புதன், 7 அக்டோபர், 2015

தொல்காப்பிய அகத்திணையியல் இரண்டாம் நூற்பா – உலகப் பகுப்பு

அகத்திணையியல் இரண்டாம் நூற்பா – உலகப் பகுப்பு

2.    அவற்றுள்,
நடுவண் ஐந்திணை நடுவண தொழியப்
படுதிரை வையம் பாத்திய பண்பே (அகத். 2)

இது, மேற் சொல்லப்பட்ட எழுதிணையுள், நிலம் பெறுவன வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று.

அவற்றுள்- மேற்சொல்லப்பட்ட எழுதிணையுள், நடுவணது ஒழிய - நடு எனப்பட்ட பாலை ஒழிய, நடுவண் ஐந்திணை - (கைக்கிளை பெருந்திணைக்கு) நடுவணதாகி நின்ற ஐந்திணை, படுதிரை வையம் பாத்திய பண்பு - ஒலிக்கின்ற திரைகடல் சூழ்ந்த உலகம் பகுக்கப்பட்ட இயல்பு.

இதனாற் சொல்லியது. எழுவகைத்திணையினும் நிலம் பெறுவன நான்கு என்றவாறாயிற்று. நடுவணது பாலை என்று எற்றாற் பெறுதும் எனின், வருகின்ற சூத்திரங்களுள்,

"முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்" (அகத்.5)

என நிலம் பகுத்து ஓதினமையின், நடுவணது பாலை எனக் கொள்ளப்படும். நடுவுநிலைத் திணையெனினும் பாலை எனினும் ஒக்கும். பாலை என்னுங் குறியீடு எற்றாற்பெறுதும் எனின்,

வாகை தானே பாலையது புறனே" (புறத். 15)

என்பதனாற் பெறுதும். இச் சூத்திரத்துள் ஒழிய என்னும் வினையெச்சம் எவ்வாறு முடிந்தது எனின், அது பாத்திய என்னும் பெயரெச்சத்தோடு முடிந்தது. அப் பெயரெச்சம் பண்பு என்னும் பெயர்கொண்டு ஐந்திணை என்னும் எழுவாய்க்குப் பயனிலையாகி நின்றது என உரைப்ப.

இவ்வாறு உரைப்பவே, ஐந்திணை பண்பு என வரூஉங் காலத்துப் பயன்பட நில்லாமையின் அஃது உரையன்று என்பார் உரைக்குமாறு; ஒழிய என்பதனை எச்சப்படுத்தாது முற்றுப்படக் கூறி,

"படுதிரை வையம் பாத்திய பண்பு நடுவண தொழிய"

எனப் பொருள் உரைப்ப, அஃதேல் வினையெச்ச வாய்பாட்டால் வரும் முற்றுளவோ எனின்.

"வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய" (எச்ச.9)

என்று முற்றுவாய்பாட்டால் வினையெச்சம் வருதலின் வினையெச்ச வாய்ப்பாட்டால் முற்றுவரும் என்பதூஉம் அச் சூத்திரத்தின் அமைத்துக் கொள்ளப்படும் என்ப. இவ்வுரை இரண்டினும் ஏற்பது அறிந்து கொள்க.


'நடுவண் ஐந்திணை' என்பன யாவை எனின் முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் என்பனவாம், எற்றுக்கு? இந்நூலகத்து அகமும் புறமும் ஆகிய உரிப்பொருள் கூறுகின்றாராதலான் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என அமையுமே எனின், புறப்பொருட்கண் நிரைகோடலை வெட்சி எனக் குறியிட்டு ஆளுமாகலான் ஈண்டு இப்பொருளையும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என ஆளும் என்க. இதனாற் பயன் என்னையெனின், உரிப்பொருளே திணையென உணர்த்துவராயின் முதற்பொருளும் கருப்பொருளும் திணையாதல் தோன்றாதாம். அவை யெல்லாம் அடங்குதற்பொருட்டு முல்லை குறிஞ்சி பாலை மருதம் நெய்தல் என்றார் என்பது. அவை ஆமாறு வருகின்ற சூத்திரங்களான் விளங்கும். [ஏகாரம் ஈற்றசை]. (அகத். 2).

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...