சனி, 1 மார்ச், 2014

பாரதியார் பிறந்த நாள் கருத்தரங்கு (11.12.13)

     புதுவையில் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வரும் பாரதி அன்பர்கள் அறக்கட்டளை மாதந்தோறும் பாரதி பற்றியதொரு இலக்கியக் கூடத்திற்கு ஏற்பாடு செய்து, பாரதியியலில் பயிற்சியும் ஆளுமையும் உடைய அறிஞர் ஒருவரைக் கொண்டு சிறப்புச் சொற்பொழிவு ஒன்றினையும் நிகழ்த்தி வருகின்றது. ஓர் இலக்கிய அமைப்பு மாதந்தோறும் தொடர் நிகழ்வுகளை நடத்துவது அரியதொரு நிகழ்வு என்பதை ஓரிரு நிகழ்ச்சிகளையேனும் நடத்திய பட்டறிவுடையோர் அறிவர். இச்சூழலை மனங்கொண்டு பார்க்கும்போது பாரதி அன்பர்கள் அறக்கட்டளையினரின் உழைப்பும் முயற்சியும் புலனாகும். மாதந்தோறும் பாரதி நினைவில்லத்தில் நடைபெறும் அந்நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது பாரதியின் பிறந்தநாள், நினைவுநாள்களில் சிறப்பு நிகழ்ச்சிகளையும் பாரதி அன்பர்கள் அறக்கட்டளை நிகழ்த்தி வருகின்றது. 
       அவ்வகையில் கடந்த 11.12.2013 அன்று புதுச்சேரி வணிகர் அவையில் பாரதியார் பிறந்தநாள் கருத்தரங்கு நடைபெற்றது. பாரதி என்றொரு மானிடன் என்னும் பொருண்மையில் நடைபெற்ற அக்கருத்தரங்கினை பாரதி அன்பர்கள் அறக்கட்டளையின் செயலர் முனைவர் சிவ. மாதவன் அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தினார். மாதக்கூட்டங்கள் தொய்வில்லாமல் தொடர்ந்து நிகழ்வதில் பேராசிரியர் அவர்களின் பங்களிப்பு மிகவும் பெரியது. அவர்களே இந்நிகழ்வுக்கும் தூண்டுதலாக அமைந்தது மகிழ்ச்சிக்குரியது.
         11.12.3 புதன்கிழமையன்று காலை 10 மணிக்குத் தொடங்கிய கருத்தரங்கில் அறக்கட்டளையின் தலைவர் முனைவர் க. பஞ்சாங்கம் அவர்கள் வரவேற்புரையாற்றினார். காலை அமர்வுக்குச் சென்னை, கிறித்தவக் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் பரதி புத்திரன் அவர்கள் தலைமை வகித்தார். நாயக்கர் காலக்கலைப் படைப்புக்களைப் பற்றிய செவ்விய ஆய்வாளராகிய அவர்கள் பாரதியியலிலும் தேர்ந்த ஆய்வாளராவார். அவர்கள் தலைமையில் நடைபெற்ற அமர்வில் முனைவர் ப. பட்டம்மாள் அவர்கள் பாரதியும் தேசமும் என்னும் தலைப்பிலும், முனைவர் ஆ. மணி அவர்கள் பாரதியும் மொழியும் என்னும் தலைப்பிலும், முனைவர் இரா. குறிஞ்சிவேந்தன் அவர்கள் பாரதியும் காதலும் என்னும் தலைப்பிலும் உரையாற்றினர். பிற்பகல் அமர்வுக்கு முனைவர் ஜெயராஜ் தானியேல் அவர்கள் தலைமை வகித்தார். அவ்வமர்வில் க. வினோத்குமார் அவர்கள் பாரதியும் வெகுளியும் என்னும் தலைப்பிலும், முனைவர் இரா. ஸ்ரீவித்யா அவர்கள் பாரதியும் இயற்கையும் என்னும் தலைப்பிலும், பேராசிரியர் இரா. விசாலாட்சி அவர்கள் பாரதியும் நகைச்சுவையும் என்னும் தலைப்பிலும் உரையாற்றினர். அக்கருத்தரங்கக்கின் படங்கள் எவையும் கிட்டவில்லை. எனினும் அந்நிகழ்வினைப் பதிவிடுகின்றேன். அழைப்பிதழ் மட்டும் இவண் தரப்பட்டுள்ளது.


அழைப்பிதழ் முதற்பக்கம்
அழைப்பிதழ் பின்பக்கம்






கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...