ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 27) - கரும்பு, கருவிளை

 குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 27) -  கரும்பு, கருவிளை

கரும்பு

    நிலவளத்தைப் புலப்படுத்துவதாகிய கரும்பு மருத நிலத்திற்குரியது. இதனைப் பாத்திகட்டி நீர்பாய்ச்சி விளைவிக்கும் செய்திகளைப் புலவர்கள் பாடியுள்ளார்கள். யானை மிக்க விருப்பத்தோடு இதனை உண்ணும். நுனிப் பகுதியினும் அடிப் பகுதி இனிமை உடையதாக இருத்தலின் தலைவியின் எயிற்றில் ஊறும் நீர் அவ்வடிக் கரும்பின்கண் எறிந்த துண்டத்தைத் தின்றாற் போல இனிக்கின்றதென்று ஒரு தலைவன் பாராட்டுகின்றான் (267). இதன் மலர் வெண்ணிறம் உடையது; மணம் அற்றது; வாடை வீசுங் காலத்தில் மலர்வது. மலராமல் முகைப் பருவத்துள்ள கரும்பின் கூம்பிற்குக் கருப்ப முதிர்ந்த பச்சைப் பாம்பை ஒரு புலவர் உவமை ஆக்குகின்றார்.
 
கருவிளை

    இதன் மலர் நீலநிறம் உடையதாதலின் அதற்கு மயிற் பீலியை உவமை கூறுவர். அது பொறிகளை உடையது. வாடை அம்மலரை அலைப்பதை ஒரு புலவர் சொல்லுகின்றார்.

(தொடரும்)

கருத்துகள் இல்லை: