வெள்ளி, 9 அக்டோபர், 2015

தொல்காப்பிய அகத்திணை இயல் : முல்லை முதற்பொருள்

தொல்காப்பிய அகத்திணை இயல் : முல்லை முதற்பொருள்

6    காரும் மாலையும் முல்லை. (அகத். 6)

இனிக் காலத்தால் திணையாமாறு உணர்த்துவான் எடுத்துக் கொண்டார். இஃது அவற்றுள் முல்லைத்திணைக்குக் காலம் வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று.

காரும் மாலையும் முல்லை - கார்காலமும் மாலைப் பொழுதும் முல்லைத் திணைக்குக் காலமாம்.

காராவது மழை பெய்யுங் காலம். அஃது ஆவணித் திங்களும் புரட்டாசித் திங்களும். மாலையாவது, இராப் பொழுதின் முற்கூறு.1 (அகத். 6)

குறிப்பு விளக்கம்


1. "முல்லைக்குக் காரும் மாலையும் உரியவாதற்குக் காரணம் என்னை? எனின், பிரிந்து மீளுந் தலைவன் திறமெல்லாம் பிரிந்திருந்த கிழத்தி கூறுதலே முல்லைப் பொருளாயும், பிரிந்து போகின்றான் திறங் கூறுவனவெல்லாம் பாலையாகவும் வருதலின், அம் முல்லைப் பொருளாகிய மீட்சிக்கும் தலைவி இருத்தற்கும் உபகாரப்படுவது கார்காலமாம். என்னை? வினைவயிற்பிரிந்து மீள்வோன் விரை பரித்தேரூர்ந்து பாசறையினின்று மாலைக்காலத்து ஊர்வயின் வரூஉங் காலம் ஆவணியும் புரட்டாதியும் ஆதலின். அவை வெப்பமுந் தட்பமும் மிகாது இடை நிகர்த்தவாகி ஏவல் செய்து வரும் இளையோர்க்கு நீரும் நிழலும் பயத்தலானும், ஆர்பதம் மிக்க நீரும் நிழலும் பெறுதலிற் களிசிறந்து மாவும் புள்ளும் துணையோடின்புற்று விளையாடுவன கண்டு தலைவர்க்கும் தலைவிக்கும் காமக்குறிப்பு மிகுதலானும் என்பது. புல்லை மேய்ந்து கொல்லேற்றோடே புனிற்றாக் கன்றை நினைத்து மன்றிற் புகுதரவும் தீங்குழலிசைப்பவும் பந்தர்முல்லை வந்து மணங்கஞற்றவும் வருகின்ற தலைவற்கும் இருந்த தலைவிக்கும் காமக்குறிப்புச் சிறத்தலின் அக் காலத்து மாலைப் பொழுதும் உரித்தாயிற்று." (தொல். அகத். 5.6. நச்சி, உரை).

கருத்துகள் இல்லை: