புதன், 13 ஜூலை, 2011

சி. இலக்குவனாரின் தொல்காப்பிய ஆராய்ச்சி

தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள அறிஞராகிய சி. இலக்குவனார் அவர்கள் தொல்காப்பியத்தை மக்களிடயே உலவச் செய்யும் நோக்கத்துடன் தொல்காப்பிய ஆராய்ச்சி என்ற நூலை 1961இல் எழுதி வெளியிட்டார். அதன் இரண்டாம் பதிப்பு 1971இல் புதுக்கோட்டை வள்ளுவர் பதிப்பக வெளியீடாக வந்தது. தொல்காப்பியம் த்ழர்களும் தமிழர்களைப்பற்றி அறிய விரும்புவோரும் தறாது கற்றறிய வேண்டிய தனிப்பெரும்நூலாகும் என்ற பதிப்புரைக் கருத்து மெய்மையே. இந்நூலின் மெய்ப்புத் திருத்தப் பணிகளில் பெரும்பேராசிரியர் தமிழண்ணலும் உதவியிருக்கின்றார் என்பது குறிக்கத்தகுந்த செய்தியாகும்.
தொல்காப்பிய ஆராய்ச்சி என்ற இந்நூல் 1. படையல், 2. பதிப்புரை, 3. முன்னுரை, 4. எழுத்து, 5. சொல், 6. பொருள், 7. குறிப்பு அகராதி ஆகிய ஏழு கூறுகளைக் கொண்டது. திருக்குறட் கழகத்தின் பொறுப்பாளர் கோவிந்தசாமி என்பாருக்கு இந்நூல் அன்புப் படையல் ஆக்கப்பட்டுள்ளது. முன்னுரை 22 பக்கங்களில் தொல்காப்பியரின் காலத்தை ஆராய்ந்து, அவர்காலம் கி.மு. 7ஆம் நூற்றாண்டு என முடிவுரைக்கின்றது.
தொல்காப்பியம் ஒரு இலக்கண நூல்தான் என்றாலும், அது பிறமொழிகளில் உள்ள இலக்கண நூல்களைப் போன்றதன்று; அது இலக்கிய ஆராய்ச்சி, உயிரியல், உளவியல், வாழ்வியல் முதலியவற்றையும் தன்னகத்தே கோண்டு இலங்குகின்றது என்ற இலக்குவனாரின் கருத்து மனங்கொள்ளத்தக்கது.

     தொல்காப்பிய ஆராய்ச்சி என்ற இந்நூலில் பரவிக்கிடக்கும் இலக்குவனாரின் கருத்துக்களில் சில:
1.       ஆரியம்தான் தமிழை நோக்கித் தன் எழுத்தமைப்பை ஆக்கிக் கொண்டிருக்கவேண்டுமேயன்றி, தமிழ், ஆரியத்தை நோக்கி அமைத்துக் கொண்டது அன்று. (இலக்குவனார் 1971:44).
2.       இந்திய மொழிகளின் வரிவடிவ எழுத்துக்களின் தாய் தமிழ் நெடுங்கணக்கின் வரிவடிவமே எனில் மிகையாகாது. (இலக்குவனார் 1971:45).
3.       மேலைநாட்டு ஆராய்ச்சியாளர்கள் எழுத்துக்களின் பிறப்புப் பற்றிக் கூறும் கருத்துக்கள் தொல்காப்பியர் கூறும் கருத்துக்களோடு ஒற்றுமையுடையனவாக இருக்கின்றன. (இலக்குவனார் 1971:65).
4.       தொல்காப்பியப் பொருட்படலம் இலக்கியம் விளக்கும் இலக்கணமாகும்( scince of Litrature) என்பதை அறிந்து போற்றிப் பயில்வோமாக. (இலக்குவனார் 1971:274).
5.        எழுத்தாளராகவும் புலவராகவும் விரும்புவோர் தொல்காப்பியத்தையும் சங்க இலக்கியங்களையும் பிற இலக்கியங்களையும் நன்கு கற்றல் வேண்டும். (இலக்குவனார் 1971:283).
எழுத்தாளராகவும் கவிஞராகவும் விரும்புவோர் தமிழறியாத நிலையே இன்றுள்ளது என்பதை நினைக்கும்பொழுது, அன்று அவர் கூறிய இன்று தமிழ்நாட்டில் இலக்கிய வறுமை இனிதே ஆட்சிபுரிகின்றது என்ற கருத்து என்று மாறும் என்ற ஏக்கம் நம்முள் பிறக்கின்றது.
தமிழ் ஆய்வாளர்களும் தமிழறிய விரும்புவோரும் தெரிந்துகொள்ள வேண்டிய நூல் இது. கற்றுப் பயன்பெறுக.

2 கருத்துகள்:

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

அன்பு நண்பரே இன்று தங்களை வலைச்சரத்தில அறிமுகம் செய்துள்ளேன்

http://blogintamil.blogspot.com/2011/07/blog-post_18.html

நன்றி.

Ilakkuvanar Thiruvalluvan சொன்னது…

பாராட்டுகள். முழு ஆய்வாகவும் கட்டுரை வெளியிடலாம்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...