சென்னைப் புத்தகக் கண்காட்சியில் எனக்குக் கிடைத்த அரிய நூல்களில் ஒன்று முனைவர் இரா. அறவேந்தன் எழுதிய குறுந்தொகைப் பதிப்பு வரலாறு (1915 - 2010) என்ற நூல். காவ்யா வெளியிட்டுள்ள நூல்களில் மிகச்சிறந்த நூல் இது.
குறுந்தொகைப் பதிப்பு வரலாறு, பதிப்புகளில் உட்கூறுகள், பதிப்புகளில் விளக்கமுறை, பதிப்பு இயல்புகள், துணைநூல் பட்டியல், பின்னிணைப்புகள் என்ற உட்பகுப்புகளைக் கொண்ட இந்நூல் குறுந்தொகைப் பதிப்புக்கள் குறித்து வெளிவந்துள்ள நூல்களில் முதன்மையானதாகும். ஒருநூலில் பழந்தமிழ் நூலொன்றின் அனைத்துப் பதிப்புக்களையும் வெளியீடுகளையும் திரட்டித் தந்து, அவற்றின் உட்கூறுகளைச் சான்றுகளுடன் விளக்குவது என்ற அணுகுமுறையை இளந்தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ஆய்வு செய்தல் என்பது அது முனைவர்ப் பட்ட ஆய்வாக இருந்தாலும் எளிமையாகச் செய்யும் வகையிலான தலைப்புக்களே பெரும்பாலானோரால் விரும்பப்படுகின்றன. இந்நிலையில் ஆய்வு என்பதன் அடிப்படைகளை விளக்கும்வகையில் இந்நூல் வெளிவந்திருப்பது முயற்சியுடைய தமிழாய்வாளர்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாக அமையும்.
நூலாசிரியர் முனைவர் இரா. அறவேந்தன் அவர்கள் மிகச்சிறந்த ஆய்வறிஞர் ; கடுமையாக உழைப்பாளி; இளைஞர்களை ஆர்வப்படுத்தி ஊக்கம் தரும் பண்பாளர்; எந்தவொரு கருத்தையும் உரிய சான்றுகளோடு மட்டுமே வெளிப்படுத்தும் தகைமையாளர்; வரலாற்றுநோக்கமும் நிறைபுலமையும் உடையவர் ஆகிய மெய்ம்மைகளை உணர்த்தும் தரவுகள் இந்நூலெங்கும் விரவிக்கிடக்கின்றன. குறுந்தொகையை முழுமையாக அறிய விரும்புவோர்க்கு இந்நூல் ஒருநல்வரவு.
மிகுந்த சிறப்புக்களையுடைய இந்நூலுக்கு சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பொறுப்பு அலுவலர் முனைவர் க. இராமசாமி ஐயா அவர்களின் அணிந்துரை மிகப்பொருத்தமாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. நூல்முழுமையையும் கூர்ந்துநோக்கி, அதன் தன்மைகளை எடுத்துரைக்கும் இவ்வணிந்துரை, இந்நூல் பற்றிய ஆய்வுரையாகும். இளைஞர்களை ஆர்வமுடன் ஊக்கப்படுத்து ஐயா அவர்கள் நிறுவனத்தின் பொறுப்பு அலுவலராக இலங்குவது இளைஞர்களுக்கும் தமிழுக்கும் நற்காலமாகும். “ ஒரு பதிப்பு எவ்வாறு அமையவேண்டும் என்பதைச் சுட்டுவதுடன் ஆய்வாளர்கள் மேற்கொள்ளவேண்டிய ஆய்வுநெறிகளையும் இந்நூல் புலப்படுத்தியிருப்பது இதன் தனிச்சிறப்பாகும்” என்ற அவர்தம் கருத்து போற்றலுக்குரியது.
பல்வேறு தகைமைகளோடு வெளிவந்திருக்கும் இந்நூல் தமிழர்கள் கற்கவேண்டிய தனித்தன்மை வாய்ந்த நூலாகும் என்பதை நூலைப் பெற்றுக் கற்கும்போது உணர்வீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக