சனி, 23 மார்ச், 2013

பதிற்றுப் பத்து : வைதேகி அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு

    சங்கப் பனுவல்களில் இரும்புக்கடலை என அழைக்கப்படும் நூல் பதிற்றுப் பத்து ஆகும். சங்கப் பனுவல்கள் அனைத்துமே செவ்விய, செறிந்த நடையுடையவை. அவற்றுள்ளும் பதிற்றுப் பத்து மிகக் கடுமையான நடையுடையது என்பதைக் குறிக்கவே பழந்தமிழர்களில் சிலர் அந்நூலை இரும்புக் கடலை எனக் குறித்தனர். கடலை என்பது உணவுப்பொருள்; எளிமையாக உண்ணத் தகுந்தது. அந்தக் கடலையே இரும்பினால் ஆனதாக இருந்தால் எப்படி உண்பது? எப்படி அது செரிமானமாகும்?. இலக்கியம் என்பது சுவைக்கத் தகுந்தது. அது கடுமையானதாக இருந்தால் அதனைச் சுவைப்பது எப்படி? என்ற கவலையே மேற்கண்ட மரபுத் தொடருக்குக் காரணம். அத்தகைய பதிற்றுப் பத்தையும் தன்னுடைய எளிமையான மொழிநடையால் சிறப்பாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தந்திருக்கின்றார் அமெரிக்க வாழ் தோழியரான திருமதி வைதேகி ஹெர்பர்ட் அவர்கள். அந்நூல் சென்னை, கொன்றை பதிப்பகத்தின் வழியாக வெளிவந்திருக்கின்றது. 

  பதிற்றுப் பத்தின் மொழிபெயர்ப்புப் பணிக்கு உலகப் பேரறிஞர் முனைவர்  ஜார்ஜ் எல். ஹார்ட்* அவர்கள் உதவியுள்ளார் என்பதும், டோக்கியோ பல்கலைக் கழகப் பேராசிரியர் தக்கனோபு தக்கசி அவர்கள் மதிப்புரை வழங்கியுள்ளார் என்பதும் இம்மொழிபெயர்ப்பின் உலகத் தரத்திற்குச் சான்றுகளாகும்.

     இந்திய மதிப்பில் ரூ. 300 விலையில் வந்துள்ள இந்நூல் நல்ல ”காலிகோ” என்ற கெட்டி அட்டைப் புத்தகக் கட்டுடனும், நல்ல தாளிலும் நேர்த்தியான அச்சுக்கோர்ப்பிலும் வெளிவந்திருப்பது பாராட்டுதலுக்குரியது. ஒருமைக் குறியில் அமைந்த இந்நூலின் அச்சாக்கத்தை அமைத்துத் தந்தவர் நண்பர், பேராசிரியர் இல. சுந்தரம் என்பதை அறியும்போது மகிழ்ச்சி பிறக்கின்றது.  மேலும் வைதேகி அவர்களுக்குச் சங்கத் தமிழைக் கற்றுக் கொடுத்த பேராசிரியர் ருக்மணி இராமச்சந்திரன் அவர்களே இந்நூலை வெளியிட்டதோடு பதிப்புரையும் எழுதியுள்ளார் என்பது தமிழ்ப் பேராசிரியர்கள் அறிய வேண்டிய செய்தியாகும். நல்லதொரு இலக்கியச் சுவைஞர்களின் கூட்டணியே இந்நூலின் சிறப்புக்குக் கட்டியம் கூறுவதாகும். 

          பதிற்றுப் பத்து என்பது சேரநாட்டை ஆண்ட உதியன், பொறையன் ஆகிய இரு அரச இனங்களின் சில நூற்றாண்டு வரலாற்றைக் கூறுகின்ற 100 பாடல்களின் தொகுப்பாகும். ஒவ்வொரு சேரனைப் பற்றியும் பத்துப் பாடல்களை ஒவ்வொரு புலவரும் பாடியுள்ளனர். முத்ற்பத்தும் இரண்டாம் பத்தும் கிட்டவில்லை. எஞ்சிய 80 பாடல்களும், பிற நூல் உரைகளின் மேற்கோள்களால் சில பாடல் துணுக்குகளும் கிடைத்துள்ளன. பதிற்றுப்பத்துக்கு பழைய உரை ஒன்று உண்டு. பதிற்றுப்பத்தினை அதன் பழைய உரையோடு முதற்கண் பதிப்பித்தவர் உ.வே. சாமிநாதையர் ஆவார். 1904 ஆம் ஆண்டு அப்பதிப்பு வெளிவந்தது. அதன் பின்னர் 1937 இலில் ந.சி. கந்தையா பிள்ளை எழுதிய பதிற்றுப் பத்து வசனம் வெளிவந்தது. 1950 இல் ஔவை. துரைசாமிப் பிள்ளையின் விளக்கவுரை வெளிவந்தது. யாழ்ப்பாணத்து அறிஞராகிய அருளம்பலவானரின் பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை பகுதிகளாக வெளிவந்து 1963இல் முழுமையடைந்தது. அதன்பின்னர்ப் பலரும் பதிற்றுப்பத்துக்கு உரையெழுதியுள்ளனர். மொழிபெயர்ப்புக்கள் சில நூலளவிலும் பாடலளவிலும் வந்துள்ளன. எனினும் வைதேகி அவர்களின் மொழிபெயர்ப்பு குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைகின்றது.  இத்தகைய சிறந்த ஒரு மொழிபெயர்ப்பினை வெளிக் கொணர்ந்ததற்காக பேராசிரியர்  முனைவர் ருக்மணி அவர்களுக்கும் தமிழ் நெஞ்சங்களின் சார்பாகப் பாராட்டுக்கள்.

     சங்க நூல்களைப் பதிப்பித்த உ.வே.சாமிநாதையருக்கும், சங்கப் பாடல்கள் பலவற்றை மொழிபெயர்த்துத் தமிழ் இலக்கியங்களின் பக்கம் உலகின் கவனத்தை ஈர்த்த ஏ.கே. இராமானுசம் அவர்களுக்கும் தம்முடைய பதிற்றுப் பத்து மொழிபெயர்ப்பைப் படையலாகியுள்ளதன் முலமே வைதேகி அவர்களின் தமிழுள்ளத்தை நாம் அறியலாம்.  படிப்புப் பக்கத்தினைத் தொடர்ந்து பேராசிரியர் ருக்மணி இராமச்சந்திரன் எழுதியுள்ள குறிப்பும், அதனைத் தொடர்ந்து வைதேகி அவர்கள் எழுதியுள்ள குறிப்பும் தப்பட்டுள்ளன. பொருளடக்கத்தினைத் தொடர்ந்து சங்க இலக்கியம் பற்றிய அறிமுகக் குறிப்புக்கள் 15 பக்க அளவில் தரப்பட்டுள்ளதன. சங்க இலக்கியங்களையும் அவற்றின் உரைகளையும்  அறிய விரும்புவோருக்கு இப்பகுதி பெரிதும் பயன் நல்கும் பான்மையது. மேலும் பதிற்றுப்பத்து அறிமுகம் ஒன்றும் 6 பக்க அளவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    பதிற்றுப் பத்தின் மொழிபெயர்ப்புப் பகுதியில் முதற்கண் பாடல் எண், பாடலின் பெயர், துறை, தூக்கு, வண்ணம் ஆகியன தரப்படுள்ளன. அதனைத் தொடர்ந்து சந்தி பிரித்த பாடம் தரப்பட்டுள்ளது. பாடலின் பின்னர் தலைப்புடன் கூடிய ஆங்கில மொழிபெயர்ப்பும், நிறைவாக தமிழ்ச்சொல்லும் அவற்றின் ஆங்கிலப் பொருளும் தரப்பட்டுள்ளன. பாடலின் சொற்கள் கிடந்தவாறே அவற்றின் ஆங்கிலப் பொருளும் தரப்படுள்ளது சிறப்புக்குரியதாகும். பாடலின் சொற்களுக்கான பொருளைக் கிடந்தவாறே அறிய விரும்புவோருக்கும், புதிதாக மொழிபெயர்ப்புச் செய்து பழக விரும்புவோருக்கும் பெரிதும் பயன் தருவதாக இப்பகுதி அமைந்துள்ளது. இருப்பினும் பயன்பாடு கருதி, தமிழ்ச்சொற்களின் அருகிலேயே பிறைக்குறியில்  தமிழ்ச்சொற்களுக்குரிய ஆங்கில எழுத்துப் பெயர்ப்பும் தருவது பொருத்தமுடையதாக இருக்கும். இனி வரும் பதிப்புக்களில் வைதேகி அவர்கள் இதனைச் செய்வார் என நம்பலாம்.

      தமிழ் இலக்கியங்களைக் கற்க விரும்பும் பிற மொழியினரும், தமிழர்களும் இந்நூலைப் பயன் கொள்வார்களாக. 

    நூலின் முன்னட்டை

 நூலின் பின்னட்டை

* குறிப்பு: உலகப் பேரறிஞர் முனைவர் ஜார்ஜ் எல்.  ஹார்ட் அவர்கள் என்னுடைய முனைவர்ப் பட்ட ஆய்வின் அயல்நாட்டுத் தேர்வாளராக இருந்தவர். குறுந்தொகை உரைநெறிகள் என்ற என்னுடைய நூலுக்குச் “ சங்க இலக்கிய ஆய்வுகளுக்கெல்லாம் வழிகாட்டும் ஆய்வு” என மதிப்புரை வழங்கியவர் என்பது கூடுதல் செய்தி.

கருத்துரையிடுக