வியாழன், 5 செப்டம்பர், 2013

முனைவர் ஆ. மணி

புதுச்சேரித் தாகூர் கலைக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் . மணி அவர்களுக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் வழங்கும் இளந்தமிழறிஞர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புதுதில்லியில்  நடைபெற உள்ள விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்சி இவ்விருதினை வழங்கவுள்ளார்.
            செம்மொழி இலக்கண, இலக்கியங்களில் ஆய்வு நிகழ்த்தி வரும் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஆண்டுதோறும் ஐவருக்கு இளந்தமிழறிஞர் விருதுகளை  வழங்கி வருகின்றது. அவ்வகையில் அண்மையில் 2009 -10, 2010 – 11 ஆம் ஆண்டுகளுக்கான குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  அதில் 2010 – 11 ஆம் ஆண்டுக்குப் புதுச்சேரித் தாகூர் கலைக்கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் . மணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

  தேனி மாவட்டம் கெங்குவார்பட்டியில் கா. ஆறுமுகம், . தேவகி ஆகியோருக்கு 1976 ஆம் ஆண்டில் முதல் மகனாகப் பிறந்த . மணி,  இளநிலைப் பட்டத்தைத் திருச்சி, சமால் முகமது கல்லூரியிலும், முதுநிலை மற்றும் முனைவர் பட்டத்தை மதுரை, யாதவர் கல்லூரியிலும் பெற்றவர்.
     
    உலக, இந்திய அளவிலான பல்வேறு கருத்தரங்குகளிலும், மாநாடுகளிலும் பங்கேற்று 65 ஆய்வுக் கட்டுரைகளைப் படைத்துள்ளார். தமிழகத்திலும் புதுவையிலும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதியுதவியுடன் நடைபெற்ற கருத்தரங்கு, பயிலரங்குகளில் வள அறிஞராகப்  பங்கேற்று 25 ஆய்வுரைகளை வழங்கியுள்ளார். இந்திய அளவிலான இரண்டு கருத்தரங்குகளையும், ஒரு பயிலரங்கினையும் இந்திய அரசு நிறுவனங்களின்  நிதியுதவி பெற்று நடத்தியுள்ளார்.  
குறுந்தொகைத் திறனுரைகள், காலந்தோறும் தமிழ் இலக்கியம், செம்மொழித் தமிழ் ஆய்வுரைகள், குறுந்தொகை உரைநெறிகள், ஆய்வுநோக்கில் செவ்வியல் தமிழ் நூல்கள் ஆகிய ஐந்து நூல்களை எழுதியிருப்பதோடு, பல்துறைநோக்கில் தொல்காப்பியம்தொகுதி 1, 2 ஆகிய இரு நூல்களைப் பதிப்பித்துள்ளார்.

    செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதிநல்கையில் பழந்தமிழ் இலக்கண, இலக்கியங்களில் குறுந்தொகை என்னும் ஆய்வுத் திட்டத்தைச் செய்து முடித்துள்ளார்.

    புதுவை அரசுக் கல்லூரித் தமிழ்த்துறைகளில் முதன்முறையாகப் பல்கலைக் கழக நிதிநல்கைக் குழு உதவியோடு இதழியல், மக்கள் தகவலியல் என்னும் சான்றிதழ்ப் பாடத்தினை ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றார்.
            
   குறுந்தொகை உரைநெறிகள் என்னும் இவர்தம் ஆய்வு நூலினை உலகப்பேரறிஞர் ஜார்ஜ் எல். ஹார்ட் அவர்கள் சங்க இலக்கிய ஆய்வுகளுக்கெல்லாம் வழிகாட்டியாகத் திகழும் ஆய்வு எனப் பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. முனைவர் . மணி என்னும் பெயரிலேயே தமிழ் வலைப்பூ ஒன்றினை உருவாக்கித் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் தொடர்பான செய்திகளை எழுதி வருகின்றார். தகுதியான ஆய்வுகளின் மூலம் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் பற்றிய புதிய பல உண்மைகளை வெளியிட்டு வரும் முனைவர் ஆ. மணி, இந்தியக் குடியரசுத் தலைவரின் இளந்தமிழறிஞர் விருது பெற்றிருப்பது உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ என்னும் பொன்மொழிக்குச் சான்றாகத் திகழ்வது குறிப்பிடத்தக்கது.



1 கருத்து:

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

மிக்க மகிழ்ச்சி முனைவரே!
தங்களுக்கு விருது கிடைத்தமை எண்ணிப் பெருமிதம் கொண்டேன் தங்கள் தகுதிக்கு ஏற்ற விருது.

மேலும் தங்கள் தமிழ்ப்பணி தொடர வாழ்த்துக்கள்.

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...