சனி, 29 ஜனவரி, 2011

நேமிநாதம் - கழகப் பதிப்பு 1964

     குணவீர பண்டிதரால் இயற்றப்பட்ட நேமிநாதம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என்ற இரண்டு இயல்களைக் கொண்டது. சின்னூல் என அழைக்கப்படுவது. இந்நூல் தொல்காப்பியத்தின் வழிநூல் என்பர்.எழுத்ததிகாரம் உட்பகுப்புக்கள் அற்றது. சொல்லதிகாரம் ஒன்பது இயல்களைக் கொண்டது. நூற்பாக்கள் வெண்பா யாப்பில் அமைந்தவை. எழுத்ததிகாரம் 24 வெண்பாக்களும், சொல்லதிகாரம் 70 வெண்பாக்களும், பாயிரப் பாடல்கள் 5 ஆக 99 வெண்பாக்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

       நன்னூல் தோன்றுவதற்கு முன்னர்த் தமிழிலக்கணம் கற்போர் முதலில் இந்நூலைக் கற்றுப் பின்னர்த் தொல்காப்பியம் கற்றனர் என்றும், இந்நூலின் காலம் கி.பி. 12ஆம் நூற்றாண்டு என்றும் கூறுப. இந்நூலின் உரையாசிரியர் யார்? என்பது தெரியவில்லை. இந்நூல் ரா.இராகவையங்காரால் 1923இல் இரண்டாம் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.  அதனை அடிப்படையாகக் கொண்டு கா.ர. கோவிந்தராசமுதலியார் கழகத்திற்காக இப்பதிப்பினை உருவாக்கித் தந்துள்ளார்.

     மூலம், உரை ஆகியவற்றின் சந்திகளைப் பிரித்துப் பதிப்பித்திருத்தல், உரிய இடங்களில் அடிக்குறிப்புக்களை எழுதிச் சேர்த்திருத்தல், உரைப்பிறழ்வுகள் எனத் தாம் கருதிய இடங்களில் விளக்கங்கள் தந்திருத்தல் ஆகியன கா.ர.கோ. இப்பதிப்பில் செய்த மாற்றங்களாகும். 1945இல் முதற்பதிப்பாகக் கழகத்தின்மூலம் வெளிவந்த இப்பதிப்பு 1956 நவம்பர், 1964 ஏப்பிரல் ஆகிய ஆண்டுகளில் மறுஅச்சு கண்டுள்ளது. 1964 ஆண்டுப் பதிப்பின் தலைப்புப் பக்கம் இது.


சென்னைப் பல்கலைக் கழகப் பயிலரங்கு 22.01.11

        சென்னைப் பல்கலைக் கழகத் திருக்குறள் துறையில் திருக்குறளும் உரைகளும் - ஆய்வுக்களங்கள் - பன்முகநோக்கு என்னும் பொருண்மையில் 18.01.11 முதல் 27.1.11 வரை பயிலரங்கு ஒன்று நடைபெற்றுவருகின்றது.  பேராசிரியர் முனைவர் ய. மணிகண்டன் அவர்களால் ஒருங்கிணைத்து நடத்தப் பட்ட இப்பயிலரங்கில் பங்கேற்று உரைவழங்கும் வாய்ப்புக் கிடைத்தது. இலக்கண இலக்கிய உரைகளில் திருக்குறள் என்பது என் உரைத்தலைப்பு.

       தமிழுலகால் அறியப்படாமல் தனியே இருந்து ஆய்வுரைகளும் நூல்களும் எழுதிக்கொண்டிருந்த என்னை, நீங்கள் தமிழுலகிற்கு அறிமுகமாக வேண்டியவர் எனக்கூறி ஆற்றுப்படுத்திய செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆய்வறிஞர் முனைவர் இரா.கோதண்டராமன் ஐயா அவர்களே இந்த வாய்ப்புக்கும் முழுமுதற் காரணமானவர்கள்.  முனைவர் ய. மணிகண்டன் ஐயா அவர்களும் என்னை நேரில் பாராதபோதும் தம்தகைமையால் என்மீது அன்புகாட்டினார்கள்.

     முனைவர் செ.வை. சண்முகம் ஐயா அவர்களும், முனைவர் தெ. ஞானசுந்தரம் ஐயா அவர்களும் என்னைப் பாராட்டியுரைத்த பெருமக்களாவர். இப்பெருமக்களுக்கு நான் எஞ்ஞான்றும் நன்றியுடையேன்.  

பயிரங்க உரைக் காட்சி
 பயிரங்க உரை அண்மைக்காட்சி  
      

வியாழன், 27 ஜனவரி, 2011

குறுந்தொகைப் பதிப்பு வரலாறு - நூலறிமுகம்         

          சென்னைப் புத்தகக் கண்காட்சியில் எனக்குக் கிடைத்த அரிய நூல்களில் ஒன்று முனைவர் இரா. அறவேந்தன் எழுதிய குறுந்தொகைப் பதிப்பு வரலாறு (1915 - 2010) என்ற நூல். காவ்யா வெளியிட்டுள்ள நூல்களில் மிகச்சிறந்த நூல் இது.

         குறுந்தொகைப் பதிப்பு வரலாறு, பதிப்புகளில் உட்கூறுகள்,  பதிப்புகளில் விளக்கமுறை, பதிப்பு இயல்புகள், துணைநூல் பட்டியல், பின்னிணைப்புகள் என்ற உட்பகுப்புகளைக் கொண்ட இந்நூல் குறுந்தொகைப் பதிப்புக்கள் குறித்து வெளிவந்துள்ள நூல்களில் முதன்மையானதாகும். ஒருநூலில் பழந்தமிழ் நூலொன்றின் அனைத்துப் பதிப்புக்களையும் வெளியீடுகளையும் திரட்டித் தந்து, அவற்றின் உட்கூறுகளைச் சான்றுகளுடன் விளக்குவது என்ற அணுகுமுறையை இளந்தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ஆய்வு செய்தல் என்பது அது முனைவர்ப் பட்ட ஆய்வாக இருந்தாலும் எளிமையாகச் செய்யும் வகையிலான தலைப்புக்களே பெரும்பாலானோரால் விரும்பப்படுகின்றன. இந்நிலையில் ஆய்வு என்பதன் அடிப்படைகளை விளக்கும்வகையில் இந்நூல் வெளிவந்திருப்பது முயற்சியுடைய தமிழாய்வாளர்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாக அமையும்.

       நூலாசிரியர் முனைவர் இரா. அறவேந்தன் அவர்கள் மிகச்சிறந்த ஆய்வறிஞர் ; கடுமையாக உழைப்பாளி; இளைஞர்களை ஆர்வப்படுத்தி ஊக்கம் தரும் பண்பாளர்; எந்தவொரு கருத்தையும் உரிய சான்றுகளோடு மட்டுமே வெளிப்படுத்தும் தகைமையாளர்; வரலாற்றுநோக்கமும் நிறைபுலமையும் உடையவர் ஆகிய மெய்ம்மைகளை உணர்த்தும் தரவுகள் இந்நூலெங்கும் விரவிக்கிடக்கின்றன.  குறுந்தொகையை முழுமையாக அறிய விரும்புவோர்க்கு இந்நூல் ஒருநல்வரவு.

          மிகுந்த சிறப்புக்களையுடைய இந்நூலுக்கு சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பொறுப்பு அலுவலர் முனைவர் க. இராமசாமி ஐயா அவர்களின் அணிந்துரை மிகப்பொருத்தமாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. நூல்முழுமையையும் கூர்ந்துநோக்கி, அதன் தன்மைகளை எடுத்துரைக்கும் இவ்வணிந்துரை, இந்நூல் பற்றிய ஆய்வுரையாகும்.  இளைஞர்களை ஆர்வமுடன் ஊக்கப்படுத்து ஐயா அவர்கள் நிறுவனத்தின் பொறுப்பு அலுவலராக இலங்குவது இளைஞர்களுக்கும் தமிழுக்கும் நற்காலமாகும். “ ஒரு பதிப்பு எவ்வாறு அமையவேண்டும் என்பதைச் சுட்டுவதுடன் ஆய்வாளர்கள் மேற்கொள்ளவேண்டிய ஆய்வுநெறிகளையும் இந்நூல் புலப்படுத்தியிருப்பது இதன் தனிச்சிறப்பாகும்”  என்ற அவர்தம் கருத்து போற்றலுக்குரியது.

    பல்வேறு தகைமைகளோடு வெளிவந்திருக்கும் இந்நூல் தமிழர்கள் கற்கவேண்டிய தனித்தன்மை வாய்ந்த நூலாகும் என்பதை நூலைப் பெற்றுக் கற்கும்போது உணர்வீர்கள்.

திங்கள், 24 ஜனவரி, 2011

உவமான சங்கிரகம் - செந்தமிழ்ப் பிரசுரப் பதிப்பு 1914

      மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக நடத்தப்பட்டு வரும் செந்தமிழ் இதழ்ப் பதிப்பாக உவமான சங்கிரகம் என்ற நூலின் மூலபாடப் பதிப்பு 1914இலில் வெளிவந்துள்ளது. கடவுள் வாழ்த்தோடு கூடிய 37 நூற்பாக்களைக் கொண்ட நூல் இது. விநாயகர் வணக்கம் கடவுள் வாழ்த்தாக அமைந்துள்ளது.

        உவமான சங்கிரகத்தின் ஆசிரியர் பெயர், இடம், காலம் முதலியன விளங்கவில்லை என்றும், திருவேங்கடையர் செய்த உவமான சங்கிரகத்தினும், புகழேந்திப் புலவர் செய்த இரத்தினச் சுருக்கத்தினும் அதிகமான உவமைகள் இதில் கூறப்பட்டுள்ளன என்றும், மதுரைத் தமிழ்ச்சங்கத்து ஏட்டுப்பிரதியில் இந்நூல் உள்ளது என்றும் செந்தமிழ் இதழாசிரியர் நாராயணையங்கார் குறிப்பிட்டுள்ளார். இந்நூல் தமிழ்ச்சங்கத்தில் சைவநூற் பரிசோதகராக இருந்த சே.ரா. சுப்பிரமணியக் கவிராயரால் பரிசோதிக்கப்பட்டு, மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலையிற் பதிப்பிக்கப் பட்டுள்ளது. அதன் தலைப்புப் பக்கம் இது.


செவ்வாய், 18 ஜனவரி, 2011

பன்னிரு பாட்டியல் மூலப்பதிப்பு 1951

        பாட்டியல் என்பது செய்யுள் இலக்கணத்தினுள் ஒரு பிரிவாகும்.  பன்னிரு பாட்டியல் என்பது இங்கு ஆகுபெயராய் நின்று பன்னிருவரால் இயற்றப்பட்ட பாட்டிலக்கணநூல் பன்னிரண்டினை உணர்த்துவதுடன், பிற்காலத்தாரொருவரால் தொகுக்கப்பட்ட நூல் என்பதையும் உணர்த்தும் என்பர்.

     பன்னிருபாட்டியல் 360 நூற்பாக்களைக் கொண்டது. அவற்றுள் 359 நூற்பாக்கள். 204 ஆம் நூற்பா ஒன்று மட்டும் நேரிசைவெண்பா என்பர். இந்நூல் எழுத்தியல், சொல்லியல், இனவியல் என்ற மூன்று இயல்களைக் கொண்டது.  இது ரா.இராகவையங்காரால் 1904 ஆம் ஆண்டில் முதன்முறையாகப் பதிப்பிக்கப்பட்டது. அதன் இரண்டாம் பதிப்பு 1951இல் கூடுதலாகப் பாடவேறுபாட்டுக் குறிப்புக்களுடன் கி.இராமானுசையங்காரால் மதுரைத் தமிழ்ச்சங்கப் பதிப்பாக வெளியிடப்பட்டன.  அப்பதிப்பு அச்சிடும் காலத்தில் அதனைக் கண்ட வையாபுரிப்பிள்ளை தம்மிடம் இருந்த படிகளோடு ஒப்புநோக்கிக் கூடுதலாகப் பாடவேறுபாடுகள் பலவற்றைக் குறித்துக் கொடுத்தார். அவை அடுத்த பதிப்பில் சேர்த்துக் கொள்ளப்படும் என்று இரண்டாம் பதிப்பின் பதிப்பாசிரியர் கூறியுள்ளார்.

        1951 இல் வெளிவந்த இரண்டாம் பதிப்பின் தலைப்புப் பக்கம் இது.


திங்கள், 17 ஜனவரி, 2011

பொருட்டொகை நிகண்டு 1920 பதிப்பு

         புதுக்கோட்டை சமத்தானம் குடுமிமாமலையைச் சேர்ந்த வைத்திசுவர தீட்சிதர் அவர்களின் மகனார் சுப்பிரமணிய பாரதி எழுதிய பொருட்டொகை நிகண்டு என்ற நூல் 1920 ஆம் ஆண்டு செந்தமிழ்ப் பிரசுரம் வழியாக வெளி வந்தது. இது திருவாவடுதுறை ஆதின வித்துவானும் மதுரைத் தமிழ்ச் சங்கத்துச் சைவநூற்பரிசோதகருமாகிய சே.ரா. சுப்பிரமணியக் கவிராயர் அவர்களால் திருத்தியும் விளக்கியும் கூட்டியும் செய்யப்பெற்றது என்ற குறிப்போடு வெளிவந்துள்ளது.

       சுப்பிரமணியக் கவிராயர் அவர்கள் எழுதிய முகவுரையால் அறியப்படும் சில செய்திகள் வருமாறு:

         1. மதுரைத் தமிழ்ச்சங்கத்தை நிறுவிய பாண்டித்துரைத் தேவரிடம் சீர்செய்து அச்சிட்டு வெளியிடும்படி தமிழன்ன்பர்கள் வழங்கிய பல்வேறு சுவடிகளில் பொருட்டொகை நிகண்டும் ஒன்று.
         2. இந்நிகண்டிலுள்ளவற்றில் பெரும்பாலாவை முன்பே பதிப்பித்திருக்கின்ற பேரகராதியிலும் உள்ளன.
         3. நூலாசிரியரின் காலம் இந்நூலில் எழுதப்படவில்லை.
         4. இப்பொருட்டொகையிலுள்ளன சில வழுவானவை.  சில விளங்காதவை. சில சேர்க்கவேண்டியவை. எனவே திருத்தி, விளக்கி, சேர்த்துப் பதிப்பிக்கப் பட்டுள்ளன.
          5. கால அவகாசமின்மையால் 122 நூற்பாக்களே புதிதாகச் செய்து சேர்க்கப் பட்டுள்ளன.
           6. பிங்கலத்திலும் சூடாமணி நிகண்டிலும் இல்லாதவையும் இந்நிகண்டிலுள்ளமையால் கற்போருக்கு இந்நூல் உதவியாக இருக்கும்.

           இப்பதிப்பானது பதிப்புநெறிகள் எவற்றையும் மனங்கொண்டதாகத் தெரியவில்லை. திருத்தியும், புதுக்கியும், விளக்கியும் செய்யப்பட்டது என்ற முந்தைய மரபையே இப்பதிப்பும் செய்துள்ளதாகத் தெரிகின்றது. இப்படிச் சொல்வது பதிப்பளர்தம் பெருமையைக் காட்டுவதேயன்றி வேறொரு பயனையும் விளைவிக்காது. திருத்துதல், புதுக்குதல், விளக்குததல், சேர்த்தல் என எவ்வகைப் பணியைச் செய்தாலும் அவற்றை உரிய குறியீடுகளின் மூலம் விளக்குவதே சிறந்த பதிப்புக்கு அடையாளமாகும். இவ்வகை அடையாளங்கள் எவையும் இப்பதிப்பில் இல்லை. எனவே, இப்பதிப்பினை ஒரு சிறந்தபதிப்பாகக் கொள்ள இயலாது. இதன் தலைப்புப் பக்கம் இது.


சனி, 15 ஜனவரி, 2011

சென்னைப் புத்தகக் கண்காட்சி 2011

    சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குச் செல்லவேண்டும் என்ற விருப்பத்தை நிறைவேற்ற இப்போதுதான் வாய்ப்பு வந்தது. அந்த வாய்ப்பினை வழங்கியவர் பேராசிரியர் முனைவர் வேங்கட சுப்பராய நாயகர் அவர்கள். கல்லூரிப் பணிநாளாகிய நேற்று (14.01.11) வரையறுத்த விடுப்பு எடுத்துக்கொண்டு செல்லலாம் என்று முடிவு செய்தோம். விடுப்பும் கல்விப்பணிகளுக்குப் பயன்படவேண்டும் என்ற எண்ணத்தினர் பேராசிரியர் அவர்கள். எனவே இந்த ஏற்பாடு. உடன் நண்பர்கள் தமிழுணர்வாளர்கள் திரு. சீனு. தமிழ்மணி அவர்களும்,  திரு. பக்தவச்சலம் அவர்களும் இணைந்துகொள்ள எங்கள் தமிழ்ப்பயணம் / நூல் தேடும் பயணம் தொடங்கியது.

           காலை 6.00 மணிக்குப் பயணம் மகிழ்வுந்தில் தொடங்கியது. வழில் காலையுணவு பேராசிரியரின் ஏற்பாடு. ஏற்பாடும் சாப்பாடும் (உணவு) நன்று. முதலில் அறிஞர் அண்ண நூற்றாண்டு நூலகம் செல்வது எங்கள் திட்டம். அதன்படி அங்குச் சென்றோம்.

         அண்ணா நூற்றாண்டு நூலகம்  சென்னை கோட்டூர்புரத்தில் உலகத் தரத்தில் அமைக்கப் பட்டுள்ள நூலகம் 2010 ம் வருடம் அண்ணாவின் பிறந்த தினமான செப்டம்பர் 15ல் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்துவிடப்பட்டது. நவீன முறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நூலகம் தெற்கு ஆசியாவிலேயே மிக பெரிய நூலகம் ஆகும். ஒன்பது தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த நூலகத்தில் ஒவ்வொரு தளமும் ஒவ்வொரு பிரிவிற்கென ஒதுக்கப்பட்டுள்ளது. 8 ஏக்கர் பரப்பளவில் முழுவதும் குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டிருக்கும் இந்த நூலகம் தரைதளத்துடன் 8 தளங்கள் கொண்ட கட்டடமாக அமைக்கப்பட்டுள்ளது. முதல் தளத்தில் சிறுவர்-சிறுமிகளுக்கான புத்தகங்கள், இயற்கை எழில் கொண்ட வாசிப்பு அறை உள்ளது. 2-வது தளத்தில் தமிழ் நூல்களும், 3-வது தளத்தில் ஆங்கிலநூல்களும், 4-வது தளத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்பட பல்வேறு மொழி நூல்கள் வைக்கப்பட்டுள்ளன. 5-வது தளத்தில் பத்திரிகைகளின் பழைய பதிப்புகள், 6-வது தளத்தில் அரசு ஆவணங்கள், 7-வது தளத்தில் நன்கொடையாளர்கள் கொடுத்த நூல்கள் மற்றும் ஆடியோ-வீடியோ தொகுப்புகள் இடம்பெற்றுள்ளன. எண்முறை நூலகமும், புகைப்படத் தொகுப்புகளும் 8-வது மாடியில் இருக்கின்றன.


     பார்வை இல்லாதவர்கள் பிரெய்லி முறையில் படிக்கும் நூலக அரங்கும் இருக்கிறது. 800 பேர் அமரக்கூடிய வெளி அரங்கு, 30 பேர் அமரும் சிறு அரங்குகள் ஆகியனவும் அமைக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த நூலகத்துக்கு பசுமைக் கட்டிடச் சான்றும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தில் நூல்கள் தவிர மின்னூல்கள், நாளிதழ்கள், பல்வேறு மொழிகளில் வார இதழ்கள், ஆராய்ச்சிக்குத் தேவையான கட்டுரைகள், புகைப்படங்கள், ஓலைச்சுவடிகள் போன்ற பல்வேறு வகையான ஆவணங்கள் படிக்கக் கிடைக்கும் என்பர். இன்னும் அங்குக் கட்டடப்பணிகள் நடந்துவருகின்றன. மிகச்சிறந்த நூலகமாக இது வருங்காலத் தலைமுறைக்கு அமையும். இதற்காக நாம் தமிழக முதல்வரைப் பாராட்டலாம்.

          நிழற்படங்கள் எடுக்கவேண்டும் என்ற எண்ணம் ஏனோ நிறைவேற வில்லை. அதன்பின்னர்ச் செம்மொழிப்பூங்கா சென்றோம். இன்னும் முற்றும் பணிகள் முடியாத அப்பூங்காவில் பல்வகையான பயிர்வகைகளைக் கண்டு மகிழ்ந்தோம். பனையின் பலவகைகளை அங்குக் காணமுடிந்தது.

                    மதியவுணவுக்குப் பின்னர்ப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றோம். 300 க்கும் மேற்பட்ட புத்தக நடுவங்கள். கண்ணையும் கருத்தையும் கவரும் நூற்குழந்தைகள்.  ஒவ்வொரு அரங்காகச் சென்று கண்டு நூல்களை வாங்கி மகிழ்ந்தோம்.  நூலகளைச் சுமந்துகொண்டு நடக்க இயலாமல் போனதால் இன்னும் சில அரங்குகளைப் பார்க்க வாய்ப்பில்லாமல் செய்துவிட்டது. ஒவ்வொரு பாதைக்கும் தமிழறிஞர்களின் பெயர்சூட்டியிருந்தது மனத்தை நெகிழச்செய்தது. 

            ஒவ்வொரு பாதையின் முடிவிலும் ஒரு நடுவத்தை அமைத்து அதில் நூல்களைச் சுமக்க இயலாமல் வருகின்றவர்களிடம் பெற்றுப் பாதுகாத்து முடித்துச் செல்லும்போது வழங்கினால் புத்தகம் வாங்கும் அனுபவம் இனிமையாகும் என்று தோன்றும் என்று நண்பர் நாயகர் அவர்கள் கூறியது எனக்கும் சரியேன்றே படுகின்றது. 

 செம்மொழிப் பூங்கா நுழைவாயிலில் திரு. பக்தவச்சலம், நான், பேராசிரியர் நாயகர், திரு. சீனு. தமிழ்மணி ஆகியோர்.
 பனைவகை
  பனைவகை
  பனைவகை
  பனைவகை
  பனைவகை
புத்தகக் கண்காட்சி நுழைவாயிலில்.
பேராசிரியர் நாயகர் அவர்கள் நூல்களைப் பார்வையிடல்
         நான் நூல்களைத் தேடியபோது.

புதன், 12 ஜனவரி, 2011

சிதம்பரப் பாட்டியல் - செந்தமிழ்ப் பிரசுரப் பதிப்பு 1932

         பாட்டியல் என்பது தொடர்நிலைச் செய்யுள் இலக்கணம் கூறும் நூல் ஆகும். தனிநிலைச்செய்யுள் இலக்கணம் கூறும் நூல் செய்யுளியல் என்று அழைக்கப்படும். செய்யுளியலுக்குச் சான்று யாப்பருங்கலம், காரிகை போல்வன. பாட்டியலுக்குச் சான்று பன்னிருபாட்டியல் போல்வன. சிதம்பரப் பாட்டியல் தனிநிலை, தொடர்நிலைச் செய்யுள் இலக்கணம் கூறும் நூல் என்பர்.

     சிதம்பரப் பாட்டியலின் ஆசிரியர் பரஞ்சோதியார் ஆவர். இவர் சிதம்பர புராணம்,  மதுரையுலா ஆகியவற்றை இயற்றியவர்.  இவர் காலம் கி.பி.16 ஆம் நூற்றாண்டு. (சிதம்பரபுராணம் இயற்றப்பட்ட காலம் கி.பி.1518 என்பர்).

        சிதம்பரப் பாட்டியலுக்குப் பழையவுரை ஒன்றுண்டு. அதன் ஆசிரியர் பெயர், காலம் முதலியன தெரியவில்லை. இவ்வுரையின் பின்பகுதி கிடைக்க வில்லை.  சிதம்பரப் பாட்டியலின் மூலம்,உரை ஆகியன 1911இல் மு.இராகவை யங்காரால் முதன்முறையாகப் பதிப்பிக்கப்பட்டன. அதன் இரண்டாம் பதிப்பு கி. இராமானுசையங்காரால் 1932 இல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் தலைப்புப் பக்கம் இது.


சனி, 8 ஜனவரி, 2011

அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பயிலரங்கு 07.01.11

அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதியுதவியுடன் நடத்திவரும் (03.01.11 – 12.01.11) பத்துநாள் பயிலரங்கில் உரையாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. இந்த நேரத்தில் என் மனத்தை ஈர்த்திருக்கும் பேராளர்களுக்கு நான் நன்றி சொல்வது இன்றியமையாதது.

குடத்துக்குள் கிடந்த விளக்காகக் கிடந்த என்னை உலகுக்கு முதற்கண் இனங்காட்டியவர் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகப் பேராசிரியர் முனைவர் இரா. அறவேந்தன் அய்யா அவர்கள். என்னால் எந்தப்பயனும் இல்லாத நிலையிலும் பல்கலைக் கழகக் கருத்தரங்கில்  ஆய்வுரை படைக்கும் முதல் வாய்ப்பினை எனக்கு வழங்கினார். தொடர்ந்து என்மீது அன்புகாட்டி என்மீதான பொய்யுரைகளையும் புறம் காணச்செய்த அவர்களை நாளும் நான் நன்றியுடன் நினைத்துப் பார்க்கின்றேன்.

அறிஞருலகுக்கு என்னை ஆற்றுப்படுத்தி அறிமுகம் செய்து வைத்த பெரியோர் சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆய்வறிஞர் முனைவர் இரா.கோதண்டராமன் அய்யா அவர்கள். சீரிய ஆராய்ச்சியாளராக விளங்கும் பலருக்குப் பிறரைப் பாராட்டி ஊக்கப்படுத்தும் நன்னெஞ்சம் இருக்காது. அதற்கு விதிவிலக்காக அமைந்தவர் அய்யா அவர்கள். திறமையுள்ளவர்களை இனங்கண்டால் அவர்களை ஊக்கப்படுத்துவதில் அய்யா அவர்களுக்கு நிகர் அவர்தான். அவர்களை நான் சந்தித்தது என் வாழ்க்கையில் நான் பெற்றபேறுகளில் ஒன்று. அவர்களுடைய அன்பே என் வளர்ச்சிக்கெல்லாம் உரம் என்றால் அது மெய்யே. அவர்களுக்கு நான் நன்றியென ஒரு சொல் சொல்வது போதாது எனினும் வேறுவகையறியேன். அய்யா அவர்களிடம் என்னை ஆற்றுப்படுத்திய பெருந்தகையர் முனைவர் சிவ.மாதவன் அய்யா அவர்கள். எனக்கு இடுக்கண் நேரும்போதெலாம் நான் தளர்ந்து விடாமல் ஊக்கப்படுத்தும் பேரன்பினராகிய அவர்களுக்கு என் நன்றி.

என்னைப் பற்றிய அறிமுகம் இல்லாதபோது என்மீது அன்புகாட்டிய பெருமையர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் புலமுதன்மையர் முனைவர் பழ. முத்துவீரப்பன் அய்யா அவர்களும், மயிலம் தமிழ்க் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.இலட்சாராமன் அய்யா அவர்களும் ஆவர். அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிமலர்கள். அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பயிலரங்கின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் வள்ளியம்மை அவர்களுக்கும், நிகழ்ச்சிக்கு இணைப்புரை வழங்கிய என் அன்புத் தோழர் முனைவர் ரெ. முத்துராசன் அவர்களுக்கும் என் நன்றி.

சங்க இலக்கியப் பதிப்புக்களும் ஆய்வுகளும் என்ற மையப் பொருண்மையில் நட்த்தப்பெற்று வரும் அப்பயிலரங்கில் எனக்கு வழங்கப்பட்ட தலைப்பு “ கலித்தொகை – இ.வை.அனந்தராமையர் பதிப்பு நெறிகள் “ என்பதாகும். தமிழ்நூற் பதிப்புக்களில் மிகச்சிறந்த பதிப்பாகிய இப்பதிப்பு குறித்துப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது எனக்குப் பெருமகிழ்ச்சி. இது போன்ற பதிப்புக்களே சங்கத் தமிழ் நூல்களுக்குப் பெருமையளிப்பன. இனிவரும் காலங்களில் தோன்றும் சங்கப் பதிப்புக்கள் இத்தகையனவாக அமைந்தால் ஆய்வாளர்களுக்கும் பிறருக்கும் பெருபயன் கிடைக்கும் என்பது உறுதி. பயிலரங்கப் பொழிவின் நிழற்படக் காட்சிகள் இவை.
புலமுதன்மையர் முனைவர் பழ. முத்துவீரப்பன் அவர்களின் அறிமுகவுரை

 புலமுதன்மையர் முனைவர் பழ. முத்துவீரப்பன் அவர்களின் அறிமுகவுரை

என்னுரை


என்னுரை
 ஆய்வாளர்கள்
   ஆய்வாளர்களுடன் ஒருங்கிணைப்பாளர் முனைவர் வள்ளியம்மை அவர்கள்
 ஆய்வாளர்கள் 
  ஆய்வாளர்கள்
  ஆய்வாளர்கள்
  ஆய்வாளர்கள் 
ஆய்வாளர் வினாக் கேட்டல்
ஆய்வாளரின் கருத்துரை

வெள்ளி, 7 ஜனவரி, 2011

சூடாமணி நிகண்டு கணேச முதலியார் பதிப்பு ( 1934)

     நிகண்டு என்பதை இன்றைய வழக்கில் சொல்வதானால் அகராதி எனலாம். நிகண்டுகளில் முதல்நிகண்டு திவாகரமுனிவர் செய்த திவாகரநிகண்டு என்பர். இதற்கு ஆதிதிவாகரம் என்றும் பெயருண்டு. நிகண்டுகளில் மிகுந்த புகழ்பெற்ற நூல் சூடாமணி நிகண்டாகும். பன்னிரண்டு தொகுதிகளைக் கொண்ட இந்நிகண்டு ஆறுமுகநாவலர் அவர்களின் பரம்பரை நா.கதிரைவேற்பிள்ளை அவர்களின் மாணவர் ப. க்ணேசமுதலியாரால் பதிப்பிக்கப்பட்டுள்ளன. பதிப்பாண்டு 1934. சென்னை பூமகள் விலாச அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டுள்ளது.

         கணேசமுதலியார் பன்னிரண்டாம் தொகுதியின் உரையைப் புதுக்கியும் திருத்தியும் விளக்கியும் சேர்த்துக்கொடுத்துள்ளதாக நூலின் தலைப்புப் பக்கம் கூறுகின்றது. ஆனால் நூலுள் அவை சுட்டிகளின் மூலமாகவோ பிற வகைகளிலோ எடுத்துக் காட்டப்பெறவில்லை. இதனால் அவர் திருத்தியதும் விளக்கியதும் புதுக்கியதும் எவையென்பதை அறியமுடியவில்லை.

     நூல் இருபகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பத்துத் தொகுதிகள் முதற்பகுதியில் தரப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து பொருளகராதி இடம்பெற்றுள்ளது. அதன்பின்னர் மீண்டும் ஒரு தலைப்புப் பக்கம் தரப்பட்டுள்ளது. அதில் பதிப்பாண்டு 1933 எனக் குறிக்கப்பட்டுள்ளது.  இவ்விரண்டாம் பகுதியில் 11,12 ஆம் தொகுதிகளும் அவற்றின் உரைகளும் அமைந்துள்ளன. பொருளகராதி இடம்பெறவில்லை.

      கணேசமுதலியாரின் இப்பதிப்பு, அப்பதிப்பின் வரலாறு பற்றிய சிலவினாக்களை எழுப்புகின்றது. 1. பதிப்பாண்டுகள் முதலில் 1934 என்றும், பிற்பகுதியில் 1933 என்றும் இருவகையாகக் குறிப்பிடக் காரணம் என்ன?. 2. முதல் 11 தொகுதிகளுக்கான உரையைச் செய்தவர் யார்?. 3. 12 ஆம் தொகுதியின் உரைகாரர் யார்?. இப்பகுதியின் உரையை மட்டும் கணேச முதலியார் திருத்தக் காரணமென்ன?. இவை விடை தெரியவேண்டிய வினாக்கள். 1934 எனப் பதிப்பாண்டு குறிக்கப்பட்டுள்ள தலைப்புப் பக்கம் இது.

 

வியாழன், 6 ஜனவரி, 2011

பேராசிரியர் க. இராமசாமி அவர்களின் பாராட்டுரை

   செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பொறுப்பு அலுவலர் பேராசிரியர் க.இராமசாமி அய்யா அவர்களுக்கு என்னுடைய நூல்களை அனுப்பியிருந்தேன். பொதுவாக உயர்பதவிகளில் இருப்போர் இவ்வாறு வரும் நூல்களைப் பார்ப்பதோடு சரி.பதில் அனுப்புவதில்லை என நண்பர்கள் கூறியதைக் கேட்டிருக்கின்றேன். ஆனால் பேராசிரியர் அவர்கள் அப்படியில்லை என்பதற்குச் சான்றாக நான் நூல்கள் அனுப்பி இரு வாரங்களுக்குள்ளாகவே அவர்களிடமிருந்து மடல் வந்தது. அய்யா அவர்களை எங்கள் கல்லூரியில் நடைபெற்ற பயிலரங்கின் நிறைவுவிழாவில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதுவே நான் அவர்களை நேரில் பார்க்கும் முதல்முறை. (இந்தியமொழிகளின் நடுவண் நிறுவனத்தில் அவர்கள் பணியாற்றும் காலத்திலேயே நான் அவர்களைப் பற்றி அறிந்திருந்தாலும் நேரில் காணும் வாய்ப்பினைப் பெறவில்லை).

     முதன்முறைக் காணும்போதே பன்னாள் பழகிய அன்போடு அவர்கள் பேசியது என்னை அவர்பால் ஈர்த்தது. அவ்ருடைய எளிமையும் அன்பான அணுகுமுறைகளும் அறிவாளுமையும் நாம் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டியன. எனவே, அவருடைய வழிகாட்டுதலைப் பெறும் எண்ணத்தோடு அவர்களுக்கு என் நூல்களை அனுப்பியிருந்தேன். இளைஞர்களை ஆற்றுப்படுத்துவதிலும் ஊக்கப்படுத்துவதிலும் சிறப்புடைய பேராசிரியராகிய அவர் தெரிவித்த கருத்துக்கள் அடங்கிய மடலின் படி இதோ!!!

புதன், 5 ஜனவரி, 2011

புறநானூறு - ஔவை துரைசாமிப் பிள்ளை விளக்கவுரைப் பதிப்பு இரண்டாம் பகுதி ( 1972)

          புறநானூற்றின் பழையவுரை முதல் 269 பாடல்களுக்கு மட்டும் கிடைத்துள்ளது. எஞ்சிய பாடல்களுக்கும் ஔவை. துரைசாமிப்பிள்ளை அவர்களைக் கொண்டு உரையெழுதிச் சேர்த்து நூல்முழுமைக்குமான முதல் உரையைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ளது. இரு பகுதிகளாக வந்த அப்பதிப்பின் முதல்பகுதி 1947- லில் வெளிவந்தது. இரண்டாம் பகுதி 1951 செப்டம்பரில் முதற்பதிப்புக் கண்டது. இரண்டாம்பகுதியின் மறுபதிப்புக்கள் 1956 மார்ச்சு, 1962 செப்டம்பர், 1968 திசம்பர், 1972 ஆகத்து ஆகிய ஆண்டுகளில் வெளிவந்தன. 

          உ.வே.சாமிநாதையருக்குக் கிடைக்காத இராசாளியார் என்பவரின் சுவடி பார்த்துப் படிசெய்யப்பட்ட கையெழுத்துப் படி கொண்டு பல திருத்தங்களை இப்பதிப்பு பெற்றுள்ளது என்பது ஔவை. துரைசாமிப்பிள்ளையின் முன்னுரை தரும் செய்தியாகும். முதற்பகுதியைப் போன்றே அமைந்துள்ள இதன் 1972 ஆண்டுப் பதிப்பின் தலைப்புப் பக்கம் இது.

   

செவ்வாய், 4 ஜனவரி, 2011

புறநானூறு - ஔவை துரைசாமிப் பிள்ளை விளக்கவுரைப் பதிப்பு ( 1960)

         புறநானூற்றுக்குப் பழையவுரை ஒன்று உண்டு. அவ்வுரை உ.வே.சா.வின் குறிப்புரையோடு பதிப்பிக்கப்பட்டுள்ளது. ஔவை துரைசாமிப் பிள்ளை பழையவுரையைக் கண்ணழித்துப் பதவுரையாக்கித் தந்து, ஒவ்வொரு பாடலுக்கும் முன்னுரையும் விளக்கவுரையும் எழுதினார். முதல் 200 பாடல்களுக்கான உரை கழகப் பதிப்பாக 1947 மார்ச்சில் வெளிவந்தது.அதன் மறுபதிப்புக்கள் 1952, 1956,1960 ஆகிய ஆண்டுகளில் வந்தன.


        1.பாடலைப் பாடிய புலவர் பெயரைத் தலைப்பாகத் தருதல், 2. பாடல், புலவர்,அரசன் பற்றிய செய்திகளைக் கொண்ட முன்னுரை ( ஒரோவிடங்களில் பாடலின் பொழிப்புரையும் தரப்பட்டுள்ளது), 3. பாடல், 4. திணை, துறைக்குறிப்புக்கள், 5. பழையவுரை, 6. விளக்கவுரை ஆகிய கூறுகளைக் கொண்டது இப்பதிப்பு. அதன் தலைப்புப் பக்கம் இது.

திங்கள், 3 ஜனவரி, 2011

வாலாசாபேட்டை அறிஞர் அண்ணா அரசு மகளிர் கல்லூரி - கருத்தரங்கு ( 29 - 31 . 12. 10 )

       வேலூர் மாவட்டம் வாலாசாபேட்டை அறிஞர் அண்ணா அரசு மகளிர் கல்லூரித் தமிழ்த்துறை, சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதியுதவியுடன் நடத்திய சங்கப் பெண்பாற் புலவர்கள் என்ற கருத்தரங்கில் ( 30.12.10 வியாழன் அன்று ) பங்கேற்றுக் கட்டுரை படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

      பாடல் ஒன்றால் வென்ற சேயிழையர் என்பது என் உரைத் தலைப்பு. சங்கப் பெண்பாற் புலவர்களில் ஒரு பாடலால் புலவர் வரிசையிலும், வரலாற்றிலும் இடம்பெற்ற பெண்பாற் புலவர்களின் பாடல்களில் இடம்பெற்றுள்ள கருத்துக்களை விளக்குவது என் உரையெல்லை.

      அரங்கு நிறைந்த காட்சியாக நிகழ்ந்த அக்கருத்தரங்கில் அன்புக்கும் பெருமதிப்பிற்குமுரிய பேராசிரியர் முனைவர் சிவ.மாதவன் அவர்கள் கட்டுரை படித்தார். அவரோடு ஒர் அரங்கில் கட்டுரை படித்தது நான் பெற்றபேறு. நல்லதொரு வாய்ப்பினை வழங்கிய செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆய்வறிஞர் பெருமதிப்பிற்குரிய பேராளர் முனைவர் இரா. கோதண்டராமன் அய்யா அவர்களுக்கும், அண்ணா அரசு மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவருக்கும் என்நன்றி. நிழற்படக்காட்சி இதோ!!!.
   
முனைவர் சிவ. மாதவன் அவர்களின் கருத்தரங்க உரை -”உரியசை”
 என்னுரை ( அண்மைகாட்சி)

மேடையில் அறிஞர் குழாம்
 பார்வையாளர் திரள்
 பார்வையாளர் திரள்
 பார்வையாளர் திரள்  

ஞாயிறு, 2 ஜனவரி, 2011

மயிலம் தமிழ்க் கல்லூரி -தொல்காப்பிய- சங்க இலக்கியப் பயிலரங்கு

மயிலம் தமிழ்க்கல்லூரி சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதியுதவியுடன் நடத்திய (21.12.10 – 30.12.10) பத்துநாள் பயிலரங்கில் 28.12.10 அன்று பிற்பகலின் முதல் அமர்வில் உரையாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. இந்த வாய்ப்பிற்கு ஊற்றுக்கண்ணாக அமைந்தவர்கள் முனைவர் இரா.கோதண்டராமன் அய்யா அவர்களும், முனைவர் இரா. இலட்சாராமன் அய்யா அவர்களும், முனைவர் சிலம்பு நா. செல்வராசு அவர்களும், முனைவர் இரா. அறவேந்தன் அவர்களும், முனைவர் சிவ.மாதவன் அவர்களும் ஆவர். அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிமலர்கள். தொல்காப்பிய - சங்க அறத்தொடு நிற்றல் மரபுகள் என்பது என் உரைப்பொருண்மை. அந்நிகழ்ச்சியின் நிழற்படக்காட்சி இது. 
 கல்லூரி முதல்வர் முனைவர் இரா.இலட்சாராமன் அய்யா அவர்கள் அறையில் முதல்வருடன் ஆ.மணி
கல்லூரி முதல்வரின் அறிமுகவுரை
என்னுரை
என்னுரை -2
ஆய்வாளர்களும் மாணவர்களும்
ஆய்வாளர்களும் மாணவர்களும்
ஆய்வாளர்களும் மாணவர்களும்
ஆய்வாளர்களும் மாணவர்களும்
ஆய்வாளர்களும் மாணவர்களும். முதலில் அமர்ந்திருப்பவர் பேராசிரியர் காந்திதாசன் அவர்கள்.
ஆய்வாளர்களும் மாணவர்களும்
ஆய்வாளர்களும் மாணவர்களும்
கல்லூரி முதல்வரின் நிறைவுரை