திங்கள், 17 ஜனவரி, 2011

பொருட்டொகை நிகண்டு 1920 பதிப்பு

         புதுக்கோட்டை சமத்தானம் குடுமிமாமலையைச் சேர்ந்த வைத்திசுவர தீட்சிதர் அவர்களின் மகனார் சுப்பிரமணிய பாரதி எழுதிய பொருட்டொகை நிகண்டு என்ற நூல் 1920 ஆம் ஆண்டு செந்தமிழ்ப் பிரசுரம் வழியாக வெளி வந்தது. இது திருவாவடுதுறை ஆதின வித்துவானும் மதுரைத் தமிழ்ச் சங்கத்துச் சைவநூற்பரிசோதகருமாகிய சே.ரா. சுப்பிரமணியக் கவிராயர் அவர்களால் திருத்தியும் விளக்கியும் கூட்டியும் செய்யப்பெற்றது என்ற குறிப்போடு வெளிவந்துள்ளது.

       சுப்பிரமணியக் கவிராயர் அவர்கள் எழுதிய முகவுரையால் அறியப்படும் சில செய்திகள் வருமாறு:

         1. மதுரைத் தமிழ்ச்சங்கத்தை நிறுவிய பாண்டித்துரைத் தேவரிடம் சீர்செய்து அச்சிட்டு வெளியிடும்படி தமிழன்ன்பர்கள் வழங்கிய பல்வேறு சுவடிகளில் பொருட்டொகை நிகண்டும் ஒன்று.
         2. இந்நிகண்டிலுள்ளவற்றில் பெரும்பாலாவை முன்பே பதிப்பித்திருக்கின்ற பேரகராதியிலும் உள்ளன.
         3. நூலாசிரியரின் காலம் இந்நூலில் எழுதப்படவில்லை.
         4. இப்பொருட்டொகையிலுள்ளன சில வழுவானவை.  சில விளங்காதவை. சில சேர்க்கவேண்டியவை. எனவே திருத்தி, விளக்கி, சேர்த்துப் பதிப்பிக்கப் பட்டுள்ளன.
          5. கால அவகாசமின்மையால் 122 நூற்பாக்களே புதிதாகச் செய்து சேர்க்கப் பட்டுள்ளன.
           6. பிங்கலத்திலும் சூடாமணி நிகண்டிலும் இல்லாதவையும் இந்நிகண்டிலுள்ளமையால் கற்போருக்கு இந்நூல் உதவியாக இருக்கும்.

           இப்பதிப்பானது பதிப்புநெறிகள் எவற்றையும் மனங்கொண்டதாகத் தெரியவில்லை. திருத்தியும், புதுக்கியும், விளக்கியும் செய்யப்பட்டது என்ற முந்தைய மரபையே இப்பதிப்பும் செய்துள்ளதாகத் தெரிகின்றது. இப்படிச் சொல்வது பதிப்பளர்தம் பெருமையைக் காட்டுவதேயன்றி வேறொரு பயனையும் விளைவிக்காது. திருத்துதல், புதுக்குதல், விளக்குததல், சேர்த்தல் என எவ்வகைப் பணியைச் செய்தாலும் அவற்றை உரிய குறியீடுகளின் மூலம் விளக்குவதே சிறந்த பதிப்புக்கு அடையாளமாகும். இவ்வகை அடையாளங்கள் எவையும் இப்பதிப்பில் இல்லை. எனவே, இப்பதிப்பினை ஒரு சிறந்தபதிப்பாகக் கொள்ள இயலாது. இதன் தலைப்புப் பக்கம் இது.


கருத்துகள் இல்லை: