வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

பெரியாரிய நோக்கில் குறுந்தொகை ஆய்வு இயல்புகள் - நூலறிமுகம்

பாரதிதாசன் பல்கலைக் கழகப் பெரியார் உயராய்வு மையத்தின் தலைவராகப் பணியாற்றிவரும் முனைவர் இரா. அறவேந்தன் அவர்கள், காரைக்குடி அழகப்பாப் பல்கலைக் கழகத்தில் இணைப்பேராசிரியராகப் பணியாற்றியபோது வரலாற்றியல் நோக்கில் குறுந்தொகை ஆய்வு இயல்புகள் என்ற தலைப்பில் ஆய்வுத்திட்டமொன்றை நிகழ்த்தினார். அவ்ஆய்வேடு பெரியாரிய நோக்கில் குறுந்தொகை ஆய்வு இயல்புகள் என்ற தலைப்பில் நூலாக்கம் பெற்றுள்ளது. இயல்பாகவே செவ்விய உழைப்புக்குச் சொந்தக்காரராகிய அறவேந்தன் அவர்களின் பேரூழைப்பில் உருவான இந்நூல்,  குறுந்தொகைக்கு எழுந்துள்ள நூல்களையும் கட்டுரைகளையும் அறிமுகம் செய்து அவற்றின் திறனை மதிப்பிட்டுரைக்கின்றது.
      குறுந்தொகை தொடர்பான நூல்களைத் தேடுவதும் பெறுவதும் எவ்வளவு கடுமையான பணி என்பதை இந்நூலின் நன்றியுரை விளக்கிக் காட்டுகின்றது. உ.வே.சா. போன்றோர் சுவடிகளைத் தேடிப் பயணம் மேற்கொண்டதுபோல, இன்று நூல்களைத் தேடி அறவேந்தன் போன்றோர் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்பதை அறியும்போது நம் நெஞ்சம் நெகிழ்கின்றது. 
     பெரியாரிய நோக்கில் குறுந்தொகை ஆய்வு இயல்புகள் என்ற இந்நூல், 1. பெரியாரியம், 2. குறுந்தொகை: அச்சாக்கத்திற்கு முந்தைய வாசிப்பு நிலை, 3. குறுந்தொகை:  திறனாய்வு நூல்கள்வழி அறியலாகும் ஆய்வு இயல்புகள், 4.  குறுந்தொகை:  கட்டுரைகள்வழி அறியலாகும் ஆய்வு இயல்புகள், 5. பெரியாரிய நோக்கில் குறுந்தொகை ஆய்வு இயல்புகள், 6. துணைநூல்பட்டியல், 7. பின்னிணைப்புகள், 8. பெயரடைவு ஆகிய எட்டு இயல்களைக் கொண்டதாகும்.
  குறுந்தொகை பற்றிய திறனாய்வு நூல்களை அறிமுகம் செய்து மதிப்பிடுரைக்கும் பகுதிக்குச் சான்றாக, நான் எழுதிய குறுந்தொகைத் திறனுரைகள் நூலின் மதிப்பீட்டுப்ப் பகுதியைக் காணலாம். " தரவுகளைப் புள்ளிவிவர அடிப்படையில் திரட்டுதல், ஆய்வுக்கான களத்தைத் தெளிவாக வரையறுத்தல், முன் ஆய்வு முடிபுகளைக் குறித்தல், வினா விடைமுறையில் விவாதித்தல், புதிய கருத்துகளையும் கருதுகோள்களையும் முன்வைத்தல் எனும் நிலைகளில் இந்நூல் தனிச்சிறப்புடையதாகத் திகழ்கின்றது."(ப.120).
   நூலாசிரியரின்(அறவேந்தனின்) ஆய்வுள்ளத்தையும் அணுகுமுறைகளையும் பின்வரும் பகுதி நமக்குக் காட்டுகின்றது: " குறுந்தொகைப் பாக்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பெற்றுள்ள கட்டுரைகளாக 421 கட்டுரைகள் இனங்காணப்பெற்றுள்ளன. இவற்றில் 243 கட்டுரைகள் குறுந்தொகை ஆய்வுக்கோவைத் தொகுதிகளில் வெளிவந்தவை. அக்கட்டுரைகளின் பொருண்மைகள் அந்நூலுக்குரிய விளக்கப்பகுதியில் இந்த ஆய்வில் பகுத்தளிக்கப் பெற்றுள்ளன. 21 கட்டுரைகள் கிடைக்கவில்லை. அவை கிடைக்கப்பெறாதவை எனும் தலைப்பில் துணைநூற்பட்டியலில் அளிக்கப் பெற்றுள்ளன. ஏனைய 157 கட்டுரைகள் இப்பகுதியில் ஆய்வுக்கு உட்படுத்தப் பெறுகின்றன."(ப.166).
       இந்நூல் முன்வைக்கும் கருத்துக்கள் சில:
1.1940 இல் குறுந்தொகைக்கெனத் தனிநூல் வெளியிடும் முயற்சி தொடக்கப்பெற்றுள்ளது.(ப.42). அந்நூல் குறுந்தொகைச் சொற்பொழிவுகள் என்பதாகும்.
2. 1940 முதல் 2009வரை 49 நூல்கள் வெளிவந்துள்ளன.(ப.42).
3. சௌரிப்பெருமாள் பதிப்பில் முத்துரத்நம் எழுதிய முகவுரையே குறுந்தொகை தொடர்பான முதல் கட்டுரையாகலாம்.(ப.167).
4.குறுந்தொகை ஆய்வுஇயல்புகள் பிற்காலத்தில் பெரிதும் அறிவுக்கண் கொண்டு பார்க்கும் சூழல் வலுப்பெறுவதற்குக் காரணம் அயலக ஆய்வுமுறைகளை உள்வாங்கிக் கொண்ட கல்விமுறை வழக்குப் பெற்றது என்பதுதன் வெளிப்படை. இதற்கான வித்தாக நீதிக்கட்சி, திராவிட இயக்க, சுயமரியாதை இயக்கச் செயல்பாடுகள் அமைந்தன என்பதும் வெளிப்படை.(ப.293).
5.குறுந்தொகை பற்றிய திறனாய்வு நூல்கள் 23. அறிமுகநூல்கள் 17.( 9 நூல்கள் கிடைக்கவில்லை).
6. குறுந்தொகைப் பாக்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பெற்றுள்ள கட்டுரைகள் 421. (அவற்றில் 20 கட்டுரைகள் நான் (ஆ.மணி)எழுதியவை.).
 குறுந்தொகை ஆய்வுகளைப் பற்றி அறியவிரும்புவோர் படிக்கவேண்டிய இன்றியமையாத நூல் இது. படித்துப் பயன்பெறுக.
   நூல் கிடைக்குமிடம்:  தொடர்புக்கு : 94426 28922. விலை: ரூ. 200. பக்கம்:360.
 நூலின் முன்னட்டை
நூலின் பின்னட்டை

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...