சனி, 10 அக்டோபர், 2015

தொல்காப்பிய அகத்திணை இயல்: கருப்பொருள் வகைகள்

தொல்காப்பிய அகத்திணை இயல்: கருப்பொருள் வகைகள்

20.தெய்வம் உணாவே மா மரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழிப.(அகத். 20)

இது, கருப்பொருள் ஆமாறு உணரத்துதல் நுதலிற்று.

(இதன் பொருள்): தெய்வம் உணா மா மரம் புள் பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ - தெய்வம் முதலாகச் சொல்லப்பட்டனவும், அவ்வகை பிறவும் கரு என மொழிப - அத் தன்மைய பிறவும் கருப்பொருள் என்று கூறுப.

அவையாவன முதற்பொருட்கண் தோன்றும் பொருள்கள்.

"மாயோன் மேய காடுறை உலகம்" (அகத். 5)

என்றதனால்,

முல்லைக்குத் தெய்வம் கண்ணன்.

"காடுறை உலகம்"

என்றதனானும்,

"காரும் மாலையும் முல்லை" (அகத்.6)

என்றதனானுங், காட்டினும் கார் காலத்தினும் மாலைப்பொழுதினும் நிகழ்பவை கொள்க.

"எந்நில மருங்கிற் பூவும் புள்ளும்
அந்நிலம் பொழுதொடு வாரா ஆயினும்" (அகத். 21)

என்றதனாலும், நிலமும் காலமும் பற்றி வருவன கருப்பொருள் என்பது உணர்க.

உணவு வரகும் முதிரையும். மா மானும் முயலும். மரம் கொன்றையும், குருந்தும் புதலும், புள் - கானாங்கோழி. பறை ஏறு கோட்பறை. செய்தி - நிரை மேய்த்தல். யாழின் பகுதி என்பது பண். அது சாதாரி. பிறவும் என்றதனால், பூ முல்லையும் பிடவும் தளவும். நீர் - கான்யாறு. பிறவும் இந் நிகரன கொள்க.

குறிஞ்சிக்குத் தெய்வம் முருகவேள். மைவரை யுலகமும் கூதிர்க் காலமும் நள்ளிருளும் கூறினமையான், அந் நிலத்தினும் காலத்தினும் நிகழ்பவை கொள்க. உணவு - தினையும் ஐவனமும் வெதிர்நெல்லும், மா - யானையும், புலியும், பன்றியும், கரடியும், மரம் - வேங்கையும் கோங்கும். புள் - மயிலும், கிளியும்; பறை வெறியாட்டுப் பறையும் தொண்டகப் பறையும். செய்தி - தேனழித்தல், பண் - குறிஞ்சி. பிறவும் என்றதனால், பூ - வேங்கைப்பூவும், காந்தட்பூவும், குறிஞ்சிப் பூவும். நீர் - சுனை நீரும், அருவி நீரும், பிறவும் அன்ன.

பாலைக்கு நிலம் ஓதாது வேனிற்காலமும் நண்பகலும் ஓதினமையானும்,

"முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற் றிரிந்து
நல்லியல் பிழந்து நடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்" (சிலப். காடுகாண். 64-66)

எனப் பிற சான்றோர் செய்யுள் அகத்து வருதலானும், இந் நிலங்களில் வேனிற் காலத்து நிகழ்வன, கருப்பொருளாகக் கொள்ளப்படும். தெய்வம் - கொற்றவை. உணவு - ஆறலைத்தலான் வரும் பொருள். மா - வலியழிந்த யானையும், வலியழிந்த புலியும், வலியழிந்த செந்நாயும். மரம் - பாலை, இருப்பை,கள்ளி, சூரை. புள் - எருவையும். பருந்தும். பறை - ஆறலைப்பறையும், சூறைகொண்ட பறையும். செய்தி - ஆறலைத்தல். பண் - பாலை. பிறவும் என்றதனால். பூ - மராம்பூ. நீர் - அறுநீர்ச் சுனையும், பிறவும் இந்நிகரன கொள்க.

மருதத்திற்குத் தெய்வம் இந்திரன்; 'தீம்புனல் உலகம்' (அகத்.5) எனவும், 'வைகறை விடியல், (அகத் - 9) எனவும் ஓதினமையால், அவ்விடத்தினும் காலத்தினும் நிகழ்பவை கொள்க.

    உணவு - நெல். மா - எருமையும், நீர்நாயும், மரம் - மருதும். காஞ்சியும், புள் - அன்னமும் அன்றிலும். பறை - நெல்லரி பறை, செய்தி - உழவு. பண் - மருதம். பிறவும் என்றதனால், பூ தாமரையும் கழுநீரும். நீர் - ஆற்றுநீரும் பொய்கை நீரும். பிறவும் அன்ன.


நெய்தற்குத் தெய்வம் வருணன் "மணல் உலகம் " (அகத் -5) என்றதனானும், ' எற்பாடு ' (அகத்.10) என்றதனானும், ஆண்டு நிகழ்பவை கொள்க. உணவு - உப்பு விலையும் மீன் விலையும், மா - கராவும் சுறவும். மரம் - புன்னையும் கைதையும். புள் - கடற்காக்கை. பறை - நாவாய்ப் பறை. செய்தி - மீன்படுத்தலும் உப்பு விளைத்தலும். பண் - செவ்வழி. பிறவும் என்றதனால், பூ - நெய்தல், நீர் - கேணி நீரும் கடல் நீரும். பிறவும் அன்ன. (அகத். 20)

கருத்துகள் இல்லை: