சனி, 26 மார்ச், 2016

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 20) - ஆவிரை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 20)  - ஆவிரை

    ஆவிரம்பூவை மடலேறும் தலைவன் மடற் குதிரைக்கு அணிதல் வழக்கம். பொன்னிறம் உடையதாதலின் இப்பூ, “பொன்னே ராவிரை” எனச் சிறப்பிக்கப்படுகின்றது.

(தொடரும்)

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 19) - ஆலமரம்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 19)  - ஆலமரம்

   ஆல மரத்தின் அடியில் சபை கூடுதல் பண்டை வழக்கம். கோசர் என்னும் ஒரு வகையார் ஒரு பழைய ஆல மரத்தடியில் அவை கூடி ஆராய்ந்தனர். அவ்வவையை, “தொன்மூ தாலத்துப் பொதியில்” என்று ஒரு புலவர் குறிக்கின்றார்.

(தொடரும்)

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 18) - ஆம்பற் கொடி

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 18)  - ஆம்பற் கொடி

     மருத நிலத்தில் உள்ள பொய்கையிலும், பிற நீர்நிலைகளிலும் வளரும் ஆம்பல் காலையில் மலர்ந்து மாலையில் கூம்பும் இயல்பினது. வண்டு காலையில் இதன் அரும்பின்பாற் சென்று வாய் திறக்க அது மலரும். தண்மை மிக்க இதன் மலரை மகளிர் மேனியின் தண்மைக்கு உவமித்தல் மரபு. இதன் காம்பினுள் துளையிருத்தலின், “தூம்புடைத் திரள்காலாம்பல்” என்று ஒருவர் கூறுவர். மகளிர் ஆம்பற் பூவின் புறவிதழை ஒடித்து விட்டுத் தலையிற் சூடுவர்; அங்ஙனம் ஒடித்த பூவை முழுநெறி என்பர். தளிர்களாலும் மலர்களாலும் அமைக்கப்படுவதாகிய தழையுடையில் ஆம்பல் மலரையும் தொடுத்தணிவது மகளிர் வழக்கம். மகளிர் வாய் ஆம்பற் பூவின் மணம் உடையதென்பர். இதன் மலர் குருவி, கொக்கு என்பவற்றின் சிறகைப் போலத் தோற்றுவது. வௌவாலின் சிறைக்கு இதன் இலையின் புறத்தை ஒரு புலவர் உவமை கூறுகின்றார்.

(தொடரும்)

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 17) - அறுகு

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 17)  - அறுகு

      அறுகம்புல் நீண்டு வளர்ந்திருத்தலின் அதனை, “மாக்கொடியறுகை” (குறுந். 256) என ஒரு புலவர் குறிக்கின்றார். மழைக்காலத்தில் இப்புல் வளம் பெற்று வளர்ந்திருக்கையில் இதன் காட்சி நீல மணியை நீட்டி விட்டாற்போல இருக்கும். முல்லை நிலத்தில் மானும், குறிஞ்சி நிலத்தில் வரையாவும் இதனை உண்டு மகிழும். இதனை, ‘செங்கோற் புதவு’ என்பர் ஒரு புலவர்.

(தொடரும்)

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 16) - அவரை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 16)  - அவரை

மலையைச் சார்ந்த இடங்களில் உள்ள புனத்தில் படர்ந்து வளர்கின்ற இக் கொடி இக்காலத்தில் மொச்சை என்று வழங்கப்பெறும். வீட்டில் வளர்கின்ற அவரைக் கொடி வேறு; இது வேறு. தினை விளைவதற்கு முன்னர் மலைவாணர் புனத்தில் அவரையை விதைப்பர்; தினை விளைந்து அறுக்கப்பட்ட பின்னர், அதன் தண்டிலே அவரைக் கொடி படர்ந்து கொத்துக் கொத்தாக மலரும்; புனத்தில் உள்ள புதல்களிலும் இக் கொடி படரும். இதன் மலருக்குக் கிளியின் மூக்கு உவமையாகக் கூறப்படும்.

(தொடரும்)

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 15) அரலைச் செடி

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 15) அரலைச் செடி

    இதனை அலரி என்றும், அரளி என்றும் வழங்குவர். குறிஞ்சி நில மாக்கள் வெறியாடி முருகக் கடவுளுக்கு இதன் மலரால் ஆகிய மாலையைச் சூட்டி வழிபடுவர். இது குறிஞ்சி நிலத்திற்கு உரியதாகத் தோற்றுகின்றது.

(தொடரும்)