சனி, 29 ஜனவரி, 2011

நேமிநாதம் - கழகப் பதிப்பு 1964

     குணவீர பண்டிதரால் இயற்றப்பட்ட நேமிநாதம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என்ற இரண்டு இயல்களைக் கொண்டது. சின்னூல் என அழைக்கப்படுவது. இந்நூல் தொல்காப்பியத்தின் வழிநூல் என்பர்.எழுத்ததிகாரம் உட்பகுப்புக்கள் அற்றது. சொல்லதிகாரம் ஒன்பது இயல்களைக் கொண்டது. நூற்பாக்கள் வெண்பா யாப்பில் அமைந்தவை. எழுத்ததிகாரம் 24 வெண்பாக்களும், சொல்லதிகாரம் 70 வெண்பாக்களும், பாயிரப் பாடல்கள் 5 ஆக 99 வெண்பாக்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

       நன்னூல் தோன்றுவதற்கு முன்னர்த் தமிழிலக்கணம் கற்போர் முதலில் இந்நூலைக் கற்றுப் பின்னர்த் தொல்காப்பியம் கற்றனர் என்றும், இந்நூலின் காலம் கி.பி. 12ஆம் நூற்றாண்டு என்றும் கூறுப. இந்நூலின் உரையாசிரியர் யார்? என்பது தெரியவில்லை. இந்நூல் ரா.இராகவையங்காரால் 1923இல் இரண்டாம் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.  அதனை அடிப்படையாகக் கொண்டு கா.ர. கோவிந்தராசமுதலியார் கழகத்திற்காக இப்பதிப்பினை உருவாக்கித் தந்துள்ளார்.

     மூலம், உரை ஆகியவற்றின் சந்திகளைப் பிரித்துப் பதிப்பித்திருத்தல், உரிய இடங்களில் அடிக்குறிப்புக்களை எழுதிச் சேர்த்திருத்தல், உரைப்பிறழ்வுகள் எனத் தாம் கருதிய இடங்களில் விளக்கங்கள் தந்திருத்தல் ஆகியன கா.ர.கோ. இப்பதிப்பில் செய்த மாற்றங்களாகும். 1945இல் முதற்பதிப்பாகக் கழகத்தின்மூலம் வெளிவந்த இப்பதிப்பு 1956 நவம்பர், 1964 ஏப்பிரல் ஆகிய ஆண்டுகளில் மறுஅச்சு கண்டுள்ளது. 1964 ஆண்டுப் பதிப்பின் தலைப்புப் பக்கம் இது.


கருத்துரையிடுக