புதுச்சேரி
மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனம், செம்மொழித்
தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதிநல்கைப் பெற்றுச் செம்மொழித் தமிழும்
சிலப்பதிகாரமும் என்னும் பெயரிய பத்துநாள் பயிலரங்கு ஒன்றினை 03.01.2013 முதல் 12.01.2013
வரை நடத்தியது. முனைவர் சிலம்பு நா. செல்வராசு அவர்கள்
ஒருங்கிணைத்து நடத்திய அப்பயிலரங்கில் 03.01.2013 அன்று நடைபெற்ற
முதல் அமர்வில் சிலப்பதிகாரக் கருத்தியல் மீளாய்வு என்ற தலைப்பில் பயிலரங்க
உரையாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. வாய்ப்பினை வழங்கிய இயக்குநர் முனைவர் பக்தவத்சல பாரதி
அவர்களுக்கும், ஒருங்கிணைப்பாளர் முனைவர் சிலம்பு நா. செல்வராசு
அவர்களுக்கும், முனைவர் இரா. சம்பத் அவர்களுக்கும் நன்றி மலர்கள். அப்பயிலரங்கின் உரைகள்
தற்போது சிலப்பதிகாரம் : கவிதையியல் - பண்பாட்டியல் - மொழியியல் - அரசியல் என்னும்
பெயரில் புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தால் நூலாக்கம் பெற்றுள்ளன.
அச்சாக்கத்தின் கலையியல் கூறுகளை உளங்கொண்டுச் செவ்வையான கட்டமைப்பில் கண்களை
உறுத்தாத வகையில் மிக அழகிய நூலாக இந்நூல் மலர்ந்திருப்பது பதிப்பாசிரியர் சிலம்பு
நா. செல்வராசு அவர்களின் பேருழைப்பையும் அழகியல் கண்ணோட்டத்தையும்
வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. பல புதிய சிந்தனைகளைத் தாங்கிய இந்நூல்
வெளிவருவதற்குப் பின்புலமாக இருந்து இயக்குகின்ற இயக்குநர் முனைவர் பக்தவச்சல
பாரதி அவர்களுக்கும், முனைவர் இரா.
சம்பத் அவர்கள் உள்ளிட்ட நிறுவனப் பேராசிரியர்களுக்கும் தமிழுலகம்
நன்றிக்கடன்பட்டுள்ளது.
2013 இல் முதல் பதிப்பு கண்டுள்ள இந்நூல் 1/8
தெம்மி
அளவில் 448 பக்கங்களைக் கொண்டது. நூலின் விலை ரூ. 350. கவிதையியல்
குறித்த ஏழு கட்டுரைகள், பண்பாட்டியல் குறித்த
பன்னிரண்டு கட்டுரைகள், மொழியியல் தொடர்பான
நான்கு கட்டுரைகள், அரசியல் தொடர்பான
ஐந்து கட்டுரைகள் என இருபத்தெட்டுக் கட்டுரைகளும், நூலின்
முன்முகமாக பதிப்பாசிரியர் எழுதிய பதிப்புரையும், பின்முகமாக
பொருளடைவும், கட்டுரையாளர்
முகவரிகளும் இடம்பெற்றுள்ளன. ஆற்றல் வாய்ந்த புலமையாளர்களின்
கட்டுரைகள் இந்நூலின் தகுதிக்கும் தகைமைக்கும் சான்று பகர்கின்றன. சில கட்டுரைகள்
பல்லாண்டுகளாக நம் உள்ளத்தில் பதிந்துள்ள கருத்துக்களை வெடி வைத்துத்
தகர்க்கின்றன. சில கட்டுரைகள் பழைய உண்மைகளின் மீது புதிய வெளிச்சம்
பாய்ச்சுகின்றன. சில கட்டுரைகள் இதுகாறும் நாம் அறியாத புதிய சிந்தனைகளை
எடுத்துரைக்கின்றன. மொத்தத்தில் சிலப்பதிகாரம் பற்றிய புதிய நினைவுகளை இந்நூல்
கட்டியெழுப்புகின்றது. பயிலரங்கில் படிக்கப்பட்ட இக்கட்டுரைகள் காற்றோடு
கலந்துவிடாமல் ஆவணமாக்கிய முனைவர் பக்தவச்சல பாரதி, சிலம்பு நா. செல்வராசு ஆகியோர்
போற்றுதலுக்குரியர். ”பல்துறைப் புலமையாளர்களின்
கருத்தியல் சங்கமம் “ என பேராசிரியர் என். சண்முகலிங்கன் அவர்களும், “
சிலப்பதிகாரம் குறித்த ஆய்வுகளில் இந்நூல் முதன்மையானது”
என
முனைவர் பக்தவச்சல பாரதி அவர்களும் மொழிவது முற்றிலும் உண்மை என்பதை இந்நூலைப்
புரட்டும்போது நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள்.
நூலின் முன்னட்டை.
நூலின் பின்னட்டை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக