பியத்திற்குப் பல்வேறு உரைகள் வாய்மொழியாக வழங்கி வந்திருக்கலாம். அவற்றைக் கேட்டு அறிந்த உரையாசிரியர் (இளம்பூரணர்), தாம் எழுதிய உரையில் அவற்றை விடாது போற்றிக் குறித்திருக்கலாம்” (மு.வை. அரவிந்தன் 2008: 188). இக்கருத்து ஓர் ஊகமே. அக்கருத்துக்கள் வாய்மொழியாக மட்டுமே வழங்கின எனக் கருதத் தோன்றவில்லை. முன்னர் வழங்கிப் பின்னர்க் கிடைக்காதுபோன உரைகளாக இருக்கலாமோ என்பது எண்ணிப் பார்க்கத்தக்கது.

இளம்பூரணர் உரைச்சுவடிகள்
 
தொல்காப்பியம் பழந்தமிழ் நூல்களில் பேரளவில் உரைகளைப் பெற்ற நூலாகும். தொல்காப்பியத்தினைப் போல வேறு எந்தவொரு நூலும் இத்தனை உரைகளைப் பெற்றதாகத் தெரியவில்லை. சேனாவரையர், நச்சினார்க்கினியர் முதலான பழந்தமிழ் உரையாசிரியர்களாலேயே உரையாசிரியர் என்னும் சிறப்பினைப் பெற்றவர் இளம்பூரணர் ஆவார். அவருடைய உரை தொல்காப்பியம் முழுமைக்கும் இக்காலத்தில் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்கள் தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தைப் பதிப்பிக்கும் காலத்தில் (1885) தொல்காப்பிய இளம்பூரணர் உரையின் பல பகுதிகள் கிட்டாமல் இருந்தன. இவ்வுண்மையை, ”இந்நூற்கு உரையெழுதினோர் இளம்பூரணர் கல்லாடர் பேராசிரியர் சேனாவரையர் நச்சினார்க்கினியர் ஐவர். இவருள் வடநூற்கடலை நிலைகண்டுணர்ந்த சேனாவரையர் சொல்லதிகாரம் ஒன்றற்கே மற்றை உரைகளினும் மிகச் சிறந்ததோர் உரையெழுதினர். இளம்பூரணர், பேராசிரியருரைகள் முழுவதும் இப்போது இல்லை” (சி.வை.தாமோதரம்பிள்ளை 1885: 4*) என வரும் பகுதியால் அறியலாம். சி.வை.தா.வின் பதிப்புக்கு முன்னரே இளம்பூரணர் உரையின் எழுத்ததிகாரப் பகுதி 1868இல் சோடசாவதானம் சுப்பராயச் செட்டியாரால் கன்னியப்ப முதலியாரின் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்துள்ளது. இப்பதிப்பே இளம்பூரணர் உரைக்கு அமைந்த முதற்பதிப்பாகும். 1885 வரை இளம்பூரணர் உரையின் சொல்லதிகார, பொருளதிகாரப் பகுதிகள் எவையும் அச்சாகவில்லை என்பது குறிக்கத்தக்கது. மேலும், 1885 வரை இளம்பூரணர் உரைப்பகுதிகளும் கிட்டவில்லை போலும். அதனானே சி.வை.தா. இளம்பூரணர் உரை முழுவதும் இல்லை எனக் கருத்துரைத்தார் போலும். மற்றொரு செய்தியும் இவண் குறிக்கத்தக்கது. அதனைக் காண்போம்.

பேராசிரியர் உரையின் நிலை

சி.வை.தா.வின் தொல்காப்பியப் பொருளதிகாரப் பதிப்பில் (1885) உள்ள உரை நச்சினார்க்கினியர் உரை என்றே சி.வை.தா.வால் குறிக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியப் பொருளதிகார உரை முழுவதுமே நச்சினார்க்கினியர் உரையென்றே கருதிச் சி.வை.தா. பதிப்பித்துள்ளார். இதற்குக் காரணம் அவருக்குக் கிடைத்த பன்னிரண்டு சுவடிகளிலும் பொருளதிகாரப் பிற்பகுதி உரை, பேராசிரியர் உரையென்ற குறிப்புக் காணப்படாததேயாகலாம். அவர் காலத்திலிருந்த புலவர்கள் யாரும் இவ்வுண்மையை அறிந்ததிருக்கவில்லை; எனவேதான் யாரும் சி.வை.தா.விடம் இவ்வுண்மையை எடுத்துரைக்கவில்லை போலும். சி.வை.தா.வின் பதிப்பு வெளிவந்து பதினேழு ஆண்டுகளுக்குப் பின்னரே அதாவது அவருடைய மறைவுக்குப் (1901) பின்னரே ரா. இராகவையங்கார் செந்தமிழ் இதழில் ((1902 தொகுதி – I, பகுதி – I இல்)) 'அச்சிட்ட செய்யுளியலுரைகாரர் பேராசிரியர் என்பது' என்ற கட்டுரையின்மூலம் தெளிவுபடுத்துகின்றார். மீண்டும் செந்தமிழ் தொகுதி 2, பகுதி – 11இல் 'அச்சிட்ட மரபியலுரை' என்ற கட்டுரையிலும் தொல்.பொருளதிகாரப் பிற்பகுதி உரை, பேராசிரியர் உரை என்ற உண்மையைத் தமிழுலகுக்கு வெளிப்படுத்தினார். அதுகாறும் இவ்வுண்மையை வேறு யாரும் எடுத்துரைத்ததாகத் தெரியவில்லை. இந்த நிலையையும் நாம் இவ்விடத்தில் எண்ணிப் பார்த்தால் பேராசிரியர் உரையை நச்சினார்க்கினியர் உரையெனச் சி.வை.தா. பதிப்பித்ததன் பின்புலத்தை அறியலாம். தொல்காப்பியப் பேராசிரியருரை இப்போது இல்லை என்று குறித்துள்ள சி.வை.தா. (1885:5*) தமக்குக் கிடைத்த தரவுகளின் அடிப்படையிலேயே பேராசிரியர் உரையை நச்சினார்க்கினியர் உரையெனக் கருதிப் பதிப்பித்துள்ளார் என்பதே உண்மைஎன்ற ஆ. மணியின் கருத்து (சி. பத்மாசனி முதலானோர் 2013 : 324 – 325) பொருத்தமுடையதாகவே தோன்றுகின்றது.

இளம்பூரணர் உரையின் கிடைக்காத பகுதிகள்


இளம்பூரணருக்குப் பின் வந்த உரையாசிரியர்கள் சிலர், அவரது உரைகளைக் குறிப்பிடும் இடங்களில் சில இன்றுள்ள இளம்பூரணர் உரையில் காணப்படவில்லை” (மு.வை.அரவிந்தன் 2008 : 193) என்ற கருத்து உணர்த்துகின்ற உண்மையும் சிந்திக்கத்தக்கது. இளம்பூரணர் உரையின் கிடைக்காத பகுதிகளும் உள என்பதை ஆய்வாளர்கள் மனங்கொள்ள வேண்டும். இக்காலத்தில் கிடைக்கின்ற இளம்பூரணர் உரைப்பதிப்புக்களில் உரையில்லா நூற்பாக்கள் பான்மையும் இல்லையென்றே சொல்லிவிடலாம். இதுதான் இன்றைய இளம்பூரணர் உரைப்பதிப்புக்களின் நிலை. இளம்பூரணர் காலம் கி.பி. 11 ஆம் நூற்றாண்டு (மு.வை. அரவிந்தன் 2008: 175).

கருத்துகள் இல்லை: