வியாழன், 24 பிப்ரவரி, 2011

அழகப்பா பல்கலைக் கழகப் பயிலரங்கு 21.2.11

       அழகப்பா பல்கலைக் கழகத்தில் செம்மொழித் தமிழ் இலக்கணக் கோட்பாட்டிற்கு உரையாசிரியர்களின் பங்களிப்பு என்ற பொருண்மையில் நடைபெற்று வரும் பத்துநாள்(16.2.11 முதல் 25.2.11) பயிலரங்கில் உரையாசிரியர்கள் பார்வையில் சாரியைகள் என்ற தலைப்பில் உரையாற்றும் வாய்ப்பினை அப்பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு.பாண்டி ஐயா அவர்களும், பேராசிரியர் முனைவர் இரா. அறவேந்தன் ஐயா அவர்களும் வழங்கினர். என்மேலும் என் புலமையின்மேலும் நம்பிக்கை கொண்டு ஆண்டுதோறும் தாங்கள் நடத்துகின்ற கல்விப்புல நிகழ்ச்சிகளில் எனக்கு வாய்ப்புத் தந்து என்னை வளர்த்தெடுக்கும் இப்பெருமக்களுக்கு என் நன்றியுணர்வைப் புலப்படுத்திக் கொள்வதொன்றே என்னால் இப்போது முடிந்த கைம்மாறு.

        காரைக்குடி விருந்தோம்பலுக்கும் மென்மைக் குணத்திற்கும் இனிமையான அணுகுமுறைகளுக்கும் பெயர்பெற்ற ஊர் என்பதை மேற்கண்ட பெருமக்களையும், அவர்தம் மாணவச் செல்வங்களான இளவல்கள் முனீஸ்மூர்த்தி, பரமசிவம், லோகேஸ்வரன் போன்ற முனைவர்ப் பட்ட ஆய்வாளர்களையும் காணும்போது நாம் உறுதிப் படுத்திக்கொள்ளலாம். நள்ளிரவென்றும் பாராமல் ஒடிவந்து உதவுகின்றமனப்பாங்கும், நல்லறிவும், நற்பண்பும் மிக்க இவர்களைப் போன்ற மாணவச் செல்வங்கள் கிடைப்பது பெறும்பேறு என்பது நம் பட்டறிவு நமக்குக் காட்டும் உண்மையாகும்.

       நற்சிந்தனைகளோடு தொடங்கப்பட்ட இப்பயிலரங்கில் முனைவர் தி. செல்வம் ஐயா அவர்கள் விரவுப் பெயர்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார். சங்க இலக்கியங்களையும் தொல்காப்பியத்தையும் ஆராய்வதையே தன் வாழ்க்கைப்பணியாகக் கொண்டு தமிழ்ப்பணியாற்றிவரும் ஐயா அவர்களோடு ஓரங்கில் உரையாற்ற வாய்ப்பளித்த நன்னெஞ்சங்களுக்கு என் நன்றி. பயிலரங்க உரைகாட்சிகள் :

தமிழ்த்துறைத் தலைவர் அவர்களின் அறிமுக உரை
 முனைவர் தி. செல்வம் ஐயா அவர்களின் உரைக்காட்சி
தமிழ்த்துறைத் தலைவர் அவர்களின் அறிமுக உரை


என்னுரை

என்னுரை (அண்மைக் காட்சி) 
 ஆய்வாளர் பரமசிவம் வினாத் தொடுத்தல்
புதன், 23 பிப்ரவரி, 2011

மதுரை, வெள்ளைச்சாமி நாடார் கல்லூரிப் பயிலரங்கு 20.2.11

    மதுரை, வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் நடைபெற்றுவரும் சங்க இலக்கியப் பத்துநாள் ( 16.2.11 - 25.2.11) பயிலரங்கில் உரையாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. நான் கல்வி பயின்ற மண்ணில் பயிலரங்க உரையாற்றும் முதல் வாய்ப்பினை வழங்கிய தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு. பெர்னாட்சா அவர்களுக்கும், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் அழகர்நாதன் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிமலர்கள். மதுரைக்காரர்கள் பாசமுடைய நெஞ்சமும் பாராட்டும் பேருள்ளமும் வாய்த்தவர்கள் என்பதைத்  தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு. பெர்னாட்சா அவர்களையும், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் அழகர்நாதன் அவர்களையும் காண்போர் அறிவர். நல்லுள்ளம் படைத்த இவர்களுக்கு என் நன்றிப்பூக்கள்.

       என்னுடைய வளர்ச்சிப் பின்புலமாக இருந்து இயக்கிக் கொண்டிருக்கும் முனைவர் இரா. கோதண்டராமன் அய்யா அவர்களுக்கு நான் நன்றி என ஒரு சொல் சொல்வது போதாது.

    பயிலரங்க உரைக்காட்சிகள் இதோ.

தமிழ்த்துறைத் தலைவர் அவர்களின் அறிமுக உரை

 என்னுரை : உரைப்பொருள் : சங்க இலக்கியக் கைக்கிளை மரபுகள்
 கருத்தரங்க் ஒருங்கிணைப்பளார் அவர்களின் கருத்துரை
 ஆய்வாளரின் நன்றியுரை - 1
ஆய்வாளரின் நன்றியுரை - 2

சனி, 19 பிப்ரவரி, 2011

வெண்பாப் பாட்டியல், வரையறுத்த பாட்டியல் இணைந்த பதிப்பு 1969

          பாட்டியல் என்பது எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்திலக்கண ஒழிபியல் என்பர். ஐந்திலக்கணங்களில் கூறப்படாத செய்திகள் இப்பாட்டியல் நூல்களில் கூறப்பட்டுள்ளன.  பாட்டியலின் மரபை வெண்பா அமைப்பில் கூறுவதால் வெண்பாப்பாட்டியல் எனப் பெயர் பெற்றது. இந்நூலின் ஆக்கத்திற்குக் காரணமாக இருந்த வச்சணந்தியின் பெயராலும் வச்சணந்திமாலை என அழைக்கப்படுகின்றது.

         வெண்பாப்பட்டியலின் ஆசிரியர் குணவீர பண்டிதர் ஆவார். இந்நூலின் பாயிரவுரை, இந்நூலுக்கு முதல் நூல் இந்திரகாளியம் எனக் குறிப்பிடுகின்றது. இது சிலப்பதிகார அடியார்க்குநல்லார் உரையில் கூறப்படுகின்ற யமளேந்திரர் செய்த இசைத்தமிழ் நூலாகிய இந்திரகாளியத்தின் வேறானது என்பர்.  வெண்பாப்பட்டியலின் காலத்தை அறியமுடியவில்லை. எனினும் இதன் உரை இந்நூல் திரிபுவனத்தேவன் என்னும் அரசன் காலத்தில் எழுந்தது எனக் கூறுகின்றது. 

         சம்பந்தப் பாட்டியல் என்றும் அழைக்கப்படுகின்ற வரையறுத்த பாட்டியல் சீர் முதலிய மங்கலச் சொற்களின் பொருள் உணர்த்தும் நூலாகும். இந்நூலாசிரியர் சம்பந்தர் என்றும், செய்வித்தவர் சம்பந்தர் என்றும் கூறுவர். இவ்விரு நூல்களின் விளக்கவுரைகளையும் செய்தவர் சென்னைத் தமிழ்ப்பண்டிதர் கொ.இராமலிங்கத் தம்பிரான் ஆவார். இந்நூலின் முதற்பதிப்பு 1936இலும், அதன் மறுஅச்சுக்கள் 1964, 1969 ஆகிய ஆண்டுகளில் வந்தன. 1969 ஆம் ஆண்டுப் பதிப்பின் தலைப்புப் பக்கம் இது.


செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

புதுவைக் கலைஇலக்கியப் பெருமன்றப் பயிலரங்கு 14.02.11

           புதுச்சேரிக் கலை இலக்கியப் பெருமன்றம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதியுதவியோடு சங்க இலக்கியப் பத்துநாள் (11.02.11 முதல் 20.02.11 வரை) பயிலரங்கு ஒன்றினை நடத்தி வருகின்றது. இப்பயிலரங்கில் உரையாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் நா. இளங்கோ ஐயா அவர்கள் பல்வேறு கடுமையான சூழல்களுக்கிடையிலும் எனக்கு இந்த வாய்ப்பினை வழங்கினார். தொடக்கம் முதற்கொண்டே என்மீது அன்புகாட்டிப் பற்பல வாய்ப்புக்களையும் வழங்கிவருவதோடு, தமிழுக்காக நான் வேண்டிய உதவிகளையெல்லாம் செய்துவரும் அய்யா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிமலர்கள்.

        குறுந்தொகை விழுமியங்கள் என்பது இப்பயிலரங்கில் என்னுடைய உரைப்பொருள். பயிலரங்க உரைக்காட்சிகள் :

மாணவர் புரூன் சிவச்சந்திரன் அவர்களின் அறிமுக உரை

 என்னுரை - மேடையில் கலை இலக்கியப் பெருமன்றத்தின் சிறப்பியல் தலைவர் அவர்கள்
 என்னுரை அண்மைக்காட்சி
சிறப்பியல் தலைவர்அவர்கள் நினைவுப்பொருள் வழங்கல். உடன் கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொருளாளர் அவர்கள்


திங்கள், 14 பிப்ரவரி, 2011

யாப்பிலக்கணப் பதிப்பு 1967

          யாப்பிலக்கணம் என்பது 19 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட உரைநடை நூல். இந்நூலின் ஆசிரியர் திருத்தணிகை விசாகப்பெருமாள் ஐயர் ஆவார். இவருடைய தந்தை திருத் தணிகை கந்தப்ப ஐயர், திருவாவடுதுறை கச்சியப்ப முனிவர்ன் மாணவர் ஆவார். விசாகப் பெருமாள் ஐயரின் உடன்பிறந்தவர் திருத்தணிகை சரவணப்பெருமாள் ஐயர். இவர்கள் இருவரும் திருக்குறள், நைடதம், பிரபுலிங்கலீலை ஆகிய நூல்களுக்கு எளிய உரைகளை எழுதி வெளியிட்டுள்ளனர்.

        விசாகப் பெருமாள் ஐயர் பெய்ரில் 1828இல் இலக்கணச் சுருக்க வினாவிடை என்ற நூல் வெளிவந்தது. ஐந்திலக்கணம் கூறும் இந்நூலில் யாப்பிலக்கணப் பகுதி மட்டும் பாலபோத இலக்கணம் என்னும் பெயரில் தனித்து வெளியிடப்பட்டது. அந்நூலில் இருந்த வினாக்களை மட்டும் நீக்கிவிட்டு யாப்பிலக்கணம் என்ற பெயரில் தணிநூலாகக் கழகத்தினர் வெளியிட்டனர்.

         காரிகை கற்பாருக்குப் பயன்படும்பொருட்டு இந்நூலைக் கொ. இராமலிங்கத் தம்பிரான் என்பவரைக் கொண்டு முறைப்படுத்தியும் சில குறிப்புக்களைச் சேர்த்தும் விளக்கியும் வெளியிட்டுள்ளோம் எனக் கழகத்தினர் குறித்துள்ளனர். ஒருவருடைய நூலை இன்னொருவரைக் கொண்டு இடைச்செருகியும் விளக்கியும் சேர்க்கை இது, விளக்கியது இது என எவ்வகைக் குறிப்புக்களும் இல்லாமல் பதிப்புரையில் மட்டும் கூறிவிட்டு வெளியிடுவது எவ்வகைப் பதிப்புமுறையோ? நாம் அறியோம்.

     யாப்பிலக்கணம் 1937 இலில் கழகம் வழியாக முதற்பதிப்புக் கண்டது. அதன் மறுஅச்சுக்கள் 1940, 1944, 1947, 1950, 1955, 1960, 1964, 1967 ஆகிய ஆண்டுகளில் வெளியாகின. 1967 ஆம் ஆண்டுப் பதிப்பின் தலைப்புப் பக்கம் இது.