நெய்வேலி புத்தகக் கண்காட்சி - சிறந்த எழுத்தாளர் விருது (12.07.2025)
ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் நடைபெறும் நெய்வேலி புத்தகக் கண்காட்சி வடதமிழகத்தின் இன்றியமையா அறிவுத் திருக்காட்சி. 24 ஆண்டுகளாகத் தொடர்ந்து நெய்வேலி புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருவதும், அதில் ஆண்டுதோறும் எழுத்தாளர்கள் விருது வழங்கிச் சிறப்பிக்கப்படுவதும் பாராட்டுதலுக்குரியன. அவ்வகையில் 24ஆம் ஆண்டுப் புத்தகக் கண்காட்சியில் 12.07.2025 (சனிக்கிழமை) அன்று சிறந்த எழுத்தாளர் பரிசுத்தொகை ரூ 15000 மற்றும் கேடயம் ஆகியன எனக்கு வழங்கப்பட்டன.
பொதுவாக, அரசு நிறுவனங்கள் தமக்குச் சமூக அக்கறை உண்டெனக் காட்டிக்கொள்ள விழாக்கள் நடத்துவதுண்டு. ஆனால், தங்கள் நிறுவனமும் அமைப்பும் உண்மையான சமூக அக்கறையோடு, அறிவுப் பரவலே சமூக நலம் என்ற உயரிய நோக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழாக்களை நடத்தி வருவது பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியது. அதற்காக என் வணக்கமும் நன்றியறிதலும் தங்களுக்கு என்றும் உரியன. அறிவைப் போற்றாத சமூகம் முன்னேற்றம் காண்பது அரிது என்பது காலம் உணர்த்தும் உண்மை. அதை உணர்ந்து, புத்தக விழாக்களின் மையமாகிய எழுத்தாளர்களைப் போற்றி விருது வழங்கும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்கு நன்றி கூற வார்த்தைகள் இல.
இந்தியக் குடியரசுத் தலைவர் விருது முதல் மாநில அரசுகளின் விருது விழாக்கள் வரை பலவற்றில் நான் கலந்து கொண்டிருக்கின்றேன். பல விழாக்களில் நாம் வந்தோமா? இல்லையா? என்பதைக் கூட அறியாமல் விழா நடத்துவோர் உண்டு என்பதைக் கண்டிருக்கிறேன். ஆனால், நெய்வேலி நிறுவனம் நிகழ்த்திய புத்தகத் திருவிழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் அன்பும் அக்கறையுமான எத்தனை அழைப்புக்கள். இங்கு வந்து சாப்பிடுக! என எத்தனை அக்கறையான சொற்கள். ஆகா. உண்மையிலேயே மனம் நெகிழ்ந்து போனேன். குறிப்பாக, நூலகப் பொறுப்பாளர் தகைமிகு. அரவிந்த் பாபு ஐயா அவர்கள் தேர்ந்தெடுத்தது முதல் நிகழ்ச்சி நிறைவு வரை மிக அக்கறையோடு, மனம் நிறைந்த அன்போடு கவனித்துக் கொண்டார். அவர்தம் அன்புக்கு என் மனம் நிறைந்த நன்றி மலர்கள். இவர்களைப் போன்ற பெருமக்களே தங்களுக்கும் தங்கள் நிறுவனத்திற்கும் பெருமை சேர்ப்பவர்கள். நெய்வேலி புத்தகத் திருவிழா என்றும் என் நெஞ்சில் நிறைந்த விழாவாக உறைந்திருக்கின்றது. புத்தகக் காட்சி விருது விழாப் படங்களும் காணொலிக் காட்சியும்.