வியாழன், 14 அக்டோபர், 2010

செம்மொழித் தமிழுக்குத் தீமைசெய்தல் தகுமா?


புதுச்சேரி மற்றும் தமிழகக் கல்லூரிகளில் இளங்கலைப் பாடப்பிரிவுகளைப் பயிலும் மாணவர்களுக்குப் பகுதி 1 பாடப்பகுதியில் தமிழ்மொழிப் பாடம் கற்பது என்பது இன்றியமையாத ஒன்றாக இதுகாறும் இருந்துவந்தது. பல்கலைக் கழக நிதிநல்கைக் குழுவும் பகுதி 1, பகுதி 2 மொழிப்பாடங்களைப் பயிலுவது இன்றியமையாதது என்பதை வலியுறுத்தியுள்ளது. அண்மையில் புதுச்சேரி கல்லூரிகளில் இளங்கலைப் பொருளாதாரம் பயிலும் மாணவர்களுக்குத் தமிழ் பயிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொருளாதாரத்துறைப் பேராசிரியர்களைக் கேட்டபோது இவ்வாண்டு முதல் பொருளாதாரத் துறையில் பயிலும்  மாணவர்களுக்குத் தமிழ்மொழிப்பாடம் இல்லை என்று கூறினர். ஆனால் முறைப்படியான அறிவிப்பு ஏதும் தமிழ்த்துறைக்கு வரவில்லை. இந்நிலையில் அவர்கள் தன்னிச்சையாக ஏதும் முடிவெடுக்கமாட்டார்கள் என்று நம்பினோம். என்றாலும் தாகூர் கலைக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் வழியாகப் புதுவைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர், பொருளாதாரத் துறையின் புலமுதன்மையர், புதுவைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறையின் புலமுதன்மையர் ஆகியோருக்கு இளநிலைக் கல்வி பயிலும் மாணவர்கள் பகுதி 1 மொழிப்பாடம் பயில வேண்டியதன் தேவை குறித்து முறைப்படி மடல் அனுப்பப் பட்டது.
இதன் தொடர்ச்சியாகப் புதுவைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவர் மற்றும் புலமுதன்மையர் அவர்களையும் கேட்டபோது இதுகுறித்துத் தகவல் ஏதும் வரவில்லை என்று அவர் கூறினார்.  பொருளாதாரத் துறையின் புலமுதன்மையர் அவர்களையும் சந்திக்க முயன்றபோது அவர் விடுப்பில் இருந்த்தால் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள பேராசிரியரைச் சந்தித்தோம். அவரும் பகுதி 1 மொழிப்பாடத்தின் இன்றியமையாமையை எடுத்துரைத்துப் புலமுதன்மையரின் கவனத்திற்குக் கொண்டு சென்று ஆவன செய்தாக உறுதியளித்ததோடு, புலமுதன்மையர் ந்ம் கருத்தினை ஏற்று உரிய ஆணை பிறப்பிக்கக் கடிதம் மூலமாகப்  பரிந்துரை செய்துள்ளதாகத் தெரிவித்தார். அதன்பின்னர் என்ன நடந்ததென்று தெரியவில்லை. திடீரென்று மறுபடியும் தமிழ்ப்பாடம் இந்தாண்டு மாணவர்களுக்குக் கிடையாது என்று பொருளாதாரத்துறையினர் தெரிவித்தனர். எனவே, மீண்டும் புதுவைப் பல்கலைக் கழகக் கல்வியியல் பகுதி 2ன் துணை பதிவாளரைச் சந்தித்தோம்.  
பொருளாதாரத் துறையின் புலமுதன்மையர் பரிந்துரைத்தால் தமிழ்கற்கும் வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைக்கும் என்றார். இதன்தொடர்ச்சியாகப் பொருளாதாரத் துறையின் புலமுதன்மையரை நேரில் சந்தித்து எதிர்வரும் தலைமுறைக்குத் தமிழ்கற்கும் வாய்ப்பினைப் பெற்றுத் தருமாறு மனமுருக வேண்டினோம். அவர் முயற்சி செய்வதாக் கூறியுள்ளார் என்றாலும் இதனை அவர் செய்துமுடிக்கத் தூண்டுதலாகத் தமிழ் அமைப்புகளும் பத்திரிக்கை,வானொலி, தொலைக்காட்சித்துறை அன்பர்களும் தம் கருத்தினைத் தெரிவித்து உதவவேண்டும். தமிழுக்கு நாம் செய்யவேண்டிய பணி இது. அண்டைமாநிலமான தமிழகத்தில் பொறியியல், மருத்துவப் படிப்புகளும் தமிழ்வழியாக நடத்தப்பெறும்போது நம் மாநிலத்தில் தமிழ் மொழிப்பாடம் படிக்கின்ற வாய்ப்பினைப் பறிப்பது முறையாகுமா? என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும். 

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...