தமிழ்ப்பாடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்ப்பாடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 21 மார்ச், 2025

பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியில் தமிழ் மரபு உணவுத் திருவிழா (21.03.2025)

பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியில் தமிழ் மரபு உணவுத் திருவிழா (21.03.2025)

பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறையும், கல்லூரித் தர உறுதியளிப்புக்குழுவும் இணைந்து  இன்று (21.03.2025) வெள்ளிக் கிழமை காலை 10 மணியளவில் தமிழ் மரபு உணவுத் திருவிழா - 2025 ஐக் கல்லூரி வளாகத்தில் நடத்தின. 

புதுவை மாநிலத்தில் இரண்டாவதாகத் தொடங்கப்பட்ட கல்லூரியாகவும், முதல் பெண்கள் கல்லூரியாகவும் விளங்கும் பாரதிதாசன் கல்லூரித் தமிழ்த்துறையின் மூன்றாமாண்டு பயிலும் மாணவியர் செம்மொழி இலக்கியங்களை இரு பருவங்களுக்குப் பாடங்களாகப் படிக்கின்றனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்களாகிய சங்கத் தமிழ் இலக்கியங்களில் பழந்தமிழர்களின் வாழ்வியலும் அரசியலும் சமூகவியலும் இடம்பெற்றுள்ளன. அவற்றில் இடம்பெற்றுள்ள பண்டைத் தமிழர்களின் உணவுகளையும், உணவு தயாரிக்கும் முறைகளையும் படிக்கும் மாணவியருக்கும், பிறருக்கும், அவற்றைப் பற்றிய விழிப்புணர்வும் தெளிவும் ஏற்படும் வகையில் தமிழ்த்துறை சார்பாகக் கடந்த 2018ஆம் ஆண்டுமுதல் தமிழ் மரபு உணவுத் திருவிழா நடத்தப்பட்டு வருகின்றது.   

இன்று (21.03.25) காலை நடைபெற்ற விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் ரா. வீரமோகன் அவர்கள் கலந்துகொண்டு, தமிழ் மரபு உணவுக் கண்காட்சியைத் தொடக்கி வைத்துத் தலைமை தாங்கி உரையாற்றினார். அவர் பேசும்போது, மாறிவரும் உணவுப் பண்பாட்டுச் சூழலில் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்வுகள் இன்றியமையாதவை. நம்முடைய மரபும் உணவும், உணவின் பின் நிற்கின்ற அறிவியலும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். குறிப்பாகச் சொல்வதென்றால், சிறு தானிய உனவுகளை நாம் உட்கொள்ளும்போது, அவை குளுக்கோஸ் என்ற சர்க்கரையை மெதுவாக வெளியிடுகின்றன. இதனால் உடலில் சர்க்கரையின் அளவு திடீரெனக் அதிகரிப்பது தடுக்கப்படும். செரிமானமும் மெதுவாக நடைபெறும் என்று கூறினார்.  

தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சொ. சேதுபதி உணவுத் திருவிழாவின் நோக்கங்களை எடுத்துக் கூறினார். கல்லூரித் தர உறுதியளிப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் கே.எஸ். சுரேஷ் கருத்துரை வழங்கினார்.

கவிஞரும், தன்முன்னேற்ற ஊக்கப் பேச்சாளரும், சாதனைப் பெண்ணாகத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று, மரபு உணவுகளின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றியவருமாகிய திருமதி. சுஜாதா சரவணன் அவர்கள் விழாவில் கலந்து கொண்டு, மரபு உணவின் சிறப்புக்களை எடுத்துக் கூறியதோடு, இவ்வகை நிகழ்வுகளில் ஆர்வத்தோடு பங்கேற்ற மாணவிகளை வாழ்த்திப் பேசினார்.

முன்னதாக, தமிழ் மரபு உணவுத்திருவிழா ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆ. மணி வரவேற்புரையாற்றினார். நிறைவாக, இளங்கலைத் தமிழ் இரண்டாமாண்டு மாணவி பு. அருள்மொழி நன்றியுரை கூறினார். இளங்கலைத் தமிழ் முதலாண்டு மாணவி .விக்னேஸ்வரி  நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

ஊன்துவை அடிசில் (பிரியாணி), கருப்பு இட்லி, புதுச்சேரி மீன் குழம்பு, நாட்டுக்கோழிக் குழம்பு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பழந்தமிழ் உணவு வகைகள் கண்காட்சியில் மாணவிகளால் வைக்கப்பட்டிருந்தனஇந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முனைவர் பஅமிர்தவள்ளி, முனைவர் ஆ. கோமதி, முனைவர் இரா. குமுதவள்ளி, முனைவர் மா.தயாநிதி உள்ளிட்ட தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் செய்திருந்தனர். பல்துறைகளைச் சார்ந்த மாணவிகள் திரளாக, இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.  

  

கல்லூரி முதல்வர் அறையில்

கல்லூரி முதல்வர் அறையில்
கல்லூரி முதல்வர் கண்காட்சியைத் திறந்து வைத்துப் பார்வையிடல்
பேராசிரியர்கள் கண்காட்சியைப் பார்வையிடல்
பேராசிரியர்கள் கண்காட்சியைப் பார்வையிடல்

பேராசிரியர்கள் கண்காட்சியைப் பார்வையிடல்
பேராசிரியர்கள் கண்காட்சியைப் பார்வையிடல்
வரவேற்புரை: முனைவர் ஆ. மணி
தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சொ. சேதுபதி கல்லூரி முதல்வர் முனைவர் ரா. வீரமோகன் அவர்களுக்குச் சிறப்புச் செய்தல்
கல்லூரி முதல்வர் முனைவர் ரா. வீரமோகன் அவர்கள் சிறப்பு விருந்தினர் திருமதி. சுஜாதா சரவணன் அவர்களுக்குச் சிறப்புச் செய்தல்
அரங்கச் சுவைஞர்
முதலாண்டு மாணவி ப. விக்னேஸ்வரி அவர்களின் நிகழ்ச்சித் தொகுப்புரை

கல்லூரி முதல்வர் முனைவர் ரா. வீரமோகன் அவர்களின் தலைமையுரை

தமிழ்த்துறைத் தலைவர் சொ. சேதுபதி அவர்களின் நோக்கவுரை

சிறப்பு விருந்தினர் கவிஞர், தன்முன்னேற்றப் பேச்சாளர் திருமதி. சுஜாதா சரவணன் அவர்களின் வாழ்த்துரை
இரண்டாமாண்டு மாணவி பு. அருள்மொழியின் நன்றியுரை

கண்காட்சியில் சில உணவுப் பொருட்கள்:









வெள்ளி, 1 மார்ச், 2024

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கியம்- 94

இலக்கியம் - திணை இலக்கியம் 


101. காதற்காலத்தில் வேப்பங்காய் இனிக்கும். திருமணத்தின்பின் பனிச்சுனைத் தண்ணீரும் வெந்நீராகும் என்ற வாழ்க்கை உண்மையைப் பாடிய புலவர்?

மிளைப் பெருங்கந்தன் (குறுந். 196ஆம் பாடல்).

102. காக்கை கரைந்தால் விருந்து வரும் என்ற நம்பிக்கையைப் பாடலாக்கியவர்?

காக்கைபாடினியார் நச்செள்ளையார் (குறுந். 210ஆம் பாடல்).

103. திணைக்கு நூறாக 500 பாடல்களைக் கொண்ட தொகை நூல் எது?

ஐங்குறுநூறு.

104. பாடற்பொருண்மை அல்லது தொடரால் பாடலுக்குப் பெயர் பெற்றுள்ள தொகை நூல்கள் யாவை?

ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து

105. ஐங்குறுநூற்றைத் தொகுத்தோர், தொகுப்பித்தோர் யார்?

தொகுத்தவர் - புத்துறை முற்றிய கூடலூர்கிழார்

தொகுப்பித்தவர் - யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலிரும்பொறை.

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கியம்- 93

 இலக்கியம் - திணை இலக்கியம்


96. ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல் எனச் சொல்லியவர்?

உகாய்க்குடிக்கிழார் (குறுந். 63ஆம் பாடல்).

97. கருந்தோட் கரவீரன் பாடிய மந்தியின் செயல் என்ன?

தன் துணை பிரிந்ததெனத் தன் குட்டியை உறவுகளிடம் சேர்த்துவிட்டுக் கைம்மையைப் பொறுக்காது மலையிலிருந்து குதித்து உயிர்விட்டது (குறுந்தொகை 68).

98. பொன்மலி பாடலியைப் பாடிய புலவர்?

படுமரத்து மோசிகீரனார் (குறுந். 75ஆம் பாடல்).

99. மாலை நேரத்தில் குஞ்சுகளுக்கு உணவு எடுத்துச்செல்லும் பறவையைப் பாடிய புலவர்?

தாமோதரன் (குறுந். 92ஆம் பாடல்).

100. ஆரியவரசன் யாழ்ப்பிரமத்தன் கூறிய வாழ்வியல் நீதி என்ன?

அறிந்த ஒரு உண்மையை மறைந்துச் சாட்சி சொல்லல் ன்றோர்க்கு இயல்பு இல்லை (குறுந். 184ஆம் பாடல்).


தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கியம்- 92

இலக்கியம் - திணை இலக்கியம் 

91. ஆடிப்பாவையைத் தலைவனின் செயலுக்கு உவமை கூறிய புலவர் யார்?

ஆலங்குடி வங்கனார் (குறுந்தொகை 9ஆம் பாடல்).

92. சிறுகோட்டுப் பெரும்பழத்தைக் காமத்திற்கு உவமை கூறியவர்?

கபிலர் (குறுந்தொகை 18ஆம் பாடல்).

93. நல்லான் தீம்பாலைத் தலைவியின் அழகுக்கு ஒப்பாகக் கூறியவர்?

வெள்ளிவீதியார் (குறுந்தொகை 27ஆம் பாடல்).

94. செம்புலப் பெயல்நீர் பற்றிய காதற்பாடல் இடம்பெற்றுள்ள நூல்?

குறுந்தொகை (40ஆம் பாடல்).

95. கையில் மன் கண்ணிற் காக்கும் வெண்ணெய் உணங்கல் பற்றிக் கூறும் பாடல்?

குறுந்தொகை 58ஆம் பாடல். பாடியவர்: வெள்ளிவீதியார்.

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கியம்- 91

 இலக்கியம் - திணை இலக்கியம்

86. உ. வே. சா.வின் 50 ஆண்டுகால உழைப்பில் வெளிவந்த பழந்தமிழ் உரைப்பதிப்பு எது?

குறுந்தொகை உரைப்பதிப்பு (காலம்: 1887 - 1937).

87. குறுந்தொகையில் முதன்முதலாக உள்ளுறை, இறைச்சி ஆகியவற்றைப் பகுத்துக் காட்டியவர் யார்?

தி. செளரிப்பெருமாள் அரங்கன். உள்ளுறைப் பாடல்கள் 18. இறைச்சிப் பாடல்கள் 30.

88. குறுந்தொகையுள் மிக அதிகமான பாடவேறுபாடுகள் காட்டப்பெற்ற பாடல் எது?

உ.வே.சா. உரைப்படி குறுந். 99ஆம் பாடல் (13 பாடவேறுபாடுகள்). ரா. இராகவையங்கார் உரைப்படி குறுந். 256ஆம் பாடல் (27 பாடவேறுபாடுகள்).

89. பெண் கூந்தலின் மணத்தைப் பற்றிப் பாடிய குறுந்தொகைப் புலவர் யார்?

இறையனார் (குறுந்.2ஆம் பாடல்).

90. குறிஞ்சிப் பூத்தேனடைக்குத் தலைவனின் காதலை உவமை கூறும் சங்க நூல் எது?

குறுந்தொகை (3ஆம் பாடல்).

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கியம்- 90

 இலக்கியம் - திணை இலக்கியம்

81. குறுந்தொகையை மேற்கோளாக எடுத்தாண்ட பழைய உரையாசிரியர்கள் எத்தனை பேர்?

29 என்பது உ.வே.சாமிநாதையர் கருத்து.

82. பழைய உரையாசிரியர்களால் மேற்கோளாகக் காட்டப்பட்ட குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை?

235.

83. குறுந்தொகையில் மிகுதியான பாடவேறுபாடுகளைக் காட்டிய உரைகாரர் யார்?

ரா. இராகவையங்கார் (2960 பாடவேறுபாடுகள்).

84. குறுந்தொகைப் பாடல்களை மிகுதியான முறை மேற்கோள் காட்டிய பழைய உரைகாரர் யார்?

நச்சினார்க்கினியர் (208 இடங்கள்).

85. பழைய உரைகாரர்களால் மிக அதிகமா மேற்கோள் காட்டப்பட்ட குறுந்தொகைப் பாடல் எது?

14 உரைகாரர்களால் 16 முறை எடுத்துக்காட்டப்பட்ட பாடல் குறுந்தொகையின் 2ஆம் பாடல் (கொங்குதேர் வாழ்க்கை).

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...