சனி, 7 நவம்பர், 2015

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 14) அத்தி

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 14) அத்தி


  அத்திமரம்

            அதவமென்று இம்மரம் வழங்கும். ஆற்றயலில் வளரும். இதன் கிளைகள் வெண்ணிறமாக இருக்கும். இதன் பழங்கள் கனிந்து கீழே உதிர, அதன்மேல் ஆற்றில் உள்ள நண்டுகள் பல ஏறி மிதிக்கும் காட்சியைக் கண்டு அனுபவித்த புலவர் ஒருவர் தலைவியின் வருத்த மிக்க நெஞ்சுக்கு ஏழு நண்டுகள் மிதித்த ஒரு பழத்தை உவமை கூறுகின்றார் (குறுந். 24).
(தொடரும்)

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 13) அடும்பு

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 13) அடும்பு

அடும்பு
    நெய்தல் நிலத்தில் கடற்கரையில் படரும் கொடிகளுள் மலரை உடையது இது. இதன் இலை இருபிரிவாக இருத்தலின் இதற்கு மானடியை உவமை கூறுவர். இதன் மலர் குதிரையின் கழுத்தில் இடும் சலங்கை மணியைப் போல இருக்கும். மகளிர் அதனைப் பறித்துக் கோதி நெய்தல் மலரோடு கட்டிக் கூந்தலில் புனைவர். இக்கொடி மணல் மேட்டில் படரும்.

(தொடரும்)

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 12) அசோகு

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 12) அசோகு

 அசோகு
            இது குறிஞ்சி நிலத்ததாகக் காணப்படுகின்றது. தலைவன் பாங்கியின் வாயிலாகத் தலைவியைப் பெற எண்ணி வருங்கால் அசோகந் தழையைக் கையுறையாகக் கொணர்வான்; இதனைத் தோழி அறத்தொடு நிற்கும் பொழுது, “தலைவன் தலைவிக்குரிய கையுறைக்காகத் தழை முழுவதையும் கொய்ததனால் இவ்வசோகின் அடிமரம் மாத்திரம் தனித்து நிற்கின்றதுஎன்கின்றாள் (குறுந். 214).
(தொடரும்)

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 11) மரம், செடி, கொடி: அகில்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 11) மரம்செடிகொடி: அகில்

மரம், செடி, கொடி
            நிலமும் காலமுமாகிய முதற்பொருளமைந்த ஐவகைத் திணைகளில் உள்ள கருப்பொருள்கள் பல. அவற்றுள் மரம், செடி, கொடி, விலங்கு, பறவை ஆகியவற்றைப் பற்றிய அரிய செய்திகளைப் புலவர்கள் உணர்ந்து வெளியிடுகின்றனர். இவை இன்ன இன்ன திணைக்குரியன என்ற வரையறை இருப்பினும் இவை தம்முள் கலந்து இருத்தலும் உண்டு. அதனைத் திணை மயக்கம் என்பர்.
  எந்நில மருங்கிற் பூவும் புள்ளும் 
   அந்நிலம் பொழுதொடு வாரா வாயினும் 
   வந்த நிலத்தின் பயத்த வாகும்         (தொல். அகத். 19)    
என்பது இம் மயக்கத்திற்குரிய இலக்கணமாகும். இந்நூலுள் வந்த இப்பொருள்களைப் பற்றிய செய்திகள் வருமாறு:-
அகில்
    குறிஞ்சி நிலத்தில் உண்டாகும் அகிலைக் கானவர் மற்ற மரங்களோடு வெட்டி எரித்துப் பின் தினையை விதைப்பர்; அவ்வகிலின் புகை வெண்ணிறமாக நீர்த்துளியற்ற மேகத்தைப் போல மேலே எழும். மகளிர் நீராடிய பின்னர் தம் கூந்தலுக்கு அகிற் புகையை ஊட்டிப் புலர்த்துவர்.

(தொடரும்)

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 11) காற்று

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 11) காற்று
காற்று
            பெரும் பொழுதுகளில் வீசும் காற்றுக்களில் சில வகையுண்டு. தென் திசையில் இருந்து வரும் காற்றைத் தென்றல் என்பர். தென்றல் என்ற சொல் இந்நூலில் வாராவிடினும் அசைவளி என்னும் பெயரால் அது குறிக்கப்படுகின்றது. மெல்லென நடத்தலை அசைதல் என்பர். மெல்லென வருவதாதலின் தென்றல் அப்பெயரை உடையதாயிற்று. இக் காரணத்தாலேயே வடமொழியில் அதற்கு மந்தமாருதம் என்னும் பெயர் அமைந்தது. இக்காற்றை இளவேனிற்குரியதாகக் கூறுவர்.
            சூறைக் காற்றைக் கடுவளி என்பர்; இது சுழற்றி அடிக்கும் தன்மையுடையது; முதுவேனிலிற் பாலை நிலத்தில் இது வீசுவதைச் சில புலவர்கள் பாடுகின்றனர். கீழ்க்காற்று, கொண்டல் எனப்படும். மேல் காற்று கோடை எனப்படும். இது வெம்மை உடையது. வடகாற்று வாடை எனப்படும். இது பெரும்பாலும் கூதிர்க் காலத்திலும் சிறுபான்மை பனிக்காலத்திலும் வீசுவது; குளிர் மிகுதியாக உடையது; ஊதையெனவும் சொல்லப்படும்.

(தொடரும்)