ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

அப்பாவின் துப்பாக்கி - நூலறிமுகம்

      புதுவையில் எனக்குக் கிடைத்த அறிவுசான்ற நண்பர்களுள் முனைவர் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் குறிக்கத்தக்கவர். தேர்ந்த மொழிபெயர்ப்பாளராகிய அவர் குறுந்தொகை மொழிபெயர்ப்பின் போது எனக்கு அறிமுகமானார். குறுந்தொகை பற்றி அவர் கேட்ட நுட்பமான வினாக்கள் குறுந்தொகை பற்றிய புதிய சிந்தனைகளுக்கு வித்திட்டதை என்னால் மறக்க இயலாது. அண்மையில் அவர் மொழிபெயர்த்துள்ள ‘அப்பாவின் துப்பாக்கி’ என்னும் புதினம் காலச்சுவடு பதிப்பகம் வழியாகக் ‘கிளாசிக்’ தன்வரலாற்று வரிசை நூலாக வெளிவந்துள்ளது. அதனைப் பற்றிய ஒரு சிறு அறிமுகமாக இப்பகுதி அமைகின்றது.
     ஆசாத் செரோ செலீம் என்னும் இயற்பெயருடைய கினெர் சலீம் குர்திசுதானில் (இன்றைய ஈராக்) பிறந்தவர். தன்னுடைய பதினேழாம் வயதில் ஈராக்கை விட்டு வெளியேறி இத்தாலி சென்ற சலீம், அங்குச் சில ஆண்டுகள் வாழ்ந்தார். அதன் பின்னர் பிரான்சுக்குச் சென்ற சலீம் அங்குத் திரைப்பட இயக்குநராகப் பணியாற்றி வருகின்றார். 2003இல் வெனிசு திரைப்பட விழாவில் சான் மார்க்கோ விருது பெற்ற ”வோட்கா லெமன்” என்ற திரைப்படம் அவருடைய திறமைக்கு ஒரு சான்று. குர்திசுதான் இன மக்களின் வரலாற்றைக் கூறுவதாக அவர் படைத்த பிரஞ்சு மொழியில் அவர் படைத்த நூல் பேராசிரியர் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகரால் தமிழில் அப்பாவின் துப்பாக்கியாக மலர்ந்திருக்கின்றது. இயல்பான தமிழ்நடைக்குச் சொந்தக்காரரான நாயகரின் உழைப்பும் தமிழ்மணமும் கமழும் இப்படைப்பைப் படித்துச் சுவையுங்கள். தமிழுக்குக் கிடைத்த பிறநாட்டுச் செல்வம் இது.
   தமிழுக்குக் கொடை வழங்கிய பேராசிரியர் வெங்கட சுப்புராய நாயகர் அவர்களையும், இந்நூலை வெளியிட்ட காலச்சுவடு பதிப்பகத்தின் உரிமையாளர் திரு. கண்ணன் அவர்களையும் வாழ்த்துவோம். நூலின் அட்டைபடம் இது.
   

கருத்துரையிடுக