பொருளதிகாரம்
– முதலாவது அகத்திணை இயல்
இவ்வதிகாரத்துள்,
இம் முதற்கண் ஓத்து அகப்பொருள் இலக்கணம் நுதலிற்று.
1. கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப. (அகத். 1)
இத்
தலைச்சூத்திரம் என் நுதலிற்றோ எனின், அகப்பொருள் இத்துணை
என வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று.
இதன் பொருள்: கைக்கிளை முதல் ஆக பெருந்திணை
இறுவாய் (ஆக) -கைக்கிளை என்று சொல்லப்படும் பொருள் முதலாகப் பெருந்திணை என்று
சொல்லப்படும் பொருள் ஈறாக, எழுதிணை1 முற்படக் கிளந்த என்ப- ஏழு பொருள் முற்படக் கூறப்பட்டன என்று சொல்வர்.
முதலா என்பது
முதலாக என்னும் பொருள்பட நின்றது ; விகாரம் எனினும்
அமையும் இறுவாயாக என்பதன்கண் ஆக என்பது எஞ்சி நின்றது. எழுதிணையும் முற்படக்
கிளந்த எனற்பாலது மொழிமாறி நின்றது. கிளந்த என்பது கிளக்கப்பட்டன என்னும் பொருள்பட
வந்த முற்றுச்சொல். முற்படக் கிளந்த எழுதிணை கைக்கிளை முதலாகப் பெருந்திணை இறுதிய
எனினும் இழுக்காது. "முற்படக்கிளந்த" என்றமையான், அவை
ஏழும் அகப்பொருள் என்று கூறினாருமாம்; அகம், புறம் எனப் பொருளை வரையறுத்தல் இவர் கருத்தாகலின். அன்னதாதல்,
"அகத்திணை மருங்கின் அரில்தப உணர்ந்தோர்
புறத்திணை
இலக்கணம் திறப்படக் கிளப்பின்" (புறத்.1)
என்பதனாற் கொள்க.
முற்படக்
கிளந்த எழுதிணை எனவே பிற்படக் கிளக்கப்படுவன எழுதிணை உள என்பது பெறுதும். அவையாவன,
வெட்சி முதலாகப் பாடாண்டிணை ஈறாகக் கிடந்த எழுதிணையும், இவ்வகையினான் இவ்வதிகாரத்திற் கூறப்பட்ட பொருள் பதினான்கு என்பதூஉம்.
அவையும்,
"வெட்சி தானே குறிஞ்சியது புறனே" (புறத்.1)
எனவும்,
"வஞ்சி தானே முல்லையது புறனே" (புறத். 4)
எனவும்,
இவ்வாறு கூறுதலின் ஏழாகி அடங்கும் என்பதூஉம் கொள்க.
அஃதேல்,
மெய்ப்பாட்டியலானும், உவம இயலானும், செய்யுள் இயலானும், மரபு இயலானும் கூறப்பட்ட பொருள்
யாதனுள் அடங்கும் எனின், அவை கருப்பொருளும் அப்பொருளாற்
செய்யப்பட்டனவும் அப் பொருளின் குணம் முதலியனவும் அப் பொருளின் குறிப்பு
நிகழ்ச்சியும் ஆதலின், அவையும் கருப்பொருளின் பால் நடுவண்
ஐந்திணையுள் அடங்கும் என்ப. அவை சிறுபான்மை கைக்கிளை பெருந்திணையினும் வரும்.
அவ்வெழுதிணையும் ஆவன - கைக்கிளை, முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம்,
நெய்தல், பெருந்திணை.
கைக்கிளை என்ற
பொருண்மை யாதோ எனின், கை என்பது
சிறுமைபற்றி வரும். அது தத்தம் குறிப்பிற் பொருள் செய்வதோர் இடைச்சொல்; கிளை என்பது உறவு; பெருமையில்லாத தலைமக்கள் உறவு
என்றவாறு; கைக்குடை, கையேடு, கைவாள், கைஒலியல், கைவாய்க்கால்
எனப் பெருமையில்லாதவற்றை வழங்குபவாதலின்.
நடுவண் ஐந்திணைக்கண்
நிலமும் காலமும் கருப்பெருளும் அடுத்துப், புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல்,
ஊடல் எனச் சொல்லப்பட்ட அவ் உரிப்பொருள், ஒத்த
அன்பும் ஒத்த குலனும் ஒத்த வடிவும் ஒத்த குணனும் ஒத்த செல்வமும் ஒத்த இளமையும்
உளவழி நிகழுமாதலின், அது பெருங் கிளைமை ஆயிற்று. முல்லை
முதலாகிய ஐந்தும் முன்னர்க் கூறப்படும்.
பெருந்திணை,
நடுவண் ஐந்திணையாகிய ஒத்த காமத்தின் மிக்கும் குறைந்தும் வருதலானும்,
எண்வகை மணத்தினும் பிரமம் பிரசாபத்தியம் ஆரிடம் தெய்வம் என்பன அத்
திணைப்பாற் படுதலானும், இந் நான்கு மணமும் மேன்மக்கள்மாட்டு
நிகழ்தலானும், இவை உலகினுள் பெருவழக்கு எனப் பயின்று
வருதலானும், அது பெருந்திணை எனக் கூறப்பட்டது. அஃதேல்,
நடுவண் ஐந்திணையாகிய ஒத்த கூட்டம் பெருவழக்கிற்றன்றோ எனின், அஃது அன்பும் குலனும் முதலாயின ஒத்துவருவது உலகினுள் அரிதாகலின்
அருகியல்லது வாராது என்க.
இந் நூலகத்து
ஒருவனும் ஒருத்தியும் நுகரும் காமத்திற்குக் குலனும் குணனும் செல்வமும் ஒழுக்கமும்
இளமையும் அன்பும்2
ஒருங்கு உளவழி இன்பம் உளதாம் எனவும், கைக்கிளை, ஒருதலை வேட்கை எனவும், பெருந்திணை ஒவ்வாக் கூட்டமாய்
இன்பம் பயத்தல் அரிது எனவும் கூறுதலான், இந் நூலுடையார் காமத்துப்
பயனின்மை உய்த்து உணர வைத்தவாறு அறிந்துகொள்க. (அகத். 1).
குறிப்பு
விளக்கம்
1. "முற்படக் கூறப்பட்ட அகத்திணை ஏழென்று
கூறுவர் ஆசிரியர் என்றவாறு" - நச்சினார்க்கினியர் உரைக்குறிப்பு.
2. (பா.வே.): ஒழுங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக