ஞாயிறு, 27 அக்டோபர், 2013

சிலப்பதிகாரம் : கவிதையியல் - பண்பாட்டியல் - மொழியியல் - அரசியல் : நூலறிமுகம்

     புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதிநல்கைப் பெற்றுச் செம்மொழித் தமிழும் சிலப்பதிகாரமும் என்னும் பெயரிய பத்துநாள் பயிலரங்கு ஒன்றினை 03.01.2013 முதல் 12.01.2013 வரை நடத்தியது. முனைவர் சிலம்பு நா. செல்வராசு அவர்கள் ஒருங்கிணைத்து நடத்திய அப்பயிலரங்கில் 03.01.2013 அன்று நடைபெற்ற முதல் அமர்வில் சிலப்பதிகாரக் கருத்தியல் மீளாய்வு என்ற தலைப்பில் பயிலரங்க உரையாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. வாய்ப்பினை வழங்கிய இயக்குநர்  முனைவர் பக்தவத்சல பாரதி அவர்களுக்கும், ஒருங்கிணைப்பாளர்  முனைவர் சிலம்பு நா. செல்வராசு அவர்களுக்கும், முனைவர் இரா. சம்பத் அவர்களுக்கும்  நன்றி மலர்கள். அப்பயிலரங்கின் உரைகள் தற்போது சிலப்பதிகாரம் : கவிதையியல் - பண்பாட்டியல் - மொழியியல் - அரசியல் என்னும் பெயரில் புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தால் நூலாக்கம் பெற்றுள்ளன. அச்சாக்கத்தின் கலையியல் கூறுகளை உளங்கொண்டுச் செவ்வையான கட்டமைப்பில் கண்களை உறுத்தாத வகையில் மிக அழகிய நூலாக இந்நூல் மலர்ந்திருப்பது பதிப்பாசிரியர் சிலம்பு நா. செல்வராசு அவர்களின் பேருழைப்பையும் அழகியல் கண்ணோட்டத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. பல புதிய சிந்தனைகளைத் தாங்கிய இந்நூல் வெளிவருவதற்குப் பின்புலமாக இருந்து இயக்குகின்ற இயக்குநர் முனைவர் பக்தவச்சல பாரதி அவர்களுக்கும், முனைவர் இரா. சம்பத் அவர்கள் உள்ளிட்ட நிறுவனப் பேராசிரியர்களுக்கும் தமிழுலகம் நன்றிக்கடன்பட்டுள்ளது.  
           2013 இல் முதல் பதிப்பு கண்டுள்ள இந்நூல் 1/8 தெம்மி அளவில் 448 பக்கங்களைக் கொண்டது. நூலின் விலை ரூ. 350. கவிதையியல் குறித்த ஏழு கட்டுரைகள், பண்பாட்டியல் குறித்த பன்னிரண்டு கட்டுரைகள், மொழியியல் தொடர்பான நான்கு கட்டுரைகள், அரசியல் தொடர்பான ஐந்து கட்டுரைகள் என இருபத்தெட்டுக் கட்டுரைகளும், நூலின் முன்முகமாக பதிப்பாசிரியர் எழுதிய பதிப்புரையும், பின்முகமாக பொருளடைவும், கட்டுரையாளர் முகவரிகளும் இடம்பெற்றுள்ளன.  ஆற்றல் வாய்ந்த புலமையாளர்களின் கட்டுரைகள் இந்நூலின் தகுதிக்கும் தகைமைக்கும் சான்று பகர்கின்றன. சில கட்டுரைகள் பல்லாண்டுகளாக நம் உள்ளத்தில் பதிந்துள்ள கருத்துக்களை வெடி வைத்துத் தகர்க்கின்றன. சில கட்டுரைகள் பழைய உண்மைகளின் மீது புதிய வெளிச்சம் பாய்ச்சுகின்றன. சில கட்டுரைகள் இதுகாறும் நாம் அறியாத புதிய சிந்தனைகளை எடுத்துரைக்கின்றன. மொத்தத்தில் சிலப்பதிகாரம் பற்றிய புதிய நினைவுகளை இந்நூல் கட்டியெழுப்புகின்றது. பயிலரங்கில் படிக்கப்பட்ட இக்கட்டுரைகள் காற்றோடு கலந்துவிடாமல் ஆவணமாக்கிய முனைவர் பக்தவச்சல பாரதி, சிலம்பு நா. செல்வராசு ஆகியோர் போற்றுதலுக்குரியர். பல்துறைப் புலமையாளர்களின் கருத்தியல் சங்கமம் “ என பேராசிரியர் என். சண்முகலிங்கன் அவர்களும், “ சிலப்பதிகாரம் குறித்த ஆய்வுகளில் இந்நூல் முதன்மையானதுஎன முனைவர் பக்தவச்சல பாரதி அவர்களும் மொழிவது முற்றிலும் உண்மை என்பதை இந்நூலைப் புரட்டும்போது நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள்.

நூலின் முன்னட்டை.
நூலின் பின்னட்டை.

செவ்வாய், 15 அக்டோபர், 2013

வெல்லும் தூய தமிழ் - திங்களிதழ் - அறிமுகம்

    புதுச்சேரியில் சிற்றிதழ்கள் பலவாகப் பெருகி இருக்கின்றன. ஆனால் அவற்றுக்கிடையே தனித்தன்மையும் பீடும் உடைய இதழ் என மதிப்பிட்டால் ஒரு சிலவே அமையும். சில இதழ்கள் தனி மனிதர்களின் பெருமையைப் பறைசாற்றவே வருகின்றனவோ என எண்ணத் தோன்றும் வகையில் இருப்பதைக் காணலாம். ஆனால் அவற்றிலிருந்து மாறுபட்டு வெல்லும் தூயதமிழ் திங்கள் இதழ் அமைந்திருப்பதை அவ்விதழைப் பார்த்தவுடன் நாம் அறியலாம்.
        ஓர் இதழ் 20 ஆண்டுகளைக் கடந்து வெளிவருவதே வரலாற்றுச் சாதனை. அதுவும் உரிய காலத்தில் இடைவெளியில்லாமல் வெளிவருவது இன்றைய வணிக உலகில் எத்தகைய அருஞ்செயல் என்பதை எண்ணிப்பாருங்கள்.
      தமிழ் இதழ் எனச் சொல்லிக்கொண்டுத் தமிழ்ச் சொற்களை ஆளவோ, பிழையில்லாமல் செய்திகளை வெளியிடவோ இயலாத இதழ்களுக்கிடையே தனித்தமிழில் ஓர் இதழை வெளியிட்டுப் பரப்புவது என்பதில் எத்தனை துன்பமிருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்தால் வெல்லும் தூயதமிழ் இதழின் சிறப்பும், சிறப்பாசிரியர் முனைவர் தமிழமல்லன் பேருள்ளமும், தமிழ் நெஞ்சமும் விளங்காமல் போகாது. நெடுநாட்களாகவே வெல்லும் தூயதமிழ் இதழ் பற்றி எழுதவேண்டும் என நினைத்திருந்தேன். இன்றுதான் அதற்கான சூழல் அமைந்தது.
            தமிழில் பிழையற எழுதக் கற்றுக் கொள்ளவேண்டுமா?. தனித்தமிழில் உரையாட வேண்டும் என்ற எண்ணமுண்டா?. மறைமலையடிகள் ஊட்டிய உணர்வில் கலந்துருக வேண்டுமா?. இதற்கெல்லாம் தனியே சென்று கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை. ஓர் எளிய வழியுண்டு. வெல்லும் தூயதமிழ் திங்களிதழைப் படிப்பதுதான் அது. தமிழ் உணர்வாளர்கள் இதுபோன்ற இதழ்களைப் புரப்பது போற்றுதலுக்குரியது என்பதை மனங்கொள்ள வேண்டும். தனித் தமிழ் போற்றுவோம். தமிழ் போற்றுவோம்.

வெல்லும் தூயதமிழ் இதழின் முகப்பட்டை (2013 அகுத்தோபர்).

திங்கள், 14 அக்டோபர், 2013

செம்மொழி விருதுகள் வழங்கும் விழா - 09.10.2013

         இந்தியக் குடியரசுத் தலைவர் வழங்கும் செம்மொழித் தமிழுக்கான விருதுகள் விழா 09.10.2013 அன்று பிற்பகல் 12 மணிக்குப் புதுதில்லியில் உள்ள இந்தியக் குடியரசுத் தலைவர் மாளிகையின் ’தர்பார்’ கூடத்தில் நடைபெற்றது. விருது பெறும் அறிஞர்கள் விருது பெறும் ஒத்திகைக்காக முற்பகல் 10 மணியளவில் கூடத்திற்கு வந்து சேர்ந்தனர். ஒத்திகை நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் மாளிகையின் பாதுகாப்பு அதிகாரி நடைமுறைகளை ஆங்கிலத்தில் விளக்கினார். அத்னைச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதிஅலுவலர் திருமிகு. கருணாகரன் அவர்கள் தமிழில் விளக்கினார். பார்வையாளர்கள் 11 மணி முதல் வரத் தொடங்கினர்.
       இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்சி அவர்கள் சரியாகப் பிற்பகல் 12 மணிக்குக் கூடத்திற்கு வந்தார். அவர் வரும்போது வாத்திய இசை முழக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்திய நாட்டுப் பண் கருவிகளில் இசைக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் அவர்கள் இருக்கையில் அமர்ந்த பின்னர் மனிதவள மேம்பாட்டுத்துறையின் செயலர் அசோக் சிங்கால் அவர்கள் விருது வழங்கும் விழாவினைத் தொடக்க, குடியரசுத் தலைவரிடம் அனுமதி வேண்டினார். அனுமதி கிடைத்த பின்னர் அறிவிப்பாளர் விருது வழங்கும் விழா பற்றிய பின்புலங்களை இந்தியில் எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து முதன்முறையாகச் செம்மொழி விருதுகள், நிறுவனம் பற்றிய செய்திகளைச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் திருமதி வி.கோ.பூமா அவர்கள் தமிழில் எடுத்துரைத்தார். இம்முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வெற்றி கண்ட நிறுவனத்தின் இயக்குநர் திருமதி வி.கோ.பூமா அவர்களுக்கும், பதிவாளர் முனைவர் முத்துவேலு அவர்களுக்கும், நிதிஅலுவலர் திருமிகு கருணாகரன் அவர்களுக்கும், ஆய்வறிஞர்கள் பேரா. கு. சிவமணி அவர்களுக்கும், முனைவர் ப. மருதநாயகம் அவர்களுக்கும், செம்மொழி நிறுவனத்தினருக்கும்,  மனிதவள மேம்பாட்டுத்துறையின் செயலர் அசோக் சிங்கால் அவர்களுக்கும், மனிதவள மேம்பாட்டுத் துறையினருக்கும், குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரிகளுக்கும் தமிழறிஞர்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். இதற்குப் பின்புலமாக இருந்த தமிழ் அமைப்புக்கள் நன்றிக்குரியன.
         தமிழ் அறிவிப்புக்குப் பின்னர் முதலில் தொல்காப்பியர் விருது பற்றியும் விருதுக்குரியவர் பற்றியதுமான அறிவிப்பு இந்தியில் செய்யப்பட்டது. முதலில் ஐராவதம் மகாதேவன் அவர்கள் 2009 -10 ஆம் ஆண்டுக்குரிய தொல்காப்பியர் விருதினைப் பெற்றார். 2010 -11 ஆம் ஆண்டுக்குரிய தொல்காப்பியர் விருதினை முனைவர் தமிழண்ணல் அவர்கள் பெற்றார்.  அதன் பின்னர் 2009 -10 ஆம் ஆண்டுக்குரிய குறள்பீட விருதினை செக் நாட்டு அறிஞர் வாசேக் பெற்றார். பின்னர் 2009 -10 ஆம் ஆண்டுக்குரிய இளம் தமிழறிஞர் விருதுகளை முனைவர் சுரேசு, முனைவர் சே. கல்பனா, முனைவர் நா. சந்திரசேகர், முனைவர் வாணி அறிவாளன், முனைவர் சோ. முத்தமிழ்ச் செல்வன் ஆகியோர் பெற்றனர்.
      2010 -11 ஆம் ஆண்டுகுரிய இளம் தமிழறிஞர் விருதுகளை முனைவர் து. சங்கையா, முனைவர் அ. செயக்குமார், முனைவர் ஆ. மணி, முனைவர் சி. சிதம்பரம், முனைவர் சுந்தரபாண்டியன் ஆகியோர் பெற்றனர். குறள்பீட விருது பெற்ற முனைவர் சான் மார் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக விழாவில் பங்கேற்கவில்லை.
          அனைவருக்கும் விருதுகளும் பொன்னாடைகளும் வழங்கப்பட்ட பின்னர் மனிதவள மேம்பாட்டுத்துறையின் செயலர் அவர்கள் விழாவினை நிறைவு செய்வதற்கான அனுமதியைக் குடியரசுத் தலைவரிடம் வேண்டினார். அனுமதி கிடைத்ததும் கருவிகளின் இசையிலான நாட்டுப்பண்ணுடன்  விழா நிறைவு பெற்றது. தொடர்ந்து விருது பெற்றோர் குடியரசுத் தலைவர் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், செயலர் ஆகியோருடன் குழுப் படம் எடுத்துக் கொண்டனர். நிறைவாக, விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் தேநீர் விருந்து வழங்கப்பட்டது. விழாப் படங்கள் இதோ:

 குடியரசுத் தலைவரின் வருகை
 நாட்டுப்பண் இசைத்தல்.
 முனைவர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் தொல்காப்பியர் விருது பெறல்.
  முனைவர் தமிழண்ணல் அவர்கள் தொல்காப்பியர் விருது பெறல்.
  முனைவர் வாசேக் அவர்கள் குறள்பீட விருது பெறல்.
 முனைவர் சுரேசு அவர்கள் இளம் தமிழறிஞர் விருது பெறல்.
 முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள் இளம் தமிழறிஞர் விருது பெறல்.
 முனைவர் நா. சந்திரசேகரன் அவர்கள் இளம் தமிழறிஞர் விருது பெறல்.
 முனைவர் வாணி அறிவாளன் அவர்கள் இளம் தமிழறிஞர் விருது பெறல்.
 முனைவர் சோ. முத்தமிழ்ச் செல்வன் அவர்கள் இளம் தமிழறிஞர் விருது பெறல்.
 முனைவர் து. சங்கையா அவர்கள் இளம் தமிழறிஞர் விருது பெறல்.
 முனைவர் அ. செயக்குமார் அவர்கள் இளம் தமிழறிஞர் விருது பெறல்.
 முனைவர் ஆ. மணி அவர்கள் இளம் தமிழறிஞர் விருது பெறல்.
 முனைவர் சி. சிதம்பரம் அவர்கள் இளம் தமிழறிஞர் விருது பெறல்.
 முனைவர் சுந்தரபாண்டியன் அவர்கள் இளம் தமிழறிஞர் விருது பெறல்.
  குடியரசுத் தலைவர், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், மனிதவள மேம்பாட்டுத்துறைச் செயலர் ஆகியோருடன் செம்மொழி விருதுகள் பெற்றோர்.

வெள்ளி, 11 அக்டோபர், 2013

செம்மொழித் தமிழுக்கான குடியரசுத் தலைவர் விருதுகள்

       செவ்வியல் தமிழ் ஆய்வுக்காக இந்தியக் குடியரசுத் தலைவர் வழங்கும் செம்மொழித் தமிழ் விருதுகள் கடந்த 09.10.2013 அன்று நண்பகல்12 மணிக்குப் புதுதில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்சி அவர்களால் வழங்கப்பட்டன. விழா பற்றிய சன் தொலைக்காட்சியின் செய்திக் காணொளிக் காட்சி இவண் தரப்பட்டுள்ளது.