உ.வேசா. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உ.வேசா. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 13 ஜூலை, 2023

பார்ப்பார்த் தப்பிய, குரவர்த் தப்பிய - பாட வரலாறு: அரிமா நோக்கு இதழ்க் கட்டுரை

                                  பார்ப்பார்த் தப்பிய, குரவர்த் தப்பிய - பாட வரலாறு:                                        அரிமா நோக்கு இதழ்க் கட்டுரை

அரிமா நோக்கு - சூலை 2023 இதழில் நான் எழுதிய பார்ப்பார்த் தப்பிய, குரவர்த் தப்பிய - பாட வரலாறு என்னும் தலைப்பிலான கட்டுரை வெளிவந்துள்ளது. புறநானூற்றின் 34 ஆம் பாடலின் பாடம், அதன் வரலாறு ஆகியவற்றைச் சான்றுகளின் அடிப்படையில் விரித்து விளக்குகின்றது. இன்னார், இனியார் நோக்காது தரவுகளின் நெறிப்பட்ட ஆய்வாக அமைந்த இக்கட்டுரையை வெளியிடத் துணை நின்ற பேராசிரியர் முனைவர் வ. ஜெயதேவன் ஐயா அவர்களுக்கும் இதழாசிரியர் ஈரோடு தமிழன்பன் ஐயா அவர்களுக்கும், இதழ்க் குழுவினருக்கும் நன்றி.












செவ்வாய், 7 ஜனவரி, 2020

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 59) - வெருகு

                              குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 59) - வெருகு


வெருகு

   காட்டுப் பூனை வெருகு எனப்படும். இது வேலிகளில் வாழ்வது; மாலையில் சென்று இரை தேடும்; எலியையும் கோழியையும் உண்ணும். இதன் பல் முல்லை அரும்பிற்கு உவமை கூறப்படும். இதன் குட்டியைப் பிள்ளையென்றல் மரபு.

(தொடரும்).

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 58) - வருடையும் வரையாவும்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 58) - வருடையும் வரையாவும்


வருடை

     எண்கால் வருடை என்று கூறப்படுவதும் இதுவே. இதனை வருடை மானென்றும், இதன் குட்டியை மறியென்றும் கூறுதல் மரபு. இது செங்குத்தான மலைகளில் வாழும் இயல்பினது.
 
வரையா

     மலைப்பசு அறுகம்புல்லை உண்டு உகாய் மரத்தின் நிழலில் தங்குவதாக ஒரு செய்யுள் கூறுகின்றது. இதன் ஆண் ஏறென்றும் பெண் வரையா என்றும் கூறப்படும். வரையாவை, “மடக்கண் வரையாஎன்பர்.


(தொடரும்).

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 57) - யானை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 57) - யானை

யானை

     யானையைப் பற்றிய செய்திகள் பல இந்நூலுள் வந்துள்ளன. குறிஞ்சி நிலத்தில் வலியோடு உலவும் யானையையும் பாலை நிலத்தில் உரனழிந்து வெம்மையால் துன்புறும் யானையையும் பற்றிய நிகழ்ச்சிகளைப் புலவர்கள் புனைந்து உரைத்திருக்கின்றார்கள். சிறிய கண்களையும், ஆழ்ந்த வாயையும் மெல்லிய தலையையும் மதத்தால் நனைந்த கவுளையும் சேம்பின் இலையைப் போலத் தோற்றும் செவிகளையும் தினைக்கதிருக்கு உவமை கூறப்படும் துதிக்கையையும் பேயின் பல்லைப் போன்ற கால் நகங்களையும் உடைய ஆண் யானைகள் புழுதி படிந்த மேனியுடன் குண்டுக் கற்களைப் போல நிற்கின்றன. சில யானைகள் கயத்தையும் ஆற்றையும் நாடிச் செல்லுகின்றன. சில மழையில் நனைந்து இன்புறுகின்றன. ஒரு யானை ஒரு துறுகல்லிற்கு அருகில் துயில்கின்றது. அதற்கும் அத்துறு கல்லிற்கும் வேற்றுமை தோற்றாமையின் அங்கே படர்ந்த மாணைக் கொடி அக்களிற்றின் மேல் படர்கின்றது. ஒரு யானை வேங்கை மரத்தடியில் துயிலும் போது அதனுடைய மூச்சு நெடுந்தூரம் ஒலிக்கின்றது. பள்ளி யானைகள் தலைவன் உயிர்ப்பதைப் போலப் பெருமூச்சுவிடுகின்றன. தினைப் புனத்தில் சென்ற யானை கானவன் விட்ட கவணுக்கு அஞ்சி ஓடுகின்றது. இரவில் அப்புனத்தில் சென்ற மற்றொரு யானை அக் கானவன் வைத்துள்ள கொள்ளியைக் கண்டு அஞ்சி வருகையில் விண்ணில் இருந்து வீழும் நட்சத்திரத்தைக் கண்டு அதையும் கொள்ளிக் கட்டை என்று எண்ணி அஞ்சுகின்றது. பெரிய உடலை உடையதாக இருந்தும் சிறு வெள்ளரவினால் ஓர் யானை அணங்கப்படுகின்றது. புதியதாகப் பிடிக்கப்பட்ட யானை ஒன்று வலியிழந்து மயங்கி நிற்கின்றது. அதைக் கண்ட புலவர் தலைவியின்பால் மயங்கிய தலைவனுக்கு அதனை உவமை ஆக்குகின்றார். களிறு மிதித்த மலையடிவாரங்களில் நீர் உண்டாகின்றது. யானைகள் ஒன்றோடு ஒன்று பொருகின்றன; அருகில் நின்ற வேங்கை மரம் அதனால் சிதைகின்றது. புலியைத் தாக்கிப் புண்ணுறும் யானையையும், அப்புலியை வருத்தும் களிற்றையும் குறிஞ்சி நிலத்தில் காண்கின்றோம்.

  மூங்கில், கொறுக்கைச்சி, கரும்பு, தினை, யா, ஓமை முதலியவற்றை யானைகள் உண்ணுகின்றன. தான் விரும்பிய தழை உணவை உண்ட யானை மதம் பெருக ஒருசார் நிற்கின்றது.

       வருந்திய நடையையும் முழந்தாளையும் உடைய மடப்பிடி ஒன்று தன் கன்று பால் குடித்துக் கொண்டே இருப்பத் தினையை உண்டு மகிழ்கின்றது. யானைக் கன்று குறவர் பிள்ளைகளோடு பழகி வளர்கின்றது.

 பாலைநிலத்தில் தங்குவதற்கு நிழலின்மையால் வழிப்போவார் உடலை ஆறலை கள்வர் மூடிய தழைக் குவியலின் நிழலில் ஓய்ந்த யானை நிற்கின்றது. நீர் வேட்கை மிக்கு வருங்கயத்தைத் துழாவுகின்றது. மரத்தின் பட்டையை உரித்து மென்று ஒருவாறு வேட்கை தணிகின்றது. வேறொரு யானை உலர்ந்த மரத்தைப் பிளக்க மாட்டாமல் கையை மடித்து வருந்துகின்றது.

   யானை தன் இனத்தைப் பாதுகாத்து உணவூட்டும் இயல்பினது. பிடிகளும் கன்றுகளும் முதிய யானைகளும் அடங்கிய யானைக் கூட்டத்திற்குத் தலைமையுடையதாக ஓர் யானை செல்லும். அதனை யூதநாதன் என்பர். ஏந்தல் என்று இந்நூல் கூறுகின்றது. யாமரத்தைக் குத்தி அதன் பட்டையால் தன் இனத்தின் பசியைத் தீர்க்கும் யானையை இதில் காணலாம்.

    களிறும் பெண் யானையும் ஒன்றனோடு ஒன்று இணைந்து அன்பு பூண்டு ஒழுகுகின்றன. குறிஞ்சி நிலத்துக் களிறு தன் மடப் பிடியைத் தழுவிக் குன்றகச் சிறுகுடியில் செல்கின்றது. மாலைக் காலத்தில் அப்பிடியோடு மலைமுழைஞ்சுகளில் புகுகின்றது. புலியினின்றும் பிடியைப் பாதுகாக்கின்றது. பாலை நிலத்துக் களிறோ யாமரப் பட்டையை உரித்துத் தன் பிடியின் பசியைக் களைகின்றது. வாழையால் மதனழிந்து கிடக்கும் களிற்றைப் பிடி தன் கையால் தடவி உபசரிக்கின்றது. இக் காட்சிகளில் அக் களிற்றுக்கும் பிடிக்கும் இடையே உள்ள அன்பு விளங்குகின்றது.

         பழக்கப்பட்ட யானைகளைப் பாகர்கள் கழுவுதலும், நீர்த் துறைகளில் உள்ள மருத மரத்தில் பிணித்தலும், போரிடைப் படையாகக் கொண்டு செல்லுதலும், வீரர்கள் அதனைக் கொன்று தாமும் படுதலுமாகிய செய்திகள் இதில் வந்துள்ளன.

          பெண்டிர் பிடியின்மேல் ஊர்தல் வழக்கமாதலின் தம்மைப் பாடி வரும் விறலியர்க்குப் பெண் யானைகளை உபகாரிகள் பரிசிலாக அளிக்கின்றனர்.

    யானைக் கொம்பு விலை உயர்ந்தது. அதனால் தேர் இயற்றப்படும். அக் கொம்பை விற்று அதன் விலையால் உணவு பெறுதல் குறிஞ்சி நிலத்து வாழ்வார் வழக்கம்.

(தொடரும்)

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 56) - முதலை

                              குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 56) - முதலை


முதலை

      இதன் கால்கள் வளைந்தவை. இதன் ஆணை ஏற்றை என்றல் மரபு. இதற்கு அஞ்சி இஃதுள்ள வழியில் யாரும் செல்லார். முதலை வாழும் துறை ஒன்றை, “கொடுங்கான் முதலைக் கோள்வலேற்றை, வழிவழக் கறுக்குங் கானலம் பெருந்துறைஎன்று ஒரு புலவர் கூறுகின்றார்.

(தொடரும்)

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 55) - மீன்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 55) - மீன்


மீன்

    மீன்களில் பலவகை உள. அயிரை, ஆரல், இறா, கயல், கெண்டை, சுறா, வாளை என்பன இந்நூலில் வந்துள்ளன. மீனைத் தூண்டில் எறிந்தும் வலை வீசியும் பிடிப்பர். நெய்தல் நில மாக்கள் படகில் ஏறிக் கடலிடைச் சென்று எறியுளியை வீசி மீன் பிடிப்பர். பாணர் மீனைப் பிடித்து மண்டையென்னும் பாத்திரத்தில் பெய்து வைப்பர். சில சமயங்களில் நீரில் மீனைக் கருதி அமைக்கப்பட்ட வலையில் நீர் நாய் முதலியவை படுவதுமுண்டு. கடலில் கொண்ட மீன் பரதவரால் மணல் முன்றிலில் உலர்த்தப்படும். கடல் மீனை நாரையும் கழிமீனைக் காக்கையும் உண்ணும்.

   அயிரை மீனையும் ஆரல் மீனையும் நாரை உண்ணும். அயிரை பொய்கையிலும் காணப்படும். ஆரல் மீனின் முட்டை மிகவும் சிறியது. அது ஞாழற் பூவைப் போலத் தோற்றுவது.

    இறா மீனை இறவெனவும் மொழிவர்; இது வளைந்த காலையும் வளைந்த உடலையும் உடையது; கழிகளில் காணப்படும். அன்றிலின் வளைந்த வாய்க்கு இதனை உவமையாகப் பகர்வர்.

   ஒன்றை ஒன்று பொரும் இணைக்கயலை மகளிர் கண்களுக்கு ஒப்பாக இயம்புவர். கெண்டை என்னும் மீன் பிரப்பம்பழத்தை உண்ணும்; பொய்கையில் வாழும்; நாரைக்கு உணவாகும்.

      சுறா என்பது கடலில் வாழ்வது. இது நீண்ட கொம்பை உடையது. பரதவர் இதனை வலையால் பிடிக்க இயலாமையால் ஒருவகை எறியுளியை எறிந்து குத்திக் கொல்வர். இது மிக்க வலியுடையதாதலின் வயச்சுறா எனக் குறிக்கப்படும். கொம்பை உடையதாதலின் கோட்டு மீன் என்றும் வழங்கப்படும். வலைஞர் இதனால் எறியப்பட்டுப் புண்ணை அடைதலும் உண்டு.

    வாளை என்னும் மீன் பொய்கைகளிலும் பிற சிறிய நீர்நிலைகளிலும் காணப்படும். இது மாம்பழத்தை உண்ணும்; நீர் நாய்க்கு உணவாகும். இதன் பெண்ணை நாகென்பது மரபு.


(தொடரும்)

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 54) - மான்

 குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 54) - மான்


மான்

 மான் பெரும்பாலும் முல்லை நிலத்திற்குரியதாகச் சொல்லப்படும். இதன் ஆண் கலை இரலை எனவும், பெண் பிணைஎனவும், குட்டி மறி எனவும் வழங்கப்படும். புள்ளியை உடையமானைப் 1புகரி என்பர். ஆண் மானின் கொம்புகள் நெறிந்தும்திரிந்தும் கவைத்தும் இருக்கும். இது மழையற்ற காலத்தில்வெம்மையினால் வருந்தும். மழை பெய்த புனத்தில் அறுகு முதலியவற்றை உண்டு பரல் நீரைக் குடித்துக் கலையும் பிணையும் மகிழ்ந்து துள்ளி விளையாடும். மான் மாலைக்காலத்தில் துணையோடு புதரில் மறையும். உழுந்து, வரகு, அறுகு, மரல், பயறு முதலியவற்றை உண்ணும். வேட்டுவரால் அலைக்கப்படும். ஆண்மானின் உயிர் நிலையில் கானவர் அம்பெய்து கொல்லுவர். மானின் அடியை அடும்பின் இலைக்கு உவமை கூறுவது உண்டு.

(தொடரும்)

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...