சனி, 20 ஆகஸ்ட், 2011

நானும் என் தமிழும் – ஆங்கிலத்தை ஏவல் கொண்ட தமிழ்த்தேடல்


   கடந்த 25 ஆண்டுகளாகத் தமிழியல் ஆய்வுகளை அவ்ஆய்வுகளைச் செய்தோரின் தமிழிய வாழ்வோடு இணைத்துப் வரலாற்றுப்பதிவுகளாக்கும் முயற்சியைத் தமிழ்நேயம் இதழ் வழியாகச் செய்துவரும் கோவைஞானி அவர்களின் முயற்சி போற்றுதலுக்குரியது. தமிழர்களின் இனப்பழக்கம் என்றே சொல்லத்தகும் பண்பு ஒன்று : வரலாற்று உணர்வும் அறிவும் இன்மையாகும். இதனை மாற்றமுனையும் ஞானி அவர்களுக்குத் தமிழர்கள் என்றும் நன்றிக்கடப்படுடையர்.

தமிழ்நேயத்தின் 43 ஆம் இதழ் பேராசிரியர் ப. மருதநாயகம் அவர்களின் தமிழிய வாழ்வையும் தமிழியல் ஆய்வையும் கூறுவதாகும். அதன் தலைப்பு : நானும் என் தமிழும் – ஆங்கிலத்தை ஏவல் கொண்ட தமிழ்த்தேடல். தமிழிலும் ஆங்கிலத்திலும் முனைவர்ப் பட்டம் பெற்றோர் பான்மையும் ஆங்கிலத்தின் அடிமைகளாகத் திரிவதையே பெருமையாகக் கருதிவரும் இந்நாளில்  பேராசிரியர் மருதநாயகம் அவர்களின் தமிழிய நெஞ்சம் நம் உள்ளத்தையும் கருத்தையும் ஈர்ப்பதாக அமைவதோடு, நமக்கு ஒரு பாடமாகவும் இருப்பது குறிக்கத்தக்கது.

   பேராசிரியரின் நூலின் வழிப் பல உண்மைகளை நாம் அறிய இயலும். எனினும் இங்குச் சில உண்மைகள் காட்டப்பட்டுள்ளன.

1.  பேராசிரியரின் முதல் நூல் கிழக்கும் மேற்கும் என்பதாகும். 1991 இல் வெளிவந்த அந்நூல் ஒப்பிலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பாகும். இதுவரை (2011 மே வரை) அவர் எழுதியுள்ள நூல்களின் தொகை தமிழில் பத்தும் ஆங்கிலத்தில் ஒன்பதுமாகப் பத்தொன்பதாகும்.

2.  தமிழ்க்கவிதையியல், கிரேக்க – ரோமானியக் கவிதையியல், வடமொழிக் கவிதையியல், இருபதாம் நூற்றாண்டு மேலைக் கவிதையியல் ஆகியவற்றினும் சிறந்தது (ப.47).

3.  அமெரிக்கப் பேராசிரியர் ஜார்ஜ் எல் ஹார்ட் தம் முனைவர்ப் பட்ட ஆய்வேட்டில் காளிதாசனின் படைப்புக்களில் சங்க இலக்கியத்தின் தாக்கம் ஆழமானது என்று நிறுவியுள்ளார் (ப.47).

4.  தமிழே மாந்தனின் முதல் தாய்மொழி என்னும் பாவாணரின் முடிவு கண்மூடித்தனமானது அன்று; தர்க்கமுறையில் எழுப்பப்பெற்றது (ப.51).

5.  தொன்மங்களிலிருந்து அரிய உவமைகளைப் பெறுவது புறநானூற்றுக் கவிஞர்களுக்குக் கைவந்த கலையாகும் (ப. 56).

6.   புறநானூறு வீரயுக இலக்கியம் என்ற கைலாசபதியின் கருத்தினை மறுக்குமிடத்தில் “ கைலாசபதி ஒரு கவிதையையாவது கவிதையென்ற முறையில் விளக்கமாகப் பார்க்கவில்லையென்று ராமானுஜன் வருந்திக் கூறுவார் எனக் குறிப்பிட்டு, “ மனித வாழ்வின் எல்லாக் கூறுகளையும் நுட்பமாகப் பார்த்து அவை பற்றி ஆழமாகச் சிந்தித்துக் கலைநுணுக்கத்தோடு முதிர்ந்த அறிஞர்களால் எழுதப்பட்டவற்றை, வாய்மொழிப் பாடல்களின் ஓரிரு கூறுகள் இருப்பதால் வீரயுகப் பாடல்கள் என்று அடையாளம் காண்பது தவறாகும் ( ப. 67-68).

7.   பழந்தமிழ் இலக்கியங்கள் பற்றிய டீகனின் கருத்துக்கள் அறியாமையாலும், புதிதாக ஏதாவது சொல்லிப் பலரது கவனத்தைக் கவரவேண்டும் என்ற சிறுபிள்ளைத்தனமான ஆசையாலும் எழுதப்பெற்றவை. அவற்றை நாம் முற்றுமாகப் புறக்கணித்து விடுதலே நன்றென்றாலும் தமிழின் உட்பகைவர்கள் அவற்றை முன்வைத்து மீண்டும் மீண்டும் சங்க இலக்கியங்களுக்கு மாசு கற்பிக்க முயல்வதால் டீகனுக்கு விடைகூறும் கட்டுரையை ஆங்கிலத்திலும் தமிழிலும் நான் எழுத நேர்ந்தது. அவர் புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனத்திற்குத் தமிழ் கற்க வந்திருந்தபோது அவரிடமே இத்தமிழ்க் கட்டுரையைக் கொடுத்தேன். அதைப் படித்துவிட்டு அவர் பதிலேதும் சொல்லாது மௌனமாகச் சென்றுவிட்டார் ( ப. 71).

8. பாரதியை உருவாக்கியவர்களில் தலைமையிடம் பெறத்தக்கவர் இராமலிங்க அடிகளாரே ( ப.78 – 79).

9.  இந்தியமொழிகளில் முதல் நாவல்கள் எழுதிய யாரும் வேதநாயகம் போல் தாய்மொழிக்கு முன்னுரிமை தராதது நாம் அறியவேண்டிய வியப்புக்குரிய செய்தியாகும் (ப. 81).
10.  தமிழ் செவ்வியல் தகுதிக்கு உரியதென்பதை 1813 ஆம் ஆண்டிலேயே அறிந்து செயல்பட்டவர் எல்லிஸ் (ப. 91).

    நூலின் நிறைவாகப் பேராசிரியர் அவர்கள் தந்துள்ள பாரதியாரின் கருத்து நினைவுகூரத்தக்கது : “ .. மிகவும் விரைவிலே தமிழின் ஒளி உலகமுழுவதிலும் பரவாவிட்டால் என் பெயரை மாற்றி அழையுங்கள். அதுவரியில் இங்குப் பண்டிதர்களாக இருப்போர் தமக்குத் தமிழ்ச்சொல் வராவிட்டால் வாயை மூடிக்கொண்டு வெறுமே இருக்கவேண்டும். தமிழைப் பிறர் இழிவாக்க் கருதும்படியான வார்த்தைகள் சொல்லாதிருக்கவேண்டும். இவ்வளவுதான் என்னுடைய வேண்டுகோள் (ப.96).
     தமிழ் நெஞ்சங்களை ஈர்க்கும் இந்நூல்/ இதழ் தமிழுணர்வாளர் அனைவரும் படிக்கவேண்டிய நூல் இது. தமிழிய வாழ்வை வடித்துத் தந்த பேராசிரியர் மருதநாயகம் அவர்களுக்கும் இதனை வெளியிட்டுள்ள கோவை ஞானி அவர்களுக்கும் எம் நெஞ்சார்ந்த நன்றி.

   தமிழ்நேயம் இதழை படப்படியாக இணையத்தில் தந்தால் இளந்தலைமுறைக்கும் இக்கருத்துக்கள் சென்று சேரும் என்பது எம் நம்பிக்கை.

இதழின் முன்னட்டை

கருத்துரையிடுக