புதன், 1 நவம்பர், 2017

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 39) - பலாசு, பவழம், பனை, பாதிரி, பிடா, பித்திகம்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 39) - பலாசு, பவழம், பனை, பாதிரி, பிடா, பித்திகம்


பலாசு

    இக்காலத்தில் புரசென வழங்கும். இது முருக்கின் இனத்தைச் சார்ந்ததாதலின் முருக்கெனவே இந்நூலில் சொல்லப்படுகின்றது. இதன் மலர் செந்நிறம் உடையது. பட்டையை உரித்த இதன் கோலைக் கையில் ஏந்துவது பிரமசாரிகளின் இயல்பு.
 
பவழம்

    இது செந்நிறம் உடையதாதலின் முருகக்கடவுளின் திருமேனியின் நிறத்திற்கு உவமை கூறப்படுகின்றது.
 
பனை

    இம்மரம் நெய்தல் நிலத்துக்குரியது; பெண்ணை, போந்தை எனவும் வழங்கும். நெய்தல் நிலத்து ஊர்களில் பனையடியில் மன்றங்கள் உண்டு. மணல் நிறைந்த இடத்தில் இது வளர்வது. காற்று வீச வீச அம்மணல் மிகுவதனால் இதன் அடி மரம் மறைந்து கொண்டே வரும் காட்சியை ஒரு புலவர் குறித்துள்ளார்தலைவியைப் பெறவியலாது வருந்தும் தலைவன் பனை மடலால் குதிரையைப் போன்ற ஓர் உருவம் செய்து அதன்மீது ஏறி வருதல் வழக்கம. அதற்கு மடன்மா என்று பெயர். இதன் மட்டைகள் கருக்குடையனவாக இருக்கும். இதன் காயினுள்ளே பஞ்சி போன்ற நார் இருத்தலின் ஒருவர் அதனை, ‘‘பாளை தந்த பஞ்சியங் குறுங்காய்’‘ என்பர். இதன் கள்ளும் நுங்கும் உண்ணுதற்குரியன. இதன் ஓலையால் செய்த குழிந்த பாத்திரத்தைக் குடை என்பர். அதில் மலர்களைப் பெய்து வைப்பர். பனங்குருத்தோலையில் வேப்பம் பூவை வைத்து ஆடவர் சூடுவதுண்டு. பனை மரத்தில் அன்றிலும் தூக்கணங் குருவியும் கூடு கட்டி வாழும். இதன் ஓலை மடல் தோடு எனப்படும்.
 
பாதிரி

    இது வேனிற்காலத்தில் மலர்வது; இதன் மலர் வளைந்திருக்கும்; குறிய மயிர் போன்றதொரு பொருள் அதில் இருத்தலின் மகளிர் மேனியில் படர்ந்த குறுமயிர்க்கு உவமை கூறப்படுகின்றது.
 
பிடா

    இஃது ஒரு மரம்; பிடவெனவும் வழங்கும். இது கார் காலத்தில் மலரும்.
 
பித்திகம்

    இக்காலத்தில் பிச்சியென்று வழங்குவது இதுவே. இது கார் காலத்தில் மலரும். இதன் அரும்பு சிவந்திருக்கும். அதனை மகளிர் கடைக்கண்ணிற்கு உவமை கூறுவர். இதன் மலரைப் பனங்குடையிற் பொதிந்து வைப்பர். அம்மலரின் மணம் நன் மகளிர் மேனி மணத்திற்கு உவமை ஆகும்.

(தொடரும்)

கருத்துகள் இல்லை: