வியாழன், 22 அக்டோபர், 2015

குறுந்தொகை : உ.வே.சாமிநாதையர் உரை - முதற்பதிப்பின் முகவுரை (பகுதி:1)

குறுந்தொகை.வே.சாமிநாதையர் உரை
குறுந்தொகை: முதற்பதிப்பின் முகவுரை
திருச்சிற்றம்பலம்

மின்காட்டுங் கொடிமருங்கு லுமையாட் கென்றும்                               
விருப்பவன்காண் பொருப்புவலிச் சிலைக்கை யோன்காண்
      நன்பாட்டுப் புலவனாய்ச் சங்க மேறி
                        நற்கனகக் கிழிதருமிக் கருளி னோன்காண்

            பொன்காட்டக் கடிக்கொன்றை மருங்கே நின்ற
                        புனக்காந்தள் கைகாட்டக் கண்டு வண்டு

            தென்காட்டுஞ் செழும்புறவிற் றிருப்புத் தூரில்
                        திருத்தளியான் காணவனென் சிந்தை யானே
(திருநாவுக்கரசர் தேவாரம்)
திருச்சிற்றம்பலம்

கடைச் சங்க நூல்கள்
            கடைச்சங்க காலத்து நூல்களில் இப்பொழுது கிடைக்கும் இலக்கியங்கள் பாட்டு, தொகை, கீழ்க்கணக்கென மூன்று வகைப்படும். பாட்டென்பது திருமுருகாற்றுப் படை முதல் மலைபடுகடாம் இறுதியாக உள்ள பத்துப்பாட்டும், தொகையென்பது பல செய்யுட்களைத் தொகுத்தமைத்தன வாகிய நற்றிணை முதற் புறநானூறு இறுதியாக உள்ள எட்டு நூல்களும், கீழ்க்கணக்கு என்பது நாலடியார் முதல் கைந்நிலை இறுதியாகவுள்ள பதினெட்டு நூல்களும் ஆகும்.
            இவற்றுள், தமிழின் பொருள் வகைகளாகிய அகத்தையும் புறத்தையும் பற்றிய இலக்கணங்களுக்கு ஏனையவற்றினும் மிகச் சிறந்த இலக்கியங்களாக விளங்குவன எட்டுத் தொகை நூல்களேயாம். அவை நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பன; பதிற்றுப்பத்தும் புறநானூறும் புறப்பொருள் பற்றியும், கலித்தொகையும் பரிபாடலும் யாப்புப் பற்றியும் தொகுக்கப்பட்டன. ஐங்குறுநூறு அகனைந்திணையுள் ஒவ்வொன்றுக்கும் நூறு நூறு செய்யுட்கள் அமைய ஓரம்போகியார் முதலிய ஐந்து நல்லிசைப் புலவர்களால் பாடப்பெற்றது. ஏனைய மூன்றும் அகப்பொருள் பற்றிப் பல புலவர்கள் பாடிய செய்யுட்கள் அடியளவு நோக்கித் தொகுக்கப்பட்டன. குறுந்தொகை நாலடிச் சிற்றெல்லையையும் எட்டடிப் பேரெல்லையையும் உடைய அகவற் பாக்களையும், நற்றிணை ஒன்பதடிச் சிற்றெல்லையையும் பன்னிரண்டடிப் பேரெல்லையையும் உடைய பாக்களையும், அகநானூறு பதின்மூன்றடிச் சிற்றெல்லையையும் முப்பத்தோரடிப் பேரெல்லையையும் உடைய செய்யுட்களையும் கொண்டன. இவை மூன்றும் இவ்வடியளவையன்றிப் பிற திறங்களில் ஓரினமாவன. இவ்வமைப்பை நோக்குகையில் பல புலவர்கள் தனித் தனியே இயற்றிய அகப் பொருட் செய்யுட்களைத் தொகுத்து அவற்றை அடியளவால் வகைப்படுத்திய பின் அவற்றைத் தொகுத்தவர்கள் ஒவ்வொன்றிலும் நானூறு பாக்கள் இருக்கும்படி தம் காலத்துப் புலவர்கள் இயற்றியவற்றையும் சேர்த்து அமைத்தார்கள் என்று கருத இடமுண்டாகின்றது.
 தொல்காப்பியம் என்னும் பழந்தமிழ் இலக்கண நூலிற் கண்ட இலக்கணங்களை ஆராயும்போது அதற்கு முன் பலவகையான இலக்கியங்கள் தமிழில் மலிந்து விளங்கின என்பது பெறப்படும். புலனெறி வழக்கத்தை ஓர் ஒழுங்கான அமைப்பினால் வரையறுத் துரைக்கும் அந்நூலுக்கும் எட்டுத்தொகை நூல்களுக்கும் இடையே பல ஆண்டுகள் சென்றன. தொல்காப்பியத்தில் கண்ட பலவகை இலக்கணங்களுக்கு இலக்கியங்கள் கடைச் சங்க மருவிய நூல்களில் கிடைத்தில. சங்க நூல்களிற் காணப்படும் பல செய்திகளுக்குரிய இலக்கணங்கள் தொல்காப்பியத்தில் காணப்படவில்லை. இவை தொல்காப்பிய காலத்திற்குப் பிறகும் அளவிறந்த நூல்கள் உண்டாயின என்றும், நாளடைவில் புதிய மரபுகள் அமைந்தன என்றும் நினைக்கக் காரணமாகின்றன.
  இவ்வாறு உண்டான பலவகை நூல்களும் செய்யுட்களும் கால நிலையினால் தமிழ் நாட்டாரால் புறக்கணிப்பட்டோ வேறு வகையில் மறைந்தோ அருகின போலும். பிறகு கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இருந்த புலவர்களும் அரசர்களும் தமிழ் ஆராய்ச்சியில் ஊக்கம் கொண்டு பழந்தமிழ்ச் செய்யுட்களைத் தொகுக்கத் தொடங்கினர். அங்ஙனம் தொகுத்தனவே முற்கூறிய மூன்று வகை நூற்றொகுதிகளாதல் வேண்டும். தொல்காப்பிய காலம் முதல் அவற்றையன்றிப் பிற செய்யுட்கள் இயற்றப் பட்டில என்று உரைத்தல் ஏற்புடையதன்று. இராமாயணம், பாரதம், தகடூர் யாத்திரை, ஆசிரிய மாலை, சிற்றட்டகம் முதலிய பல நூல்கள் அக்காலத்தில் இருந்தனவென்று தெரிகின்றது. முற்கூறிய மூன்று வகை நூல்களில் பத்துப் பாட்டும் பதினெண் கீழ்க்கணக்கும் தனித்தனியே ஒவ்வோர் ஆசிரியரால் இயற்றப்பெற்ற நூற்றொகுதிகள். எட்டுத்தொகை நூல்களோ பலர் இயற்றிய செய்யுட்களின் தொகுதிகள்.  பண்டைக் காலத்தில் மக்கள் மனனப் பயிற்சி மிகவுடையவராக இருந்ததனால் இவ்வளவு செய்யுட்களையும் அவற்றை இயற்றிய ஆசிரியர் பெயர்களையும் நினைவில் னவத்திருந்தனர். அவை அங்கங்கே பலரால் சொல்லப்பட்டு வழங்கி வந்தன. சில செய்யுட்களின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. அதனால் அவ்வச் செய்யுட்களிற் காணப்படும் அரிய சொற்றொடராலேயே அப்புலவர் பெயரைக் குறித்துக் கொண்டனர். சிறுபான்மை ஆசிரியர் இயற்பெயர் தெரிந்தும் அவர் பெயரை அமைக்காமல் சிறப்புப் பெயரையே அமைத்தனர்.

(தொடரும்)

கருத்துகள் இல்லை: