ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள்

காந்தள்

    குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்ந்தமை பற்றி மலைச் சாரலில் உள்ள ஊர்களை இப்பூவின் விசேடத்தால் குறிப்பர்; “காந்தள் வேலிச் சிறுகுடி”, "காந்தளஞ் சிறுகுடி” எனக் கூறுதல் காண்க. இது மலை முழுவதும் கமழும் மணத்தை உடையது. மலைச்சாரலில் அருவியின் அருகே வளரும். கொத்துக் கொத்தாக மலர்வதாதலின் ‘‘குலைக் காந்தள்” என வழங்கப்படும். இதனிடத்துள்ள நறுந்தாதைத் தும்பி என்னும் வண்டு ஊதும். வண்டு வாய் திறக்க இதன் போது மலர்வதற்கு நடுநிலைமையை உடைய சான்றோரைக் கண்ட கடனறி மாக்கள் இடம் விட்டு ஆதரவு செய்து உபசரித்தலை ஒரு புலவர் உவமையாகச் சொல்லுகின்றார்.

    தலைவன் தலைவிக்கு அளிக்கும் கையுறைகளுள் காந்தள் மலரும் ஒன்று. ஊர்ப்பொது இடத்தில் இது வளர்ந்திருக்கும். அங்குள்ள துறுகல்லில் மலர்ந்து படிந்து விளங்கும். இதன் மலரை யானை முகத்தில் உள்ள புண்ணுக்கும், நீண்ட காம்போடு கூடிய பூவைப் படத்தை விரித்த பாம்பிற்கும் கை விரலுக்கும் உவமையாக எடுத்தாள்வர். தலைவனது மலையில் இருந்து அருவியில் வந்த காந்தள் கொடியின் கிழங்கைத் தலைவி எடுத்து முயங்கித் தன் வீட்டிற்குக் கொணர்ந்து நட்டு வளர்த்துப் பாதுகாத்தாளென்றதொரு செய்தி ஒரு செய்யுளில் காணப்படும்.

    வெண்காந்தள், செங்காந்தள் என இருவகை இதில் உண்டு. செங்காந்தள் தோன்றி என்றும் வழங்கப்பெறும். அதனைக் குருதிப்பூ என்று கூறுவர். கோழியின் கொண்டைக்கு உவமையாக அது சொல்லப்படும்.

    காந்தளோடு முல்லை, குவளை என்பவற்றை இடையிட்டுக் கோதையாகக் கட்டுவதுண்டு. அக் கோதையைத் தலைவியின் மேனிக்கு ஒரு தலைவன் ஒப்புரைக்கின்றான். தலைவியது மேனியின் மணத்திற்கும் நுதலின் மணத்திற்கும் இம் மலரின் மணத்தை உவமித்தல் மரபு.

(தொடரும்)

கருத்துகள் இல்லை: