வெள்ளி, 7 ஜனவரி, 2011

சூடாமணி நிகண்டு கணேச முதலியார் பதிப்பு ( 1934)

     நிகண்டு என்பதை இன்றைய வழக்கில் சொல்வதானால் அகராதி எனலாம். நிகண்டுகளில் முதல்நிகண்டு திவாகரமுனிவர் செய்த திவாகரநிகண்டு என்பர். இதற்கு ஆதிதிவாகரம் என்றும் பெயருண்டு. நிகண்டுகளில் மிகுந்த புகழ்பெற்ற நூல் சூடாமணி நிகண்டாகும். பன்னிரண்டு தொகுதிகளைக் கொண்ட இந்நிகண்டு ஆறுமுகநாவலர் அவர்களின் பரம்பரை நா.கதிரைவேற்பிள்ளை அவர்களின் மாணவர் ப. க்ணேசமுதலியாரால் பதிப்பிக்கப்பட்டுள்ளன. பதிப்பாண்டு 1934. சென்னை பூமகள் விலாச அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டுள்ளது.

         கணேசமுதலியார் பன்னிரண்டாம் தொகுதியின் உரையைப் புதுக்கியும் திருத்தியும் விளக்கியும் சேர்த்துக்கொடுத்துள்ளதாக நூலின் தலைப்புப் பக்கம் கூறுகின்றது. ஆனால் நூலுள் அவை சுட்டிகளின் மூலமாகவோ பிற வகைகளிலோ எடுத்துக் காட்டப்பெறவில்லை. இதனால் அவர் திருத்தியதும் விளக்கியதும் புதுக்கியதும் எவையென்பதை அறியமுடியவில்லை.

     நூல் இருபகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பத்துத் தொகுதிகள் முதற்பகுதியில் தரப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து பொருளகராதி இடம்பெற்றுள்ளது. அதன்பின்னர் மீண்டும் ஒரு தலைப்புப் பக்கம் தரப்பட்டுள்ளது. அதில் பதிப்பாண்டு 1933 எனக் குறிக்கப்பட்டுள்ளது.  இவ்விரண்டாம் பகுதியில் 11,12 ஆம் தொகுதிகளும் அவற்றின் உரைகளும் அமைந்துள்ளன. பொருளகராதி இடம்பெறவில்லை.

      கணேசமுதலியாரின் இப்பதிப்பு, அப்பதிப்பின் வரலாறு பற்றிய சிலவினாக்களை எழுப்புகின்றது. 1. பதிப்பாண்டுகள் முதலில் 1934 என்றும், பிற்பகுதியில் 1933 என்றும் இருவகையாகக் குறிப்பிடக் காரணம் என்ன?. 2. முதல் 11 தொகுதிகளுக்கான உரையைச் செய்தவர் யார்?. 3. 12 ஆம் தொகுதியின் உரைகாரர் யார்?. இப்பகுதியின் உரையை மட்டும் கணேச முதலியார் திருத்தக் காரணமென்ன?. இவை விடை தெரியவேண்டிய வினாக்கள். 1934 எனப் பதிப்பாண்டு குறிக்கப்பட்டுள்ள தலைப்புப் பக்கம் இது.

 
கருத்துரையிடுக